வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


தூய வளனார் சபை அருட் சகோதரிகள் வங்காலைப் பங்கில்

ஏறத்தாழ 90 ஆண்டுகளாக வங்காலை தூய ஆனாள் பங்கில் சிறப்பாகப் பணியாற்றிய திருக்குடும்ப அருட்சகோதரிகளின் யாழ் மாகாண அருட்சகோதரிகள் இம்மாதம் 07ம் திகதியுடன் (07.01.2018) தங்களுடைய பணியை நிறுத்திக் கொண்டு வேறு இடத்திற்குச் சென்றுள்ளமையால், அங்குள்ள இறைமக்களின் வேண்டுகேளுக்கு இணங்க, மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் மற்றும் குருக்களின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் லீயொன் என்னும் இடத்தைத் தலைமையமாகக் கொண்டு இயங்கும் தூய வளனார் சபை அருட்சகோதரிகள் இந்தியாவிலிருந்து வந்து, வங்காலைப் பங்கில் தமது பணியை (21.01.2018) ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளனர்.

இச்சபையின் இந்தியா , தமிழ்நாடு, இலங்கை ஆகியவற்றிற்கான சபை மேலாளர் அருட்சகோதரி.சிசிலி சவேரியார், ஆலோசகர் அருட்சகோதரி. சூசையம்மாள் மற்றும் இந்தியாவிலிருந்து பணியாற்ற வந்திருக்கும் அருட்சகோதரி அருள்மேரி ஆகியோரோடு ஏற்கனவே மன்னார் மறைமாவட்டத்தில் மன்னார் நகரம், உயிலங்குளம் பங்கில் உள்ள நொச்சிக்குளம் கிராமம் மற்றும் யாழ் மாவட்டத்தில் மணற்காடு பங்கில் பணியாற்றும் இச் சபையின் அருட் சகோதரிகள் ஆகியோர் இன்றைய நிகழ்வில் கலந்து கெண்டனர். இவர்கள் அனைவரையும் இன்றைய திருப்பலிக்கு முன்னர் வங்காலை தூய ஆனாள் பங்குச் சமூகம் பெருமகிழ்ச்சியோடு வரவேற்றது. திருப்பலியின் முடிவில் இவர்களுடைய துறவற இல்லம் மன்னார் ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இவ்வேளையில் பங்குச் சமூகம் இங்கு ஒன்று கூடிச் செபித்தது.

திருக்குடும்ப அருட்சகோதரிகள் தங்களுடைய பணிக்காலத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார்கள் என்பதும், இவர்கள் குருத்துவ, துறவற அழைத்தல்களை ஊக்குவித்ததோடு, கல்விப் பணி, சமூகப் பணி மற்றும் ஆன்மிகப் பணிகளில் அர்ப்பணத்தோடு தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள் என்பதும் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியதொன்று. இவர்களுடைய பணி நிறுத்தம் பங்கு மக்கள் மத்தியில் வருத்தத்தை உண்டு பண்ணியிருந்தது. இம் மக்கள் திருக்குடும்ப சபை அருட்சகோதரிகளுக்கு என்றும் நன்றியுடையவர்களாகவே இருக்கின்றார்கள்.

தங்களுடைய தற்காலப் பணி இலக்குகளைக் கருத்திற் கொண்டு தாங்கள் நீண்ட காலமாகப் பணியாற்றிய மடுத் தாயாரின் திருத்தலம், பேசாலை தூய வெற்றிநாயகி ஆலயப் பங்கு ஆகிவற்றிலும் தமது பணிகளை கடந்த வருடமும், அதற்கு முந்திய ஆண்டுகளிலும் நிறுத்திக் கொண்டுள்ளனர். மொத்தத்தில் மன்னார் மறைமாவட்டத்தில் நீண்டகாலமாக பணியாற்றிய முக்கியமான மூன்று இடங்களில் திருக்குடும்ப அருட்சகோதரிகள் தங்களுடைய பணியை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

நீண்டகாலமாக மன்னார் மண்ணில் பணியாற்றிய இச் சகோதரிகளின் இம் மாற்றம் இறைமக்கள் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. [2018-01-21 23:45:12]


தரம் ஒன்று புதிய மறைக்கல்வி மாணவர்களை இணைத்துக்கொள்ளும் விஷேட திருப்பலி

தரம் ஒன்று புதிய மறைக்கல்வி மாணவர்களை இணைத்துக்கொள்ளும் விஷேட திருப்பலி இன்று 21,01,2018 ஞாயிறு காலை 07,30 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது .மரியாள் பேராலய துணை பங்கு தந்தை லொயிட் அடிகளாருடன் இணைந்து ,தமிழ்நாடு சிவகங்கை மறைமாவட்ட குருக்கள் அருட்பணி கிளமென்ட்,அருட்பணி அமல்ராஜ் ஆகியோர் கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுத்தனர் ,இத்திருப்பலியை பேராலய மறை ஆசிரியர் ஒன்றியமும்,மாணவர்களும் இணைந்து நெறிப்படுத்தியிருந்தார்கள். [2018-01-21 23:30:39]


லில்லி நலவாழ்வு இல்லத்தை கோப்பாயில் யாழ் ஆயர் யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை திறந்து வைத்தார்

152 பருத்தித்துறை வீதி கோப்பாயில் தெற்கில் நவீன வசதிகளுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ள லில்லி நலவாழ்வு இல்லத்தை (லில்லி கெயா கோம் ) யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ் ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை 15 ஜனவரி 2018 அன்று சம்பிரதாய பூர்வமாக ஆசீர்வதித்து திறந்து வைத்தார்.

லில்லி நலவாழ்வு இல்லம் வாழ்வைக் கொண்டாட என்ற விருது வாக்குடன் முதியோரின் நலன்களைக்; கவனிக்க அமைக்கப்பட்ட ஒரு இல்லமாகும். யாழ் புனித திருமுழுக்கு யோவான் ஆலய பங்கைச் சேர்ந்த அமரர்களான திரு திருமதி தேவசகாயம் மேரி கிறேஸ் லில்லி தம்பதியினரின் ஞாபகமாக பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் அவர்களின் மகன் சாள்ஸ் அழகறட்ணம் தேவசகாயம் என்பவர் இந்த லில்லி நலவாழ்வு இல்லத்தை உரிமையாளராக இருந்து நிறுவியுள்ளார். யாழ் ஆயரை காப்பாளராகக் கொண்ட மேற்படி கட்டிடப் பணிகளை ஏ.ஜீவாபோல் அ.ம.தி. அடிகளார் மேற்பார்வையிட்டு நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாரிய வெளியில் நல்ல விளைச்சலுக்குரிய செம்மண் மற்றும் வற்றாத இனிய குடி நீர் கொண்ட கோப்பாய் மண்ணில் 30 அறைகளுடன் ஜரோப்பிய நாடுகளில் உள்ளது போன்று அனைத்து நவின வசதிகளும் கொண்டதாக லில்லி நலவாழ்வு இல்லத்தை அமைத்துள்ள சாள்ஸ் அழகறட்ணம் தேவசகாயம் பாரட்டப்பட வேண்டியவர். குளிருட்டப்பட்ட அறைகள் - வைபை மற்றும் தொலைக்காட்சி வசதி - அமைதியாக இளைப்பாறக்கூடிய அழகிய அறைகள் - சுகாதாரமான சுற்றுச்சூழல் - மெல்லிய காற்று எப்போதும் வீசிக்கொண்டிருக்கும் இயற்கை - பூமரங்களும் பயன் தரும் வாழை மரங்களும் நிறைந்து தரும் குளிர்மை என லில்லி நலவாழ்வு இல்லத்தை வர்ணித்துக் கொண்டே போகலாம். முதியோர் தங்குமிட பராமரிப்பு - தங்கள் வீட்டில் இருக்கும் போதே நடமாடும் பராமரிப்பு - முதிய பெற்றோர் மற்றும் பிள்ளைகள் தங்கும் தங்குமிட வசதி - மகாநாட்டு மண்டபம் எனப்பல வசதிகளை ஒரே இடத்தில் கொண்டதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள லில்லி நலவாழ்வு இல்லத்தின் முதற் கட்ட பணிகள் நிறைவாகியுள்ளன. தொடர்புகளுக்கு தொலைபேசி ‎0212232262 வெப்சைட் lilycarehome.com

செய்தி வெளியீடு : அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை இயக்குநர் - பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் மற்றும் ரீ.சி.என்.எல். ரீவி - ஆசிரியர் (ரீ.சி.என்.எல்.) தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத்தளம் ஊடக வருகை விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம் ஊடக வருகை விரிவுரையாளர் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் [2018-01-21 23:29:41]


திருகோணமலை மறை மாவட்ட மூதூர் வேதத்தீவு எனும் பகுதியில் நிர்மாணிக்கபபட்டுவரும் புனித ஜோசப் வாஸ் ஆலய திருவிழா

திருகோணமலை மறை மாவட்ட மூதூர் வேதத்தீவு எனும் பகுதியில் நிர்மாணிக்கபபட்டுவரும் புனித ஜோசப் வாஸ் ஆலய திருவிழா ‎16-01-2018 செவ்வாய்கிழமை பி.ப 4.00 மணிக்கு இடம்பெற்றது. திருப்பலியினை திருகோணமலை மறை மாவட்ட ஆயரான அதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இதனை மூதூர் பங்குத்தந்தை அருட்திரு. அலெக்ஸ் செல்லையா அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார். இத் திருத்தலமானது மூதூர் நீர்தாங்கி ( Water Tank) தரிப்பிடத்திலிருந்து சாபி நகர் பகுதியினூடாக சுமார் 2 கி.மீற்றர் தொலைவில் நெல் வயல்களுக்கு மத்தியில் அமையபெற்றுள்ளது. மீள் குடியேற்ற கிராமமான இப்பகுதியில் தற்போது மூன்று குடும்பங்கள் மட்டுமே குடியேறியுள்ள போதிலும் வயல் வெளிகளினூடாக சுமார் 1.75 கி.மீற்றர் தூரத்திற்கு மின் கம்பங்கள் நடப்பட்டு மின் விநியோகம்வழங்கப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்தது.வழியில் சிற்றாறு ஒண்றையும் கடந்து செல்லவேண்டும் ..அதற்கு மிதக்கும் பாதை சேவையிலுள்ளது. அதற்கு மேலதிகமாக திருத்தலத்தை இலகுவாக சென்றடைவதற்கு ஏதுவாக கடற்படையினர் அப்பகுதியில் தற்காலிக மிதக்கும் பாதை ஒன்றையும் அமைத்துள்ளனர். அதை கடந்து சில மீற்றர் தூரம் நடந்து செல்ல கூடிய பாதை உள்ளது. நீர்தாங்கி தரிப்பிடத்திலிருந்து ஆலயம் சென்று திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகள் மூதூர் புனித அந்தோணியார் பங்குத்தந்தை அவர்களினால் மேற்கொள்ளபட்டுள்ளது. திருமலை மறைமாவட்டத்தில் புனித ஜோசப்வாஸ் அடிகளாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதலாவது திருத்தலம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது... [2018-01-17 23:03:56]


சிறப்புப் பயிற்சிப் பாசறை ‎2018-01-15

வங்காலை தூய ஆனாள் பங்கில் வரும் ஞாயிறு 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் இளம் பராயத்தினருக்கு உறுதிப் பூசுதல் அருட்சாதனம் வழங்கப்படவிருக்கின்றது. அதற்கு ஆயத்தமாக இன்று (15.01.2018) செவ்வாய்க்கிழமை மாலை உறுதிப்பூசுதல் பெறவிருக்கும் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சிப் பாசறை நடாத்தப்பட்டது. அத்தோடு வரும் ஞாயிற்றுக்கிழமை 21.01.2018 அன்று மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு வங்காலை தூய ஆனாள் பங்குச் சமூகத்தால் வரவேற்பும், கௌரவிப்பும் இடம் பெறவுள்ளது.

அடுத்து பல ஆண்டு காலமாக வங்காலை தூய ஆனாள் பங்கில் பணியாற்றிய யாழ் மாகாண திருக்குடும்ப அருட்சகோதரிகள் தமது பணியினை நிறுத்திவிட்டு சென்றுள்ள நிலையிலே, புதிதாக வங்காலைப் பங்கிற்கு லீயொன் தூய சூசையப்பர் சபை அருட்சகோதரிகள் வருகை தந்து பணியினை வழங்கவுள்ளனர். அவர்களது பணியும் அன்றைய புதிய ஆயரால் தொடங்கி வைக்கப்படுவதோடு அவர்களது இல்லமும் ஆயரால் ஆசீர்வதிக்கப்படும். [2018-01-16 22:29:59]


சிறிய குருமடத்தில் பொங்கல் பண்பாட்டுத் திருப்பலி

வருங்கால அருட்பணியாளர்களை உருவாக்கும் பணி மையமான, மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தில் இன்று காலை பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தாம் சார்ந்திருக்கும் கலாச்சாரப் பண்பாட்டுக் கோலங்களை வழிபாட்டுடிலும், நற்செய்தி அறிவிப்புப் பணியிலும் பயன்படுத்தலாம் என்ற இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பெருந்தன்மை அறிவுறுத்தலை மனதிற்கொண்டு, இன்று நன்றியின் பொங்கல் பண்பாட்டுத் திருப்பலி மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தில் நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மைய இயக்குனர் அருட்பணி.பா.கிறிஸ்து நேசரெட்ணம் அடிகளர் பண்பாட்டுத் திருப்பலியை நிறைவேற்றினார். சிறிய குருமட அதிபர் அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அடிகளார் அனைத்து நிகழ்வுகளையும் சீராக நெறிப்படுத்தி ஒழுங்கமைத்து மாணவர்களை பயிற்றுவித்திருந்தார் [2018-01-16 22:24:54]


தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயற்படுவேன் - மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர்

தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயற்படுவேன் - மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் கலாநிதி இம்மானுவேல் பர்ணாண்டோ ஆண்டகை

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் கலாநிதி இம்மானுவேல் பர்ணாண்டோ ஆண்டகை இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயற்படுவேன் என ஆயர் தெரிவித்தார். மேற்படி சந்திப்பு 5 ஜனவரி 2018 அன்று மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் ஆயர் இல்லத்தில் இடம் பெற்றது. முதலில் மன்னார் ஆயர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கருத்து தெரிவிக்கும் போது மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசவ் ஆண்டகை முன்னெடுத்துச் சென்ற தமிழ் தேசிய பணிகளை முன்னெடுக்க வேண்டுமென வேண்டியதாக தெரிவித்தார். மன்னார் மறைமாவட்டத்தின் 3ஆவது புதிய ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பர்ணாண்டோ ஆண்டகை யாழ்ப்பாணத்தில் பிறந்தும் அவரின் சகோதரக்குரு ஜோ பெனாண்டோ அடிகளார் யாழ் மறைமாவட்டத்தில் பணியாற்றியிருந்தும் ‎(1962 - 1980) வடபகுதியைப் பொறுத்தவரை புதிய மன்னார் ஆயர் அதிகம் அறியப்படாத ஒருவராகவே இருந்துள்ளார். அவர் பற்றி பலருக்கும் ழுழுமையான விபரம் தெரியாத நிலையில் அவர் பற்றிய எதிர்பார்ப்பு மிக உயர்வாகவே உள்ளது. மன்னார் மறைமாவட்டத்தின் 3ஆவது ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை 45 ஆண்டுகள் கொழும்பு உயர் மறைமாவட்டத்தில் பணியாற்றி சிங்கள மொழியை மிகசிறப்பாக பேசவும் சிங்கள அரசுத் தலைவர்கள் பலரை நன்கு அறிந்தும் இருக்கின்ற நிலையில் தமது பொறுப்பை புதிய ஆயரும் தன்னினத்தின்பால் உவந்து முன்னைய ஆயர்களைப்போல் சிறப்பாக அருள்பணியாற்றுவார் என எதிர்பார்க்கலாம். மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் கண்டி அம்பிற்றிய தேசிய குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றிய காலத்தில் இவரின் நெறிப்படுத்தலிலும் கல்வி அறிவிப்பிலும் உருவாக்கப்பட்ட பல குருக்கள் இன்று மன்னார் மறைமாவட்டத்தில் சீரோடும் சிறப்போடும் பணியாற்றுகின்றனர். இவர்களின் ஒத்துளைப்புடன் மன்னார் மறைமாவட்டத்தை இன்னும் வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்ல ஆயரையும் குருக்களையும் இறைமக்களையும் வாழ்த்துகின்றோம். வளர்க மன்னார் மறைமாவட்டம் வாழ்க புதிய ஆயர்.

செய்தி வெளியீடு : அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை இயக்குநர் - பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் மற்றும் ரீ.சி.என்.எல். ரீவி - ஆசிரியர் (ரீ.சி.என்.எல்.) தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத்தளம் ஊடக வருகை விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம் ஊடக வருகை விரிவுரையாளர் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் [2018-01-14 13:58:56]


புனித யோசே வாஸ் ஆண்டு நிறைவு

புனித யோசே வாஸ் ஆண்டு நிறைவு தின ஆரம்ப நிகழ்வுகள் சன.13.புனித யோசே வாஸ் ஆண்டு நிறைவு தின ஆரம்ப நிகழ்வுகள் 13.01.2018 இன்று சனிகிழமை காலை 10.30 மணிக்குஇ சில்லாலை புனித கதிரைமாதா ஆலயத்தில் ஆரம்பமானது. இன் நிகழ்வில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜோசெப்தாஸ் ஜெபரட்ணம் ஆசிஉரை வழங்கி புனித யோசே வாசின் வாழ்கை வரலாற்றை சித்தரிக்கும் கண்காட்சியை நாடவை வெட்டி ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் அதிகமான மறைமாவட்டக் குருக்களும்ää மறைமாவட்டத்தில் பணியாற்றும் அருட்சகோதரிகளும் நூற்றுக்கணக்கான இறைமக்களும் கலந்துகொண்டனர். [2018-01-14 13:57:16]


யாழ்ப்பாணம் புனித.பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபர்

யாழ்ப்பாணம் புனித.பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபர் சன.11. யாழ்ப்பாணம் புனித.பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக அருட்திரு. திருமகன், இன்றையதினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரின் இவ்வதிகரபூர்வமான அறிவிப்பை யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு.ஜெபரட்ணம், புனித பத்திரிசியார் கல்லூரியில் விசேடமாக நடைபெற்ற ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடலில் அறிவித்தார். அருட்திரு. திருமகன் 2004 இல் மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு நீண்ட காலமாக ஆசிரியர் பணியில் தன்னை இணைத்துக்கொண்டவர். இவர் தனது கற்பித்தல் பணிக்கான மேற்படிப்பை லண்டன் நாட்டில் சிறப்பான முறையில் மேற்கொண்டு நிறைவு செய்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. [2018-01-11 22:52:26]


தமிழ்த் திருப்பலிப் புத்தகத்தில் திருத்தங்கள்

உரோமன் திருவழிபாட்டுத் தமிழ்த் திருப்பலிப் புத்தகத்தில் மீளவும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.இத் திருத்தங்களோடு புதிய திருப்பலிப் புத்தகம் இம்மாதம் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்டு திருப்பலியில் பயன்படுத்தப்படும். கத்தோலிக்க ஆயர் பேரவையின் முயற்சியினால் புதிய திருப்பலிப் புத்தகம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உரோமை வத்திக்கான் திரு அவையின் திருவழிபாட்டுத் திருப் போராயத்தினதும், மற்றும் திருவழிபாட்டு, அருளடையாளங்களின் ஒழுங்குமறைப் பேராயமும் ஒப்புதலும், அனுமதியும் வழங்கியுள்ளன. இத் திருப்பலிப் புத்தகத்தில் மாற்றங்களுக்குள்ளான சில பகுதிகளை இங்கே குறிப்பிட்டுக் காட்டப்படுகின்றன.

அருட்பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே. மக்கள்: ஆமென். அருட்பணியாளர்: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக. மக்கள்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக. (முன்னைய திருப்பலிப் புத்தகத்தில் உம்மோடும் இருப்பதாக என்று உள்ளது) அருட்பணியாளர்: ஆண்டவர் உங்களோடு இருப்பாரக. மக்கள்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக. (முன்னைய திருப்பலிப் புத்தகத்தில் உம்மோடும் இருப்பதாக என்று உள்ளது)

உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நல் மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம். உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மாட்சிப்படுத்துகின்றோம். உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே,எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, ஆண்டவராகிய இறைவா. இறைவனின் செம்மறியே, தந்தையின் திருமகனே, உலகின் பாவங்களை போக்குபவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும். உலகின் பாவங்களை போக்குபவரே,எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும். ஏனெனில் இயேசுகிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர். நீர் ஒருவரே ஆண்டவர். நீர் ஒருவரே உன்னதர். தூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின்மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.

விசுவாச அறிக்கை. ஒரே கடவுளை நம்புகின்றேன். விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே. கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, உண்மைக் கடவுளினின்று உண்மைக்கடவுளாக உதித்தவர். இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர். தந்தையோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இறங்கினார். தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். மேலும் நமக்காக பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார். அவரது ஆட்சிக்கு முடிவிராது. தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வாயிலாக பேசியவர் இவரே. ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும் திரு அவையை நம்புகின்றேன். பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன். இறந்தோரின் உயிர்ப்பையும் வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.

அருட்பணியாளர்: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. மக்கள்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக. (முன்னைய திருப்பலிப் புத்தகத்தில் உம்மோடும் இருப்பதாக என்று உள்ளது) அருட்பணியாளர்: இதயங்களை மேலே எழுப்புங்கள். மக்கள்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம். அருட்பணியாளர்: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம். மக்கள்:அது தகுதியும் நீதியும் ஆனதே. [2018-01-11 22:46:38]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்