கடுகு சிறிதாயினும் காரம் பெரிது.

குருத்துவ அர்ப்பணவாழ்வின் வெள்ளிவிழா கொண்டாடும்
யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக இயக்குனர்.

அருட்பணி. அந்தோனி பெர்ணாண்டோ பெனற்


........பணிவாழ்வுப்பயணம்.2002ஆம் ஆண்டில் அருட்பணி. அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அவர்கள் யாழ் மானிப்பாய் பங்கின் பங்கு தந்தையாக பணிபுரிந்து கொண்டிருந்தார். அவ் வருடம் ஆனிமாதம் 13ஆம் திகதி மானிப்பாய் அந்தோனியார் திருவிழாத் திருப்பலியை யாழ் ஆயர் அதிவண. தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை தலைமையேற்று நிறைவேற்றினார். அங்கு உரையாற்றிய ஆயர் அருட்பணி. அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அடிகளாரைப்பற்றி சொன்ன வார்த்தைதான்; கடுகு சிறிதாயினும் காரம் பெரிது. உருவத்திலே சிறியவராய் இருந்தாலும், தன்னுடைய பணிவாழ்வாலும் தன்னுடைய சிறந்த ஆளுமையாலும், ஆண்டவர் இயேசுவின் குருத்துவப்பணியை இன்றுவரை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றார்.

தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்.(1சாமுவேல் 16.7) என்று கூறி தாவீதை ஆண்டவராகிய கடவுள் தமது பணிக்கு திருப்பொழிவு செய்தார். அது போல ஆண்டவர் இயேசுவும் அருட்பணி.அ.பெ.பெனற் அடிகளாரையும் குருவாக திருப்பொழிவு செய்தார்.மண்டைதீவில் கருவான மாண்பியம்.

இலங்கைத் திருநாட்டின் யாழ் மாவட்டத்தின் தீவுகளில் ஒன்று தான் மண்டைதீவு. 10.12.1910 அன்று யாழ் மாதகலில் பிறந்த தோமஸ் அந்தோனி பெர்ணாண்டோ அவர்களையும் 20.05.1925 அன்று யாழ் மண்டைதீவீல் பிறந்த ஆகத்தம்மாளையும் ஆண்டவர் இல்லற பந்தத்தில் இணைத்தார்.அவர்கள் இருவரும் யாழ் மண்டைதீவில் தமது இல்லற வாழ்வினை ஆரம்பித்தனர். அனுதினமும் குடும்பச்செபம் சொல்வதும் தினமும் திருப்பலியில் கலந்து கொள்வதும் இவர்களது குடும்பத்தின் அன்றாட வாழ்வின் அங்கமாயின. திருப்பாடல்கள் 127.1 இன் படி ஆண்டவரே இவர்களது குடும்பத்தை கட்டினார். அதனால் கட்டியோரின் உழைப்பு வீணாகவில்லை. இவர்களது குடும்ப வாழ்வை ஆண்டவர் ஆசீர்வதித்து ஆறு பிள்ளைகளை அவர்களுக்கு பரிசாக கொடுத்தார். இப் பிள்ளைகளுக்குள் கடைசி ஆண் குழந்தையாக ஆண்டவரின் ஆசீர்வாதமாக 23.07.1961 அன்று ஒர் ஆண் குழந்தையையும் அவர்களுக்கு பரிசாக கொடுத்தார். அக்குழந்தைக்கு அவர்கள் பெனற் என்று பெயரிட்டார்கள்.பக்தி நிறைந்த நல்ல கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த இவர், உறுதியான கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்க்கப்பட்டார். இவரது பெற்றோருக்கு மேலும் சில பிள்ளைகள் பிறந்திருந்தாலும், சிறு வயதிலேயே இறைவன் அவர்களை விண்ணக வீட்டுக்கு அழைத்துக்கொண்டார். இச் சிறு பிள்ளைகளோடு இவரது தந்தையை 1994ஆம் ஆண்டும், இவரது தாயை 2010ஆம் ஆண்டும் ஆண்டவர் இயேசு நித்திய பேரின்ப வீட்டுக்கு அழைத்துக்கொண்டார்.கருவிலேயே தெரிந்தெடுத்த இறைவன்

வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில் அன்னா என்கின்ற பெண்ணை குறித்து பார்க்கின்றோம். அவள் ஆலயத்தில் ஒருதடவை இவ்வாறு மன்றாடினாள். ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி. என்னை மறவாமல் நினைவு கூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன்.(1சாமுவேல் 1.11). அவளுடைய வேண்டுதலை ஆண்டவர் கேட்டார், அவரும் சாமுவேல் என்ற மகனை அவளுக்கு கொடுத்தார். தன்னுடைய வேண்டுதலைக் கேட்ட ஆண்டவருக்கு தான் செய்த பொருந்தனையை மறவாமல் அவளும், அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.(1சாமுவேல் 1.28). என்று கூறி ஆண்டவருக்கு தனது மகனை அவரின் பணிக்காக ஒப்புக் கொடுத்தாள். அது போல ஆகத்தம்மாளும், தன்னுடைய குழந்தையை கருவிலேயே ஆண்டவரின் பணிக்காக ஒப்புக்கொடுத்தாள். தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்: நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்: மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.(எரேமியா 1.5), என்ற ஆண்டவரின் வாக்கின்படி அருட்பணி.அ.பெ.பெனற் அவர்க்ளை ஆண்டவர் கருவிலேயே திருநிலைப்படுத்தினார்.பாடசாலைக்கல்வி

தனது ஆரம்பக்கல்வியின் முதல் மூன்று ஆண்டுகளையும், தனது ஊரிலே அமைந்திருந்த மண்டைதீவு தமிழ் றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையில் கற்றார். தனது மகன் ஆண்டவரின் பிரசன்னத்திலேயே வாழ வேண்டும் என்பதற்காக அன்னா தனது மகனை ஆலயத்தில் சேர்த்தது போல, இவரது பெற்றோரும் இவரது இறையழைத்தலை ஊக்கிவிப்பதற்காக, இவரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து கல்வி கற்று உயர்தரம் வரை கற்றுத்தேர்ந்தார்.
குருத்துவ அழைத்தலும் குருத்துவமும்.

எரேமியா சிறுவனாக இருந்தபோது ஆண்டவர் அவனை அழைத்தார் (எரேமியா 1.6), சிறுவானாக இருந்தபோது சாமுவேல் ஆண்டவரது குரலைக்கேட்டார்.(1 சாமுவேல் 3.8) அது போல அருட்பணி.அ.பெ.பெனற் அடிகளாரும் சிறுவனாக இருந்த போதே இறை அழைத்தலுக்கு செவிசாய்த்தார். தனது பன்னிரெண்டாவது வயதிலேயே குருத்துவ பணிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தார். புனித மாட்டீனார் குருமடத்தில் சிறுவனாக இணைந்து, தனது பாடசாலைக் கல்விக்குப் பின்னர், புனித.பிரான்சிஸ்கு சவேரியார் குருமடத்தில் மெய்யியலையும் இறையியலையும் கற்றுத் தேர்ந்தார். தன்னுடைய பணிவாழ்விற்காக தன்னை முழுமையாக தயாரித்த பின்னர், அப்போதைய யாழ் ஆயர்.அதி.வண.வ.தியோகுப்பிள்ளை அடிகளாரினால் 19.06.1989 அன்று குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.கல்வாரி அன்பே விருதுவாக்காக.....

குருவாக தன்னை அர்ப்பணிக்கும் ஒவ்வொருவரும் தமது பணிவாழ்விற்காக ஒரு விருது வாக்கினை தெரிந்து கொள்வர். அருட்பணி.அ.பெ.பெனற் அடிகளாரும் தன்னுடைய பணிவாழ்வின் விருதுவாக்காக, மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட முறைப்படி நீ இவற்றையெல்லாம் செய்யுமாறு கவனித்துக்கொள்.(எபிரேயர் 8:5) என்ற வார்த்தையை தெரிந்து கொண்டார்.

கல்வாரி மலையில் ஆண்டவர் இயேசு காட்டிய அன்பு, தன்னையே வெறுமையாக்கி சாவை ஏற்குமளவிற்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவிற்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திய அன்பு.(பிலிப்பியர் 2:8-9), தனது உடலின் கடைசித் துளி இரத்ததையும் தண்ணீரையும் நமக்காக சிந்திய அன்பு, அந்த கல்வாரி அன்பை, கல்வாரி பலியை தனது பணிவாழ்வு முழுவதும் நினைத்து வாழ அப்பலியை திருப்பலியாக நிறைவேற்ற, அதை மக்களுக்கு கற்பித்து, அவர்களையும் ஆண்டவரின் அன்பை நோக்கி வழிநடத்த, மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட முறைப்படி நீ இவற்றையெல்லாம் செய்யுமாறு கவனித்துக்கொள்.(எபிரேயர் 8:5) என்ற வார்த்தையை விருதுவாக்காக தெரிந்து கொண்டார்.


பணிவாழ்வும் உயர்கல்வியும்......

குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட பின்னர், 1989 முதல் 1990 வரை மயிலிட்டி-ஊரணி பங்கிலும் 1991 முதல் 1993 வரை பரந்தன்-கிளிநொச்சி பங்கிலும் உதவிப் பங்குத்தந்தையாக பணிபுரிந்தார். அதனை தொடர்ந்து 1993 முதல் 1995 வரை சண்டிலிப்பாய்(சில்லாலை)யிலும் 1995 முதல் 1998 வரை கரவெட்டியிலும் பங்குத்தந்தையாகவும் பணிபுரிந்தார். அதனை தொடர்ந்து நற்செய்தி பணியை மேலும் சிறப்புற செய்ய நற்செய்தி அறிவிப்பு உருவாக்களுக்கான டிப்ளோமா கற்கைநெறியை பிலிப்பைன்ஸில் 1998 முதல் 1999வரை கற்று தாயகம் திரும்பினார். பின்னர் 1999 முதல் 2005 வரை யாழ் மானிப்பாய் பங்கின் பங்குதந்தையாக பணிபுரிந்தார்.துன்புற்ற வன்னி மக்களுள் ஒருவராக.......

இலங்கையின் உள்நாட்டுப்போர் மீண்டும் ஆரம்பித்த 2006ஆம் ஆண்டில் கிளி-முல்லை மறைக்கோட்ட முதல்வராக, ஆயரினால் நியமிக்கப்பட்டார். போரினால் மக்கள் துன்புற்ற போது அவர்களுக்கு தன்னால் இயன்ற மனித நேய பணிகளையும் ஆன்மீக ஆற்றுகையும் அவர்களுக்கு கொடுத்தார்.இவர் மக்களின் துயர் துடைக்கத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணி செய்தார் 2009இல் உள்நாட்டு போர் முடிவடையும் வரை, மறைக்கோட்ட முதல்வராக தனது பணியை ஆற்றினார். பின்னர் வன்னி மக்கள் இடம்பெயர்ந்து வவுனியா செட்டிகுளம் அகதிகள் முகாம் தங்கி இருந்தபோது அவர்களுக்கு ஓர் ஆறுதல் தரும் குருவாக தனது பணியை 2010ம் ஆண்டு வரை ஆற்றினார்.
யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் இயக்குனராக......

2010 இன் நடுப்பகுதியில் யாழ் ஆயரினால் யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் இயக்குனராக அருட்பணி.அ.பெ.பெனற் அடிகளார் நியமிக்கப்பட்டார். 01.07.2010 இல் யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் இயக்குனராக பொறுப்பேற்றார். நில், கவனி, முன்னேறு என்று ஆன்றோரினால் சொல்லப்படும் அறிவுரைகளையும் தந்தை என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் உங்களை உலகிற்கு அனுப்புகிறேன்.(யோவான் 17:18). பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள். (மத்தேயு 10:16) என்ற ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளையும் கடைப்பிடித்து, புலம் பெயர்ந்து ஐரோப்பிய மண்ணில் தமது முகவரியை தேடும் மக்களிடையே சிறப்பாக பணியாற்றி வருகின்றார். புலம் பெயர் மக்களின் ஆன்மீக தேவைகளை அறிந்து வழமையான திருப்பலிகளுக்கும் வழிபாடுகளுக்கும் மேலதிகமாக பல ஆன்மீகப் புதுபித்தல் வழிபாடுகளையும், தியானங்களையும், ஆன்மீக சுற்றிலாக்களையும் நிறைவேற்றி வருகின்றார். நற்செய்தி அறிவிப்பிற்காக இணையத்தளத்தை ஆரம்பித்து அதனை பலரும் பயனடையும் விதமாக நடாத்தி வருகின்றார். இவருடைய பணிக்காலத்தில் தான் யேர்மன் ஆன்மீகப்பணியகமும் தனது வெள்ளிவிழாவை 2012 இல் சிறப்பாக கொண்டாடியது. 19.06.2014இல் தனது குருத்துவ வெள்ளிவிழாவைக் கொண்டாடுகின்ற எமது இயக்குனரை நாமும் வாழ்த்துவோம். அவருடைய வாழ்விற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். அவருடைய பணிவாழ்வு சிறக்க இறைவனை வேண்டுவோம்.

இணையத்தள குழுவினர்.
www.tamilcatholicnews.com


வெள்ளிவிழா நாயகனே!

இயேசுவின் பணிக்குருவே! உம்விருதுவாக்கு, நிறைவாழ்வு எனும் இலட்சிய வரிகள். நொருங்குண்டோரின் உயிர் அலைகள் என்பதை முன்பே சுவைத்தீரோ! உம் விருது வாக்கு எம் ஆன்மீகப்பணியகத்தின் "மைல்கல் என்பதனை எங்கள்ஒவ்வொருவரின் உள்ளத்தில் பதிவுச் செய்து மகிழ்கின்றோம்!

எம் ஆன்மீகப்பணியகத்தின் பாசமிகு இயக்குனராக! நீவிர் வெள்ளி விழா அடுத்த பொன்விழா, வைரவிழா -பவளவிழா போன்ற விழாக்கள் நின் வாழ்வில் மலர்ந்திடவும், நீதியின் புனிதராய் இம்மண்ணில் மலர்ந்திடுவீர் எம் இயக்குனரே! இறைமக்கள் யாம் எடுக்கும் இறை வேண்டுதல்கள் ஏராளம் என்பதை வாஞ்சையோடு மூவோரு இறைவனின் பொற்பாதங்களில் உம்மை சமர்ப்பித்து சரணடைகின்றோம்.

என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.(மத்தேயு 19:29)

இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார். இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். (மத்தேயு 10:41-42)