வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


தவக்கால சுற்றுமடலில் யாழ் ஆயர்

எல்லா வழிகளும் மூடியிருப்பதாக தோன்றும் இவ்வேளையில் செபம் என்னும் ஆயுதத்தால் தட்டுவதே சிறந்தது – தவக்கால சுற்றுமடலில் யாழ் ஆயர்
நாட்டில் அரசியல் சூழலில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அடுத்து வரும் மாதங்களும் வருடங்களும் எப்படி அமையுமோ என்ற அங்கலாய்ப்பு பலரிடம் தோன்றியுள்ளது. குறிப்பாக ஒரு வருடத்தை எட்டியதாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டமும் சொந்த மண்ணுக்கு திரும்ப வேண்டித் தொடரும் இடம்பெயர்ந்தோரின் போராட்டமும் அரை வேக்காடாக இருக்கும் அரசியல் தீர்வு முயற்சிகளும் தமிழ் மக்களைப் பெரும் நம்பிக்கையீனத்துள் தள்ளியுள்ளன. மனிதனின் முயற்சிகளும், வல்லமையும் அவனது இயலுமையின் எல்லைகளைக் கடக்கும் போது இறைவேண்டல் ஒன்றே உகந்த வழியாகிறது. செபத்தினால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை நம்பும் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் இக்காலத்தில் எமது மக்களின் பல்வேறு தேவைகளுக்கான செபங்களை உறுதியான வகையில் இணைந்து முன்னெடுப்போம். எல்லா வழிகளும் மூடியிருப்பதாக தோன்றும் இவ்வேளையில் இறைவனின் கதவை செபம் என்னும் ஆயுதத்தால் தட்டுவதே சிறந்த வழியாகும் என்ற நம்மிக்கையோடு உறுதியாக தட்டுவோம். எக் காலத்தையும் விட இக்காலத்தில் இளையோர்கள் தமது சீரான வாழ்வுக்கு பெரும் சவாலை எதிர்கொள்கின்றனர். அதிகரித்த தகவல் பரிமாற்றம் - சமூக வலைத்தளங்களின் பாவனை - போதைப்பொருட்களின் பரவல் - பாரம்பரிய சமூக கட்டுமானங்களின் தளர்வு - விழுமிய வீழ்ச்சி போன்ற பல்வேறு நவீன சவால்களை ஒருங்கே எதிர்கொள்வதோடு வேலைவாய்ப்பின்மை - தொழில்சார் கல்வி முறையின்மை - தகுந்த வழிகாட்டல் இன்மை போன்ற குறைபாடுகளாலும் அவர்கள் துன்புறுகின்றனர். இந்நிலையில் போக்கிடம் தெரியாது அலையும் இத் தலைமுறை இளையோரை இறைதிட்டத்தை உய்த்துணரவும் அதன்படி தமது வாழ்வை வடிவமைத்துக் கொள்ளவும் வழிகாட்ட வேண்டிய பெரும் பொறுப்பில் சமூகத்தலைவர்களும் திருச்சபைத்தலைவர்களும் பெற்றோரும் உள்ளனர். பெற்றோர் ஆசிரியர் போன்ற வழிகாட்டிகள் மந்தையை சரியான மேய்ச்சல் நிலத்துக்கு அழைத்துச் செல்லும் நல்லாயனைப்போல பணியாற்ற அவர்களை உருவாக்கும் பொறுப்பு குருக்கள் துறவிகள் மற்றும் ஏனைய பொது நிலைத் தலைவர்களைச் சார்ந்தது.

செய்தி வெளியீடு : அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை இயக்குநர் - பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் மற்றும் ரீ.சி.என்.எல். ரீவி - ஆசிரியர் (ரீ.சி.என்.எல்.) தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத்தளம் ஊடக வருகை விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம் ஊடக வருகை விரிவுரையாளர் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் [2018-02-20 10:58:29]


"தவக்காலத்தின் வாசலில்" மட்டக்களப்பு மறைமாவட்ட அருங்கொடை....

மட்டக்களப்பு மறைமாவட்ட அருங்கொடை பணியகத்தினால் தவக்காலத்தினை முன்னிட்டு தாண்டவன்வெளி, தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் "தவக்காலத்தின் வாசலில்"எனும் மாபெரும் குணமளிக்கும் வழிபாடு 15.02.2018 மாலை முதலாம் நாள் இடம்பெற்றது. இந்தியா, டிவைன் தியான இல்லத்தினைச் சேர்ந்த அருட்தந்தையர்கள் அகஸ்டின் முண்டேகாட், றபாயல் ஆகியோர் வழிநடத்தினர். 16ம் 17ம் திகதிகளிலும் இடம்பெறும். முதல்நாள் நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் அதிவந்.கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள் கலந்துகொண்டு தமது ஆசிச்செய்தியினை வழங்கினார். [2018-02-16 22:32:12]


நானாட்டான் மண்ணில் தங்களது மூன்றாவது இல்லத்தை

சுமார் 350 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப் பட்ட, அதாவது 1680ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட டிலாசால் அருட்சகோதரா் களின் சபை இலங்கை மண்ணில் 1867ம் ஆண்டு கால் பதித்தது. 1951ம் ஆண்டு மன்னார் மண்ணில் தங்களது சேவையைத் தொடங்கிய இவ் அருட்சகோதரர்கள் 1999ம் ஆண்டு வரை மன்னார் நகரில் மாத்திரம் தங்களது பணியை தொடர்ந்தனர்.

ஆனால் காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்ட இவர்கள் 1999ம் ஆண்டு அடம்பனில் தங்களது பணியை விசாலப்படுத்திக் கொண்டனர். தொடந்து இன்றைய நாளில் (12.02.2018) நானாட்டான் மண்ணில் தங்களது மூன்றாவது இல்லத்தை ஆரம்பித்ததன் வழியாக மன்னார் மறைமாவட்டத்திற்கள் தங்களது பரப்பெல்லையை விசாலப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இன்று 12.02.2018 திங்கட்கிழமை நானாட்டானில் டிலாசால் அருட்சகோதரர்களின் புதிய இல்லம் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் ஆசீர்வதித்துத் திறந்து வைக்கப்பட்டது. ஆயர் அவர்கள் நமது தமிழ் பண்பாட்டு இசை முழக்கத்தோடும், சாரணர்களின் அணிவகுப்போடும் வரவேற்கப்பட்டார்.

இந் நிகழ்வில் டிலாசால் அருட்சகோதரர்களின் இலங்கைக்கான சபை முதல்வர் அருட்பணி கிறிஸ்ரி குரூஸ் அவர்களும், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அவர்களும், மன்னாரில் இவ் அருட்சகோதரர்களின் நிர்வாகத்தில் இயங்கும் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பழைய மாணவர் மேதகு நீதிபதி திருவாளர் பிரபாகரன் அவர்கள், கொழும்பு தூய பெனடிக்ற் கல்லூரியின் பழைய மாணவரும் தற்போதைய மன்னார் இராணுவ 51வது படைப்பிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஜே.ஏ.டபிள்யு.கலகமகே, மன்னார் பிரதேசச் செயலர் திரு.ம.பரமதாசன், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுகந்தி செபஸ்ரியன், ஓய்வு பெற்ற பிரதேசச் செயலர் திரு.கஸ்மிர் சந்திரையா மற்றும் பெருந்தொகையான குருக்கள் துறவிகள், துறைசார் வல்லுனர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர் [2018-02-13 22:46:38]


மாந்தை மாதா திருவிழா *மன்னார் மறைசாட்சிகளின் மண்ணில்*

மன்னார் மறைசாட்சிகளின் மண்ணில் , கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆழத்தையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றி நிற்கும் மாந்தை மாதா திருத்தலத்தின் பெருவிழாவைக் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இம்மாதம் 17ந் திகதி திருவிழாத் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.
வரலாற்றச் சிறப்புமிக்க இந்தத் திருத்தலத்தலம் மருதமடுத் திருத்தாயாரின் தொடக்ககால இருப்பிடம் என்பதும், கத்தோலிக்க சமயத்திற்கெதிரான வன்முறையின்போது மடுமாதாவின் அற்புதத் திருவுருவம் மடுத்திருப்பதிக்கு சென்றதென்றும் நமக்கு வரலாற்றுக் குறிப்புக்கள் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன.
தற்பொழுது இத் திருத் தலத்திலே ஆயத்த வழிபாடுகள் தினமும் மாலை வேளையில் நடைபெற்று வருகின்றன. [2018-02-10 16:22:42]


சிறப்புடன் நடைபெற்றது தவசிகுளம் மிருசுவில் காணிக்கை அன்னை ஆலய அபிஷேக விழா, அன்னையின் வருடாந்த திருவிழா!

கடந்த 28/01/2018 அன்று தவசிகுளம் மிருசுவில் புனித காணிக்கை அன்னையின் ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டு யாழ் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய ஜஸ்டின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கருத்துரை வழங்கிய ஆயர் அவர்கள் ஆயராக பணி ஏற்றபோது விருது வாக்காக எடுத்துக்கொண்ட விடயம் "மரியன்னை மூலம் யேசுவிடம்" அந்த விருது வாக்கிற்கு அமைவாக அன்னையின் அழகிய ஆலயத்தினை அபிஷேகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், இறைமகனை தாங்கிய முதல் நற்கருணை பேழை அன்னை மரியாளெனவும் இறைமக்கள் கூடி செபிப்பற்கான தூய்மையான இல்லமே ஆலயம் என்பதாகும் என அன்னை மரியாளின் மாண்பினையும்,ஆலயத்தின் முக்கியத்துவத்தினையும் அழகாக எடுத்தியம்பினார்.

அழகிய ஆலயத்தினைஅமைப்பதற்கு அற்பணிப்புடன் உழைத்த பங்குத் தந்தை, முன்னாள் பங்குத் தந்தை மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பங்கு மக்கள்,புலம்பெயர் பங்கு மக்கள், அயல்பங்கு மக்கள், அருட் தந்தையர்கள்,அருட் சகோதரிகளென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து கடந்த 02/02/2018 அன்று அன்னை மரியாள் பாலகன் யேசுவை காணிக்கையாக ஒப்புக்கொடுத்த பாதுகாவலியின் திருவிழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விலும் புலம்பெயர் பங்கு மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து அன்னை மரியாளின் பரிந்துரையை நிறைவாக வேண்டினர். [2018-02-05 22:52:01]


நமது எதிர்காலத்திற்காக இன்றே தயாராக வேண்டும்

சலேசியன் சபை அருட்பணியாளர்களால் மன்னார் மறை மாவட் டத்தில், முருங்கனில் நடாத்தப்படும் தூய டொன்பொஸ்கோ தொழிற்கல்வி நிறுவன த்தின் பாதுவலர் தூய டொன் பொஸ்கோ திருவிழா இன்று இந் நிறுவனத்தில் இன்று காலை (03.02.2018) சனிக்கிழமை கொண்டாடப்பட்டது,இவ்விழாவிற்கு வருகை தந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் பிரதான நுழைவாயில் வைத்து மாணவர்கனின் மேற்கத்திய இசை முழக்கத்துடன் மாணவர்களாலும், அவர்களின் பெற்றோராலும் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன் பின்னர் இந் நிறுவனத்தின் மண்டபத்திலே ஆயர் அவர்களால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. அவ் வேளையில் ஆயர் தனது மறையுரையின் போது: இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் இங்கு வழங்கப்படும் நல் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி நமது எதிர்காலத்திற்காக இன்றே தயாராக வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

திருப்பலியைத் தொடர்ந்து மாணவர்களுக்கான சான்றிதழ்களை ஆயர் வழங்கினார். அனைத்து நிகழ்வுகளும் இந் நிறுவனத்தின் இயக்குனர் அருட்பணி போல் அவர்களின் தலைமையில் நடைபெற்றன. [2018-02-04 13:21:59]


மன்னார் தூய மரியன்னை ( தூய காணிக்கை அன்னை) திருவிழா

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கின், தூய மரியன்னை ( தூய காணிக்கை அன்னை) திருவிழா இன்று காலை (02.02.2018) வெள்ளிக்கிழமை, சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.காலை 06.45மணிக்கு ஆலய பிரதான நுழைவாயில் வைத்து மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் பங்கு மக்கள் முன்னிலையில் பங்குத் தந்தை அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அடிகளாரால்; வரவேற்க்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இன்றைய திருவிழாவின் ஆரம்ப வழிபாடான மெழகுதிரிகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வும் மெழுகுதிரிப் பவனியும் நடைபெற்றது. மன்னார் ஆயர் அவர்கள் ஆரம்ப வழிபாடுகளை முன்னெடுத்து மெழுகுதிரிகளை ஆசீர்வதித்து மெழுகுதிரிப் பவனியை ஆரம்பித்து வைத்தார்.

பவனியின் இறுதியில் ஆலய முன்றலில் ஆயரும் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் குருக்களும் திருப்பலித் திருவுடையணிந்து திருப்பலிப் பீடம் நோக்கி வந்தனர். திருப்பலிப் பீடத்தை வந்தடைந்தவுடன் பீடத்திற்கு முன் ஆயரும், ஏனைய திருப்பலி நிறைவேற்றும் குருக்களும் தமிழ்ப்பாண்டில் ஆராத்தி வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஆன்மிக பிரதிநிதிகள் குத்துவிளக்கேற்றினர்.; தொடர்ந்து ஆயர் தலைமையில் திருவிழாக் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இன்றைய திருவிழாவற்கான மறையுரையை அருட்கலாநிதி லெறின் டீ றோஸ் கொஸ்தா அவர்கள் வழங்கினார்.

இவ்விழாவிற்கு மன்னார் மாவட்ட மேலதிக செயலர் திருமதி ஸ்ரன்லி டிமெல், மன்னார் பிரதேச செயலர் திரு.ம.பரமதாஸ், மன்னார் நகரசபைச் செயலர் திரு.பிறிற்றே றெஜினோல்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.இவ்விழாவில் பெருந்தொகையான இறை மக்கள் கலந்து செபித்தனர். [2018-02-02 19:24:48]


தூய ஆரோக்கிய அன்னை ஆலய அபிசேக திறப்பு விழா நிகழ்வு நானாட்டான்

தூய ஆரோக்கிய அன்னை ஆலய அபிசேக திறப்பு விழா நிகழ்வு நானாட்டான்
நானாட்டான் பங்கில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலய அபிசேக திறப்பு விழா திருநிகழ்விலும், தொடர்ந்து நடைபெறும் இரவுணவு மகிழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன்அழைக்கின்றோம்.
காலம் : 05.02.02018
நேரம் : பி.ப. 17:00 மணி
இறையாசீர் என்றும் உங்களுடன் இருப்பதாக
பங்குத்தந்தை, பங்கு அருட்பணிபேரவை உறுப்பினர்கள், பங்குமக்கள் [2018-02-02 19:21:41]


ஈச்சளவக்கை குழந்தை இயேசு ஆலயத் திருவிழா

விடத்தல்தீவு பங்கின் கிளை ஆலயமாக அமைந்துள்ள ஈச்சளவக்கை குழந்தை இயேசு ஆலயத் திருவிழா இன்று (31.01.2018) புதன்கிழமை காலை நடைபெற்றது. காலை 07.00மணிக்கு திருப்பலி நிறைவேற்றும் குருக்களையும், விடத்தல்தீவில் இருந்து பணி செய்யும் பிரான்சிஸ்கன் சபை அருட்சகோதரிகளையும் கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களையும், ஏனைய விருந்தினர்களையும் ஆலய மக்கள் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து திருவிழாத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியின் முடிவில் திருவுருவ ஆசீரும் வழங்கப்பட்டது.விடத்தல்தீவு பங்குத் தந்தை அருட்பணி.செல்வநாதன் பீரிஸ் ஆலய அருட்பணிப் பேரவையோடு இணைந்து அனைத்து பணிகளையும் சிறப்பாக ஒழுங்குபடுத்தியிருந்தார். [2018-01-31 23:07:43]


புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபர் அருட்திரு திருமகன் பணி பொறுப்பை ஏற்றுகொண்டார்

புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக அருட்திரு திருமகன் அடிகளார் இன்று காலை ஆயர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்து பணி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் புனித பத்திரிசியார் கல்லூரியின் மாணவர்கள் ஆசிரியர்கள் மறைமாவட்ட குருக்கள் பழைய மாணவர்கள் என பலரும் பங்குபற்றினார்கள். காலை 9 மணிக்கு புனித மரியன்னை பேராலயத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு, திருப்பலி நிறைவில் புதிய அதிபருக்கான பணி பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பலியின் முடிவில் புதிய அதிபர் பாடசாலை பான்ட் வாத்திய அணிவகுப்போடு பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு அவர் பாடசாலை கொடியை ஏற்றினார். பின்னர் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்னம் அடிகளாரால் புதிய அதிபர், பாடசாலை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு அதிகார பூர்வமாக அதிபருக்குரிய நாற்காலியில் உட்காரவைகப்பட்டு பணி பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது. [2018-01-31 23:01:47]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்