வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்ஆசியாவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற அநீதியான மரணம்

2021ல், ஆசியாவில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் மரணம் பற்றி குறிப்பிட்டுள்ளது ASIANews செய்தி நிறுவனம். கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் கடந்த ஆண்டில், அதாவது 2021ல், ஆசியாவில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, இந்தியாவில் அநீதியாக 8 மாதங்கள் சிறைவைக்கப்பட்டு உயிரிழந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் மரணம் பற்றி குறிப்பிட்டுள்ளது ASIANews செய்தி நிறுவனம். 2021ன் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ள இச்செய்தி நிறுவனம், மியான்மாரில் பிப்ரவரி முதல் தேதி இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு, ஜூன் 17ல் Hong Kongன் மக்களாட்சி ஆதரவு பத்திரிக்கை அலுவலகம் காவல்துறையின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது, ஆப்கான் ஆடசி மாற்றம், இரஷ்ய மற்றும் பிலிப்பீன்ஸின் மனித உரிமை நடவடிக்கையாளர்கள் நொபெல் அமைதி விருதைப் பெற்றது என்ற வரிசையில், இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் மரணத்தையும் இணைத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் பூர்வீகக் குடிமக்களின் உரிமைகளுக்காக உழைத்த ஒரே காரணத்திற்காக, பயங்கரவாதத்தில் ஈடுபட்டார் என குற்றஞ்சாட்டப்பட்டு 8 மாத சிறைத்தண்டனை அனுபவித்து, அத்தண்டனைக் காலத்தின்போதே கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஜூலை 5ம் தேதி உயிரிழந்த அருள்பணி ஸ்டான் சுவாமியின் மரணம், 2021ம் ஆண்டின் நிகழ்வுகளுள் முக்கியத்துவம் நிறைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் பொய்யானது, ஆதாரமற்றது என்பதை நிரூபிக்க, இயேசுசபையினரால் மும்பை உயர்நீதிமன்றத்தில், கடந்தமாதம் விண்ணப்பம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. [2022-01-04 00:26:49]


கர்நாடகாவில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளுக்குத் தடை

தென்மேற்கு இந்தியாவின் கர்நாடகாவில் இந்துமத அடிப்படைவாதிகளின் வன்முறை அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், வழிபாட்டுத்தலங்கள், அரங்குகள் மற்றும் வீடுகளில் நடைபெறவிருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை, காவல்துறை கட்டுப்படுத்தியுள்ளது என்று ரிலீஸ் இன்டர்நேஷனல் எச்சரிக்கிறது. உலகளவில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் Partners of Release International என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்மஸ் தினத்தன்று நாட்டின் கிறிஸ்தவர்களைப் பாதுகாக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வலியுறுத்தியுள்ளனர். இவ்வமைப்பின் உறுப்பினரான கிறிஸ்தவப் பேராயர் ஜோசப் டிசூசா அவர்கள் "இந்தியாவில் கர்நாடகாவின் நிலைமை பதட்டமாக உள்ளது என்றும், பெல்குவாமில் கிறிஸ்தவர்கள் வழிப்பாட்டுத் தலங்களுக்கும் குழுவாகச் சந்திப்பதற்கும் காவல் துறையினர் அனுமதிப்பதில்லை என்றும் இச்சூழல் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் வழிபாடுகளை நடத்த இயலாத நிலையை ஏற்படுத்தி உள்ளது என்றும் கவலை தெரிவித்தார். இத்தகைய செயல்களைச் செய்வதன் மூலம், அவர்கள் தங்கள் எல்லையை மீறுவதாகத் தெரிவித்த பேராயர் டி'சோசா, "இதுபோன்ற எதையும் நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இந்துமத அடிப்படைவாதிகளின் வற்புறுத்தலின் அடிப்படையில் மதமாற்றத்தை சட்டவிரோதமாக்குவதற்கான இயக்கம் வளர்ந்து வருகிறது என்றும், புதிய சட்டத்தை இயற்றும் புதிய மாநிலமாக கர்நாடகா மாறி வருகிறது என்றும், தனது வேதனையை வெளிப்படுத்தினார். மேலும், சில இந்து மதத் தலைவர்கள், கிறிஸ்தவர்கள் கட்டாய மதமாற்றம் செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், கட்டாய மதமாற்றம் என்ற எண்ணமே இந்தியக் கிறிஸ்தவர்களுக்கு வெறுப்பாக உள்ளது என்றும், தேசத்தின் பல பகுதிகளில், மத அடிப்படைவாதிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதால், கிறிஸ்தவர்கள் இப்போது பெரும் அச்சத்தில் உள்ளனர் என்று எடுத்துக்கட்டியதுடன் கிறிஸ்தவ சமூகம், அதன் வழிபாட்டுத்தலங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூகத்தை இலக்காகக்கொண்ட இடைவிடாத வெறுப்பு பிரச்சாரங்களுக்கு இந்திய சனநாயகத்தில் இடமில்லை என்றும், எடுத்துக்காட்டிய பேராயர் இந்த இக்கட்டான நிலையில் பிரதமரிடமிருந்து கிறிஸ்தவர்கள் பாதுகாப்பை எதிர்பார்க்கிறோம் என்றும், நம்பிக்கை தெரிவித்தார். (ICN) [2021-12-23 16:09:55]


அம்பிகாபூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பாரா

நம் மத்தியில் வாழ்வதற்கு வந்துள்ள கடவுளின் அன்பின் பெயர் மற்றும் முகம், இயேசு எனவும், ஒவ்வொருவரும் அவரைத் தேட ஆவல்கொள்வீர்கள் மற்றும், அவரைக் கண்டுகொள்வதில் மகிழ்வீர்கள் என்று, நான் நம்புகிறேன் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 22, இப்புதனன்று, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் எழுதியுள்ளார். வரவிருக்கும் கிறிஸ்மஸ் பெருவிழாவையொட்டி, கிறிஸ்மஸ் (#Christmas) என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். அம்பிகாபூர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர் மேலும், இந்தியாவின் அம்பிகாபூர் மறைமாவட்ட ஆயராக பணியாற்றிவந்த ஆயர் Patras Minj அவர்களின் பணிஓய்வை ஏற்றுள்ளதோடு, அம்மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அம்மறைமாவட்டத்தில் முதன்மைக் குருவாகப் பணியாற்றிவரும் அருள்பணி அந்தோனிஸ் பாரா அவர்களை, டிசம்பர் 22, இப்புதனன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். அம்பிகாபூர் மறைமாவட்ட புதிய ஆயர் அந்தோனிஸ் பாரா அவர்கள், ஜாஷ்பூர் மறைமாவட்டத்திலுள்ள ஷோஹா என்ற ஊரில், 1958ம் ஆண்டில் பிறந்தார். 1988ம் ஆண்டில் அம்பிகாபூர் மறைமாவட்டத்திற்காக, அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், உரோம் உர்பானியானம் பாப்பிறை இறையியல் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 2015ம் ஆண்டிலிருந்து, அம்மறைமாவட்ட பேராலயத்தின் பங்குத்தந்தையாகவும் இவர் பணியாற்றி வருகிறார். [2021-12-23 16:04:02]


மதமாற்ற தடைச்சட்டத்திற்கு எதிராக பெங்களூருவில் போராட்டம்

இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவரும் வேளையில், அரசியல்வாதிகள், மீண்டும், மீண்டும், மதமாற்றத்தைப் பற்றிப் பேசி, மக்களின் வன்முறை உணர்வுகளைத் தூண்டிவருவது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று, பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை, கர்நாடகா மாநில அவை வருகிற வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவிருக்கும் சூழலில், இந்தச் சட்டம், அரசியல்வாதிகளின் கற்பனையில் உருவான கதையிலிருந்து தோன்றியது என்றும், இது, இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் ஒரு முயற்சி என்றும், பேராயர் மச்சாடோ அவர்கள் கூறினார். மாநில அவையில் நடைபெறவிருக்கும் இந்த விவாதத்தை கண்டனம் செய்து, அனைத்து கர்நாடக கிறிஸ்தவ ஒருங்கிணைப்பின் உறுப்பினர்கள், பெங்களூருவின் புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்திற்கு முன், அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதசார்பற்ற கொள்கைகளை முன்னிறுத்தும் இந்திய அரசியல் சட்டங்களுக்கு இழிவைத் தேடித்தரும் இத்தகைய ஆபத்தான சட்டத் திருத்தங்களை எதிர்த்து, அனைத்து நல்மனம் கொண்டோரும் குரல் எழுப்பவேண்டும் என்று, பெங்களூரு பேராயர், இந்தப் போராட்டத்தின்போது அழைப்பு விடுத்தார். அண்மைய ஆண்டுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்துவரும் வன்முறைகளை, இத்தகைய சட்டத் திருத்தங்கள் மேலும் அதிகரித்துவிடும் வாய்ப்புக்கள் உண்டு என்று, பேராயர் மச்சாடோ அவர்கள் கவலை தெரிவித்தார். கர்நாடகா மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 15,000 முதல் 20,000 வரை கூடியுள்ளதாக, அரசியல்வாதிகள் தரும் விவரங்களுக்கு எவ்வித அடிப்படையும் இல்லை என்று கூறிய பேராயர் மச்சாடோ அவர்கள், மத மாற்றங்கள் நடைபெறுவது உண்மையானால், 2001ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1.91 விழுக்காடாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, 2011ம் ஆண்டு 1.87 விழுக்காடாக குறைந்தது எப்படி என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். (AsiaNews) [2021-12-12 23:34:53]


விண்மீன் காட்டும் பாதையில்... : பசிபோக்கும் முயற்சிகள் பரவ...

சென்ற ஆண்டு, மார்ச் மாத இறுதி வாரத்தில், இந்தியாவில் முழு அடைப்பு என்ற ஆணை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பிறப்பிக்கப்பட்டதும், பல கோடி வறியோரின் வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டது. அந்த முழு அடைப்பு காலத்தில், யாருடைய வேண்டுகோளும் இன்றி, எவ்விதத் தூண்டுதலும் இன்றி, எள்ளளவும் விளம்பரங்களைத் தேடாமல், தனிப்பட்ட மனிதர்கள், குறிப்பாக, இளையோர், மற்றும் அரசுசாரா தன்னார்வ அமைப்பினர், பல இலட்சம் மக்களுக்கு உணவு வழங்கிவந்தனர். அஸ்ஸாம் மாநிலத்தின் பிஸ்வநாத் (Biswanath) மாவட்டத்தில் வாழும் 10,000 வறிய குடும்பங்களுக்கு உணவு வழங்கிவந்த ஜயந்த போரா (Jayanta Bora) என்பவர், உணவுவழங்குகையில், கோவிட் பெருந்தொற்றிலிருந்து அம்மக்கள் தங்களையே காத்துக்கொள்ளும் வழிமுறைகளையும் கூறிவந்தார். அதேபோல், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், 'அட்சயம்' என்ற பிறரன்பு அமைப்பின் வழியே, நவீன்குமார் என்ற இளையவரும் அவருடன் இணைந்த இளையோரும், தங்கள் பகுதிகளில், தெருக்களில் வாழ்வோரின் பசிபோக்கும் பணியில் ஒவ்வொருநாளும் ஈடுபட்டு வந்தனர். கோவிட் பெருந்தொற்று காலம் முழுவதும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், கத்தோலிக்கத் திருஅவை, தன் மறைமாவட்டங்கள், பங்குத்தளங்கள், துறவற நிறுவனங்கள், காரித்தாஸ், மற்றும், புனித வின்சென்ட் தே பால் அமைப்புகள் வழியே, மக்களின் துயர் நீக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன என்பதை நாம் அறிவோம். செய்திகளாக வெளிவராமல், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்காமல், ஏன், அடுத்திருப்பவர் கவனத்தையும் ஈர்க்காமல், மக்களின் பசியைப் போக்கிவரும் மனிதர்கள், நம்மைச் சுற்றி எப்போதும் உள்ளனர். இவர்கள், அனைவரும், மனிதம் இவ்வுலகில் ஒருபோதும் அழியாது என்பதற்கு, உயிருள்ள சாட்சிகள். "உண்பதற்கு இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை" என்று கூறி, மக்களுடைய பசியைப் போக்க உணவளித்த இயேசுவின் புதுமையை இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 15:29-37) செவிமடுக்கும் வேளையில், இத்தகையப் புதுமை, நம்மிடையே இன்றும் பல வடிவங்களில் தொடர்கிறது என்பதை எண்ணி, இறைவனுக்கு நன்றிகூறுவோம். திருவருகைக்காலம் முழுவதும், வறியோரின் பசிபோக்கும் முயற்சிகளில் நாம் ஈடுபட, இறைவன் நமக்கு வழிகாட்டுவாராக! [2021-12-01 01:14:19]


2022ம் ஆண்டு புனிதராக உயர்த்தப்படும் அருளாளர் தேவசகாயம்

இந்தியாவில் அருளாளராக வணங்கப்பட்டுவரும் தேவசகாயம் அவர்களை, புனிதராக உயர்த்தும் விழா, 2022ம் ஆண்டு, மே மாதம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு மே மாதம் 3ம் தேதியே, ஏழு அருளாளர்களை புனிதர்களாக அறிவிப்பதற்குரிய அனைத்து வழிமுறைகளும் நிறைவு செய்யப்பட்டிருந்தாலும், கோவிட் பெருந்தொற்று உருவாக்கிய பிரச்சனைகளால், இவர்களை புனிதர்களாக உயர்த்தும் நிகழ்வு, தள்ளிப்போடப்பட்டு, தற்போது, அந்நிகழ்வு, 2022ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லப்பட்ட அருளாளர் தேவசகாயம் அவர்களோடு இணைந்து மேலும் 6 அருளாளர்களும் வரும் ஆண்டு, மே மாதம் 15ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்த்தும் திருப்பலியில் புனிதர்களாக அறிவிக்கப்பட உள்ளனர். அருள்பணியாளர்களாக பணியாற்றி உயிர் துறந்த அருளாளர்கள், César de Bus, Luigi Maria Palazzolo, Giustino Maria Russolillo, Charles de Foucauld, மற்றும், அருள் சகோதரிகள் Maria Francesca di Gesù, Maria Domenica Mantovani, ஆகிய ஆறு பேர், மற்றும், இலாசர் என்ற பெயரைத் தாங்கிய பொதுநிலையினரான அருளாளர் தேவசகாயம் ஆகியோர் புனிதர்களாக உயர்த்தப்படுவர். [2021-11-13 00:47:58]


தீபாவளித் திருநாள் சிறப்பு செய்தி - அருள்பணி அருள் ஜான்போஸ்கோ

வேலூர் மறைமாவட்டத்தின் அருள்பணி அருள் ஜான் போஸ்கோ அவர்கள், நவம்பர் 04, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட தீபாவளித் திருவிழாவுக்கென சிறப்பு செய்தி ஒன்றை வழங்கினார். வாழ்க்கையை நன்றாகப் புரிந்துகொள்ள மூன்று இடங்களுக்குச் செல்லவேண்டும். 1. மருத்துவமனை. அங்கே உடல்நலத்தைவிட அழகானது வேறெதுவுமில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். 2. சிறைச்சாலை. சுதந்திரம் எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 3. கல்லறை. வாழ்வு என்பது ஒன்றுமே இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு திருநாளும் வாழ்வைப் புரிந்துகொள்ளவும், அதை அழகாய் வடிவமைத்துக் கொள்வதற்குமான வழிகளாக உள்ளன. நாம் நடந்துசெல்லும் இந்தப் பூமி, நாளை நமது மேற்கூரையாக மாறிவிடும்.. இவ்வாறெல்லாம் அருள்பணி அருள் ஜான்போஸ்கோ அவர்கள், தன் செய்தியில் கூறியுள்ளார் [2021-11-04 23:09:06]


கர்நாடக அரசின் கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு

கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை நடத்த உள்ளதாக கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது, ஓர் ஆபத்து நிறைந்த நடவடிக்கை என தன் கவலையை வெளியிட்டுள்ளார் பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ. கர்நாடக மாநிலத்தில் பணிபுரியும் கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா அரசின், பின்தங்கிய வகுப்பினர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கவலையை வெளியிட்ட பேராயர் மச்சாடோ அவர்கள், ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும், மேலும் அடையாளம் காணப்பட்டு, அநீதியான முறையில் நடத்தப்படுவதற்கே இந்த கணக்கெடுப்பு உதவிசெய்வதாக இருக்கும் என அக்டோபர் 15, வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். கிறிஸ்தவப் பணியாளர்கள், மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் பற்றிய கணக்கெடுப்பை மட்டும் எடுக்க மாநில அரசு முயல்வது ஏன் என்ற கேள்வியை முன்வைத்துள்ள பெங்களூரு பேராயர், மதமாற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதாக சில மத தீவிரவாதக் குழுக்கள் கூறி வருவது, உண்மையானால், இந்தியாவில் மற்ற மதங்களோடு ஒப்பிடுகையில் இந்திய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதன் காரணம் என்ன என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார். திருஅவைப் பணியாளர்கள் என்பவர்கள் ஒருநாளும் மறைந்திருந்து செயலாற்றுவதில்லை என்பது மட்டுமல்ல, மக்களின் நலனுக்காகவே உழைக்கிறார்கள் என்பது அரசுக்குத் தெரிந்திருந்தும், இத்தகைய கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதில் அரசு முனைப்பு காட்டுவதன் நோக்கம் குறித்தும் சந்தேகத்தை எழுப்பும் பேராயர் மச்சாடோ அவர்கள், கிறிஸ்தவ கல்வி நிலையங்கள், மற்றும் மருத்துவமனைகள், நாட்டை கட்டியெழுப்பும் பணியில் ஆற்றும் சேவைகள் குறித்தும், அவைகள் மதமாற்றப் பணிகளில் ஈடுபடுவதில்லை என்பதும் அரசுக்குத் தெரியாததல்ல என்றும் கூறியுள்ளார். இந்தியாவின் எட்டு மாநிலங்களில் மதமாற்ற தடைச்சட்டம் அமலில் உள்ளது. 6 கோடியே பத்து இலட்சம் மக்கள் வாழும் கர்நாடகாவில், 84 விழுக்காட்டினர் இந்துக்கள் ஆகவும், 13 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாகவும், 2 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். (UCAN) [2021-10-17 23:06:34]


மங்களூருவில், "ஸ்டான் சுவாமி அமைதிப் பூங்கா"

கர்நாடகா மாநிலத்தின் மங்களூருவில் அமைந்துள்ள ஒரு பூங்காவிற்கு, அநீதியாய் கைதுசெய்யப்பட்டு, மும்பையில் தடுப்புக்காவலில் கொலைசெய்யப்பட்ட, சமூகப் போராளி இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மங்களூருவில் இயேசு சபையினர் நடத்தும் புனித அலாய்சியஸ் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவிற்கு, "ஸ்டான் சுவாமி அமைதிப் பூங்கா" என்று பெயரிடப்பட்டுள்ளது. கல்லூரியின் அமைப்பில் பசுமைப் பகுதியை உருவாக்கும் நோக்கத்தில், அக்கல்லூரியின் வளாகத்தில் பூங்கா அமைப்பதற்கு, மனித உரிமை ஆர்வலரான ஸ்டான் சுவாமி அவர்களின் வாழ்வு தூண்டுதலாக இருந்தது என்று, இயேசு சபையினர் கூறியுள்ளனர். 84 வயது நிரம்பியிருந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி இன மற்றும், தலித் மக்களின் உரிமைகள் காக்கப்படுவதற்காகத் தன்னை அர்பணித்திருந்தவர். இவர், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினால் அநியாயமாய்க் குற்றம் சாட்டப்பட்டு, மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். இவர், இவ்வாண்டு ஜூலை 5ம் தேதி தடுப்புக்காவலில், மும்பை திருக்குடும்ப மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது வயது மற்றும், நோயைக் காரணம் காட்டி பலமுறை விண்ணப்பிக்கப்பட்ட பிணையல் மனுவையும் நீதிமன்றம் புறக்கணித்தது. அருள்பணி ஸ்டான் சுவாமி அருள்பணி ஸ்டான் சுவாமி பூங்காவிற்கு ஸ்டான் சுவாமியின் பெயர் சூட்டப்பட்டிருப்பதற்கு, பிஜேபி கட்சியின் மாணவர் பிரிவு உட்பட, இந்து தீவிரவாதக் கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்து, உள்ளூர் காவல்துறைக்கு மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது. இதற்கிடையே, தன் தீர்மானம் பற்றி உறுதியாக இருக்கும், திருஅவை மற்றும், இயேசு சபை அதிகாரிகள், மங்களூரு புனித அலாய்சியஸ் கல்லூரி, இனம், மதம், மொழி, சமூகநிலை போன்ற எந்தவிதப் பாகுபாடுகளுமின்றி, கடந்த 140 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றது என்று கூறியுள்ளனர். (Fides) [2021-10-11 00:01:27]


கர்நாடகாவில் மனமாற்றச் சட்டத்திற்கு ஆயர்கள் எதிர்ப்பு

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், கட்டாய மதமாற்றங்களைத் தடைசெய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்டவரைவு தொகுப்பு குறித்த தங்கள் கவலையை, அம்மாநில முதலமைச்சர் Basavaraj Bommai அவர்களிடம் எடுத்துரைத்துள்ளனர், கத்தோலிக்க ஆயர்கள். செப்டம்பர் 22, இப்புதன்கிழமையன்று, பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள் தலைமையில், கர்நாடகா முதலமைச்சர் Bommai அவர்களைச் சந்தித்த அம்மாநிலத்தின் பத்து ஆயர்கள், கிறிஸ்தவர்களின் வாழ்வைப் பாதிக்கின்ற பல்வேறு விவகாரங்கள் குறித்த மனு ஒன்றையும் சமர்ப்பித்தனர். கட்டாய மதமாற்றங்கள் பற்றிய சட்டவரைவுத் தொகுப்பு, அச்சத்தை உருவாக்கியுள்ளது என்றும், இது தீமை விளைவிக்கக்கூடியது, மற்றும், பயனற்றது என்றும் உரைத்த பேராயர் மச்சாடோ அவர்கள், இந்த வரைவுத்தொகுப்பு குறித்து கத்தோலிக்கத் திருஅவை கவலையடைந்துள்ளது என்று கூறினார். கர்நாடகா மாநிலமெங்கும், பள்ளிகள், கல்லூரிகள், மற்றும், மருத்துவமனைகளை நடத்திவருகின்ற கிறிஸ்தவ சமுதாயம், எந்த ஒரு மாணவரையோ அல்லது ஒரு நோயாளியையோ கிறிஸ்தவத்திற்கு மதம் மாறுங்கள் என்று ஒருபோதும் ஆலோசனை கூறியதில்லை என்று கூறிய பேராயர் மச்சாடோ அவர்கள், பரிந்துரைக்கப்பட்டுள்ள மதமாற்ற தடைச்சட்டம், கிறிஸ்தவத்தின் பெயரைக் கெடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். கிறிஸ்தவர்களாகிய நாங்கள், யாரையும் மதம்மாற கட்டாயப்படுத்துவதில்லை எனவும், கட்டாய மதமாற்றங்களைத் தூண்டமாட்டோம் என்பதற்கு உறுதி கூறுகிறோம் எனவும் கூறியுள்ள பெங்களூரு பேராயர் மச்சாடோ அவர்கள், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் தேவையற்ற பதட்டநிலைகளையும், சமுதாயங்களுக்கிடையே உறவுப் பிரச்சனைகளையும் உருவாக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகா மாநிலம், பிஜேபி கட்சியால் ஆளப்பட்டு வருகிறது. (Fides) [2021-09-28 00:41:32]