வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்இயேசு பூர்வீக இனத்தவரின் காயங்களில் இருக்கின்றார்

சமூகத்தில் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களிடம் சென்று அவர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதும், புதிய சமூக நியதியைக் கொண்டுவரும் பணிகளில் ஈடுபடுவதும் நவீன திருஅவையின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள் நம் பூர்வீக இன மற்றும் சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட மக்களின் சதைகளிலும், காயங்களிலும், மனப்புண்களிலும், ஒவ்வொரு நாளும் நாம் இயேசுவை சந்திக்கின்றோம் என்று, இந்திய தலத்திருஅவை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். நவம்பர் 18, இஞ்ஞாயிறன்று அகிலத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் இரண்டாவது உலக வறியோர் நாளையொட்டி ஆசியச் செய்திக்குப் பேட்டியளித்த, மும்பை உயர்மறைமாவட்ட பேராயரும், இந்திய ஆயர் பேரவைத் தலைவருமான கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இவ்வாறு கூறினார். மும்பை மாநகருக்கு ஏறத்தாழ 200 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Raigad பூர்வீக இன மக்களில், ஏழைகளை நாம் சந்திக்கின்றோம் என்றும், இம்மக்களைச் சந்தித்து இவர்களோடு செபித்து, உணவளிப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் அவர்களை சந்தித்து முன்னேற்றுவதற்கு முயற்சிக்கிறோம் என்றும் கூறினார், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ். “இந்த ஏழை கூவியழைத்தான், ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்” என்ற தலைப்பில், இரண்டாவது உலக வறியோர் நாள் சிறப்பிக்கப்படுகின்றது. (AsiaNews) 17 November 2018, 14:57 [2018-11-18 23:51:00]


தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் ஆயர்கள்

கஜா புயலால் நாகபட்டிணம் மற்றும், வேதாரண்யம் மாவட்டங்கள் கடும் பாதிப்பு. இந்த இயற்கைப் பேரிடரால், எண்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள் இந்தியாவின் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியைத் கடுமையாய்த் தாக்கியுள்ள கஜா புயலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களின் ஆறுதலையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளனர், இந்திய கத்தோலிக்க ஆயர்கள். இந்திய ஆயர் பேரவையின் செயலர், ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசும், திருஅவையும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதையும் விடுத்து, இந்த இயற்கைப் பேரிடரால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இப்புயலில் இறந்தவர்களின் ஆன்மாக்கள், நிறை சாந்தி அடைய செபிப்பதாக அறிவித்துள்ள ஆயர்கள், உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு தங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரை பகுதியை கடுமையாய்த் தாக்கியுள்ள இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு, உள்ளூர் மற்றும் தமிழக திருஅவை அதிகாரிகள் நிவாரண உதவிகளை ஆற்றி வருகின்றனர். கஜா புயலால், எண்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. (AsiaNews) [2018-11-18 23:44:47]


நவம்பர் 11, தலித் மக்களின் விடுதலை ஞாயிறு

இந்தியாவில், கத்தோலிக்கர்களும், ஏனைய கிறிஸ்தவர்களும் இணைந்து, நவம்பர் 11, வருகிற ஞாயிறை, தலித் மக்களின் விடுதலை ஞாயிறென சிறப்பிக்கின்றனர். ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் இந்தியாவில், கத்தோலிக்கர்களும், ஏனைய கிறிஸ்தவர்களும் இணைந்து, நவம்பர் 11, வருகிற ஞாயிறை, தலித் மக்களின் விடுதலை ஞாயிறென சிறப்பிக்கின்றனர். இந்திய ஆயர் பேரவையின், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பணிக்குழுவும், இந்திய கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவையும் இணைந்து கடைபிடிக்கும் இந்த ஞாயிறு நிகழ்வுகளில், ஆர்த்தடாக்ஸ் சபையினரும் இணைகின்றனர். 2007ம் ஆண்டு முதல், நவம்பர் மாதத்தின் இரண்டாம் ஞாயிறன்று தலித் மக்களின் விடுதலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், இவ்வாண்டு, ஒடிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் நிகழ்ந்த கொடுமைகளின் 10ம் ஆண்டு நினைவும் இணைந்து சிறப்பிக்கப்படுகிறது என்றும் இந்திய ஆயர் பேரவையின், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பணிக்குழு அறிவித்துள்ளது. திருஅவை, மற்றும் கிறிஸ்தவ சபைகளுக்குள்ளும், வெளி உலகில் அரசு மற்றும் சமுதாயத்தாலும் தலித் மக்கள் அனுபவிக்கும் பாகுபாடுகளை எதிர்த்து, கடைபிடிக்கப்படும் தலித் மக்களின் விடுதலை ஞாயிறுக்கு, இவ்வாண்டு, "நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" என்ற மையக்கருத்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. [2018-11-13 01:43:11]


பட்டாசுகள் இல்லாத, சுற்றுச்சூழல் சீரழிவு இல்லாத தீபாவளி

இந்தியாவின் 12 கத்தோலிக்கப் பள்ளிகளில் பயிலும் 20,000த்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர், பட்டாசுகள் இல்லாத, சுற்றுச்சூழல் சீரழிவு இல்லாத தீபாவளியைக் கொண்டாடினர் ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இயங்கிவரும் 12 கத்தோலிக்கப் பள்ளிகளில் பயிலும் 20,000த்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர், பட்டாசுகள் இல்லாத, சுற்றுச்சூழல் சீரழிவு இல்லாத தீபாவளியைக் கொண்டாட உறுதிபூண்டதை, இந்திய ஆயர் பேரவை பெருமையோடு அறிவித்துள்ளது. இந்த மாணவர்கள் எடுத்த உறுதிமொழியை, இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளும், குறிப்பாக, அனைத்து கத்தோலிக்கப் பள்ளிகளும் பின்பற்றவேண்டும் என்று இந்திய ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சாரப் பணிக்குழுவின் செயலர், அருள்பணி ஜோசப் மணிப்பாடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். சலேசிய சபையினர் நடத்தும் தொன் போஸ்கோ பள்ளி, இயேசு சபையினர் நடத்தும் புனித சேவியர் பள்ளி, ஜீசஸ் அண்ட் மேரி கான்வென்ட் பள்ளி, பிரசென்டேஷன் பள்ளி, ஆகியவை உட்பட, 12 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இந்த முயற்சியை மேற்கொண்டனர் என்று இந்திய ஆயர் பேரவையின் அறிக்கை கூறுகிறது. இறைவன் வழங்கியுள்ள வாழ்வு என்ற கொடையை பராமரிக்கவும், குறிப்பாக, குழந்தைகளும், வயதில் முதிர்ந்தோரும் சுவாசிப்பதில் தொல்லைகள் அடையாமல் இருக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று பள்ளி நிர்வாகிகள் கூறியுள்ளனர். தீபாவளி கொண்டாட்டத்தில் பயன்படுத்தப்படும் பட்டாசுகளால், ஒலி மாசுப்பாடு உருவாவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் சீரழிவும் உருவாகிறது என்பதும், குறிப்பாக, டில்லி மாநகரம், காற்று மாசுபாட்டில் உலகிலேயே மிகவும் ஆபத்தான இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன. [2018-11-07 23:46:25]


இருளிலிருந்து ஒளிபோல், பகை உணர்வுகளிலிருந்து அன்பு பிறக்கட்டும்

இறைவன் வழங்கியுள்ள செல்வங்கள் அனைத்தும், உடன் மனிதனுக்கு உதவுவதற்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகள் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் இந்தியாவிலும் உலகின் வேறு சில நாடுகளிலும் கொண்டாடப்பட்டுவரும் தீபாவளித் திருவிழாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து, செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர், இந்திய ஆயர்கள். இருளின் மீது ஒளியும், தீமைகளின் மீது நன்மையும், அறியாமையின்மீது ஞானமும் வெற்றிகொண்ட இந்த ஒளியின் திருவிழா, உலக மக்கள் அனைவரிலும் தனிப்பட்ட முறையில் ஆன்மீக அர்த்தத்தை தூண்டுவதாக உள்ளது என தங்கள் செய்தியில் கூறியுள்ள இந்திய ஆயர்கள், நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள உடமைகளும், செல்வங்களும், பிறருக்கு உதவுதற்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பாக நோக்கப்பட வேண்டும் என மேலும் அதில் கூறியுள்ளனர். இருளிலிருந்து ஒளி வரமுடியுமெனில், வெறுப்புணர்வுகளிலிருந்து வெளிப்பட்டு, அன்பு பிறக்க முடியும் என நாட்டின் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் கூறிய வார்த்தைகளையும் தங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர், இந்திய ஆயர்கள். எக்காலத்தையும் விட தற்போது, அன்பின் ஒளியும், நீதியின் வெளிச்சமும், பிறரன்பு எனும் தீபமும், உண்மையாயிருத்தல் எனும் சுடரும், மதங்களின் சரியான பயன்பாடும் தேவைப்படுகின்றன எனக் கூறும் ஆயர்கள், ஏழை, பணக்காரர், கல்வி கற்றோர், படிக்காதவர் என எவ்வித பாகுபாடுமின்றி, அனைத்து மக்களுக்கும் ஒளியின் தேவை உள்ளது என எடுத்துரைத்துள்ளனர். உண்மை, ஒன்றிப்பு, நீதி, அமைதி என்ற உள்மன தீபங்களை இந்த தீபாவளித் திருவிழா நாளில் ஏற்றி, நாமனைவரும் ஒளியை பிறருக்கு எடுத்துச் செல்பவர்களாகச் செயல்படுவோம் என விண்ணப்பித்து, திருவிழா வாழ்த்து கூறி, தங்கள் செய்தியை நிறைவுச் செய்துள்ளனர், இந்திய ஆயர்கள். [2018-11-07 01:05:55]


தன்பாலின உறவு சட்டமயமானது தவறு - இந்தியத் திருஅவை

தன்பாலின உறவை ஆதரித்து, இந்திய உச்ச நீதி மன்றம் வழங்கியத் தீர்ப்பு, சட்டப்பூர்வமாக மாறியிருக்கலாமே தவிர, அது, நன்னெறி வழியில் சரியான முடிவு அல்ல கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் இந்திய உச்ச நீதி மன்றம், தன்பாலின உறவுகளை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதை, இந்திய கத்தோலிக்கத் திருஅவை, நன்னெறி முறையில் சரியென்று ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது. கத்தோலிக்கத் திருஅவை, தன்பாலின உறவை ஒருபோதும் ஆதரிக்காது என்றும், ஆண் பெண் உறவும், குடும்பமும் திருஅவையின் கருத்துக்களாக எப்போதும் இருக்கும் என்றும், இந்திய ஆயர் பேரவையின் துணைத் தலைவர், ஜோஷுவா மார் இஞ்ஞாதியோஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். தன் பாலின உறவை குற்றம் என்று இதுவரை கூறிவந்த இந்தியச் சட்டத்தின் 377-A பிரிவை நீக்கி, கடந்த வாரம் செப்டம்பர் 6ம் தேதியன்று, இந்திய உச்ச நீதி மன்றம் வழங்கியத் தீர்ப்பு, சட்டப்பூர்வமாக மாறியிருக்கலாமே தவிர, அது, நன்னெறி வழியில் சரியான முடிவு அல்ல என்று, இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் முன்னேற்ற பணிக்குழுவின் செயலர் அருள்பணி ஸ்டீபன் பெர்னாண்டஸ் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மனித பாலின ஈர்ப்பும், உறவும், அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கென்று இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை என்றும், தன்பாலின ஈர்ப்பும், உறவும், இறைவனின் திட்டத்திற்கு முரணாகச் செல்கின்றன என்றும் அருள்பணி பெர்னாண்டஸ் அவர்கள் கூறினார். இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் குரல் எழுப்பி வருகின்றனர் என்று UCA செய்தியொன்று கூறுகிறது. (UCAN) [2018-09-14 01:15:58]


தன்பாலின உறவு சட்டமயமானது தவறு - இந்தியத் திருஅவை

தன்பாலின உறவை ஆதரித்து, இந்திய உச்ச நீதி மன்றம் வழங்கியத் தீர்ப்பு, சட்டப்பூர்வமாக மாறியிருக்கலாமே தவிர, அது, நன்னெறி வழியில் சரியான முடிவு அல்ல கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் இந்திய உச்ச நீதி மன்றம், தன்பாலின உறவுகளை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதை, இந்திய கத்தோலிக்கத் திருஅவை, நன்னெறி முறையில் சரியென்று ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது. கத்தோலிக்கத் திருஅவை, தன்பாலின உறவை ஒருபோதும் ஆதரிக்காது என்றும், ஆண் பெண் உறவும், குடும்பமும் திருஅவையின் கருத்துக்களாக எப்போதும் இருக்கும் என்றும், இந்திய ஆயர் பேரவையின் துணைத் தலைவர், ஜோஷுவா மார் இஞ்ஞாதியோஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். தன் பாலின உறவை குற்றம் என்று இதுவரை கூறிவந்த இந்தியச் சட்டத்தின் 377-A பிரிவை நீக்கி, கடந்த வாரம் செப்டம்பர் 6ம் தேதியன்று, இந்திய உச்ச நீதி மன்றம் வழங்கியத் தீர்ப்பு, சட்டப்பூர்வமாக மாறியிருக்கலாமே தவிர, அது, நன்னெறி வழியில் சரியான முடிவு அல்ல என்று, இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் முன்னேற்ற பணிக்குழுவின் செயலர் அருள்பணி ஸ்டீபன் பெர்னாண்டஸ் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மனித பாலின ஈர்ப்பும், உறவும், அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கென்று இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை என்றும், தன்பாலின ஈர்ப்பும், உறவும், இறைவனின் திட்டத்திற்கு முரணாகச் செல்கின்றன என்றும் அருள்பணி பெர்னாண்டஸ் அவர்கள் கூறினார். இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் குரல் எழுப்பி வருகின்றனர் என்று UCA செய்தியொன்று கூறுகிறது. (UCAN) [2018-09-10 22:39:36]


மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்த ஆயர் மஸ்கரீனஸ்

இந்தியக் கிறிஸ்தவ சமுதாயம், அமைதியை விழையும் ஒரு சமுதாயம் என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர், அவர்கள் ஆற்றிவரும் ஒப்பற்ற சமுதாயப் பணிகள் தடையின்றி தொடர்வதற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாக வாக்களித்தார் ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர், ஆயர் தியோடோர் மஸ்கரீனஸ் அவர்களும், மேகாலயா மாநில முதல்வர், கொன்ராட் சங்மா அவர்களும், மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் அவர்களை, செப்டம்பர் 3, இத்திங்களன்று அவரது இல்லத்தில் சந்தித்தனர் என்று, இந்திய ஆயர் பேரவை, செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் குறித்தும், கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு தரப்படும் நெருக்கடிகள் குறித்தும், ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் விளக்கிக் கூறியதை, அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் பொறுமையாக செவிமடுத்தார் என்று, இச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெற்று சமுதாயப்பணிகள் ஆற்றி வரும் 88 அரசு சாரா தன்னார்வக் குழுக்கள் மீது கடினமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும், இக்குழுக்கள் அனைத்தும், கிறிஸ்தவ குழுக்கள் என்றும், ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் எடுத்துரைத்தார். ஆயரும், மேகாலயா முதல்வரும் கூறியவற்றை கவனமுடன் செவிமடுத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், கிறிஸ்தவ சமுதாயம், அமைதியை விழையும் ஒரு சமுதாயம் என்றும், அவர்கள் ஆற்றிவரும் ஒப்பற்ற சமுதாயப் பணிகள் தடையின்றி தொடர்வதற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாகவும் கூறினார். (CBCI) [2018-09-07 00:39:12]


இந்திய கிறிஸ்தவர்கள் திருத்தந்தைக்கு கடிதம்

ஒடிசா மாநிலத்தில் 2008ம் ஆண்டில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் மறைசாட்சிகளாக அறிவிக்கப்படுமாறு திருத்தந்தைக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பம் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் இந்தியாவின் கந்தமால் மாவட்டத்தில், 2008ம் ஆண்டில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற வன்முறைக்குப் பலியான கிறிஸ்தவர்கள், விசுவாசத்தின் மறைசாட்சிகளாக அறிவிக்கப்படுமாறு, இந்திய தேசிய கத்தோலிக்க கழகத்தின் முன்னாள் தலைவர், ஜான் தயாள் அவர்கள், திருத்தந்தைக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்க்கெதிராக வன்முறைகள் இடம்பெற்ற பத்தாமாண்டு நிறைவையொட்டி, இக்கடிதத்தை வெளியிட்டுள்ள, இந்திய சமூக ஆர்வலரான ஜான் தயாள் அவர்கள், கந்தமால் கிறிஸ்தவர்களின் விசுவாசம் திருஅவையில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இத்தகைய தியாகத்தை மேற்கொண்டவர்கள், திருஅவை வரலாற்றில் மறைசாட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள ஜான் தயாள் அவர்கள், கட்டக்-புபனேஸ்வர் பேராயர், இந்தியாவின் நான்கு கர்தினால்கள், மற்றும் தலத்திருஅவைத் தலைவர்களை, இவ்விவகாரத்தில் தீவிரம் காட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் சுவாமி லக்ஷ்மானந்தா அவர்கள், 2008ம் ஆண்டு ஆகஸ்டில் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், கிறிஸ்தவர்கள் மீது குற்றம் சுமத்தி, இந்து தீவிரவாத அமைப்பினர், அதே ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதியன்று கந்தமால் மாவட்டத்தில், வன்முறையில் ஈடுபட்டனர். இவ்வன்முறையில், சிறார், பெண்கள், கர்ப்பிணி பெண்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள் உட்பட அறுபதாயிரத்துக்கும் அதிகமானோர் காடுகளுக்குச் சென்று ஒளிந்துகொண்டனர். அவர்களில் முப்பதாயிரம் பேர் ஓராண்டு அளவாக, அரசின் முகாம்களில் வாழ்ந்தனர். ஆறாயிரத்துக்கு அதிகமான வீடுகளும், 300க்கு அதிகமான ஆலயங்களும் அழிக்கப்பட்டன. மேலும் 120 பேர் கொல்லப்பட்டனர். [2018-08-30 01:56:07]


புனித அன்னை தெரேசாவின் 108வது பிறந்தநாள் நினைவு

கொல்கத்தா பேராயர் இல்லத்தில் நடைபெற்ற, புனித அன்னை தெரேசாவின் 108வது பிறந்தநாள் நினைவுக் கொண்டாட்டத்தில், மாசிடோனியா குடியரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் வாழ்வு என்பது, இறைவன், மனிதர்களுக்கு வழங்கிய ஒரு மாபெரும் கொடை என்பதையும், அந்தக் கொடை இறைவனுக்கு மட்டுமே உரியதொரு கொடை என்பதையும் அன்னை தெரேசா தன் வாழ்வின் வழியே உணர்த்தினார் என்று, கொல்கத்தா பேராயர் தாமஸ் டிசூசா அவர்கள் கூறினார். ஆகஸ்ட் 26 கடந்த ஞாயிறன்று, புனித அன்னை தெரேசா பிறந்ததன் 108வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க, திருப்பலி நிறைவேற்றிய பேராயர் டிசூசா அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார். இத்தருணத்தில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அன்னை தெரேசா பிறரன்பு சகோதரிகள் சபையின் தலைவி மேரி பிரேமா அவர்கள், பலருடைய வாழ்க்கை, அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை வைத்து அளக்கப்படும் வேளையில், அன்னை தெரேசாவின் வாழ்க்கை, அன்பை அளவுகோலாகக் கொண்டிருந்தது என்று கூறினார். அன்னையின் நினைவுத் திருப்பலியைத் தொடர்ந்து, பேராயர் இல்லத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், மாசிடோனியா குடியரசிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் என்றும், மாசிடோனிய குடியரசு வழங்கிய அன்னை தெரேசாவின் வெண்கலச் சிலையை, பேராயர் டிசூசா அவர்கள் அர்ச்சித்தார் என்றும் ஆசிய செய்தி கூறியுள்ளது. 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி, மாசிடோனியா குடியரசின் Skopje எனும் ஊரில் பிறந்த அன்னை தெரேசா அவர்கள், 1997ம் ஆண்டு, செப்டம்பர் 5ம் தேதி, கொல்கத்தாவில், தன் 87வது வயதில், இறையடி சேர்ந்தார். 2003ம் ஆண்டு, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் அருளாளராகவும், 2016ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராகவும் உயர்த்தப்பட்ட புனித அன்னை தெரேசா, கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் இணை பாதுகாவலராக அறிவிக்கப்பட்டுள்ளார். [2018-08-30 01:52:14]