வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


மறைவாழ்வுக் கல்வி தேர்வு

இலங்கை தேசிய கல்வி, மறைக்கல்வி, திருவிவிலிய அருட்பணி மையம், மறைவாழ்வுக் கல்விப் பணியாளருக்கென வருடந்தோறும் நாடு தழுவிய ரீதியில் நடாத்தும் மறைவாழ்வுக் கல்வி முதல் தேர்வு, இடைநிலைத் தேர்வு, இறுதித் தேர்வு ஆகிய தேர்வுகள் நேற்று 22.09.2018 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணிவரை இலங்கை முழுவதிலுமுள்ள மறைமாவட்டங்களில், ஒழுங்குபடுத்தப்பட்ட பரீட்சை மையங்களில் நடைபெற்றன.

மன்னார் மறைமாவட்டத்தில் மன்னார் தூய சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மற்றும் வவுனியா இறம்பைக்குளம் பெண்கள் தேசிய பாடசாலை ஆகிய பரீட்சை மையங்களில் மன்னார் மறைமாவட்ட பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை நடைபெற்றது. எல்லாப் பிரிவுகளிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்கள் இப் பரீட்சையை எழுதினார்கள். [2018-09-26 21:24:54]


குருத்துவ அர்ப்பணத்தின் 40வது ஆண்டு

மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளரும், தற்போது அமெரிக்கா நியூயோர்க் மறைமாவட்டத்தில் பணி புரிபவருமான அருட்பணி ஆலோசியஸ் பாக்கியநாதர் அடிகள் தனது குருத்துவ அர்ப்பணத்தின் 40வது ஆண்டு நிறைவினை நேற்று 22.09.2018 மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் கொண்டாடினார்.இந் நன்றித் திருப்பலியில் பல மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மறைமாவட்டத்திலிருந்து அருட்பணியாளர்களும், துறவிகளும், இறைமக்களும் கலந்து செபித்தனர். [2018-09-26 21:19:54]


சந்தியோகுமையார் வாசாப்பு

தமிழ்க் கத்தோலிக்க மக்களின் விசுவாச வாழ்வின் வளமைக்கு வலுவூட்டுகின்ற கத்தோலிக்க கலை வடிவங்கள் மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் அதற்குரிய தனித் தன்மையோடு மேடையேற்றப்பட்டு வருகின்றன. தமிழ்க் கத்தோலிக்க மக்களின் விசுவாச வாழ்வின் வளமைக்கு வலுவூட்டுகின்ற கத்தோலிக்க கலை வடிவங்கள் மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் அதற்குரிய தனித் தன்மையோடு மேடையேற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பெரியபண்டிவிரிச்சான் தூய மரியகொறற்றி கலைக்குழு 22.08.2018 செவ்வாய்க்கிழமை தூய மரிய கொறற்றி ஆலய முன்றலில் தோமையாரின் விசுவாச வீரத்துவ வாழ்வு வரலாற்றை வெளிக் கொணரும் சந்தியோகுமையார் வாசாப்பு என்னும் கலைவடிவத்தை பக்தி எழுச்சியோடு அரங்கேற்றினர்.

இத் திருநிகழ்வுக்கு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை முதன்மை விருந்தினராகவும், மாந்தை பிரதேசசபை முதல்வர் மதிப்புக்குரிய செல்லத்தம்பு, மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மடு பிரதேசச் செயலர் திரு.ஜெயகரன், மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பெருந்தொகையான மக்கள் வருகைதந்திருந்தனர். பங்குத் தந்தை அருட்பணி ரெறன்ஸ் கலிஸ்ரஸ் குலாஸ் அடிகளார் கலைக்குழுவோடும், இணைந்து அனைத்தையும் முன்னின்று நடாத்தினார். [2018-08-26 15:32:59]


குருத்துவ பணிவாழ்வின் 25வது ஆண்டு

மன்னார் மறைமாவட்டத்தின் அருட்பணியாளர் சவிரி மரியதாசன் ( சீமான்) அடிகளார் தனது குருத்துவ பணிவாழ்வின் 25வது ஆண்டு நிறைவினை ஆவணி மாதம் 12ந் திகதி நினைவு கூர்ந்தார். மன்னார் மறைமாவட்டத்தின் அருட்பணியாளர் சவிரி மரியதாசன் ( சீமான்) அடிகளார் தனது குருத்துவ பணிவாழ்வின் 25வது ஆண்டு நிறைவினை ஆவணி மாதம் 12ந் திகதி நினைவு கூர்ந்தார்.

1998ம் ஆண்டு ஆவணி மாதம் 12ம் திகதி மடுத் திருத்தலத்தில் இளைப்பாறிய ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களால் அருட்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தனது பணிவாழ்வின் 25 மகிழ்வு ஆண்டை தனது சொந்தக் கிராமமான மாவிலங்கேணி தூய அடைக்கல அன்னை ஆலயத்தில் நன்றித் திருப்பலியோடு கொண்டாடினார். [2018-08-26 15:29:57]


மருதமடுத் திருத்தாயாரின் ஆவணி திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள்

இலங்கை வாழ் மக்களால் ஆழமாக அன்பு செய்யப்படுகின்ற மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள மருதமடுத் திருத்தாயாரின் ஆவணி மாதத்(அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா) திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் இன்று 06.08.2018 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின.இன்று மாலை 06.00 மணிக்கு ஆலய முகமண்டபத்திற்கு முன்பாக தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் நடைபெற்ற இறைவழிபாட்டைத் தொடர்ந்து திருத் தந்தையின் கொடியை தற்போதைய மடுத் திருப்பதிப் பரிபாலகர் அருட்பணி ச.எமிலியானுஸ் பிள்ளை அடிகளாரும், மடுமாதா கொடியினை மடுத்திருத்தலத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பரிபாலகர் அருட்பணி ச.ஜொய்சி பெப்பி சோசை அடிகளாரும் இலங்கைக் கத்தோலிக்க திருச்சபையின் கொடியினை தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் மறையுரைக்காக வந்திருக்கின்ற குருக்களும் ஏற்றி வைத்தனர்.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலர் மதிப்புக்குரிய திரு.மோகன்ராஸ் அவர்களும், மடுப் பிரதேச செயலர் திரு.ஜெயகரன் அவர்களும், பல்தறை சார்ந்த பல அரச பணியாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர். அத்தோடு பல குருக்கள் துறவிகளும், பெருந் தொகையான பக்தர்களும் ஒன்று கூடியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் திருச் செபமாலையும், மறையுரையும், நற்கருணை ஆசீரும் இடம் பெற்றன. திருவிழாவுக்கானதும், திருப்பயணிகளுக்கானதுமான பல்வேறுவிதமான அனைத்து ஒழுங்குகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

இம் மாதம் 14ம் திகதி வேஸ்பர் என அழைக்கப்படும் மாலைப் புகழ் ஆராதனையும், 15ம் திகதி காலை அன்னையின் திருவிழாத் திருப்பலியும், திருவுருவப் பவனியும், திருவுருவ ஆசீரும் இடம் பெறும். [2018-08-07 22:46:40]


பெரியகட்டு தூய அந்தோனியார் திருவிழா

செட்டிகுளம் பங்கின் அருட்பணி எல்லைக்குள் அமைந்துள்ள பெரியகட்டு தூய அந்தோனியார் திருவிழா இன்று 05.08.2018 ஞாயிற்றுக் கிழமை காலையில் நடைபெற்றது. முதன் முதலாக இத்திருத்தலத்திற்கு அருட்பணிக்காக வருகை தந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ அவர்களை: அருட்பணியாளர்கள், துறவிகள், இறைமக்கள் பாரம்பரிய முறையில் வரவேற்றதோடு, ஆயர் அவர்கள் பாடசாலை மாணவர்களின் மேலைநாட்டு இசைக்கருவிகளின் மகிழ்வொலியோடு அழைத்து வரப்பட்டார். இதன் பின் திருப்பலி ஆரம்பமாகியது. இத்திருவிழாத் திருப்பலியில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை, வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி ச.இராஜநாயகம், முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி லீ.சுரேந்திரன் றெவல் ஆகியோரோடு பல குருக்கள் கலந்து கொண்டனர்.

பல துறவிகள், பெருந்தொகையான இறைமக்கள், அரச, அரச சார்பற்ற பணியாளர்கள் பலர் இத்திருவிழாத் திருப்பலியில் கலந்து செபித்தனர். பங்குத் தந்தை அருட்பணி இ.செமாலை அடிகளார் பங்குச் சமூகத்தோடு இணைந்து திருவிழா ஒழுங்குகளை மேற் கொண்டிருந்தார். இத்திருவிழா அரச வர்த்தமானியில் அரச அனுசரணை பெறும் திருவிழாவாகப் பிரகடனப் படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. [2018-08-05 23:13:39]


நிலையான அர்ப்பணத் திருப்பொழிவு

மன்னார் மறைமாவட்டத்தின் முருங்கன் பங்கைச் சேர்ந்த திரு, திருமதி மிக்கேல் பிலிப் ,சுசீலா பேணடேற் ஆகியோரின் மகன் அருட்சகோதரர் பேணாட் ஷா பிரான்சிஸ்கன் சிறிய துறவற சபையில் இணைந்து தனது முதல் அர்ப்பணத்தை 24.05.2014 அன்று எடுத்துக் கொண்டார். அதன் பின் ஆழ் நிலைப் பயிற்சியின்பின் இன்று 02.08.2018 வியாழக்கிழமை தனது நிலையான அர்ப்;பணத்தை எடுத்துக் கொண்டார்.சில ஆண்டுகளாக பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பிரான்சிஸ்கன் சிறிய துறவற சபையின் துறவறப் பயிற்சியக்தில் துறவற பயிற்சியைப் பெற்ற பின் நாடு திரும்பி னார். இன்று 02.08.2018 வியாழக்கிழமை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியின் போது அருட்சகோதரர் பேணாட் ஷா நிலையான அர்ப்;பணத்தை எடுத்துக் கொண்டார்.

இத் திரு நிகழ்வில் பிரான்சிஸ்கன் சிறிய துறவற சபையின் உருவாக்குனர் அருட்பணி லெனாட் கல்ட்டேரா, இலங்கைக்கான இச் சபையின் முதல்வர் அருட்பணி எட்வேட் ஜெயபாலன் அடிகளார் மற்றும் பெருந்தொகையான குருக்கள், துறவிகள், இறைமக்கள் கலந்து செபித்தனர். [2018-08-04 17:54:01]


மன்னார் மறைமாவட்டத்தின் 45வது

மன்னார் மறைமாவட்டத்தின் 45வது பங்கு 11.07.2018 புதன் கிழமை உதயமாகியுள்ளது.இது வரை காலமும் சிலாவத்துறைப் பங்கின் அருட்பணி எல்லைக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த முள்ளிக்குளம், காயாக்குளி, மன்னார் புத்தளம் எல்லையில் அமைந்துள்ள பூக்குளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக முள்ளிக்குளம் தூய பரலோக மாதா பங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

மாலை மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் முள்ளிக்குளம் வருகைதந்து புதிய பங்கைப் பிரகடனப்படுத்தி, இப் பங்கின் முதல் பங்குத் தந்தையாக அருட்பணி.பீ.லோறன்ஸ் லீயோன் அடிகளாரை கத்தோலிக்க திருச்சபையின் மரபுக்கொப்ப நியமனம் செய்து நன்றித் திருப்பலியை நிறைவேற்றினார்.

இப் பங்கிற்கு வருகை தந்த ஆயரையும், புதிய பங்குத் தந்தையையும் பங்கின் நுழைவாயில் கிராமமான காயக்குளி பிரதான வீதியில் வைத்து இக்கிராம மக்கள் வரவேற்பளித்த பின்னர் உந்துருளிப் பவனியாக முள்ளிக்களம் வரை அழைத்துச் சென்றனர். பின் பாடசாலை மாணவர்களின் இன்னியம் மகிழ்வொலியோடு ஆலய முன்றல் வரை வரவேற்பளித்தபின்னர், இக்கிராமத்தில் கலைஞர்கள் கவிபாடி அழைத்துச் சென்றனர். அதன் பின் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

குருக்கள், துறவிகள், இறைமக்கள், அரச, அரச சார்பற்ற முதன்மைப் பணிநிலை பணியாளர்கள் எனப் பலரும் கலந்த கொண்டனர். [2018-07-16 20:13:27]


பள்ளகண்டல் தூய அந்தோனியார் திருத்தல விழா

சிலாபம் மறைமாவட்டத்தின் அருட்ப்பணிப் பரப்பெல்லைககுள் அமைந்துள்ள வில்பத்து வனவிலங்கு பாதுகாப்பிடக் காட்டின் நடுவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளகண்டல் தூய அந்தோனியார் திருத்தல விழா இன்று (08.07.2018) ஞாயிற்றுக்கிழமை காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய திருவிழாத் திருப்பலியை சிலாபம் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி வலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை அவர்கள் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் ஒப்புக்கொடுத்தார். இத் திருவிழாத் திருப்பலியில் பெருந்தொகையான பக்தர்கள், குருக்கள், துறவிகள், அரச மற்றும் அரச சார்பற்ற பணியாளர்கள் கலந்து செபித்தனர்.

நீண்டகால ஆன்மிக வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட இத்திருத்தலம் புத்தளம் மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்திருந்தாலும், மன்னார் கத்தோலிக்க மக்களின் பராமரிப்பிலேயே இருந்து வந்தது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் பகுதியில் வாழும் சில தமிழ்க் கத்தோலிக்க மக்கள் பள்ளகண்டல் தூய அந்தோனியார் திருத்தலப் பகுதியைப் பூர்விமாகக் கொண்டவர்கள் என்ற வரலாற்றுக் குறிப்பு வாய்மொழிப் பாரம்பரியமாக இருந்து வருகின்றது.

நீண்டகாலமாக, குறிப்பாக முள்ளிக்குளம் தூய பரலோகமாதா ஆலய அருட்பணிப் பேரவை இத் திருத்தலத்திற்குப் பொறுப்பாகவிருந்து ஆன்மிகச் செயற்பாடுகள் அனைத்தையும் ஆன்னொடுத்து வந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் , இத்திருத்தலம் சிலாப மறைமாவட்டத்தின் அருட்பணி எல்லைக்குள் வருவதால் அதனை சிலாபம் மறை மாவட்டத்தினால் நிர்வகிப்பதே பொருத்தமானதென வேண்டுகை முன்வைக்கப்பட்டதால், முன்னைநாள் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் அதனை சிலாபம் மறைமாவட்ட ஆயாரிடம் கையளித்தார். [2018-07-08 22:09:44]


மருதமடுமாதா திருத்தலத் திருவிழா

வேதசாட்சிகளின் நிலமாம் மன்னார் மண்ணின் ஆன்மிக வரலாற்றுச் சிறப்பு மிக்க மருதமடுமாதா திருத்தலத் திருவிழா 02.07.2018 திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

காலை 06.15 மணிக்கு திருவிழாத் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ தலைமையில், கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்கலாநிதி மக்ஸ்வெல் சில்வா, இலங்கையின் பல மறை மாவட்டங்களிலுமிருந்து வருகைதந்திருந்த அருட்பணியாளர்கள் இணைந்து திருவிழாக் கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.

இத் திருவிழாத் திருப்பலிக்கு பெருந்தொகையான திருப்பயணிகளும், நீதித்துறை சார்ந்த முக்கிய பணியாளர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் அரச கட்டமைப்பின் பல்வெறு பணிநிலை அதிகாரிகளும்,பிரதேச சபை உறுப்பினர்களும், முப்படையின் பிரதேச பணிநிலை அதிகாரிகளும்;,துறவிகளும் குருக்களும் கலந்து கொண்டனார்.

தமிழ்,சிங்களம், இலத்தீன் ஆகிய மும் மொழிகளிலும் நடைபெற்றது.தமிழ், இலத்தின் மொழிகளிலான வழிபாட்டை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களும், சிங்கள மொழியிலான வழிபாட்டை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்கலாநிதி மக்ஸ்வெல் சில்வா அவர்களும் முன்னெடுத்துச் சென்றனர். திருவிழாவுக்கு வந்திருந்த அனைவரையும், திருப்பலின் தொடக்கத்தில் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் வரவேற்றார்.

திருப்பலி முடிவில் ஆன்னையின் திருவுருவப் பவனியும், ஆசீரும் இடம் பெற்றது. [2018-07-03 21:47:27]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்