வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்இந்தியா, திருஅவையின் வருங்காலத்திற்கு நம்பிக்கை

திருஅவையின் வருங்காலத்திற்கு ஏராளமான வாக்குறுதிகளை, இந்தியத் திருஅவை வழங்குகின்றது என்று, புதியவழி நற்செய்தி அறிவிப்பு பற்றி பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் கூறினார், திருப்பீட அதிகாரி ஒருவர். பாப்பிறை மறைப்பணி கழகங்கள் நடத்திய மூன்று நாள் கூட்டத்தில் உரையாற்றிய, நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் இணைச் செயலரும், பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தலைவருமாகிய பேராயர், Giovanni Pietro Dal Toso அவர்கள், இவ்வாறு கூறினார். பாப்பிறை மறைப்பணி கழகங்களின் ஆரம்பம், அதன் நோக்கம் மற்றும் அதன் பணிகள் பற்றி எடுத்துரைத்த பேராயர் Dal Toso அவர்கள், இந்தியத் திருஅவை ஆற்றிவரும் நற்செய்திப் பணிகளைப் பாராட்டி ஊக்குவித்தார். 2019ம் ஆண்டு அக்டோபர், சிறப்பு மறைப்பணி மாதமாகக் கடைப்பிடிக்கப்படுவது குறித்துப் பேசிய பேராயர் Dal Toso அவர்கள், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மறைமாவட்டமும் இதற்குரிய தயாரிப்புக்களைத் தொடங்குமாறும், தலத்திருஅவைகளின் மேய்ப்புப்பணித் திட்டத்தில், நற்செய்தி அறிவிப்பு, மைய நிகழ்வாக அறிவிக்கப்படுமாறும் கேட்டுக்கொண்டார். பெங்களூருவில், மார்ச் 7ம் தேதி தொடங்கிய பாப்பிறை மறைப்பணி கழகங்களின் கூட்டம், மார்ச் 09, இவ்வெள்ளிக்கிழமையன்று நிறைவடைந்தது. (ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி) [2018-03-10 18:26:33]


இந்தியா, திருஅவையின் வருங்காலத்திற்கு நம்பிக்கை

திருஅவையின் வருங்காலத்திற்கு ஏராளமான வாக்குறுதிகளை, இந்தியத் திருஅவை வழங்குகின்றது என்று, புதியவழி நற்செய்தி அறிவிப்பு பற்றி பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் கூறினார், திருப்பீட அதிகாரி ஒருவர். பாப்பிறை மறைப்பணி கழகங்கள் நடத்திய மூன்று நாள் கூட்டத்தில் உரையாற்றிய, நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் இணைச் செயலரும், பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தலைவருமாகிய பேராயர், Giovanni Pietro Dal Toso அவர்கள், இவ்வாறு கூறினார். பாப்பிறை மறைப்பணி கழகங்களின் ஆரம்பம், அதன் நோக்கம் மற்றும் அதன் பணிகள் பற்றி எடுத்துரைத்த பேராயர் Dal Toso அவர்கள், இந்தியத் திருஅவை ஆற்றிவரும் நற்செய்திப் பணிகளைப் பாராட்டி ஊக்குவித்தார். 2019ம் ஆண்டு அக்டோபர், சிறப்பு மறைப்பணி மாதமாகக் கடைப்பிடிக்கப்படுவது குறித்துப் பேசிய பேராயர் Dal Toso அவர்கள், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மறைமாவட்டமும் இதற்குரிய தயாரிப்புக்களைத் தொடங்குமாறும், தலத்திருஅவைகளின் மேய்ப்புப்பணித் திட்டத்தில், நற்செய்தி அறிவிப்பு, மைய நிகழ்வாக அறிவிக்கப்படுமாறும் கேட்டுக்கொண்டார். பெங்களூருவில், மார்ச் 7ம் தேதி தொடங்கிய பாப்பிறை மறைப்பணி கழகங்களின் கூட்டம், மார்ச் 09, இவ்வெள்ளிக்கிழமையன்று நிறைவடைந்தது. (ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி) [2018-03-10 18:21:55]


இந்திய ஆயர் பேரவை தலைமையகத்தில் அனைத்துலக பெண்கள் நாள்

மார்ச் 8, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக பெண்கள் நாளையொட்டி, புது டில்லியில் உள்ள இந்திய ஆயர் பேரவை தலைமையகத்தில், பேரவையின் செயலர் ஆயர் தியடோர் மஸ்கரீனஸ் அவர்கள் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினார் என்று, பேரவை செய்திக்குறிப்பொன்று கூறுகிறது. "முன்னேற்றத்திற்காக வலியுறுத்துங்கள்" (“Press for Progress”) என்ற மையக்கருத்துடன் சிறப்பிக்கப்படும் இந்த உலகநாள், முதன்முறையாக இந்திய ஆயர் பேரவை தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது என்று இச்செய்திக்குறிப்பு கூறியுள்ளது. மேலும், பாகிஸ்தானில், லாகூர் நகரில் இயங்கிவரும் தொமினிக்கன் அமைதி மையத்தில், கிறிஸ்தவ, இஸ்லாமிய பெண்கள் இணைந்து, பெண்கள் நாளைச் சிறப்பித்தனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது. பாகிஸ்தான் தேர்தல்களில் பெண்கள் வேட்பாளர்களாக இருப்பது, சொத்துக்களுக்கு சம உரிமை பெறுவது, கல்வி பெறுவது, போன்ற சமுதாய உரிமைகளை முன்வைத்து, இந்த பெண்கள் நாள் கூட்டம் நடைபெற்றது என்று ஆசிய செய்தி கூறியுள்ளது. (ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி) [2018-03-09 01:11:42]


ஹோலிப் பண்டிகையில் கிறிஸ்தவர்கள் இணைய போபால் பேராயர் லியோ

வண்ணங்களின் திருவிழா என்றும் அழைக்கப்படும் ஹோலிப் பண்டிகையில், அனைத்து மதத்தினரும் கலந்துகொள்வது, பல்வேறு மதத்தவருக்கு இடையே பாலம் அமைக்க உதவியாக இருக்கும் என்று, இந்திய கத்தோலிக்க பேராயர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டிகை குறித்து யூக்கா செய்தியிடம் கருத்து தெரிவித்துள்ள, மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் பேராயர், லியோ கொர்னேலியோ அவர்கள், இவ்விழா, அனைத்து இந்தியருக்கும், மகிழ்வு, ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் விழாவாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில், ஒற்றுமையும் நல்லிணக்கமும் காக்கப்பட வேண்டுமென்றும், இதற்கு கிறிஸ்தவ சமுதாயம் தன் முழுஆதரவை வழங்குகின்றது என்றும் கூறியுள்ள பேராயர், லியோ கொர்னேலியோ அவர்கள், இப்பண்டிகையில் கிறிஸ்தவர்கள் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கெதிரான நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில், 2017ம் ஆண்டில், கிறிஸ்தவர்க்கெதிராக 736 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன, இவை 2016ம் ஆண்டைவிட, இருமடங்கு அதிகம் என்று யூக்கா செய்தி கூறுகிறது. (ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2018-03-04 01:39:26]


இந்தியாவில் கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் ஆயர்கள்

இந்தியாவில் வெவ்வேறு சாதிகளுக்கிடையே கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், CBCI எனப்படும் இந்திய ஆயர் பேரவை புதிய இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. தலித் மக்களுக்கு எதிரான பாகுபாடுகள் களையப்படவும், சாதி மனப்பான்மை நீக்கப்படவுமென, இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் பணிக்குழுவின் முயற்சியின்பேரில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 20,21 ஆகிய தேதிகளில், பெங்களூருவிலுள்ள இந்திய சமூக நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்த இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கருத்தரங்கில், மறைமாவட்ட மற்றும் மாநில அளவில் பிற்படுத்தப்பட்டோர் பணிக்குழுக்களின் குறைந்தது 110 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த இணையதளம் பற்றி கருத்து தெரிவித்த, இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் பணிக்குழுவின் செயலர் அருள்பணி தேவசகாய ராஜ் அவர்கள், இந்திய ஆயர் பேரவை நிறைவேற்றிய தலித் மக்கள் பற்றிய தீர்மானங்கள் அமல்படுத்தப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில், இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார். இந்தியாவிலுள்ள கத்தோலிக்கரில், அறுபது விழுக்காட்டினர் அதாவது ஒரு கோடியே 20 இலட்சம் பேர் தலித்துகள் என்று ஆசியச் செய்தி கூறுகின்றது. இந்திய ஆயர் பேரவை தொடங்கியுள்ள புதிய இணையதளம் www.dalitchristianscbci.org (ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2018-02-25 10:23:16]


கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் வழங்கிய தவக்காலச் செய்தி

ஆன்மீகச் செல்வங்களை அடைவதற்கும், உண்ணாநோன்பு மற்றும் இரக்கச்செயல்கள் ஆற்றுவதற்கும் தவக்காலம் தகுந்ததொரு காலமாக அமையவேண்டும் என்று, இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள், தன் தவக்காலச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். பிப்ரவரி 14, இப்புதனன்று, மும்பையின் கொலாபாவில் அமைந்துள்ள புனித நாமம் பேராலயத்தில் திருநீற்றுப் புதன் திருப்பலியை தலைமையேற்று நடத்திய மும்பைப் பேராயர், கர்தினால் கிரேசியஸ் அவர்கள், ஒப்புரவு அருளடையாளத்தின் வழியே, தவக்காலம், கூடுதல் பொருளுள்ளதாக அமையும் என்று கூறினார். வறியோருக்கு உணவளித்தல், பிறரன்பு நிறுவனங்களில் தன்னார்வத் தொண்டு புரிதல், நோயுற்றோரையும், தனித்து விடப்பட்ட முதியோரையும் சந்தித்தல், மற்றும் இரத்த தானம் செய்தல் போன்ற செயல்கள், தவக்காலத்தின் தனிப்பட்ட முயற்சிகளாக அமையவேண்டும் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார். போலி இறைவாக்கினர்களின் வழிநடத்துதல் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தவக்காலச் செய்தியில், எச்சரிக்கை விடுத்துள்ளதை, தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், உலகம் கூறிவரும் ஆலோசனைகள், நம் உள்ளத்தில், இரக்கம், பரிவு, ஆகிய நற்பண்புகளை குறைத்து விடுகின்றன என்று, சுட்டிக்காட்டியுள்ளார். (ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2018-02-15 22:20:59]


இந்தியாவின் வருங்காலம் பற்றி இந்திய ஆயர்கள்

இந்தியாவில் கத்தோலிக்க விசுவாசம் பரவுவதற்குக் காரணமான திருத்தூதர் தோமையார், புனித பிரான்சிஸ் சவேரியார் போன்ற மாபெரும் புனிதர்களுக்கு, இந்தியத் திருஅவை நன்றி செலுத்துகின்றது என்று, கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் கூறியுள்ளார். கடந்த வாரத்தில் பெங்களூருவில் நிறைவடைந்த இந்திய ஆயர் பேவையின் 33வது பொதுக் கூட்டத்தின் இறுதி அறிக்கையை, பிப்ரவரி 11, இஞ்ஞாயிறன்று வெளியிட்டுப் பேசிய கர்தினால் கிளீமிஸ் அவர்கள், இந்தியாவில் சமய தேசியவாதம் புறக்கணிக்கப்படுமாறு அழைப்பு விடுத்தார். பெண்கள், தலித்துகள், சிறுபான்மை மதத்தவர் போன்றோருக்கு எதிராக, வன்முறையை உற்பத்திசெய்யும் சமய தேசியவாதத்தை, இந்திய நாடு புறக்கணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள கர்தினால் கிளீமிஸ் அவர்கள், உண்மையான அமைதி, நல்லிணக்கம், முன்னேற்றம், வளமை ஆகியவற்றுக்கு தாய் நாட்டை இட்டுச்செல்லும் ஓர் உறுதியான சமய தேசியவாதம் அவசியம் என்று கூறினார். இந்திய அரசியல் அமைப்பால் உறுதி வழங்கப்பட்டுள்ள சட்டங்கள் காக்கப்படுமாறு, நன்மனம் கொண்ட எல்லாருக்கும் அழைப்புவிடுத்துள்ளார், கர்தினால் கிளீமிஸ். பன்மைத்தன்மையில் ஒற்றுமையாய் வாழ்வது குறித்த பல பரிந்துரைகளையும் இந்திய ஆயர்கள், இக்கூட்டத்தின் இறுதியில் வெளியிட்டுள்ளனர். (ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி) [2018-02-14 03:48:41]


ஒடிசாவிலுள்ள ஏழு கிறிஸ்தவ கைதிகளின் விடுதலைக்காக செபம்

ஒடிசா மாநிலத்தில், இந்துமத குரு ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒன்பது ஆண்டுகளாக சிறையிலுள்ள ஏழு குற்றமற்ற கிறிஸ்தவர்கள் விடுதலை செய்யப்படுமாறு, இந்திய ஆயர்கள் எல்லாரும் இணைந்து செபம் செய்துள்ளனர். இந்தியாவின் 174 மறைமாவட்டங்களின் ஆயர்கள் பெங்களூருவில் நடத்திய 33வது ஆண்டுக் கூட்டத்தில், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள், இந்தச் செபத்தை வழிநடத்தியுள்ளார். 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, 81 வயது நிரம்பிய இந்துமதக் குரு சுவாமி லஷ்மானந்தா அவர்கள், தனது ஆசிரமத்தில், கொல்லப்பட்டதையடுத்து, கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறை தொடங்கியது. ஆயினும், இக்கொலைக்கு முன்னதாகவே, கிறிஸ்தவர்க்கெதிராகச் சதித்திட்டம் உருவானது என்று செய்திகள் கூறுகின்றன. மேலும், பெங்களூருவில் நடைபெற்ற 33வது ஆண்டுக் கூட்டத்தில், தலித் மக்களின் வாழ்வையும், சமூக நிலையையும் ஊக்குவிப்பதற்கு, இந்திய ஆயர்கள் தங்களின் அர்ப்பணத்தை மீண்டும் உறுதி செய்தனர் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது. இவ்வெள்ளியன்று நிறைவடைந்த இக்கூட்டத்தில், தலித் மக்களின் வாழ்வை முன்னேற்றுவது மட்டுமல்லாமல், திருஅவையிலும், நாட்டிலும், அம்மக்கள் பாகுபடுத்தப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆயர்கள் தீர்மானித்தனர் என்று, இயேசு சபை அருள்பணி மரிய அருள் ராஜா அவர்கள் கூறியுள்ளார். (ஆதாரம் : Fides /UCAN/வத்திக்கான் வானொலி) [2018-02-11 00:03:31]


கந்தமாலில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக செபம்

இந்தியாவின் ஒடிஸ்ஸா மாநிலத்தில் கந்தமால் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களை அருளாளர்களாக அல்லது புனிதர்களாக உயர்த்தும் வழிமுறைகள் விரைவில் நிகழவேண்டும் என்ற கோரிக்கையை இறைமக்கள் எழுப்பும் வண்ணம், செபம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்து அடிப்படை வாதிகளால் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்காக, கட்டக்-புபனேஸ்வர் உயர்மறைமாவட்டத்தில், உருவாக்கப்பட்டுள்ள உயர் மட்டக் குழுவினர், இந்த செபத்தை, அம்மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளுக்கும் கத்தோலிக்க நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளனர். ஆங்கிலத்திலும், ஒடியா மொழியிலும் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செபத்தின் பயனாக, கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள், மறைசாட்சிய புனிதர்களாக அறிவிக்கப்பட்டால், அது, ஒடிஸ்ஸா மக்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியத் திருஅவைக்கே ஒரு பெரும் உந்து சக்தியாக அமையும் என்று, ஒருங்கிணைப்புக் குழுவினர் கூறியுள்ளனர். கிறிஸ்தவர்களுக்கு எதிராக, இந்து அடிப்படைவாதிகள், 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில், நான்கு மாதங்களாக நடத்திய வன்முறைகளில், ஏறத்தாழ 100 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர், 300 ஆலயங்கள் மற்றும் 6000த்திற்கும் அதிகமான இல்லங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன என்று, UCA செய்தி கூறுகிறது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-02-07 23:44:43]


இந்திய ஆயர்களின் 33வது பொதுக்கூட்டம், ஆரம்ப நிகழ்வுகள்

இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழா, ஆண்டவரோடு சந்திப்பு நடத்த அழைப்பு விடுக்கின்றது, இச்சந்திப்பு, மக்களோடு சந்திப்பு நடத்த நம்மை இட்டுச் செல்கின்றது என்று, இந்திய திருப்பீடத் தூதர் பேராயர் ஜாம்பத்திஸ்தா திகுவாத்ரோ அவர்கள், இந்திய ஆயர்களிடம் கூறினார். இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவான பிப்ரவரி 02, இவ்வெள்ளியன்று, இந்திய ஆயர் பேரவையின் 33வது பொதுக்கூட்டத்தின் துவக்கத் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றி மறையுரையாற்றிய பேராயர் திகுவாத்ரோ அவர்கள், ஆயர்கள் மக்களைச் சந்திப்பது பற்றிக் கூறினார். மேலும், இக்கூட்டத்தில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கின்ற, மியான்மாரின் யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் நிகழ்த்திய துவக்க உரையில், மியான்மாரில், திருஅவை, பன்மையில் ஒருமையில் எவ்வாறு வாழ்கின்றது என்பதை விளக்கினார். மியான்மாரில் கத்தோலிக்கப் பள்ளிகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் அரசுடைமையாக்கப்பட்டது உட்பட தலத்திருஅவை எதிர்கொண்ட பெரும் சவால்கள், விசுவாசம் மற்றும் துணிச்சலுடன் எவ்வாறு சமாளிக்கப்பட்டன என்பதையும் விளக்கினார், கர்தினால் போ. இந்தியத் திருஅவையில் நூற்றுக்கும் மேற்பட்ட கலாச்சாரக் குழுக்கள் உள்ளன என்றும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், மும்பை முதல் மிசோராம் வரையிலும், இந்திய திருஅவை, பணியே அதிகாரம் என்பதை நிரூபித்துள்ளது என்றும், இம்முறையில், இந்தியத் திருஅவை, உண்மையிலேயே கத்தோலிக்கப் பண்பைக் கொண்டுள்ளது என்றும், கர்தினால் போ அவர்கள் பாராட்டினார். மேலும், இந்நிகழ்வில் உரையாற்றிய, இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால், பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள், நாட்டைக் கட்டியெழுப்புவதில் கத்தோலிக்க திருஅவை ஆற்றியுள்ள பணிகளை விளக்கினார். இந்திய ஆயர் பேரவையின் செயலரான, ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள், இந்திய கத்தோலிக்கத் திருஅவையின் வாழ்வு மற்றும் நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை, இக்கூட்டத்தில் சமர்ப்பித்தார். திருத்தந்தை பிரான்சிஸ், நற்செய்தி அறிவிப்பு பேராயத் தலைவர், கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் அனுப்பியிருந்த வாழ்த்துக்களும், செய்திகளும் இந்த தொடக்க நிகழ்வில் வாசிக்கப்பட்டன. பெங்களூரு புனித ஜான் மருத்துவ கல்லூரியில், பிப்ரவரி 2, இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள இந்திய ஆயர்களின் 33வது கூட்டம், பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறும். (ஆதாரம் : CBCI /வத்திக்கான் வானொலி) [2018-02-05 20:19:26]