வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்மங்களூருவில் தனித்துவமிக்க செபமாலைக் கண்காட்சி

50000த்திற்கும் மேற்பட்ட செபமாலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமிக்க கண்காட்சி, இந்தியாவின் மங்களூருவில் அண்மையில் நிறைவுற்றது.

80 நாடுகளிலிருந்து கொணரப்பட்ட 50000த்திற்கும் அதிகமான செபமாலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கண்காட்சியை, மங்களூரு ஆயர் Aloysius Paul D'Souza அவர்கள் திறந்து வைத்தார். மங்களூருவின் செபமாலை அன்னை பேராலயத்தின் 450ம் ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமைந்திருந்த இந்தக் கண்காட்சி, கேரளாவைச் சேர்ந்த Sabu Caiter என்பவரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது.

புனித அன்னை தெரேசா அவர்கள் பயன்படுத்திய செபமாலை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் அர்ச்சிக்கப்பட்ட செபமாலை ஆகியவை உட்பட, Sabu Caiter அவர்கள் சேகரித்துள்ள 50000த்திற்கும் அதிகமான செபமாலைகள், மற்றும் 200க்கும் அதிகமான அன்னை மரியாவின் திரு உருவங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2017-11-20 01:38:31]


அ.பணி டாம் உழுன்னலிலுக்கு அன்னை தெரேசா விருது

போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில் கடத்தப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ள இந்திய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்கள், ஏமன் நாட்டில் ஆற்றிய மறைப்பணிகளைப் பாராட்டும் விதமாக, அவருக்கு அன்னை தெரேசா விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை நகரை மையமாகக் கொண்ட Harmony Foundation, சமூக நீதிக்கான அன்னை தெரேசா விருதை, சலேசிய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்களுக்கு வழங்கவுள்ளது. இவ்விருது பற்றி UCA செய்தியிடம் பேசிய இந்நிறுவனத்தை உருவாக்கிய, Abraham Mathai அவர்கள், இந்த ஆண்டு இவ்விருதின் தலைப்புக்கேற்ப, அருள்பணி டாம் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வு அமைந்துள்ளது என்று கூறினார்.

"எல்லைகளைக் கடந்து பரிவிரக்கம் : புலம்பெயர்ந்தவர் பிரச்சனைக்கு பரிவிரக்கத்துடன் பதிலளித்தல்" என்பதே, இவ்வாண்டின் இவ்விருதின் தலைப்பு என்றும், Mathai அவர்கள் கூறினார். ஏமன் நாட்டின் ஏடெனில், 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இஸ்லாம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, 18 மாதங்களுக்குப்பின் விடுதலைசெய்யப்பட்டுள்ள, அருள்பணி டாம் அவர்கள், தனது சொந்த மாநிலமான கேரளா திரும்பியுள்ளார். அவருக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

(ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி) [2017-11-13 01:29:06]


சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் புதிய மறைமாவட்டங்கள்

இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, Shamshabad மற்றும், ஓசூர் சீரோ- சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் புதிய மறைமாவட்டங்களுக்கும், அவற்றிற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆயர்களுக்கும் ஒப்புதல் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தெலுங்கானா மாநிலத்திலுள்ள Shamshabad மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, இந்நாள்வரை திருச்சூர் துணை ஆயராகப் பணியாற்றிவந்த, ஆயர் Raphael Thattil அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் வடக்கிலுள்ள ஓசூர் சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் புதிய மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி Sebastian (Jobby) Pozholiparampil அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையிலுள்ள ஏறத்தாழ ஐம்பதாயிரம் மற்றும், செங்கல்பட்டு, தர்மபுரி, வேலூர், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளிலுள்ள ஏறத்தாழ பதினைந்தாயிரம் சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் விசுவாசிகளை, இப்புதிய ஓசூர் மறைமாவட்டம் கொண்டிருக்கின்றது. மேலும், சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் இராமநாதபுரம் மற்றும் தக்களை மறைமாவட்டத்தின் திருஆட்சிப் பகுதியின் விரிவாக்கத்தையும் ஏற்றுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

(ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-13 01:24:49]


உலகில் 250 நகரங்களில், இந்திய அருள்பணியாளரின் கண் தான இயக்கம்

நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்திய கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட கண் தான இயக்கம், தற்போது ஐந்து நாடுகளில், 250 நகரங்களில் பரவியுள்ளது என்று, யூக்கா செய்தி கூறுகின்றது.

கிளேரிசியன் சபை அருள்பணியாளர் ஜார்ஜ் கண்ணன்தானம் அவர்கள், 2013ம் ஆண்டில் ஆரம்பித்த கண் தான இயக்கம், கண் விழிவெண்படலம் தானம் செய்யப்படுவதை ஊக்குவித்து வருகிறது. உலக பார்வை தினம் அக்டோபர் 12-இல், இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடு, சீனா, இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளின் 250 நகரங்களில் கண் தானத்தை ஊக்குவித்து, பல்லாயிரக்கணக்கான பேர், கண்களைக் கட்டிக்கொண்டு, விழிப்புணர்வு பேரணிகளில் கலந்துகொண்டனர். இதில் பேராயர்கள், ஆயர்கள், இருபால் துறவியர் ஆகியோரும் உள்ளடங்குவர். இந்த கண் தான இயக்கம், கடந்த நான்கு ஆண்டுகளில், ஐந்து நாடுகளில், நூற்றுக்கணக்கான தன்னார்வ நிறுவனங்கள், மறைமாவட்டங்கள் மற்றும் துறவற நிறுவனங்களில் பரவியுள்ளது.

புது டெல்லியில் நடைபெற்ற பேரணியில், பார்வைத் திறனற்ற நூறு பேர் உட்பட, ஏறத்தாழ 600 பேர் கலந்துகொண்டனர். உலகிலுள்ள பார்வையற்றவர்களில், ஏறத்தாழ நாற்பது விழுக்காட்டினர், அதாவது ஏறத்தாழ ஒரு கோடியே 50 இலட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர் என்று, அருள்பணி Kannanthanam அவர்கள் அறிவித்தார்.

(ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி) [2017-11-13 01:14:04]


ரோஹிங்கியா மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட இந்திய ஆயர்

இந்து தீவிரவாத குழுக்களால் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் ரோஹிங்கியா முஸ்லிம் புலம்பெயர்ந்த மக்களின் பாதுகாப்புக்கு உறுதி வழங்குமாறு, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசை, கேட்டுக்கொண்டுள்ளார், இந்திய ஆயர் ஒருவர்.

புத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழ்கின்ற மியான்மாரில் ரோஹிங்கியா இனத்தவருக்கு எதிராக இடம்பெறும் வன்முறைக்கு அஞ்சி, 2012ம் ஆண்டிலிருந்து ஜம்மு பகுதியில் புகலிடம் தேடியுள்ள அம்மக்கள் எதிர்நோக்கும் மரண அச்சுறுத்தல்களுக்குப் பயந்து, 1200க்கும் மேற்பட்டவர்கள் வெளியேறியுள்ளனர் என்று, ஜம்மு-காஷ்மீர் ஆயர் Ivan Pereira அவர்கள் கூறினார். ரோஹிங்கியா முஸ்லிம்கள், Rakhine மாநிலத்தில் இடம்பெறும் வன்முறைக்கு அஞ்சி, கட்டாயமாக வெளியேறியவர்கள் என்றும், 2012ம் ஆண்டிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ள அம்மக்கள், வன்முறை மற்றும் நிச்சயமற்றதன்மையை எதிர்கொண்டவர்கள் என்றும், ஆயர் Pereira அவர்கள் கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், ரோஹிங்கியா மக்களின் இருப்பு, உள்ளூரில் வன்முறையைத் தூண்டிவிடும் என்று, சில இந்துமத குழுக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது என்று கூறப்படுகின்றது. இதற்கிடையே, இந்தியாவில் சட்டத்திற்குப் புறம்பே குடியேறியுள்ள ஏறத்தாழ நாற்பதாயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது என்று, செய்திகள் கூறுகின்றன.

(ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி) [2017-11-13 01:06:08]


கந்தமால் கிறிஸ்தவர்களுக்கு மேலும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை மேலும் வழங்கப்பட வேண்டும் என்று கட்டக்-புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள் கேட்டுக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட கந்தமால் கிறிஸ்தவர்கள் சார்பாக, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டில் மாநில அரசுக்கு விடுத்த கட்டளை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் மனு ஒன்றை, பேராயர் ஜான் பார்வா அவர்கள் தலைமையிலான கிறிஸ்தவத் தலைவர்கள் குழு ஒன்று, மாவட்ட ஆட்சியாளரிடம் சமர்ப்பித்துள்ளது. இதற்குரிய நிதி, கந்தமால் மாவட்டத்தில் ஏற்கனவே இருக்கின்றபோதிலும், இதுவரை கிறிஸ்தவர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்று, ஆசியச் செய்தியிடம் கூறினார், பேராயர் ஜான் பார்வா.

இன்னும் சிறையிலுள்ள ஏழு அப்பாவி கிறிஸ்தவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று செபிக்குமாறும், விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார், பேராயர் ஜான் பார்வா. கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற வன்முறையில், பலியான ஒவ்வொருவருக்கும் தலா மூன்று இலட்சம் ரூபாய், கடுமையாய் காயம்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா முப்பதாயிரம் ரூபாய், இலேசாக காயமடைந்த ஒவ்வொருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் என்று, மேலும் இழப்பீட்டு தொகை வழங்கப்பட வேண்டுமென்று, 2016ம் ஆண்டு ஆகஸ்டில், உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

(ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி) [2017-11-13 00:57:02]


ஏராளமான கிறிஸ்தவர்கள் கொத்தடிமைகள், ஆயர் Mulakkal

இக்காலத்திலும், ஏராளமான கிறிஸ்தவர்கள், குடும்பக் கடன்களுக்கென பண்ணையாளர்களிடம் கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர் என்று, இந்திய ஆயர் ஒருவர் கவலை தெரிவித்தார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் ஆயர் Franco Mulakkal அவர்கள், தனது நான்காண்டு ஆயர் பணி பற்றி யூக்கா செய்தியிடம் பகிர்ந்துகொண்டவேளை, கொத்தடிமைகளாக வேலைசெய்யும் குடும்பங்களை மீட்பதற்கு அருள்பணியாளர்கள் சிலர் உழைத்து வருகின்றனர் என்றும், மீட்கப்பட்ட இந்தக் குடும்பங்களுக்கு உளவியல் முறைப்படி உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்திலுள்ள 58 விழுக்காட்டு சீக்கியர்களில், அதிகமானவர்கள் பண்ணையாளர்களும், பணக்கார விவசாயிகளும் ஆவார்கள். மேலும் அம்மாநிலத்தில் 38 விழுக்காட்டினர் இந்துக்கள். கிறிஸ்தவர்கள் 1.1 விழுக்காட்டினர். இவர்களில் அதிகமானோர் ஏழை தலித்துக்கள் என்று செய்திகள் கூறுகின்றன.

மேலும், இந்தியாவில் ஏனையப் பகுதிகளிலுள்ள கிறிஸ்தவர்களைவிட பஞ்சாப் மாநிலத்திலுள்ள கிறிஸ்தவர்கள், நகர்ப்புறத்தில் வாழ்பவர்கள், படித்தவர்கள் மற்றும் முன்னேறியவர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

(ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி) [2017-11-13 00:52:34]


இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பது சாதகமான நிலை

இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பது பாதகமான நிலை அல்ல; இயேசு வாழ்ந்த காலத்தில் ஒரு சிறு குழுவையே உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்கப் பணித்தார் என்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Baselios Cleemis அவர்கள் கூறியுள்ளார். 2018ம் ஆண்டு, சனவரி 1 முதல் 9 முடிய, பெங்களூருவில் நடைபெறவிருக்கும் இந்திய ஆயர் பேரவையின் நிறையமர்வு கூட்டத்தைப் பற்றி அறிவித்த வேளையில், கர்தினால் கிளீமிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார். "பன்மையில் ஒருமைப்பட்டு, இரக்கப்பணியில் சாட்சிகளாக" என்பது, இந்திய ஆயர் பேரவை கூட்டத்தின் மையக்கருத்தாக அமையும் என்று, இப்பேரவையின் செயலர், ஆயர் தியடோர் மாஸ்கரீனஸ் அவர்கள் தெரிவித்தார். பல்வேறு மதங்களின் சங்கமமாகத் திகழும் இந்தியாவில், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக இருப்பதை சாதகமான நிலையாகக் கருதவேண்டும் என்றும், தங்கள் எடுத்துக்காட்டான வாழ்வால், அருளாளர் இராணி மேரியைப் போல், இந்திய சமுதாயத்தில் மாற்றங்களைக் கொணர முடியும் என்றும், ஆயர் மாஸ்கரீனஸ் அவர்கள் கூறியுள்ளார். (ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி) [2017-11-10 20:11:55]


இறையடியார் ராணி மேரி முத்திப்பேறு பெற்றவராக அறிவிப்பு

இந்தியாவில், 22 ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாய் குத்திக் கொலைசெய்யப்பட்ட இறையடியார் அருள்சகோதரி, ராணி மேரி வட்டாலில் அவர்கள், நவம்பர் 04, இச்சனிக்கிழமை காலையில் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தின், இன்டோர் நகரிலுள்ள புனித பவுல் பள்ளி வளாகத்தில், புனிதர்நிலை திருப்பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், தலைமையேற்று திருப்பலி நிறைவேற்றி, இறையடியார் ராணி மேரி அவர்களை, முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார். கர்தினால்கள் ஜார்ஜ் அலஞ்சேரி, ஆசுவால்டு கிரேசியஸ், பசிலியோஸ் கிளீமிஸ், திருப்பீடத் தூதர் பேராயர் ஜாம்பத்திஸ்தா திகுவாத்ரோ, இன்டோர் பேராயர் சாக்கோ தொட்டுமரிக்கல் ஆகியோர் நிறைவேற்றிய கூட்டுத் திருப்பலியில், கர்தினால் அலஞ்சேரி அவர்கள், ராணி மேரி அவர்களின் வாழ்க்கை வரலாறை ஆங்கிலத்தில் வாசித்தார். உதயநகர் ஆலயத்தில் முத்திப்பேறு பெற்ற ராணி மேரி அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில், பேராயர் ஜாம்பத்திஸ்தா திகுவாத்ரோ அவர்கள் ஞாயிறன்று திருப்பலி நிறைவேற்றினார். மேலும், எர்ணாகுளம் புனித மரியா பசிலிக்காவில் நவம்பர் 11ம் தேதி, முத்திப்பேறு பெற்ற ராணி மேரி அவர்களின் நினைவாக திருப்பலி நிறைவேற்றப்படும் என்றும், அவரின் புனிதப் பொருள்கள், புள்ளுவழி ஊர் வழியாக கேரளாவின் பல்வேறு இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் அருள்சகோதரிகள் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி, இறையடியார் ராணி மேரி அவர்கள், 1995ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி, பேருந்தில் இன்டோர் நகருக்குப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, 41 வயது மதிக்கத்தக்க சமந்தார் சிங் என்பவரால், 54 முறைகள் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார். மத்திய பிரதேச மாநிலத்தில், இன்டோர் மறைமாவட்டத்தில், ஏழைகள் மத்தியில், முத்திப்பேறு பெற்ற ராணி மேரி அவர்கள் ஆற்றிவந்த பணிகளால் எரிச்சலடைந்த சில பண்ணையார்களின் தூண்டுதலால், இவர் கொலைசெய்யப்பட்டார். இச்சகோதரியின் குடும்பத்தினர், கொலையாளியான சமந்தார் சிங் அவர்களை மன்னித்து, அவரை அடிக்கடி சிறையில் சென்று சந்தித்துப் பேசியதன் பயனாக, தற்போது, சமந்தார் சிங் மனம் மாறி, முத்திப்பேறு பெற்ற ராணி மேரி அவர்களின் பக்தராக மாறியுள்ளார். 1954ம் ஆண்டு சனவரி 29ம் தேதி கேரளாவின் கொச்சி நகருக்கு அருகிலுள்ள Pulluvazhy என்ற ஊரில் பிறந்த அருள்சகோதரி ராணி மேரி அவர்கள், Kidangoorல், பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில், 1972ம் ஆண்டில் சேர்ந்து, 1974ம் ஆண்டில் முதல் வார்த்தைப்பாடு கொடுத்தார். 1975ம் ஆண்டில் வட இந்தியாவில் Bijnoreல் தனது மறைப்பணியைத் தொடங்கிய இச்சகோதரி, 1992ம் ஆண்டில், Udainagarல் பணியாற்றச் சென்றார். 1995ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி, தனது 54வது வயதில் கொல்லப்பட்டார், சமூக நீதிக்காகக் குரல்கொடுத்த முத்திப்பேறு பெற்ற ராணி மேரி. (ஆதாரம் : Ind.Sec/வத்திக்கான் வானொலி) [2017-11-05 23:32:11]


பாண்டிச்சேரி முன்னாள் பேராயர் மைக்கிள் அகுஸ்தின் மறைவு

பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் மைக்கிள் அகுஸ்தின் அவர்கள், நவம்பர் 04, இச்சனிக்கிழமையன்று இயற்கை எய்தினார் என்பதை, ஆழ்ந்த கவலையுடன் அறிவிக்கின்றோம். 1933ம் ஆண்டில் கோவிலானூரில் பிறந்த பேராயர் மைக்கிள் அகுஸ்தின் அவர்கள், 1961ம் ஆண்டு, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்திற்காக அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். பாரிஸ் கத்தோலிக்க நிறுவனத்தில் மெய்யியலில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், 1965ம் ஆண்டில், பெங்களூரு புனித பேதுரு குருத்துவ கல்லூரியில் பேராசிரியராக இணைந்தார். பின் அக்கல்லூரியின் அதிபராக, 1974ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். பின், 1978ம் ஆண்டில், சென்னை-மயிலாப்பூர் உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக, தனது 45வது வயதில் நியமிக்கப்பட்டு பணியாற்றிய இவர், 1981ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி வேலூர் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார். அதன்பின், 1992ம் ஆண்டு பிப்ரவரி 18ம் நாள், பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டு, 2004ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி பணி ஓய்வு பெற்றார், மறைந்த பேராயர் மைக்கிள் அகுஸ்தின். இவர் வேலூர் ஆயராக, பத்து ஆண்டுகள் 11 மாதங்கள் பணியாற்றிய காலத்தில், ஏறத்தாழ நூறு ஆலயங்கள் மற்றும் சிற்றாலயங்களைக் கட்டியுள்ளார். ஏழு புதிய பங்குகளையும், மூன்று உயர்நிலைப்பள்ளிகளையும் உருவாக்கியுள்ளார். ஐந்து ஆரம்பப் பள்ளிகளை, நடுத்தரப் பள்ளிகளாக உயர்த்தியிருக்கிறார். மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த, மாணவர்களுக்கு கோடை விடுமுறை பள்ளிகளையும் நடத்தியிருக்கிறார். மறைந்த பேராயர் மைக்கிள் அகுஸ்தின் அவர்களின் உடல், நவம்பர் 06, வருகிற திங்கள் காலை பத்து மணிக்கு பாண்டிச்சேரி அமலமரி பேராலயத்தில் நடைபெறும் திருப்பலிக்குப்பின், நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் : Ind.Sec/வத்திக்கான் வானொலி) [2017-11-05 23:45:07]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்