வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


பெரியகட்டு தூய அந்தோனியார் திருவிழா

செட்டிகுளம் பங்கின் அருட்பணி எல்லைக்குள் அமைந்துள்ள பெரியகட்டு தூய அந்தோனியார் திருவிழா இன்று 05.08.2018 ஞாயிற்றுக் கிழமை காலையில் நடைபெற்றது. முதன் முதலாக இத்திருத்தலத்திற்கு அருட்பணிக்காக வருகை தந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ அவர்களை: அருட்பணியாளர்கள், துறவிகள், இறைமக்கள் பாரம்பரிய முறையில் வரவேற்றதோடு, ஆயர் அவர்கள் பாடசாலை மாணவர்களின் மேலைநாட்டு இசைக்கருவிகளின் மகிழ்வொலியோடு அழைத்து வரப்பட்டார். இதன் பின் திருப்பலி ஆரம்பமாகியது. இத்திருவிழாத் திருப்பலியில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை, வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி ச.இராஜநாயகம், முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி லீ.சுரேந்திரன் றெவல் ஆகியோரோடு பல குருக்கள் கலந்து கொண்டனர்.

பல துறவிகள், பெருந்தொகையான இறைமக்கள், அரச, அரச சார்பற்ற பணியாளர்கள் பலர் இத்திருவிழாத் திருப்பலியில் கலந்து செபித்தனர். பங்குத் தந்தை அருட்பணி இ.செமாலை அடிகளார் பங்குச் சமூகத்தோடு இணைந்து திருவிழா ஒழுங்குகளை மேற் கொண்டிருந்தார். இத்திருவிழா அரச வர்த்தமானியில் அரச அனுசரணை பெறும் திருவிழாவாகப் பிரகடனப் படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. [2018-08-05 23:13:39]


நிலையான அர்ப்பணத் திருப்பொழிவு

மன்னார் மறைமாவட்டத்தின் முருங்கன் பங்கைச் சேர்ந்த திரு, திருமதி மிக்கேல் பிலிப் ,சுசீலா பேணடேற் ஆகியோரின் மகன் அருட்சகோதரர் பேணாட் ஷா பிரான்சிஸ்கன் சிறிய துறவற சபையில் இணைந்து தனது முதல் அர்ப்பணத்தை 24.05.2014 அன்று எடுத்துக் கொண்டார். அதன் பின் ஆழ் நிலைப் பயிற்சியின்பின் இன்று 02.08.2018 வியாழக்கிழமை தனது நிலையான அர்ப்;பணத்தை எடுத்துக் கொண்டார்.சில ஆண்டுகளாக பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பிரான்சிஸ்கன் சிறிய துறவற சபையின் துறவறப் பயிற்சியக்தில் துறவற பயிற்சியைப் பெற்ற பின் நாடு திரும்பி னார். இன்று 02.08.2018 வியாழக்கிழமை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியின் போது அருட்சகோதரர் பேணாட் ஷா நிலையான அர்ப்;பணத்தை எடுத்துக் கொண்டார்.

இத் திரு நிகழ்வில் பிரான்சிஸ்கன் சிறிய துறவற சபையின் உருவாக்குனர் அருட்பணி லெனாட் கல்ட்டேரா, இலங்கைக்கான இச் சபையின் முதல்வர் அருட்பணி எட்வேட் ஜெயபாலன் அடிகளார் மற்றும் பெருந்தொகையான குருக்கள், துறவிகள், இறைமக்கள் கலந்து செபித்தனர். [2018-08-04 17:54:01]


மன்னார் மறைமாவட்டத்தின் 45வது

மன்னார் மறைமாவட்டத்தின் 45வது பங்கு 11.07.2018 புதன் கிழமை உதயமாகியுள்ளது.இது வரை காலமும் சிலாவத்துறைப் பங்கின் அருட்பணி எல்லைக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த முள்ளிக்குளம், காயாக்குளி, மன்னார் புத்தளம் எல்லையில் அமைந்துள்ள பூக்குளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக முள்ளிக்குளம் தூய பரலோக மாதா பங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

மாலை மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் முள்ளிக்குளம் வருகைதந்து புதிய பங்கைப் பிரகடனப்படுத்தி, இப் பங்கின் முதல் பங்குத் தந்தையாக அருட்பணி.பீ.லோறன்ஸ் லீயோன் அடிகளாரை கத்தோலிக்க திருச்சபையின் மரபுக்கொப்ப நியமனம் செய்து நன்றித் திருப்பலியை நிறைவேற்றினார்.

இப் பங்கிற்கு வருகை தந்த ஆயரையும், புதிய பங்குத் தந்தையையும் பங்கின் நுழைவாயில் கிராமமான காயக்குளி பிரதான வீதியில் வைத்து இக்கிராம மக்கள் வரவேற்பளித்த பின்னர் உந்துருளிப் பவனியாக முள்ளிக்களம் வரை அழைத்துச் சென்றனர். பின் பாடசாலை மாணவர்களின் இன்னியம் மகிழ்வொலியோடு ஆலய முன்றல் வரை வரவேற்பளித்தபின்னர், இக்கிராமத்தில் கலைஞர்கள் கவிபாடி அழைத்துச் சென்றனர். அதன் பின் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

குருக்கள், துறவிகள், இறைமக்கள், அரச, அரச சார்பற்ற முதன்மைப் பணிநிலை பணியாளர்கள் எனப் பலரும் கலந்த கொண்டனர். [2018-07-16 20:13:27]


பள்ளகண்டல் தூய அந்தோனியார் திருத்தல விழா

சிலாபம் மறைமாவட்டத்தின் அருட்ப்பணிப் பரப்பெல்லைககுள் அமைந்துள்ள வில்பத்து வனவிலங்கு பாதுகாப்பிடக் காட்டின் நடுவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளகண்டல் தூய அந்தோனியார் திருத்தல விழா இன்று (08.07.2018) ஞாயிற்றுக்கிழமை காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய திருவிழாத் திருப்பலியை சிலாபம் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி வலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை அவர்கள் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் ஒப்புக்கொடுத்தார். இத் திருவிழாத் திருப்பலியில் பெருந்தொகையான பக்தர்கள், குருக்கள், துறவிகள், அரச மற்றும் அரச சார்பற்ற பணியாளர்கள் கலந்து செபித்தனர்.

நீண்டகால ஆன்மிக வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட இத்திருத்தலம் புத்தளம் மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்திருந்தாலும், மன்னார் கத்தோலிக்க மக்களின் பராமரிப்பிலேயே இருந்து வந்தது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் பகுதியில் வாழும் சில தமிழ்க் கத்தோலிக்க மக்கள் பள்ளகண்டல் தூய அந்தோனியார் திருத்தலப் பகுதியைப் பூர்விமாகக் கொண்டவர்கள் என்ற வரலாற்றுக் குறிப்பு வாய்மொழிப் பாரம்பரியமாக இருந்து வருகின்றது.

நீண்டகாலமாக, குறிப்பாக முள்ளிக்குளம் தூய பரலோகமாதா ஆலய அருட்பணிப் பேரவை இத் திருத்தலத்திற்குப் பொறுப்பாகவிருந்து ஆன்மிகச் செயற்பாடுகள் அனைத்தையும் ஆன்னொடுத்து வந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் , இத்திருத்தலம் சிலாப மறைமாவட்டத்தின் அருட்பணி எல்லைக்குள் வருவதால் அதனை சிலாபம் மறை மாவட்டத்தினால் நிர்வகிப்பதே பொருத்தமானதென வேண்டுகை முன்வைக்கப்பட்டதால், முன்னைநாள் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் அதனை சிலாபம் மறைமாவட்ட ஆயாரிடம் கையளித்தார். [2018-07-08 22:09:44]


மருதமடுமாதா திருத்தலத் திருவிழா

வேதசாட்சிகளின் நிலமாம் மன்னார் மண்ணின் ஆன்மிக வரலாற்றுச் சிறப்பு மிக்க மருதமடுமாதா திருத்தலத் திருவிழா 02.07.2018 திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

காலை 06.15 மணிக்கு திருவிழாத் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ தலைமையில், கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்கலாநிதி மக்ஸ்வெல் சில்வா, இலங்கையின் பல மறை மாவட்டங்களிலுமிருந்து வருகைதந்திருந்த அருட்பணியாளர்கள் இணைந்து திருவிழாக் கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.

இத் திருவிழாத் திருப்பலிக்கு பெருந்தொகையான திருப்பயணிகளும், நீதித்துறை சார்ந்த முக்கிய பணியாளர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் அரச கட்டமைப்பின் பல்வெறு பணிநிலை அதிகாரிகளும்,பிரதேச சபை உறுப்பினர்களும், முப்படையின் பிரதேச பணிநிலை அதிகாரிகளும்;,துறவிகளும் குருக்களும் கலந்து கொண்டனார்.

தமிழ்,சிங்களம், இலத்தீன் ஆகிய மும் மொழிகளிலும் நடைபெற்றது.தமிழ், இலத்தின் மொழிகளிலான வழிபாட்டை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களும், சிங்கள மொழியிலான வழிபாட்டை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்கலாநிதி மக்ஸ்வெல் சில்வா அவர்களும் முன்னெடுத்துச் சென்றனர். திருவிழாவுக்கு வந்திருந்த அனைவரையும், திருப்பலின் தொடக்கத்தில் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் வரவேற்றார்.

திருப்பலி முடிவில் ஆன்னையின் திருவுருவப் பவனியும், ஆசீரும் இடம் பெற்றது. [2018-07-03 21:47:27]


சவேரியார் புரம் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்அர்சிப்பு

திதாக அமைக்கப்பட்ட சிலாவத்துறைப் பங்கின் தலைமை ஆலயமான சவேரியார் புரம் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் கடந்த திங்கள் மாலை ( 18.06.2018) மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் ஆசீர்வாதித்து, திருச்சபையின் திரு வழிபாட்டு திருமரபிற்கேற்ப ஆரம்ப வழிபாடுகளை முன்னெடுத்து, ஆலயம், திருப்பீடம், நற்கருணைப் பேழை ஆகியவற்றை முறைப்படி அர்சித்துப் புனிதப்படுத்தினார்.

கடந்த 18.06.2018 மாலை 05.00 மணிக்கு சிலாவத்துறை, முத்தரிப்புத்துறை பிரதான விதியிலிருந்து ஆலயத்திற்குச் செல்லும் நுழைவாயியிலிருந்து, ஆயர் அவர்கள் ஆலய முன்றல் வரை அழைத்து வரப்பட்டு அங்கு மரபு ரீதியான வரவேற்ப்பளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆயர் அவர்கள் புதிய ஆலயத்தை அர்ச்சித்து புனிதப்படுத்தும் திரு நிகழ்வை முறைப்படி முன்னெடுத்துச் சென்றார். பங்குத் தந்தை அருட்பணி.செ.அன்ரன் தவறாஜா அடிகளார் ஆலய இறைமக்கள் சமூகத்தோடும், பணியாற்றும் துறவிகளோடு இணைந்தும் புதிய ஆலய அமைப்புப் பணியையும், இத் திருநிகழ்வையும் மிகவும் சிறப்பாகச் செய்து முடித்திருந்தார்.

இந் நிகழ்வில் பெருந்தொiயான இறைமக்களும், அரச, அரச சார்பற்ற பணியக முதன்மைப் பணியார்களும், குருக்கள் துறவியரும் கலந்து கொண்டனர். [2018-06-26 23:32:18]


வாழ்க்கைப் பெற்றான் கண்டல் தூய நீக்கிலார் ஆலயத்தை அர்சித்துப் புனிதப்படுத்தினார்.

அளவக்கைப் பங்கின் துணை ஆலயமான வாழ்க்கைப் பெற்றான் கண்டல் தூய நீக்கிலார் ஆலயப் பங்குச் சமூகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ( 17.06.2018) மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு வரவேற்ப்பளித்ததோடு, புதிதாக அமைக்கப்பட்ட தூய நீக்கிலார் ஆலயத்தையும் மன்னார் ஆயர் அவர்கள் ஆசீர்வாதித்து, திருச்சபையின் திரு வழிபாட்டு திருமரபிற்கேற்ப ஆரம்ப வழிபாடுகளை முன்னெடுத்து, ஆலயம், திருப்பீடம், நற்கருணைப் பேழை ஆகியவற்றை முறைப்படி அர்சித்துப் புனிதப்படுத்தினார்.

நேற்று மாலை 05.00 மணிக்கு முருங்கன் நானாட்டான் பிரதான விதியிலிருந்து வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்திற்குச் செல்லும் நுழைவாயியிலிருந்து, வாழ்க்கைப் பெற்றான் கிராமம் வரை உந்துரளி அணிவகுப்போடு ஆயர் அவர்கள் ஆலய முன்றல் வரை அழைத்து வரப்பட்டு அங்கு மரபு ரீதியான வரவேற்ப்பளிக்கப்பட்டது. நானாட்டான் மகாவித்தியாலய இசைக்குழவின் மேலைநாட்டு மகிழ்வொலியோடு ஆயர் அவர்கள் மதிப்பளித்து வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆயர் அவர்கள் புதிய ஆலயத்தை அர்ச்சித்து புனிதப்படுத்தும் திரு நிகழ்வை முறைப்படி முன்னெடுத்துச் சென்றார். பங்குத் தந்தை அருட்பணி.லீ.சுரெந்திரன் றெவல் அடிகளார் ஆலய இறைமக்கள் சமூகத்தோடும், பணியாற்றும் துறவிகளோடு இணைந்தும் புதிய ஆலய அமைப்புப் பணியையும், இத் திருநிகழ்வையும் மிகவும் சிறப்பாகச் செய்து முடித்திருந்தார்.

இந் நிகழ்வில் பெருந்தொiயான இறைமக்களும், அரச, அரச சார்பற்ற பணியக முதன்மைப் பணியார்களும், குருக்கள் துறவியரும் கலந்து கொண்டனர். [2018-06-19 21:40:52]


முப்பெரும் நிகழ்வுகளை தமது பங்கில் முன்னெடுத்துச் சென்றனர்.

முத்தரிப்புத்துறை தூய செங்கோல் மாதா பங்குச் சமூகம் நேற்று 13.06.2018 புதன்கிழமை முப்பெரும் நிகழ்வுகளை தமது பங்கில் முன்னெடுத்துச் சென்றனர்.
ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கு மாபெரும் வரவேற்பளித்தனார்.

ஆலயத்திற்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டது.
தூய அந்தோனியார் சிற்றாலயத்தை; ஆயர் அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார்.1: தமது பங்கிற்கு, மன்னார் மறைமாவட்டத்தைப் பணிப்பொறுப்பேற்றதன்பின் முதன் முதலாக வருகை தந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கு மாபெரும் வரவேற்பளித்தனார்.நேற்று மாலை முத்தரிப்புத்துறை நானாட்டான் பிரதான வீதியில் அமைந்துள்ள அரிவி ஆற்றுப்பாலத்தில் வைத்து பங்குத்தந்தை அருட்பணி.எ.டெனி கலிஸ்ரஸ் அடிகளாரும் பங்கின் அருட்பணிப் பேரவையினரும் வரவேற்று, உந்துருளிகள் அணிவகுத்து வர, ஆயர் அவர்களை அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் தமது கிராமத்தின் நடுப்பகுதி வரை அழைத்து வர அங்கிருந்து அரிப்பு பாடசாலையின் இசைக்குழு மேற்கத்திய இசைக்கருவிகளின் மகிழ்வொலியோடு ஆலய பிரதான நுழைவாயில் வரை அழைத்து வர, அங்கிருந்து முத்தமிழ்க் கலைஞர்களும், ஊர்ப் பெரியவர்களும் கவிபாடி தங்கள் கரங்களால் அதற்கு தாளமிசைத்து மெரூகூட்டி அழைத்து வந்தனர். ஆலயத்தை வந்தடைந்த பின் ஆயர் அவர்கள் இறைமக்களுக்கு ஆசீர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, தற்போதுள்ள மிகப் பெரும் பழைமைவாய்ந்த பங்கு ஆலயம் மக்களின் பயன்பாட்டிற்குப் பேதாமல் இருப்பதால், புதிய ஆலயத்தின் தேவை கருதி புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டது. இறை வேண்டுதலின் பின் ஆயர் அவர்களும் அங்கு வருகை தந்திருந்த முதன்மை விருந்தினர்களும் அடிக்கற்களை நடுகை செய்தனர். இதனைத் தொடர்ந்து முத்தரிப்புத்துறை ஆண்டி ஓடை என்னும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ள பகுதியில்: தூய யோசேவ்வாஸ் அவர்களால் நடப்பட்ட திருச்சிலுவை உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தூய அந்தோனியார் சிற்றாலயத்தை; ஆயர் அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார். இங்கு மறையுரையாற்றிய ஆயர் அவர்கள், குடும்பங்களில் தேவ அழைத்தல்கள் பெருகவேண்டுமென்றும், அதற்கு, விலிலியத்தில் சொல்லப்படுகின்ற மக்கட்பேறு, கடவுள் அருளும் செல்வம் என்னும் உண்மையை உணர்ந்து, குடும்பங்களில் பிள்ளைப்பேற்றிற்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வுக்கு பெருந்தொகையான இறைமக்கள், குருக்கள், துறவிகள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன்,வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் கெரவ பிறிமூஸ் சிராய்வா, சட்டத்தரணியும், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றித்தின் தலைவருமான திரு. ஆன்ரன் புனிதநாயகம், முன்னைநாள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் திரு.வினோதரலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அனைத்து நிகழ்வுகளையும் ஆலய அருட்பணிப் பேரவையோடும், அருட்சகோதரிகளோடும், மக்களோடும் இணைந்து, பங்குத் தந்தை அருட்பணி.எ.டெனி கலிஸ்ரஸ் அடிகளார் நெறிப்படுத்தி நடாத்தியிருந்தார். [2018-06-15 12:09:37]


வரலாற்றுச் சிறப்பு மிக்க தள்ளாடி தூய அந்தோனியார் திருத்தலத் திருவிழா இன்று

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கின் அருட்பணிப் பரப்பெல்லைக்குள் அமைந்துள்ள, வரலாற்றுச் சிறப்பு மிக்க தள்ளாடி தூய அந்தோனியார் திருத்தலத் திருவிழா இன்று 13.06.2018 புதன்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஒன்பது நாட்கள் ஆயத்த வழிபாடுகளின் பின்னர், நேற்று 12.06.2016 செவ்வாயக் கிழமை மாலைப் புகழ் ஆராதனையும், இன்று திருவிழாத் திருப்பலியும் இடம் பெற்றன.இன்றைய விழாவில் அருட்பணியாளர்கள், துறவிகள், பெருந்தொகையான இறைமக்கள் கலந்து கொண்டனர். ஆயத்த வழிபாடுகளில் மன்னார் தூய பேராலயப்பங்கு மக்கள், வங்காலை தூய ஆனாள் பங்கு மக்கள், பள்ளிமுனை தூய லூசியா பங்குமக்கள் தங்களுடைய ஆன்மிகப் பங்களிப்பையும் வழங்கியிருந்தனர்.

பணிக்குழுக்களோடும், மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கில் பணியாற்றும் ஏனைய அருட்பணியாளர்களோடும் இணைந்து பங்குத்தந்தை அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அனைத்து திருவிழா ஒழுங்குகளையும் சிறப்பாகச் செய்திருந்தார். [2018-06-13 23:08:18]


அருட்பணி ஜோசவ் ஜெயசீலன் அவர்களின் ஆங்கில நூல்

கிளறீசியன் மறைபரப்பு துறவற சபையின் குருவாகிய அருட்பணி ஜோசவ் ஜெயசீலன் அவர்களின் இரண்டாவது படைப்பான Reconciliation and Peacebuilding in Post-war Sri Lanka: through the Healing of Memories and the Role of the Catholic Church ( கசப்பான நினைவுகளைக் குணமாக்குவதன் வழியாக இலங்கையில் போருக்குப் பின்னரான ஒப்புரவும், சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும்: இந்த வழிமுறையில் கத்தோலிக்க திருச்சபையின் வகிபாகம்) என்னும் ஆங்கில நூல் கிளறீசியன் பதிப்பக வெளியீடாக 02.06.2018 சனிக்கிழமை கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.ஏற்கனவே 2016ம் ஆண்டில் அருட்பணி ஜோசவ் ஜெயசீலன் அவர்கள் Look at the Lilies of the Field: Musings of the Heart.. என்னும் படைப்பினையும் வெளிக்கொணர்ந்துள்ளார். தற்போது போரினால் பாதிக்கப்பட்டுவர்களுக்கான மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியாவில் அமைந்துள்ள VAROD புனர்வாழ்வு மையத்தில் பணியாற்றுவதோடு, வவுனியாவில் பணியாற்றும் கிளறீசியன் அருட்பணியாளர் குழுமத்தின் குழு முதல்வராகவும் பணியாற்றுகின்றார். இவர் சிக்காக்கோ கத்தோலிக்க இறையியல் பல்கலைக்கழகத்தில் நடைமுறைச் சாத்திய இறையியல் துறையில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இவருடைய இந்தப் புத்தக வெளியீட்டிற்கு முதன்மை விருந்தினராக இலங்கைக்கான திருத் தந்தையின் பிரதிநிதி அதி மேன்மைமிகு கலாநிதி பியர் நுயென் வான் ரொற் அவர்கள் கலந்து சிறப்பித்தார். நூலுக்கான அறிமுக உரையை இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குனர் கலாநிதி ஜெகான் பெரேரா வழங்க, நூல் ஆய்வினை கொழும்பு களனியப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்ரன்லி விஜயசிங்க முன்வைத்தார். இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேரருட் கலாநிதி வின்ஸ்ரன் பெனாண்டோ ஆண்டகை நூலாசிரியருக்கு சிறப்புச் செய்தியொன்றினை அனுப்பிவைத்தார்.

பேராசிரியர் ஸ்ரன்லி விஜயசிங்க தனது நூல் ஆய்வுரையில் : இந்தப் புத்தகமானது கிறிஸ்தவர்களுக்கும் குறிப்பாக கத்தோலிக்க திருச்சபைக்கும் தாக்குமானதும், ஆக்கபூர்வமானதுமான நடைமுறைச் சாத்தியங்களை முன் வைத்திருக்கின்றது. என்பதோடு நூலாசிரியரின் இந்த அற்புதமான பணிக்காக அவரை வெகுவாகப் பாராட்டினார்.

இந்நிகழ்வுக்கு அமைச்சர்கள், இலங்கைக் கத்தோலிக்க துறவற சபைகளின் மேலாளர், கிளறிசியன் சபை ஆண், பெண் துறவிகள், அருட்பணி ஜோசவ் ஜெயசீலன் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், பெருந்தொகையான குருக்கள், துறவிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். [2018-06-13 23:03:47]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்