வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்ஸ்ரீகாகுளம் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

ஸ்ரீகாகுளம் மறைமாவட்ட புதிய ஆயர் விஜய குமார் ராயராலா அவர்கள், 2014ம் ஆண்டு, பாப்பிறை மறைப்பணி சபையின் இந்திய மாநிலத் தலைவராகப் பணியைத் தொடங்கினார் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள் இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி விஜய குமார் ராயராலா (Vijaya Kumar Rayarala) அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 16, இச்செவ்வாயன்று நியமித்துள்ளார். P.I.M.E. எனப்படும் பாப்பிறை மறைப்பணி சபையின் மாநிலத் தலைவராகப் பணியாற்றிவரும் அருள்பணி விஜய குமார் அவர்கள், 1969ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி, கம்மம் மறைமாவட்டத்தில் பிறந்தார். 1990ம் ஆண்டில், பாப்பிறை மறைப்பணி சபையில் சேர்ந்த இவர், இந்தியாவிலும், இத்தாலியிலும் மெய்யியல் மற்றும் இறையியல் கல்வியை முடித்து, 1998ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி அருள்பணியாளராக, திருப்பொழிவு செய்யப்பட்டார். 1998ம் ஆண்டு முதல், இரண்டாயிரமாம் ஆண்டு வரை, எலூரு புனித சவேரியார் நிறுவனத்தில் இறையழைத்தல் ஊக்குனராகவும், 2003ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை, பாப்புவா நியு கினி நாட்டில் மறைப்பணியாளராகவும் பணியாற்றிய இவர், அதன்பின்னர், 2014ம் ஆண்டு வரை மும்பை தொழுநோயாளர் மறுவாழ்வு மையத்தில், உதவி இயக்குனர் மற்றும், இயக்குனராகப் பணியாற்றினார். 2014ம் ஆண்டு, பாப்பிறை மறைப்பணி சபையின் இந்திய மாநிலத் தலைவராகப் பணியைத் தொடங்கிய, ஸ்ரீகாகுளம் மறைமாவட்ட புதிய ஆயர் விஜய குமார் ராயராலா அவர்கள், எலூரு மறைமாவட்ட ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். 1993ம் ஆண்டு ஜூலை முதல் தேதி, புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீகாகுளம் மறைமாவட்டத்தின் முதல் ஆயராக, பணியாற்றிவந்த, ஆயர் Innayya Chinna Addagatla அவர்கள், 2018ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி, பணி ஓய்வு பெற்றதையடுத்து, இந்நாள்வரை அம்மறைமாவட்டம் ஆயரின்றி காலியாக இருந்தது. [2019-07-17 00:21:19]


மும்பை கனமழையில் பாதிக்கப்பட்ட மக்களிடம் கர்தினால் கிரேசியஸ்

மும்பையில் தொடர்ந்து பெய்த கனமழையால், ஜூலை 2ம் தேதி, Malad Eastல், எதிர்பாராத விதமாக சுவர் இடிந்ததில் 18 பேர் உயிரிழந்தனர் மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள் இந்தியாவின் மும்பையில் பெய்த கனமழையில் சுவர் இடிந்ததால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் சொன்னார், மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ். மும்பை புறநகரின் வடக்கேயுள்ள Malad Eastல் சுவர் இடிந்ததில், 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மக்களின் உறவினர்கள், இந்த விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் என, ஏறத்தாழ நூறு பேரை, புனித யூதா ததேயு ஆலயத்தில் சந்தித்து, நிவாரண உதவிகளையும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் வழங்கினார். இந்த மக்களுக்கு திருஅவை எப்போதும் ஆதரவாக இருக்கும் என்பதற்கு உறுதியளித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மும்பை உயர்மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குத்தளங்கள் அளித்துள்ள நன்கொடைகளுடன், மேலும் 15 இலட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். மும்பையில் தொடர்ந்து பெய்த கனமழையால், ஜூலை 2ம் தேதி எதிர்பாராத விதமாக சுவர் இடிந்தது. இதில் 18 பேர் இறந்தனர். உடனடியாக, பல கத்தோலிக்கர் நிதி திரட்டி, இடர்துடைப்புப் பணிகளை மேற்கொண்டனர் என்று ஆசியச் செய்தி கூறியது. (AsiaNews) [2019-07-15 01:24:37]


இறை ஊழியர் லெவே அவர்களின் புனிதர் பட்டத் திருப்பணி

பிரான்ஸ் நாட்டில் 1884ம் ஆண்டு பிறந்த இயேசு சபை இறை ஊழியர் லெவே அவர்கள், சிவகங்கை மறைமாவட்டத்தில் 52 ஆண்டுகள் உட்பட, இந்தியாவில் 65 ஆண்டுகள் மறைப்பணியாற்றியுள்ளார் மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள் ஏழைகளின் தோழர் என அழைக்கப்படும், இறை ஊழியர் லூயி மரி லெவே அவர்களின் வீரத்துவப புண்ணிய வாழ்வு பற்றிய மறைமாவட்ட ஆய்வின் நிறைவு நிகழ்வு, ஜூன் 30, இஞ்ஞாயிறன்று, சருகணியில் நடைபெறுகின்றது. இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் மாலை 5.30 மணிக்கு, சருகணி, திருஇருதயங்களின் ஆலயத்தில், சிவகங்கை மறைமாவட்ட ஆயர், மேதகு முனைவர் செ.சூசைமாணிக்கம் அவர்கள், இத்திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவார். சிவகங்கை மறைமாவட்டத்தில் 52 ஆண்டுகள் மறைப்பணியாற்றி, இறைமக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்று, சருகணியில் துயில் கொள்கிறார், இறை ஊழியர் லூயி மரி லெவே. அவரை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்குரிய திருப்பணி நடவடிக்கைகள், மறைமாவட்ட அளவில், 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கின. மறைமாவட்ட அளவிலான அத்திருப்பணியின் நிறைவு, இஞ்ஞாயிறன்று நடைபெறுகின்றது. இறை ஊழியர் லூயி மரி லெவே அவர்கள், 1884ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியன்று பிரான்ஸ் நாட்டிலுள்ள ரென் (Rennes) மறைமாவட்டத்தில் உள்ள லாலி என்ற ஊரில் பிறந்தவர். 1904ம் ஆண்டில் இயேசு சபையில் சேர்ந்து, 1920ம் ஆண்டு சனவரி மாதம் 13ம் தேதியன்று, அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றார். இவர், 1921ம் ஆண்டு முதல் 1943ம் ஆண்டு வரை ஆண்டாவூரணியிலும், 1943ம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டு வரை இராமநாதபுரத்திலும் பங்குபணியாற்றினார். பின்னர், 1956ம் ஆண்டு முதல் 1973ம் ஆண்டு வரை, அதாவது இறக்கும் வரை சருகணியில் ஆன்மீகக் குருவாகவும் இவர் பணியாற்றினார். [2019-06-30 01:36:45]


சிலுவையின் முன், திரிசூலத்தை நட்ட மதத் தீவிரவாதிகள்

கிறிஸ்தவர்கள் அளித்த புகார் மனுவை ஏற்று, அரசு அதிகாரிகள், திரிசூலத்தை அகற்றியதைத் தொடர்ந்து, கிறிஸ்தவர்கள், பாஞ்சாலி மேட்டில் நிறுவப்பட்டிருந்த சிலுவையை அகற்றியுள்ளனர் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலி மேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு குன்றில் பல ஆண்டுகளாய் நிறுவப்பட்டிருந்த ஒரு சிலுவையின் முன், மதத் தீவிரவாதிகள் சிலர், திரிசூலம் ஒன்றை நாட்டியதற்கு, கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார், இந்தியக் கிறிஸ்தவர்களின் உலக அவைத்தலைவர், சஜன் ஜார்ஜ். 1954ம் ஆண்டு நிறுவப்பட்ட அச்சிலுவை, அரசுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள, அந்தராஷ்ட்ரிய இந்து பரிஷத் என்ற அமைப்பு, திரிசூலத்தை அச்சிலுவைக்கு முன் நட்டுவைத்து, தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. 1963ம் ஆண்டு பாஞ்சாலி மேடு குன்றை நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ், அரசு, இரு குடும்பங்களிடமிருந்து கைப்பற்றுமுன்னரே, அதாவது, 1954ம் ஆண்டிலேயே, அக்குன்றின் மேல் சிலுவை நாட்டப்பட்டது என்று, அப்பகுதியில் பணிபுரியும், புனித மரியா பங்குத்தளத்தின் அருள்பணியாளர் ஜேம்ஸ் அவர்கள் கூறினார். மேலும், இக்குன்றில் நடப்பட்டுள்ள சிலுவையை மையமாக்கி, ஒவ்வோர் ஆண்டும், கத்தோலிக்கர்கள் சிலுவைப்பாதை பக்தி முயற்சியை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர் என்பதையும் அருள்பணி ஜேம்ஸ் அவர்கள் எடுத்துரைத்தார். கேரளாவில், மதங்களுக்கிடையே பகைமை உணர்வை வளர்க்கும் நோக்கத்தில் இத்தகைய முயற்சிகளை இந்து தீவிரவாதிகள் மேற்கொள்கின்றனர் என்று சஜன் ஜார்ஜ் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். கிறிஸ்தவர்கள் அளித்த புகார் மனுவை ஏற்று, அரசு அதிகாரிகள், திரிசூலத்தை அகற்றியதைத் தொடர்ந்து, இணக்க வாழ்வுக்கு உதவும் நோக்கத்தில், கிறிஸ்தவர்கள் அங்கு நிறுவப்பட்டிருந்த சிலுவையையும் அகற்றியுள்ளனர் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது. (AsiaNews) [2019-06-25 23:43:01]


நேர்காணல் – அருள்ஜோதி ஆசிரமம், தமிழ்நாடு

இந்தியாவில் ஏறத்தாழ 111 ஆசிரமங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, பாண்டிச்சேரிக்கு அருகிலுள்ள அருள்ஜோதி பீடம் என்ற கிறிஸ்தவ ஆசிரமம் மேரி தெரேசா - வத்திக்கான் இந்தியாவில் ஏறத்தாழ 111 ஆசிரமங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, அருள்ஜோதி பீடம் என்ற ஆசிரமம். இது, பாண்டிச்சேரிக்கு அருகில், கீழப்புதுப்பட்டி என்ற ஊரில், கடற்கரை அருகில் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தை நடத்திவருகின்ற, அருள்தந்தை அருள்ஜோதி ஆனந்தா அவர்களை அண்மையில் சந்தித்தோம். இந்திய ஆசிரமங்கள், அருள்ஜோதி ஆசிரமம், தியானம் பற்றி அருள்தந்தை அருள்ஜோதி ஆனந்தா அவர்கள் நம்முடன் பகிர்ந்துகொண்டார் நேர்காணல் – அருள்ஜோதி ஆசிரமம் [2019-05-25 01:32:09]


நேர்காணல்–தமிழகச் சூழலில் கிறிஸ்தவ வன்முறையற்ற நிலை

எல்லாரையும் உடன்பிறந்தவர்களாக அரவணைத்து ஏற்கும் கலாச்சாரத்தைக் கொண்டிருந்த தமிழ்ச் சமுதாயம், இன்று, பலவகைகளில் மாறுபட்டு வாழ்கிறது மேரி தெரேசா - வத்திக்கான் தமிழகச் சூழலில் கிறிஸ்தவ வன்முறையற்ற நிலை என்பது, அ.பணி.ராஜா அவர்கள், தனது முனைவர் பட்ட ஆய்வுக்கெனத் தேர்ந்தெடுத்த தலைப்பாகும். திரு இருதயங்கள் சபையின் அ.பணி.ராஜா அவர்கள், அச்சபையின் உரோம் தலைமை இல்லத்தில், சபையின் பொருளாளராக, ஆறு ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி வருகிறார். நேர்காணல்–தமிழகச் சூழலில் கிறிஸ்தவ வன்முறையற்ற நிலை [2019-05-19 00:25:30]


கோவாவில் கிறிஸ்தவ ஆலயங்களுக்குப் பாதுகாப்பு

பழைய கோவாவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை - தலத்திருஅவை கவலை மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவின் கோவாவிலுள்ள பழம்சிறப்புமிக்க கிறிஸ்தவ ஆலயங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் போர்த்துக்கீசிய காலனியாக விளங்கிய கோவாவிலுள்ள ஏறத்தாழ 200 ஆலயங்களில், பெரும்பாலானவை, 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் எழுப்பப்பட்டவை. 16ம் நூற்றாண்டில் இறையடி சேர்ந்த, இயேசு சபை புனிதர் பிரான்சிஸ் சவேரியாரின் அழியாத உடல் வைக்கப்பட்டுள்ள, புனித குழந்தை இயேசு (Bom Jesus) பசிலிக்கா உட்பட, பல வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள், பழைய கோவாவில் உள்ளன. இதற்கிடையே, பழைய கோவாவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என கவலை தெரிவித்துள்ளார், குழந்தை இயேசு பசிலிக்கா அதிபர், அருள்பணி Patricio Fernandes. பசிலிக்காவுக்குள் செல்லும் பயணிகள் ஒழுங்குமுறையின்றி செல்கின்றனர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை அசுத்தப்படுத்துகின்றனர் என்றும், பாதுகாப்புக்கு நிற்கும் காவல் துறையினர், இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அருள்பணி Fernandes அவர்கள் குறை கூறினார். கோவாவின் புகழ்மிக்க கடற்கரை, கடந்த ஆண்டில் ஏறத்தாழ அறுபது இலட்சம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுத்தது. இவர்களில் 5,78,000 பேர் வெளிநாட்டவர். (UCAN) [2019-04-27 23:10:45]


இறை இரக்க ஞாயிறில் இலங்கை மக்களுக்காக சிறப்பு செபம்

இறை இரக்க ஞாயிறன்று நிறைவேற்றப்படும் திருப்பலிகளுடன், மெழுகு திரிகள் ஏந்திய பவனிகளையும், திரு நற்கருணை ஆராதனைகளையும் இலங்கை மக்களுக்காக மேற்கொள்ளுமாறு இந்தியத் திருஅவை வேண்டுகோள் ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் ஏப்ரல் 28, வருகிற ஞாயிறன்று, இந்தியாவில் உள்ள அனைத்து, இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆலயங்களிலும், இலங்கை மக்களுக்காக சிறப்பான செபங்களை மேற்கொள்ளுமாறு, இலத்தீன் வழிபாட்டு முறை இந்திய ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Felipe Neri Ferrao அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். கோவா மற்றும் டாமன் உயர் மறைமாவட்டத்தின் பேராயர், Ferrao அவர்கள், இந்த விண்ணப்பத்தை, அனைத்து இலத்தீன் வழிபாட்டு முறை மறைமாவட்டங்களுக்கும், துறவியர் இல்லங்களுக்கும், இப்புதனன்று அனுப்பியுள்ளார். இறை இரக்கத்தின் ஞாயிறென சிறப்பிக்கப்படும் ஏப்ரல் 28ம் தேதி வழிபாட்டில், இலங்கை தாக்குதல்களில் இறந்தோர், காயமடைந்தோர், மற்றும் அவர்களது குடும்பத்தினரை, இறைவனின் இரக்கத்தில் ஒப்படைத்து செபிக்குமாறு பேராயர் Ferrao அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இஞ்ஞாயிறன்று நிறைவேற்றப்படும் திருப்பலிகளுடன், மெழுகு திரிகள் ஏந்திய பவனிகளையும், திரு நற்கருணை ஆராதனைகளையும் மேற்கொள்ளுமாறு, பேராயர் Ferrao அவர்கள் தன் மடலில் பரிந்துரைத்துள்ளார். ஏப்ரல் 21, உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களில், இதுவரை, 359 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் 500க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறியுள்ளன. [2019-04-26 02:22:31]


நேர்காணல்–இந்திய மக்களவைத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு, ஏப்ரல் 11, இவ்வியாழன் முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18, புனித வியாழனன்று வாக்குப் பதிவு. வரும் மே 23ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது மேரி தெரேசா - வத்திக்கான் இந்தியாவிலுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்குரிய முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11, இவ்வியாழனன்று தொடங்கியுள்ளது. ஆந்திரா உட்பட 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளில் இந்த முதல் கட்ட ஓட்டுப் பதிவு இவ்வியாழனன்று தொடங்கியது. இப்பொதுத் தேர்தல், மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உலகிலே மிகப்பெரிய மக்களாட்சியைக் கொண்டிருக்கும் இந்தியாவின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் இது. இச்சூழலில், இத்தேர்தலில் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு குறித்து, நவீன ஊடகம் வழியாகப் பகிர்ந்துகொள்கிறார், சமுதாய ஆர்வலர் எக்ஸ்.டி.செல்வராஜ் அவர்கள் நேர்காணல் – இந்திய மக்களவைத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு [2019-04-12 03:04:31]


சென்னை மயிலை உயர்மறைமாவட்டத்தில் திருநற்கருணை ஆண்டு

நற்கருணையே திருஅவையின் மையம், நற்கருணையும் திருவிவிலியமும், நற்கருணையும் அருளடையாளங்களும், நற்கருணை உன்னதமான திருப்பலி, நற்கருணையே நம் ஆன்மீக உணவு, நற்கருணையில் இயேசுவின் உடனிருப்பு, நற்கருணையும், சமூகக் கரிசனையும்... சென்னை மயிலை உயர்மறைமாவட்டத்தில் திருநற்கருணை ஆண்டு [2019-03-26 01:49:25]