வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


பணிக் குருக்களாக திருநிலைப்படுத்தல்

இன்று காலை மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் பணிக் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ள, திருத்தொண்டர் தேவராஜன், திருத்தொண்டர் றஞ்சன் சேவியர், திருத்தொண்டர் சதாஸ்கர், திருத்தொண்டர் மேரி பஸ்ரியன் ஆகியோர்கள் இறைவன் முன்னிலையில், பேரருட்கலாநிதி.பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினாள், அருட்பணியாளர்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள், இவர்களின் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்! [2018-05-26 16:44:08]


இளையோரோடு, இளையோருக்காக.....

2019ம் ஆண்டு தை மாதம் 22ம் திகதி தொடக்கம் 27ந் திகதி வரை கோஸ்ரா றிக்கா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பனாமா நாட்டில் நடைபெறவுள்ள உலக கத்தோலிக்க இளைஞர் ஒன்று கூடலுக்கு ஆயத்தமாக இவ்வாண்டு இறுதியில் வத்திக்கானில் நடைபெறவுள்ள ஆயர் மாமன்றத்தின் ஒன்று கூடலில் கலந்துரையாடப்படவேண்டிய விடயங்களை பெற்றுக் கொள்வதற்காக உலகமெங்கும் உள்ள மறைமாவட்டங்களில் நடைபெற்று வரும் ஒன்று கூடலின் ஒரு நிலையாக இளைஞர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மன்னார் மறைமாவட்டத்தில் பணி புரியும் இளைஞர் பணிக்கான தூய டொன்பொஸ்கோவின் சலேசியன் சபை அருட்பணியாளர்கள் இன்று 13.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாள்முழுவதும் முருங்கனில் உள்ள தூய டொன் பொஸ்கோ தொழில் நுட்பக் கல்லூரியில் மன்னார் மறைமாவட்ட இளைஞர்களுக்கான நிகழ்ச்சித் திட்டங்களை இளையோரோடு, இளையோருக்காக என்னும் சிந்தனைக் கருத்தோடு முன்னெடுத்துச் சென்றனர்.

மறைமாவட்டதின் பல்வேறு பங்குகளிலுமிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களும், இளம் பெண்களும் இந் நிகழ்வுகளில் ஆர்வத்தோடு பங்கேற்றனர். இந் நிகழ்வில் ஏனைய சமயங்களைச் சேர்ந்த இளைஞர்களும், இளம் பெண்களும் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது. இன்றைய காலை நிகழ்வுகளை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளார் ஆரம்பித்து வைத்தார்.

மாலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ல.பி.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் இந் நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பித்தார். இந் நிகழ்வுக்கு வருகை தந்த ஆயரை தூய டொன்பொஸ்கோவின் சலேசியன் அருட்பணியாளர்களின் முருங்கன் தொழில் நுட்பக் கல்லூரி அதிபரும், குழுத் தலைவருமான அருட்பணி போல் அடிகளாரும், ஏனைய குருக்களும், அங்கு தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களும் வரவேற்க, மன்/ பரிகாரிகண்டல் மகாவித்தியாலய மாணவர்கள் தமிழ்ப் பண்பாட்டு இன்னிய வாத்திய மகிழ்வொலியோடு அழைத்துச் செல்ல நிகழ்விற்கு வருகை தந்திருந்த அனைத்து இளைஞர்களும், இளம் பெண்களும் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்வையும் பாசத்தையும் தெரிவித்து ஆயர் தந்தையை வரவேற்றனர். பல்சுவை அம்சங்களைக் கொண்டிருந்த இந் நிகழ்வின் இறுதியில் ஆயர் மாமன்ற கலந்துரையாடலுக்கு உதவியாக அனுப்பப்பட்டிருந்த வினாக்கள் இளைஞர்களால் கலந்துரையாடப்பட்டு அதன் அடிப்படையில் எழுந்த கருத்துக்கள் கோவையாக்கப்பட்டு ஆயர் மாமன்றத்திற்கு அனுப்புவதற்காக மன்னார் ஆயரிடம் இளைஞர்கள் சார்பில் மன்னார் மறைமாவட்ட இளைஞர் ஒன்றியத் தலைவர் செல்வன் டன்ஸ்ரன் அவர்கள் கையளித்தார். இறுதியாக ஆயர் ஆசியுரை கூறி , நடைபெற்ற கலை பண்பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசினை வழங்கி , தனது ஆசீரையும் வழங்கினார். அருட்பணி போல் தலைமையிலான தூய டொன்பொஸ்கோவின் சலோசியன் சபை அருட்பணியாளர்கள் இந் நிகழ்வை மிகவும் அர்த்தமுள்ள, பயனுள்ள விதத்தில் ஒழுங்குபடுத்தி நடாத்தியது பாராட்டப்படவேண்டியதொன்று. [2018-05-26 16:41:03]


விடத்தல் தீவு பங்கில் புனரமைக்கப்பட்ட தூய மரியன்னை ஆலய அர்ச்சிப்பு விழா

விடத்தல் தீவு பங்குச் சமூகம் 02.05.2018 புதன் கிழமை தங்கள் பங்கில் புனரமைக்கப்பட்ட தூய மரியன்னை ஆலய அர்ச்சிப்பு விழாவோடு தங்கள் பங்கிற்கு முதன் முதலாக வருகை தந்த மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கும் மகத்தான வரவேற்பளித்தது. மன்னார் சங்குப்பிட்டி பிரதான வீதியில் அமைந்தள்ள பள்ளமடுச் சந்தியிலிருந்து உந்துரளி பவனியாக ஆயரை தூய யாக்கோப்பு ஆலயத்திற்கு முன்னுள்ள சந்தி வரை அழைத்து வந்தனர். அவ்வித்தில் அருட்பணியாளர்களும், துறவிகளும், பங்கு மக்களும் ஆயரை வரவேற்றனர். தொடர்ந்து மாணவர்களின் மேலைநாட்டு இசைக் கருவிகளின் மகிழ்வொலியோடு ஆயர் அவர்கள் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் ஆயர் அவர்களினால் புனரமைக்கப்பட்ட தூய மரியன்னை ஆலய அர்ச்சிப்பு ஆரம்ப வழிபாடுகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ஆயர் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு திருச்சபையின் திருவழிபாட்டு திருமரபுப்படி பீடம், நற்கருணைப் பேழை என்பன அர்சிக்கப்பட்டன. முடிவில் நன்றி நிகழ்வு இடம் பெற்றது. இவ்விழாவிற்கு இப் பங்கைச் சேர்ந்த குருக்கள், துறவிகள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச, அரச சார்பற்ற பணியாளர்கள் மற்றும், ஏனைய சமயத் தலைவர்கள், அரச அரச சார்பற்ற பணியாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்த கொண்டனர். இப் பங்குச் சமூகத்தோடு இணைந்து பங்குத் தந்தை அருட்பணி. செல்வநாதன் பீரிஸ் அவர்கள் மிக அழகாக இவ் ஆலயத்தை மீள் அமைப்புச் செய்துள்ளார். [2018-05-26 16:37:40]


மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் 72வது தேசிய மாநாடு

இளைஞர் ஒன்றியத்தின் 72ஆவது தேசிய மாநாடு 21 ஏப்பிறல் 2018 அன்று முதல் தொடர்ச்சியாக 03 நாட்கள் தன்னாமுனை மியானி மண்டபத்தில் மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய இயக்குனர் ஜெரிஸ்ரன் வின்சன் அடிகளார் தலைமையில் கடவுள் பேசுவதைக் கேளுங்கள் என்னும் தலைப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரும் இலங்கை தேசிய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் தலைவருமாகியயாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தேசிய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் இயக்குனர் மல்கம் பெரேரா அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களோடு கூட இலங்கையின் அனைத்து மறைமாவட்டங்களின் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியங்களின் இயக்குனர்களும் இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் பங்கு பற்றினர். 72வது கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய தேசிய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வின் போது யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகைக்கும் 72ஆவது கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய தேசிய மாநாட்டின் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. [2018-05-26 16:33:20]


பண்ணிசைப்போம் இறுவெட்டு வெளியீட்டு விழா

வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கைச் சேர்ந்த இளைப்பாறிய ஆசிரியர் திரு.பிரான்சிஸ் பீரிஸ் மற்றும் அவருடைய மகன் செல்வன் செரூபா பீரிஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய கத்தோலிக்கப் பாடல்கள் அடங்கிய பண்ணிசைப்போம் என்னும் இறுவெட்டு வெளியீட்டு விழா இன்று 22.04.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை வங்காலையில் நடைபெற்றது. இவ் விழாவின் முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். இவ் வெளியிட்டு விழாவிற்கு ;, மன்னார் மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளார், மற்றும் குருக்கள், துறவிகள், அரச-அரச சார்பற்ற பணிமையத் தலைவர்கள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளை அருட்பணி. பெய்லன் குரூஸ் அவர்கள் தொகுத்து வழங்க, தலைமையுரையினை அருட்பணி.பா.கி.நேசரெட்ணம் (தமிழ்நேசன்) அடிகளாரும், இறுவெட்டு மதிப்பீட்டுரையை செபமாலைத் தாசர் சபையைச் சேர்ந்த அருட்பணி. நிர்மலறாஜ் அடிகளாரும் வழங்கினார்கள்.

முதல் இறுவெட்டினை மன்னார் ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் வெளிட அதன் முதல் பிரதியை வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கைச் சேர்ந்த மூத்த அருட்பணியாளர்களுள் ஒருவரான அருட்பணி. மொறாயஸ் அ.ம.தி. அவர்கள் பெற்றுக் கொண்டாhர். இந் நிகழ்வில் சில பாரம்பரியக் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன. [2018-04-24 21:02:07]


தூய மரிய வியான்னி தியான இல்லம்

மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லம் நிறைவான ஆன்மிக பணியை வழங்கிவருவது மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும். இத் தியான இல்லத்தில் தற்போது நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கத்தோலிக்க மக்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், குழுக்களாக வந்து ஆன்மிக கருத்தமர்வுகள், தியானங்களை மேற் கொண்டு வருகின்றனர். வதிவிட வசதியோடு கூடிய இத் தியான இல்லம் இயற்கைச் சூழலில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. [2018-04-24 20:59:28]


யாழ் மறைமாவட்டத்தின் முதல் இறைஇரக்க ஆலயம் கிளிநொச்சி....

யாழ் மறைமாவட்டத்தின் முதல் இறைஇரக்க ஆலயம் கிளிநொச்சி பிரமந்தனாறில் இறைஇரக்க பெருவிழாவில் யாழ் ஆயர் திறந்து வைத்தார்
23 ஏப்பிரல் 2017 அன்று இறைஇரக்க பெருவிழா தினத்தில் யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கிளிநொச்சி பிரமந்தனாறில் யாழ் மறைமாவட்டத்தின் முதல் இறை இரக்க ஆலயத்தை திறந்து வைப்பது பற்றி பங்குத்தந்தை அ. அன்ரன் ஸ்ரீபன் அடிகளார் காலைக்கதிர் கிறிஸ்தவ செய்தி இதழுக்கு கருத்து தெரிவிக்கும் போது இடைநடுவில் நிறுத்தப்பட்ட இவ்வாலய கட்டுமான பணிகளை கடந்த வருடம் திருத்தந்தையினால் பிரகடனப்படுத்தப்பட்ட இரக்கத்தின் ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்க இறைவன் வல்லமை தந்தார் என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கும் போது இவ்வாலயமே யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் அமைந்துள்ள முதலாவது இறைஇரக்க ஆலயம் என்பதோடு இம்மண்ணில் நடந்து முடிந்த யுத்தத்தின் நினைவுச்சின்னம் இதுவாகும். பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களுக்கு இல்லிடம் கொடுத்து அரவணைத்து அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்த இடம் இவ்வாலயம் என்றார். [2018-04-24 20:55:14]


அருட்பணி. போனி பெர்னாண்டோ இறை பதமடைந்தார்

அருட்பணி. போனி பெர்னாண்டோ புள்ளே அடிகள் 21/04/2018 அன்று இறை பதமடைந்தார். அடிகளாரின் நல்லடக்கம் மற்றும் திருப்பலி 23/04/2018 வெலிஹேன புனித கைத்தான் ஆலயத்தில் நடைபெறும். அடிகளாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தார், உறவினர், நண்பர்கள், சக குருக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க இணையம் [2018-04-22 15:37:28]


மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்

மன்னார் மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்தத் தியானம் 15.04.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இத்தியானம் வரும் வெள்ளிக்கிழமை 20.04.2018 மாலையில் நிறைவடையும். இத்தியானத்தை நெறிப்படுத்த இந்தியா தமிழ் நாடு இரட்சணிய அருட்பணியாளர் சபையைச் சேர்ந்த அருட்பணி. இக்னேசியஸ் அடிகளார் வருகை தந்துள்ளார்.

இன்றைய நிகழ்வுகள், ஆரம்ப இறை வேண்டுதலுடனும், மன்னார் மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளாரின் வரவேற்புரையுடனும், மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களின் அறிமுக உரையுடனும், தியான நெறியாளரின் தியானச் சிந்தனையுடனும் ஆரம்பமாகின. நாம் அனைவரும் நம் அருட்பணியாருக்காகச் செபிப்போம் [2018-04-17 12:56:42]


யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி – ‎2018

2018 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
புத்தாண்டு என்றவுடன் மகிழ்ச்சிக் கொண்டாட்டம், உறவுகளின் இணைவு என்பன இயல்பாகவே வந்துவிடும். இவற்றோடு கூட புதிய எதிர்பார்ப்புக்;கள், புதிய திட்டங்கள், புதிய எண்ணங்கள் என்பன தோன்றுகின்றன. இந்த புதிய ஆண்டு உங்கள் உள்ளத்து எண்ணங்கள், ஏக்கங்கள் அனைத்தும் நிறையப் பெற இறையாசீர் வேண்டுகிறோம்.

கூட்டு நல்லாட்சி அரசின் காலம் முடிந்து விடுமோ என்ற ஏக்கம் நம்பிக்கையில்லா பிரேணை தோற்றதோடு முடிவடைந்துள்ளது. தமிழ்க் கட்சிகள் நிலைமையை சாதுரியமாக பயன்படுத்தியுள்ளனர்.
உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளே நம்பிக்கையில்லா பிரேணையை தோற்றுவித்தன. 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இன்று கூட்டு நல்லாட்சி அரசில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகளும் இணைந்து நின்றமையினாலேயே ஆட்சிக்கு வந்தன. அந்த உண்மையை உணராது உள்ளுராட்சித் தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளும் பிரிந்து நின்றமையே கூட்டு நல்லாட்சி அரசிற்கு ஆபத்தானதுடன், எதிரிகளுக்கும் வாய்ப்பானது.

இன்றைய நிலையில் கூட்டு நல்லாட்சி அரசின் இருப்பு மிக அவசியமானது என்பதை அனைவரும் தெளிவாக உணர வேண்டும். அதனை அடுத்த நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்க வேண்டிய இரண்டு ஆண்டுகளுக்காவது பாதுகாக்க வேண்டும். அது ஜனாதிபதியும் பிரதமரும் வருங்காலத்தில் செயற்படும் புரிந்துணர்விலும், மக்களின் நம்பிக்கையை பெறும் விதத்திலும், தமிழ் அரசியற் கட்சிகளின் நிலைப்பாட்டிலுமே தங்கியுள்ளது.
இலங்கை நாட்டைப் பொறுத்த வரையிலும் இன்னும் குறிப்பாக தமிழ் மக்களை பொறுத்தவரையிலும் கூட்டு நல்லாட்சி அரசின் இருப்பு மிக அவசியமானது.

தமிழ் கட்சிகள் தம் அரசியல் வேறுபாடுகளைக் மறந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற ஒன்றிக்க வேண்டுகின்றோம். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தரக் கூடிய யாப்பை திருத்தியமைக்க எடுக்கும் முயற்சியில் கடுமையாக உழைக்க வேண்டுகின்றோம். காணாமற் போனோர் விடயம், அரசியற் கைதிகள் விடுதலை, மீள் குடியேற்றம், வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் போன்ற பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
இப் புத்தாண்டு தமிழ் மக்கள் அனைவர்க்கும் அருள் நிறைந்த ஆண்டாக, அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் ஆண்டாக அமைய வேண்டும் என இறையாசீர் வேண்டி வாழ்த்துகின்றோம்.

கிறிஸ்துவிலும் மரியன்னையிலும் பக்தியுள்ள பேரருட்திரு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் யாழ் ஆயர்
செய்தி வெளியீடு : அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை [2018-04-17 12:55:15]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்