ஒவ்வொரு திருவிழாக்களும் நம்மை ஆன்மீகவாழ்வின் அடுத்த நிலைக்கு இட்டுசெல்லட்டும்
சிறப்புடன் நடைபெற்ற கேவலார் முத்துவிழாவில் யாழ் ஆயர்


புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து யேர்மனி தேசத்தில் கேவலார் திருப்பதியில், இலங்கை மருதமடு அன்னையின் திருநாளில் நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காக வேண்டுதல் செய்யும் பெருவிழா இவ்வாண்டும் 12.08.2017 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கேவலார் திருப்பதியை நோக்கிய தமிழர்களின் திருயாத்திரை 1988 ஆம் ஆண்டு தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தால் ஆரம்பிக்கப்பட்டது. முப்பதாவது ஆண்டு நிறைவில் நடைபெற்ற கேவலார் முத்துவிழா மிகக்கோலாகலமாக நடைபெற்றது.
பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கேவலார் திருயாத்திரையில் பங்கேற்றனர். இவ் திருவிழாவிற்க்காக யாழ் மறைமாவட்ட ஆயர் அதிவண.ஜஸ்ரின் பேணாட் ஞானபிரகாசம் தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்தார். கேவலார் திருவிழாவிற்க்கான ஆயத்த வழிபாடுகள் 11.08.2017 வெள்ளிக்கிழமை மாலை 18.00மணிக்கு செபமாலை பவனியோடு ஆரம்பமாகின. இம்முறை செபமாலை பவனியோடு மாதாவின் திருச்சிருபமும் கேவலார் புகையிரத நிலையத்திலிருந்து பவனியாக எடுத்துச் செல்லப்பட்டது. செபமாலை பவனிக்கு பின்னர் அதே நாளில் 19.00 மணிக்கு நற்கருணை ஆராதணையும் நடைபெற்றது.

திருவிழாத்திருப்பலி 13.08.2016 அன்று காலை 10.45 மணிக்கு, யாழ் மறைமாவட்ட ஆயர் அதிவண.ஜஸ்ரின் பேணாட் ஞானபிரகாசம் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. ஆயர் தமது மறையுரையில் அன்னை மரியாள் தன்னை இழந்து இறைவனின் சித்தத்தை தனது வாழ்வின் நிறைவேற்றினாள். நாமும் எம்மை இழக்க வேண்டும். "நான், எனது" என்ற எண்ணக்கருத்து எம்மிலிருந்து ஒழிய வேண்டும். பேதுரு தான் என்ற எண்ணத்தில் இருந்த போது, தனது ஆன்மீக வாழ்வின் வீழ்ந்து போனார். ஆனால் அவர் எப்போது தன்னை இழந்து இறைசித்தத்திற்கு தன்னை கையளித்தாரோ, அப்போது அவர் ஆண்டவரால் உயர்த்தப்பட்டார். இறைவனின் சித்தத்தை தனது வாழ்வில் நிறைவேற்றினார். அதே போல நாமும் நம்மை இழக்க வேண்டும். ஒவ்வொரு திருவிழாக்களும் நம்மை ஆன்மீக வாழ்வின் அடுத்த நிலைக்கு இட்டு செல்லவேண்டும். இந்த கேவலார் திருவிழாவும் எம்மை ஆன்மீக வாழ்வில் அடுத்த நிலைக்கு இட்டு செல்லவேண்டும். எம்மை இழந்து ஆண்டவரின் சித்தத்திற்கு எம்மை கையளிப்போம். "உமது சித்தம் நிறைவேறட்டும்" என்று ஆண்டவரின் சித்தத்திற்கு எம்மை கையளிப்போம் என ஆயர் தெரிவித்தார். திருவிழாத் திருப்பலிக்கு மேலதிகமாக காலை 09.00 மணிக்கும் மதியம் 14.00 மணிக்கும் தமிழில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. மாலை 15.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் அதனை தொடர்ந்து அன்னை மரியாளின் திருச் சுருப பவனியும் நடைபெற்றது.குறிப்பு: கேவலார் திருவிழாவின் பூரண காணொளிப்பதிவும், நிழல்படப்பதிவும் விரைவில் தரவேற்றம் செய்யப்படும்.