வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


இலங்கையின் திருத்தூதரான புனித யோசப்வாஸ் பயன்படுத்திய அற்புதச்சிலுவை யாழ்ப்பாணம்

இலங்கையின் திருத்தூதரான புனித யோசப்வாஸ் பயன்படுத்திய அற்புதச்சிலுவை யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திற்கு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி எடுத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் எல்லா மறைமாவட்டங்களுக்கும் எடுத்துச்செல்லப்படுகின்ற இந்தச் சிலுவை ஒக்டோபர் மாதம் 18ம் திகதி முதல் 22ம் திகதிவரை யாழ்ப்பாணம் மறைமவட்டத்தில் மறைக்கோட்ட ரீதியாக பல்வேறு பங்குகளுக்கு எடுத்துச் செல்வதற்கான ஒழுங்குகளை யாழ். மறைமாவட்ட புனித யோசப்வாஸ் குழு மேற்கொண்டுள்ளது.

ஐந்து நாட்கள் மட்டும் இச்சிலுவை யாழ். மறைமாவட்டத்தில் இருப்பதால் எல்லாப் பங்குகளுக்கும் இதனை எடுத்துச் செல்லமுடியாத நிலையில் மறைக்கோட்டங்களில் சில குறிப்பட்ட ஆலயங்களில் மட்டும் இச்சிலுவை தரித்துவைக்கப்பட்டு திருப்பலிகளும், ஆராதனைகளும் நடைபெறுமென யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு பி.ஜே. ஜெபரட்ணம் அடிகளார் அறிவித்துள்ளாதோடு பங்குத்தந்தையர்கள், பாடசாலை அதிபர்கள் தமது பங்குமக்கள், மாணவர்கள் புனித யோசப்வாஸின் அற்புதச் சிலுவையைத் தரிசிப்பதற்கான பொருத்தமான இடங்களைத் தெரிவுசெய்து அவர்கள் புனிதரின் ஆசீரைப் பெற ஆவன செய்யும்படியும் கேட்டுள்ளார். [2018-10-16 22:44:20]


தூய ஜோசேவ்வாஸ் தியான மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.

மருதமடுத் திருத் தாயாரின் திருத்தலத்தில் 05.10.2018 வெள்ளிக்கிழமை மாலை திருப்பயணிகளின் ஆன்மிகத் தேவையை நிறைவு செய்யம் பொருட்டு இலங்கை செலான் வங்கியின் நிதியுதவியுடனும், மடுத்திருத்தல பங்களிப்புடனும் தூய ஜோசேவ்வாஸ் தியான மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை செலான் வங்கியின் தேசிய நிர்வாக இயக்குனர் திரு.அபில ஆரியரத்தின அவர்களின் அழைப்பின்பேரில், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களினால் இத் தியான மண்டபம் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மடுத் திருத்தலப் பரிபாலகர் அருட்பணி.ச.ஜொய்சி பெப்பி சோசை அடிகளார், செலான் வங்கியின் பிரதேச முகாமையாளர் திரு சுரேஸ் சுப்றம், கிளை முகாமையாளர் திரு கோகுலன் மற்றும் செலான் வங்கியின் பல்வேறு கிளை முகாமையாளர்கள், பணியார்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மன்னார் செலான் வங்கியின் பணியாளர்கள் நிகழ்விற்கான அனைத்துப் பணிகளையும் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றனர். [2018-10-11 22:14:34]


அரச கிறிஸ்து பிறப்பு விழா கலை நிகழ்வுகள்

இலங்கை அரசின் கிறிஸ்தவ சமய பணிகள் திணைக்களத்தின் ஊடாக இலங்கை அரசு வருடந்தோறும் மாவட்டங்களில் கிறிஸ்து பிறப்புவிழாவை நினைவுகூர்ந்து நடாத்தி வரும் அரச கிறிஸ்து பிறப்பு விழா கலை நிகழ்வுகள் இவ்வாண்டு மன்னார் மறைமாவட்டத்தில் மார்கழி மாதம் 16ந் திகதி மன்னார் நகர சபையின் விளையாட்டுத் திடலில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கு இலங்கை சனநாயகக் சோசலிசக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு மைத்திரிபால சேனாநாயக்க வருகை தரவுள்ளார்.

இதனையொட்டிய திட்டமிடல் மாநாடு இன்று 04.10.2018 வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. சுற்றுலாத்துறை கிறிஸ்தவ சமயப் பணிகளுக்கான அமைச்சர் கௌரவ ஜோண் அமரதுங்க தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையின் பிரசன்னத்தில் நடைபெற்ற இம் மாநாட்டில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை, உள்நாட்டுப் பணிகள் அமைச்சர் றஞ்சித் அலுவிகார, மன்னார் மாவட்டச் செயலர் திரு.மோகன்றாஸ், சுற்றுலாத்துறை அமைச்சின் திட்டப் பணிப்பாளர், கிறிஸ்தவ சமயப் பணிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி.சத்துரி பின்ரோ, மற்றும் ஜனாதிபதி செயலக முதன்மைப் பணி நிலை அதிகாரிகள், அருட்பணியாளர்கள், மன்னார் மாவட்ட திணைக்கள முதன்மைப் பணிநிலை பணியாளர்கள்கள், துறைசார் வல்லுனர்கள், முப்படைகளின் பிரதேசத் தலைவர்கள், ஊடகத் துறையினர் எனப் பலர் கலந்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். [2018-10-11 22:06:32]


துயர் பகிர்கிறேன்......

திருக்குடும்பக் கன்னியர் சபையைச் சேர்ந்த அருட்சகோதரி யூட் மடுத்தீன் அவர்கள் தனது 74வது வயதில் 05 - 09 - 2018ல் யாழ்ப்பாணத்தில் இறைபாதம் சென்றடைந்துள்ளார்.

அருட்சகோதரி மடுத்தீன் அவர்கள் யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
இவர் வவுனியா இறம்பைக்குளம் றோ. க. மகாவித்தியாலய அதிபராக நீடிய காலம் அரும்பணியாற்றியதோடு, மன்னார் மறை மாவட்டம் மற்றும் யாழ் மறை மாவட்டத்தின் பல இடங்களிலும் அரும்பணியாறிய ஒருவராகும்.

5 உடன்பிறப்புக்களைக் கொண்ட அருட் சகோதரிக்கு யாழ். மண்டைதீவைப் பிறப்பிட மாகவும் யாழ். குருநகரை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வு நிலை ஆசிரியர் திரு. லாசறஸ் மற்றும் தேவராஜேஸ்வரி ஆகியோர் பாசமிகு சகோதர, சகோதரியாக இன்னமும் வாழ்ந்து வருகின்றனர்.
யாழ் மறைமாவட்ட அருட்தந்தை விக்ரர் பிலேந்திரன், அருட்தந்தை வென்சன்லாஸ் (அ.ம.தி.) ஆகியோரின் சிறிய தாயாரும்..... யாழ் மறைமாவட்ட அருட்தந்தை அன்ரனிதாசன், அருட்சகோதரி பிறிசில்டா (திருச்சிலுவைக் கன்னியர் சபை) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

ரொறன்ரோ மிசிசாகுவாவில் வசிக்கும் ஞானமுத்து இம்மானுவேல் (அமலன்), வெனிசியா (குயீன்) தம்பதிகள் மற்றும் ஜெறாட் ஞானமுத்து ஆகியோரின் பெற்றோரின் சகோதரியும் ஆவார்.
அருட்சகோதரி யூட் மடுத்தீன் அவர்களது ஆன்மா இறை சந்நிதியில் அமைதியில் இளைப்பாறிடச் செபிக்கிறோம்

இவரது பிரிவால் துயருறும் திருக்குடும்ப கன்னியர் சபையினருக்கும், மற்றும் உறவினர்கள் ஒவ்வொரு வருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை மிகவும் வருத்ததோடு தெரிவிக்கிறோம் [2018-10-11 21:59:32]


செபமாலை அன்னையின் திருவிழா

மருதமடுத் திருத்தாயாரின் வதிவிடமான மடுத்திருப்பதி செபமாலை அன்னைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு இடமாகும். இத் திருப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜப்பசி மாதம் முதல் சனிக்கிழமை செபமாலை அன்னையின் திருவிழா கொண்டாடப்படுகின்றது. நேற்று 06.10.2018 சனிக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ தலைமையில் திருவிழாத் திருப்பலி நடைபெற்றது. இவ்விழாவில் சிலாபம் மறைமாவட்ட நிதியாளர் அருட்பணி நெல்சன் அடிகளார் கலந்து சிங்கள மொழியிலான வழிபாடுகளை நடாத்தினார். [2018-10-11 21:53:43]


மறைவாழ்வுக் கல்வி தேர்வு

இலங்கை தேசிய கல்வி, மறைக்கல்வி, திருவிவிலிய அருட்பணி மையம், மறைவாழ்வுக் கல்விப் பணியாளருக்கென வருடந்தோறும் நாடு தழுவிய ரீதியில் நடாத்தும் மறைவாழ்வுக் கல்வி முதல் தேர்வு, இடைநிலைத் தேர்வு, இறுதித் தேர்வு ஆகிய தேர்வுகள் நேற்று 22.09.2018 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணிவரை இலங்கை முழுவதிலுமுள்ள மறைமாவட்டங்களில், ஒழுங்குபடுத்தப்பட்ட பரீட்சை மையங்களில் நடைபெற்றன.

மன்னார் மறைமாவட்டத்தில் மன்னார் தூய சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மற்றும் வவுனியா இறம்பைக்குளம் பெண்கள் தேசிய பாடசாலை ஆகிய பரீட்சை மையங்களில் மன்னார் மறைமாவட்ட பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை நடைபெற்றது. எல்லாப் பிரிவுகளிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்கள் இப் பரீட்சையை எழுதினார்கள். [2018-09-26 21:24:54]


குருத்துவ அர்ப்பணத்தின் 40வது ஆண்டு

மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளரும், தற்போது அமெரிக்கா நியூயோர்க் மறைமாவட்டத்தில் பணி புரிபவருமான அருட்பணி ஆலோசியஸ் பாக்கியநாதர் அடிகள் தனது குருத்துவ அர்ப்பணத்தின் 40வது ஆண்டு நிறைவினை நேற்று 22.09.2018 மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் கொண்டாடினார்.இந் நன்றித் திருப்பலியில் பல மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மறைமாவட்டத்திலிருந்து அருட்பணியாளர்களும், துறவிகளும், இறைமக்களும் கலந்து செபித்தனர். [2018-09-26 21:19:54]


சந்தியோகுமையார் வாசாப்பு

தமிழ்க் கத்தோலிக்க மக்களின் விசுவாச வாழ்வின் வளமைக்கு வலுவூட்டுகின்ற கத்தோலிக்க கலை வடிவங்கள் மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் அதற்குரிய தனித் தன்மையோடு மேடையேற்றப்பட்டு வருகின்றன. தமிழ்க் கத்தோலிக்க மக்களின் விசுவாச வாழ்வின் வளமைக்கு வலுவூட்டுகின்ற கத்தோலிக்க கலை வடிவங்கள் மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் அதற்குரிய தனித் தன்மையோடு மேடையேற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பெரியபண்டிவிரிச்சான் தூய மரியகொறற்றி கலைக்குழு 22.08.2018 செவ்வாய்க்கிழமை தூய மரிய கொறற்றி ஆலய முன்றலில் தோமையாரின் விசுவாச வீரத்துவ வாழ்வு வரலாற்றை வெளிக் கொணரும் சந்தியோகுமையார் வாசாப்பு என்னும் கலைவடிவத்தை பக்தி எழுச்சியோடு அரங்கேற்றினர்.

இத் திருநிகழ்வுக்கு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை முதன்மை விருந்தினராகவும், மாந்தை பிரதேசசபை முதல்வர் மதிப்புக்குரிய செல்லத்தம்பு, மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மடு பிரதேசச் செயலர் திரு.ஜெயகரன், மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பெருந்தொகையான மக்கள் வருகைதந்திருந்தனர். பங்குத் தந்தை அருட்பணி ரெறன்ஸ் கலிஸ்ரஸ் குலாஸ் அடிகளார் கலைக்குழுவோடும், இணைந்து அனைத்தையும் முன்னின்று நடாத்தினார். [2018-08-26 15:32:59]


குருத்துவ பணிவாழ்வின் 25வது ஆண்டு

மன்னார் மறைமாவட்டத்தின் அருட்பணியாளர் சவிரி மரியதாசன் ( சீமான்) அடிகளார் தனது குருத்துவ பணிவாழ்வின் 25வது ஆண்டு நிறைவினை ஆவணி மாதம் 12ந் திகதி நினைவு கூர்ந்தார். மன்னார் மறைமாவட்டத்தின் அருட்பணியாளர் சவிரி மரியதாசன் ( சீமான்) அடிகளார் தனது குருத்துவ பணிவாழ்வின் 25வது ஆண்டு நிறைவினை ஆவணி மாதம் 12ந் திகதி நினைவு கூர்ந்தார்.

1998ம் ஆண்டு ஆவணி மாதம் 12ம் திகதி மடுத் திருத்தலத்தில் இளைப்பாறிய ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களால் அருட்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தனது பணிவாழ்வின் 25 மகிழ்வு ஆண்டை தனது சொந்தக் கிராமமான மாவிலங்கேணி தூய அடைக்கல அன்னை ஆலயத்தில் நன்றித் திருப்பலியோடு கொண்டாடினார். [2018-08-26 15:29:57]


மருதமடுத் திருத்தாயாரின் ஆவணி திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள்

இலங்கை வாழ் மக்களால் ஆழமாக அன்பு செய்யப்படுகின்ற மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள மருதமடுத் திருத்தாயாரின் ஆவணி மாதத்(அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா) திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் இன்று 06.08.2018 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின.இன்று மாலை 06.00 மணிக்கு ஆலய முகமண்டபத்திற்கு முன்பாக தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் நடைபெற்ற இறைவழிபாட்டைத் தொடர்ந்து திருத் தந்தையின் கொடியை தற்போதைய மடுத் திருப்பதிப் பரிபாலகர் அருட்பணி ச.எமிலியானுஸ் பிள்ளை அடிகளாரும், மடுமாதா கொடியினை மடுத்திருத்தலத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பரிபாலகர் அருட்பணி ச.ஜொய்சி பெப்பி சோசை அடிகளாரும் இலங்கைக் கத்தோலிக்க திருச்சபையின் கொடியினை தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் மறையுரைக்காக வந்திருக்கின்ற குருக்களும் ஏற்றி வைத்தனர்.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலர் மதிப்புக்குரிய திரு.மோகன்ராஸ் அவர்களும், மடுப் பிரதேச செயலர் திரு.ஜெயகரன் அவர்களும், பல்தறை சார்ந்த பல அரச பணியாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர். அத்தோடு பல குருக்கள் துறவிகளும், பெருந் தொகையான பக்தர்களும் ஒன்று கூடியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் திருச் செபமாலையும், மறையுரையும், நற்கருணை ஆசீரும் இடம் பெற்றன. திருவிழாவுக்கானதும், திருப்பயணிகளுக்கானதுமான பல்வேறுவிதமான அனைத்து ஒழுங்குகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

இம் மாதம் 14ம் திகதி வேஸ்பர் என அழைக்கப்படும் மாலைப் புகழ் ஆராதனையும், 15ம் திகதி காலை அன்னையின் திருவிழாத் திருப்பலியும், திருவுருவப் பவனியும், திருவுருவ ஆசீரும் இடம் பெறும். [2018-08-07 22:46:40]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்