வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


தூய மரிய வியான்னி தியான இல்லம்

மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லம் நிறைவான ஆன்மிக பணியை வழங்கிவருவது மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும். இத் தியான இல்லத்தில் தற்போது நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கத்தோலிக்க மக்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், குழுக்களாக வந்து ஆன்மிக கருத்தமர்வுகள், தியானங்களை மேற் கொண்டு வருகின்றனர். வதிவிட வசதியோடு கூடிய இத் தியான இல்லம் இயற்கைச் சூழலில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. [2018-04-24 20:59:28]


யாழ் மறைமாவட்டத்தின் முதல் இறைஇரக்க ஆலயம் கிளிநொச்சி....

யாழ் மறைமாவட்டத்தின் முதல் இறைஇரக்க ஆலயம் கிளிநொச்சி பிரமந்தனாறில் இறைஇரக்க பெருவிழாவில் யாழ் ஆயர் திறந்து வைத்தார்
23 ஏப்பிரல் 2017 அன்று இறைஇரக்க பெருவிழா தினத்தில் யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கிளிநொச்சி பிரமந்தனாறில் யாழ் மறைமாவட்டத்தின் முதல் இறை இரக்க ஆலயத்தை திறந்து வைப்பது பற்றி பங்குத்தந்தை அ. அன்ரன் ஸ்ரீபன் அடிகளார் காலைக்கதிர் கிறிஸ்தவ செய்தி இதழுக்கு கருத்து தெரிவிக்கும் போது இடைநடுவில் நிறுத்தப்பட்ட இவ்வாலய கட்டுமான பணிகளை கடந்த வருடம் திருத்தந்தையினால் பிரகடனப்படுத்தப்பட்ட இரக்கத்தின் ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்க இறைவன் வல்லமை தந்தார் என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கும் போது இவ்வாலயமே யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் அமைந்துள்ள முதலாவது இறைஇரக்க ஆலயம் என்பதோடு இம்மண்ணில் நடந்து முடிந்த யுத்தத்தின் நினைவுச்சின்னம் இதுவாகும். பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களுக்கு இல்லிடம் கொடுத்து அரவணைத்து அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்த இடம் இவ்வாலயம் என்றார். [2018-04-24 20:55:14]


அருட்பணி. போனி பெர்னாண்டோ இறை பதமடைந்தார்

அருட்பணி. போனி பெர்னாண்டோ புள்ளே அடிகள் 21/04/2018 அன்று இறை பதமடைந்தார். அடிகளாரின் நல்லடக்கம் மற்றும் திருப்பலி 23/04/2018 வெலிஹேன புனித கைத்தான் ஆலயத்தில் நடைபெறும். அடிகளாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தார், உறவினர், நண்பர்கள், சக குருக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க இணையம் [2018-04-22 15:37:28]


மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்

மன்னார் மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்தத் தியானம் 15.04.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இத்தியானம் வரும் வெள்ளிக்கிழமை 20.04.2018 மாலையில் நிறைவடையும். இத்தியானத்தை நெறிப்படுத்த இந்தியா தமிழ் நாடு இரட்சணிய அருட்பணியாளர் சபையைச் சேர்ந்த அருட்பணி. இக்னேசியஸ் அடிகளார் வருகை தந்துள்ளார்.

இன்றைய நிகழ்வுகள், ஆரம்ப இறை வேண்டுதலுடனும், மன்னார் மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளாரின் வரவேற்புரையுடனும், மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களின் அறிமுக உரையுடனும், தியான நெறியாளரின் தியானச் சிந்தனையுடனும் ஆரம்பமாகின. நாம் அனைவரும் நம் அருட்பணியாருக்காகச் செபிப்போம் [2018-04-17 12:56:42]


யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி – ‎2018

2018 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
புத்தாண்டு என்றவுடன் மகிழ்ச்சிக் கொண்டாட்டம், உறவுகளின் இணைவு என்பன இயல்பாகவே வந்துவிடும். இவற்றோடு கூட புதிய எதிர்பார்ப்புக்;கள், புதிய திட்டங்கள், புதிய எண்ணங்கள் என்பன தோன்றுகின்றன. இந்த புதிய ஆண்டு உங்கள் உள்ளத்து எண்ணங்கள், ஏக்கங்கள் அனைத்தும் நிறையப் பெற இறையாசீர் வேண்டுகிறோம்.

கூட்டு நல்லாட்சி அரசின் காலம் முடிந்து விடுமோ என்ற ஏக்கம் நம்பிக்கையில்லா பிரேணை தோற்றதோடு முடிவடைந்துள்ளது. தமிழ்க் கட்சிகள் நிலைமையை சாதுரியமாக பயன்படுத்தியுள்ளனர்.
உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளே நம்பிக்கையில்லா பிரேணையை தோற்றுவித்தன. 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இன்று கூட்டு நல்லாட்சி அரசில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகளும் இணைந்து நின்றமையினாலேயே ஆட்சிக்கு வந்தன. அந்த உண்மையை உணராது உள்ளுராட்சித் தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளும் பிரிந்து நின்றமையே கூட்டு நல்லாட்சி அரசிற்கு ஆபத்தானதுடன், எதிரிகளுக்கும் வாய்ப்பானது.

இன்றைய நிலையில் கூட்டு நல்லாட்சி அரசின் இருப்பு மிக அவசியமானது என்பதை அனைவரும் தெளிவாக உணர வேண்டும். அதனை அடுத்த நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்க வேண்டிய இரண்டு ஆண்டுகளுக்காவது பாதுகாக்க வேண்டும். அது ஜனாதிபதியும் பிரதமரும் வருங்காலத்தில் செயற்படும் புரிந்துணர்விலும், மக்களின் நம்பிக்கையை பெறும் விதத்திலும், தமிழ் அரசியற் கட்சிகளின் நிலைப்பாட்டிலுமே தங்கியுள்ளது.
இலங்கை நாட்டைப் பொறுத்த வரையிலும் இன்னும் குறிப்பாக தமிழ் மக்களை பொறுத்தவரையிலும் கூட்டு நல்லாட்சி அரசின் இருப்பு மிக அவசியமானது.

தமிழ் கட்சிகள் தம் அரசியல் வேறுபாடுகளைக் மறந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற ஒன்றிக்க வேண்டுகின்றோம். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தரக் கூடிய யாப்பை திருத்தியமைக்க எடுக்கும் முயற்சியில் கடுமையாக உழைக்க வேண்டுகின்றோம். காணாமற் போனோர் விடயம், அரசியற் கைதிகள் விடுதலை, மீள் குடியேற்றம், வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் போன்ற பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
இப் புத்தாண்டு தமிழ் மக்கள் அனைவர்க்கும் அருள் நிறைந்த ஆண்டாக, அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் ஆண்டாக அமைய வேண்டும் என இறையாசீர் வேண்டி வாழ்த்துகின்றோம்.

கிறிஸ்துவிலும் மரியன்னையிலும் பக்தியுள்ள பேரருட்திரு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் யாழ் ஆயர்
செய்தி வெளியீடு : அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை [2018-04-17 12:55:15]


இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா

மன்னார் மறைமாவட்டத்தின், வவுனியா மறைக்கோட்டத்தில், பம்பைமடுப் பங்கின் 5ம் மைல் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா 08.04.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை 03.00 மணிக்கு பல நூறு இறைமக்கள் பங்குகொள்ள கொண்டுடாடப்பட்டது.
மடு மறைக்கோட்ட முதல்வரும், மடுத் திருத்தலப் பரிபாலகருமான அருட்பணி.ச.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார் திருவிழாத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார். பல அருட்பணியாளர்களும் துறவிகளும் இத் திருவிழாத் திருப்பலியில் பங்கேற்றனர். [2018-04-12 22:22:29]


த்துருக்கொண்டான் #இறை #இரக்க #திருத்தல #வருடாந்த #பெருவிழா2018 (வ.சுரேஸ் கண்ணா )

சத்துருக்கொண்டானில் அமைந்திருக்கும் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் இறை இரக்க திருத்தலத்தின் வருடாந்த பெருவிழா இன்று மாலை நிறைவுபெற்றது .பிற்பகல் 02.45 மணிக்கு இறை இரக்க செபமாலை ஆரம்பமாகி அதனை தொடர்ந்து பெருவிழா திருப்பலி ஆரம்பமானது .மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது .ஆயருடன் மட்டக்களப்பு மறைக்கோட்ட குருமுதல்வர் அருட்பணி தேவதாசன்,கல்முனை மறைக்கோட்ட குருமுதல்வர் அருட்பணி யேசுதாசன்,சிறிய குருமட அதிபர் கிரைட்டன் அவுஸ்கோன் ,மட்டு எஹெட் கரித்தாஸ் இயக்குனர் அலெக்ஸ் ரொபேர்ட் ,இறை இரக்க திருத்தல நிருவாகக் குரு செட்ரிக் ,மற்றும் அருட் தந்தையர்கள் இணைந்து கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுத்தனர் .திருப்பலி நிறைவில் சகோதரி பவுஸ்தீனாவின் திருப்பண்டம் தாங்கிய பேழை திருத்தலத்தை சுற்றி பவனியாக கொண்டு வரப்பட்டு ,நிறைவில் ஆயரினால் திருப்பண்ட ஆசீர் வழங்கப்பட்டு ,கொடியிறக்கி திருவிழா நிறைவு பெற்றது.இப்பெருவிழா இத்திருத்தலத்தின் இரண்டாவது பெருவிழா என்பதும், இப்பெருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளிலிருந்தும் பெருமளவிலான இறைஇரக்க அடியார்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கதாகும் . [2018-04-12 22:18:32]


அதி வண. ஜயகோடி ஆராய்ச்சிகே டொன் அந்தோனி ஜயகோடி அடிகளார் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக அறிவிக்கப்பட்டுள்ளார்

இதனை இலங்கைக்கான உரோமைத்திருப்பீடம் இன்று அறிவித்துள்ளது. புதிய ஆயருக்கு செபத்துடன் கூடிய வாழ்த்துக்களை எமது ஜேர்மன் கத்தோலிக்க தமிழ் இணையம் தெரிவித்துக் கொள்கிறது [2018-04-04 23:45:22]


அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஆயரின் ஆதரவுக் கையெழுத்து

ஏப்.03,2018. இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளுக்கு தன் முழு ஆதரவையும் வழங்கியுள்ளார், அந்நாட்டு ஆயர், ஜோசப் பொன்னையா. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவைக்கப்பட்டுள்ள சச்சிதானந்தம் அனந்தசுதாகரன் என்ற தமிழ் அரசியல் கைதியின் விடுதலைக்காக, தாயை இழந்த அவரின் இரு குழந்தைகளும் நடத்திவரும் அறப் போராட்டத்திற்கும் தன் ஆதரவை வெளியிட்டுள்ள ஆயர் பொன்னையா அவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்கென, இலங்கை அரசுத்தலைவர் மைத்ரிபால சிறிசேனா அவர்களுக்கு விண்ணப்பம் ஒன்றையும் விடுத்துள்ளார். 1983 முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற இலங்கை உள்நாட்டுப் போரின்போது வெடிகுண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, தன் 26ம் வயதில் கைதுச்செய்யப்பட்டார், அனந்தசுதாகரன். மார்ச் மாதம் 15ம் தேதி அவரது மனைவி உயிரிழந்தபோது, இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மூன்று மணி நேர அனுமதியே காவல் துறையால் அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி [2018-04-04 23:43:13]


யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ஈஸ்ரர் வாழ்த்துச் செய்தி - 2018

2018ஆம் ஆண்டுக்கான ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இவ்வேளை இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளிலும் இவ்விழாவை கொண்டாடும் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். உயிர்த்த இயேசு உங்கள் அனைவரையும் என்றும் பாதுகாத்து உங்கள் எல்லாத் தேவைகளிலும் உங்களை நிறைவு செய்து என்றும் உங்களுக்கு துணை நிற்பாராக.

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவே கத்தோலிக்க திருச்சபையில் கொண்டாடப்படும் மிகப்பெரிய விழாவாகும். இயேசு தம் பாடுகள் மரணம் என்ற துன்பகர நிகழ்வுகளை கடந்து உயிர்ப்பு உத்தானம் என்ற மாண்புமிகு நிகழ்வுகளை அடைந்தார் என்ற உண்மை நாமும் எமது பழைய பாவ மற்றும் துன்ப நிகழ்வுகளைக் கடந்து புதிய அருள் மிகுந்த இன்ப நிகழ்வுகளை அடைய வேண்டும் என்ற பாடத்தை நமக்கு கற்றுத்தருகின்றன. 2018ஆம் ஆண்டிற்குரிய தமிழ் - சிங்கள புத்தாண்டை விiவில் கொண்டாவுள்ள அனைவர்க்கும்; இனிய புத்தாண்டு விழா வாழ்த்துக்களையும் இவ்வேளையில் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். புதிய ஆண்டில் உங்கள் உள்ளத்து எண்ணங்கள் நிறையப் பெற வாழ்த்துகிறோம். கடந்த சில காலமாக கட்டி எழுப்பப்பட்டு வந்த புரிந்துணர்வு குளம்பி மீண்டும் இனங்களுக்கிடையிலான முறுகல்நிலை ஏற்பட்டுள்ளமை வருத்தத்திற்குரியது. நல்லிணக்க அரசு நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து குற்றத்தின் பின்னால் இருப்பவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தாம் பெரும்பான்மை இனத்தவர் என்பதால் சிறுபான்மை இனத்தவரை என்னவும் செய்து விட்டு தப்பித்து விடலாம் என்ன எண்ணம் யாருக்கும் ஏற்படக்கூடாது. கண்டி வன்செயல்களை விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூவர் கொண்ட குழுவை ஜனாதிபதி நியமித்தது வரவேற்கத்தக்கது. நல்லிணக்க அரசின் ஜனாதிபதி மேதகு மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்காவும் பாரபட்சமற்ற நீதியான விசாரணை மூலம் குற்றவாதிகளை தண்டித்து இதுபோன்ற இன ரீதியிலான சம்பவங்கள் இலங்கை நாட்டில் இனி ஒரு போதும் நடைபெறாது என்பதை தெளிவாக உறுதிப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

இலங்கை நாட்டில் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி நீடித்த நிலையான சமாதானத்தை எற்படுத்த இனியும் காலம் தாழ்;த்த முடியாது. நல்லெண்ண அரசின் கரங்களை பலப்படுத்தி மாற்றப்பட முடியாதபடி அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்ட இன ஒற்றுமைக்கும் சமாதானத்திற்கும் அரசியற் தலைவர்கள் மற்றும் மதத்தலைவர்கள் யாவரும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் என அன்பு அழைப்பு விடுக்கிறோம். இனியும் இனமோதலையோ இனப்போரையோ நாம் இந்த நாட்டில் நினைத்து பார்க்கவே முடியாது.

இலங்கை நாட்டில் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் இணக்கப்பாட்டை ஏற்படுஅரசியல்வாதிகளை காட்டிலும் மதத்தலைவர்களாலேயே முடியும் என எண்ணுகிறோம். தமிழ் சிங்கள இனங்களை இணைக்கும் பாலமாக கத்தோலிக்க மதம் உள்ளது. இந்தப்பாலம் இனி வருங்காலங்களில் இன்னும் பலமாக்கப்பட்டு உறுதியாக செயற்பட்டு நாட்டில் நீடித்த சமாதானத்தை நிலைநிறுத்த முழுமையாகப்பாடு பட வேண்டும். காணாமற் போனோர் விவகாரத்திற்கு முடிவு காணும்படி பல தடவை அரசை வேண்டியுள்ளோம். ஓராண்டு கால அமைதியான போராட்டத்தை காணாமற்போனோரின் உறவினர் நடத்தியும் எந்த முடிவும் வரவில்லை. அண்மையில் யாழ் பத்திரிசியார் கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதியிடம் இது பற்றி வேண்டினோம். குழு அமைக்கப்பட்டுள்ளது வரைவில் முடிவு வரும் என்றே தெரிவித்தார். அதனையே தம் உரையிலும் பகிகரங்கமாக சொன்னார்.

இனமோதல் - பிரிவினை - பழிவாங்கல் என்பவற்றை கடந்து அன்பு - ஒற்றுமை - சமாதானம் இணைந்த வாழ்வு என்ற நிலையை நாம் எல்லோரும் அடைய அனைவர்க்கும் இறையாசீர் மிக்க வாழ்த்துக்களைத் தெரிவித்து சமாதானத்தில் வாழ வாழத்துகிறோம்.
மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் யாழ் ஆயர் [2018-04-04 23:16:41]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்