வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


கச்சத்தீவு திருவிழா பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24ம் திகதிகளில்

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இம்முறை இலங்கையில் இருந்து பத்தாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர்கள் என தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

கச்சத்தீவு திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று (09) யாழ் மாவட்ட அரச அதிபர் தலமையில் அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கச்சத்தீவில் இம்முறை இரு நாட்டில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த முறை இலங்கையில் இருந்து 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படகுச்சேவைக்கான ஒருவழி கட்டணமாக 300 ரூபாய் அறவிடப்படவுள்ளது. நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழி கட்டணமாக 225 ரூபாய் அறவிடப்படவுள்ளது. அத்துடன் சேவையில் ஈடுபடும் படகுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே சேவைக்கு அனுமதிக்கப்படவுள்ளது. பயணிகள்பாதுகாப்பு அங்கி அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இம்முறை பொலிஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன 200 பொலிஸார் சேவையல் ஈடுபடவுள்ளனர். பயணிகள் படகு சேவை இடம்பெறும் போது கடற்படை ரோந்து நடவடிக்கைகள் நடைபெறும் என்றார். (யாழ் நிருபர் சுமித்தி)

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவன் வரையான பேருந்து சேவை அதிகாலை 4 மணியில் இருந்து நண்பகல் 1 மணிவரை நடைபெறும். அதே போன்று குறிகட்டுவனில் இருந்து கச்சதீவு வரை காலை 5.00 மணிக்கு ஆரம்பித்து 2 மணி வரை நடைபெறும். படகுச்சேவைக்கான ஒருவழி கட்டணமாக 300 ரூபாய் அறவிடப்படவுள்ளது. நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழி கட்டணமாக 225 ரூபாய் அறவிடப்படவுள்ளது. அத்துடன் சேவையில் ஈடுபடும் படகுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே சேவைக்கு அனுமதிக்கப்படவுள்ளது. பயணிகள்பாதுகாப்பு அங்கி அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இம்முறை பொலிஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன 200 பொலிஸார் சேவையல் ஈடுபடவுள்ளனர். பயணிகள் படகு சேவை இடம்பெறும் போது கடற்படை ரோந்து நடவடிக்கைகள் நடைபெறும் என்றார். (யாழ் நிருபர் சுமித்தி) [2018-01-11 22:39:13]


புனித. யோசே வாஸ் ஆண்டு நிறைவு நிகழ்வு – 13.01.2018

சன.06. யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் 2017 தை மாதம் தொடக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்த புனித.யோசே வாஸ் அண்டை நிறைவு செய்யும் இறுதிநாள் நிகழ்வுகள் 13.01.2018 சனிக்கிழமை கலை 10 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை புனித. யோசே வாஸ் பணியாற்றிய சில்லாலை ஊரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வுகள் பற்றிய விசேட அறிவுறுத்தல்கள் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. யோசப்தாஸ்ஜெபரட்ணம் அடிகளாரால் வழங்கப்பட்டுள்ளது. [2018-01-11 22:35:21]


குருமட மாணவர்களின் ஒன்று கூடல்

கண்டி அம்பிட்டிய தேசிய குருமடம், யாழ்ப்பாணம் தூய பிரான்சிஸ் சவேரியார் பெரிய குருமடம், கழுத்துறை ஆயத்த மெய்யியல் குருமடம் அகியவற்றில் தங்களது குருத்துவக் கல்வியை மேற்கொள்ளும் மன்னார் மறைமாவட்ட பெரிய குருமட மாணவர்களின் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா ஒன்று கூடல் இன்று ( 26.12.2017) செவ்வாய்க்கிழமை காலை மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்டத்திற்கான திருத்தூதரக நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை, மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி. அ.விக்ரர் சோசை, மறைமாவட்ட நிதியாளர் அருட்பணி.அ.இராஜநாயகம் ஆகியோரின் நெறிப்படுத்துதலோடு இவ் விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 22 பெரிய குருமட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களோடு பல அருட்பணியாளர்களும் கலந்து சிறப்பித்தனர் [2017-12-27 00:48:41]


யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி 2017

கிறிஸ்து பிறப்பு பெருவிழா இன்று கிறிஸ்தவ உலகு மட்டும் கொண்டாடும் ஒரு விழாவாக இல்லாமல் உலக மக்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு உலகப் பெருவிழாவாக மாறிவிட்டது. இந்த உலகப் பெருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு விழா வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக. பூவுலகில் நன்மனது கொண்டோருக்கு அமைதி ஆகுக என வாழ்த்துகிறோம். கிறீஸ்து பிறப்பு பெருவிழா ஒரு மகிழ்ச்சியின் விழா. ஒரு அன்புறவின் உறவின் விழா. ஒரு ஒன்று கூடலின் விழா. குடும்பமாக - உறவுகளாக - நண்பர்களாக - பங்கு சமூகமாக இணைந்து குதூகலிக்கும் ஒரு விழா. கன்னி கருத்தாங்கி ஒரு மகனைப் பெறுவார். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவர். இம்மானுவேல் என்றால் கடவுள் நம்போடு என்று பொருள்படும் என மத்தேயு நற்செய்தியாளர் (மத்தேயு 1:23) இவ்விழா பற்றி விளக்கம் தருகிறார்.

நமது இந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழாக் கொண்டாட்டங்;கள் அனைத்திலும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை தெளிவாக உணரவேண்டும். கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை உறுதிப்படுத்த வேண்டும். கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை இவ்விழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும். இந்த உண்மைக்கு ஏற்ற விதமாக இவ்விழாவை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆடைகள் அறுசுவை உணவு பட்டாஸ் கோலங்கள் கொண்டாட்டங்கள் என மகிழ்ந்திருக்கும் போது அயல் வீட்டில் இவற்றைப் பெற முடியாதவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்காது பகிரக்கூடியவற்றை அவர்களோடு பகிர்ந்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவோம.; கடவுள் நம்போடு இருக்கிறார் என்ற உண்மையை அவர்களும் உணரச்செய்வோம.;

போர் முடிந்து பல ஆண்டுகளாகியும்; மக்களின் இயல்பு வாழ்வை மேம்படுத்துவதில் நல்லெண்ண அரசு வேகமாக செயற்படவில்லை. பல விடயங்களை இன்னும்; முழுமையாக ஆற்றவில்லை என திரும்ப திரும்ப குறை கூறவேண்டியே உள்ளது. இவற்றில் காணாமற்போனோர் விடயம் - அரசியற் கைதிகள் விடயம் - சொந்த நிலங்கள் விடுவிப்பு விடயம் என்பன முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டியன. காணாமற் போனோர் விடயத்திற்கு உடன் முடிவு காணுங்கள். இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியாது அதே வேளை உயிரோடு இருப்பவர்களை காலம் காலமாக மறைத்தே வைத்திருக்க முடியாது. மனித உயிர் சம்பந்தமான இப்பிரச்சனைக்கு இனியும் காலம் தாழ்;த்தாது உடன் முடிவு காணுங்கள். இறந்தவர்களுக்கு சமயக் கடமைகளை நிறைவேற்றி உறவுகள் தம் மனசுகளை ஆறுதற்படுத்தவும் இறந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழைப் பெறவும் இழப்பீடு பெறவும் வழி செய்யுங்கள்.

அரசியற் கைதிகளை உடன் விடுதலை செய்யுங்கள். அவர்கள் வாழ்வை சிறைக்கம்பிகளின் பின்னால் இனியும் வீணடிக்காதீர்கள். ஏற்கனவே மனதளவில் பாதிக்கப்பட்ட அவர்கள் முழுமையான விடுதலை பெற விரைவாக செயற்படுங்கள் என தமிழ் மக்கள் பெயரால் வேண்டுகிறோம். சொந்த நிலங்களில் மக்கள் சென்று குடியமர்ந்தால்தான் யுத்தம் முடிந்து விட்டதென மக்கள் மன அமைதி கொள்வர். மக்கள் குடியிருப்புக்களில் இருந்து இராணுவத்தை முழுமையாக அகற்றுங்கள். அவர்களுக்கு அரச காணிகள் நிறையவே உண்டு. போராட்டம் முடிந்தமையால் அவர்கள் தள்ளி இருப்பதே சிறந்தது. இவற்றை செயற்படுத்த காலம் கடத்துவதால் எதுவும் நடைபெறப் போவதில்லை. நல்லெண்ண அரசு இந்த அடிப்படை வசதிகளை நேரகாலத்தோடு செய்து தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி இந்த நாட்டில் இனி வருங்காலத்தில் தமிழ் சிங்களம் என்ற இரு இனங்களும் இணைந்தே வாழவேண்டும் என்ற சமாதான சமிக்கையைக் காட்டி இருக்க வேண்டும். இன்று என்றுமில்லாத அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்க நிலமைகள் சாதகமாக இருப்பதால் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்ட தீர்வினைக்காண அரசியலில் சம்மந்தப்பட்ட அனைவரும் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து உழைக்க வேண்டுமென அன்பு அழைப்பு விடுக்கிறோம். அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் இறையாசீர்மிக்க வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் யாழ் ஆயர்

செய்தி வெளியீடு : அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை இயக்குநர் - பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் மற்றும் ரீ.சி.என்.எல். ரீவி - ஆசிரியர் (ரீ.சி.என்.எல்.) தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத்தளம் ஊடக வருகை விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம் ஊடக வருகை விரிவுரையாளர் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் [2017-12-25 12:29:42]


பேராலய மறைப்பாடசாலை ஒளி விழா 2017

பேராலய மறைப்பாடசாலை ஒளி விழா 2017 மட்டக்களப்பு மறை மாவட்ட பேராலய மறைப்பாடசாலைக்கான ஒளி விழா 18/12/2017 அன்று புனித மரியாள் பேராலயத்தில் இடம் பெற்றது. குருத்துவ பணி வாழ்வில் பொன் விழா காணும் அருட்பணி டொமினிக் சாமிநாதன் அடிகளார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார் [2017-12-20 13:11:40]


உண்மையின் எண்ணங்கள்

தூய யோசவ்வாஸ் இறையியல் கல்லூரி தூய யோசவ்வாஸ் இறையியல் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பில் பத்துப்பேர் இளமாணிப் பட்டதாரிகளாக வெளியேறியுள்ளனர் என்பது மகிழ்வான செய்தியாகும். பல சிரமங்கள் மத்தியில் ஆர்ப்பாட்டம் இல்லாமால் அமைதியாகப் பணியாற்றி பல பட்டதாரிகளை உருவாக்கி வரும் எம்.வி.ஈ.இரவிச்சந்திரன் அடிகளாரின் அமைதியான அதிபர் பணி பாராட்டப்பட வேண்டியதொன்று. பல திறமைகளை தன்னகத்தே கொண்ட அவர் தன்னைப் பிரகடனப்படுத்தாமல் அமைதியாகப் பணியாற்றும் ஒருவர். அவரின் ஆளுமையில் தூய யோசவ்வாஸ் இறையியல் கல்லூரி மேலும் வளர பாராட்டி பணி தொடர வாழ்த்துவோம்.

செய்தி வெளியீடு : அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை இயக்குநர் - பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் மற்றும் ரீ.சி.என்.எல். ரீவி - ஆசிரியர் (ரீ.சி.என்.எல்.) தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத்தளம் ஊடக வருகை விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம் [2017-12-20 13:10:59]


கத்தோலிக்க இளைஞர் ஒன்றித்தின் ஒளிவிழா

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றித்தின் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவையொட்டிய ஒளிவிழா கலை பண்பாட்டு நிகழ்வுகள் (17.12.2017) ஞாயிற்றுக்கிழமை மாந்தையில் அமைந்துள்ள மருதமடுத் திருத்தாயாரின் ஆரம்ப இடமான மாந்தை மாதா திருத்தல முன்றலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அவர்களும், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுகந்தி செபஸ்ரியன் அவர்களும் கலந்து கொண்டனர். அவர்களோடு பல அருட்பணியாளர்களும், அருட்சகோதரிகளும் பல மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

மாலை 06.00 மணிக்கு விருந்தினர்களை மாந்தை மாதா திருத்தல பிரதான நுழைவாயிலில் வைத்து தமிழ்ப் பண்பாட்டு கோலங்களோடு மன்னார் மறைமாவட்டக் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியப் பிரதிநிதிகள் மாலையிட்டு ஆராத்தி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து வங்காலை தூய ஆனாள் ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் வாத்திய இசையோடு விருந்தினர்கள்¸ நிகழ்ச்சி மேடைக்கு அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து மறைமாவட்டப் பங்குகளின் கத்தோலிக்க இளைஞர்கள் மிகவும் சிறப்பான, விசுவாச வாழ்வை இன்னும் ஆழப்படுத்தக்கூடிய கலை பண்பாட்டு நிகழ்வுகளை வழங்கினார்கள். இந் நிகழ்வில் வரவேற்புரையை இளைஞர் ஒன்றியத் தலைவர் செல்வன் டெஸ்மன் அவர்கள் வழங்கினார்.

ஆசியுரை வழங்கிய மாந்தை மாதா பங்குப் பணியாளர் அருட்பணி ச.மரியதாசன் (சீமான்) அடிகளார் இளைஞர்கள் தமது சக்தியைப் பன்மடங்காகப் பெருக்கிக் கொள்ள இவ்வாறான நிகழ்வுகள் வழி வகுக்கின்றன என்றும், சிறப்புரை வழங்கிய மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுகந்தி செபஸ்ரியன் அவர்கள் கத்தோலிக்க இளைஞர்கள் மன்னாரின் எதிர்காலத்தை நினைவிற் கொண்டு மாவட்டத்தில் பல்வேறு துறைகளிலும் வழங்கப்படுகின்ற நல் வாய்ப்புக்களை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும், சிறப்புரை வழங்கிய மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அவர்கள் இளைஞர்களே நீங்கள் வலிமை மிக்கவர்கள் என்னும் தூய பவுலடியாரின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி, இளைஞர்கள் தன்நம்பிக்கையோடும், சமூகநல ஈடுபாட்டோடும் செயற்பட வேண்டுமெனவும், முதன்மை விருந்தினர் உரை வழங்கிய மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் இளைஞர்கள் மூத்த பிரஜைகள் மட்டில் அக்கறையுடையவர்களாகவும், அவர்களை மதித்து நடக்கின்றவர்களாவும் இருக்க வெண்டுமெனவும் கூறினார்கள். நன்றி உரையை இளைஞர் ஒன்றியத் துணைச் செயலர் செல்வி. சுமி வழங்கினார்.அனைத்து நிகழ்வுகளையும் மன்னார் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு இயக்குனர் அருட்பணி.சீ.ஜெயபாலன் அடிகளார் மிகவும் சிறப்பாக ஒருங்கிணைத்து செயற்படுத்தினார். மன்னார் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு உறுப்பினர்கள் இவருக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்டனர் [2017-12-20 13:10:00]


ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் தனது குருத்துவ அர்ப்பணவாழ்வின் 50ம் ஆண்டு பொன் விழாவை

மன்னார், மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் தனது குருத்துவ அர்ப்பணவாழ்வின் 50ம் ஆண்டு பொன் விழாவை (13.12.2017) புதன் கிழமை மன்னார் ஆயர் இல்லத்தில் குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பிரதிநிதிகள், ஆயரின் உறவினர்கள் ஆகியோரோடு சேர்ந்து கொண்டாடினார்.

ஓய்வுநிலை ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் பிரசன்னமாகியிருக்க மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. அ.விக்ரர் சோசை, யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி ப.ஜோசவ் ஜெபரெட்ணம், மடுத்திருப்பதிப் பரிபாலகர் அருட்பணி ச.எமிலியானுஸ்பிள்ளை ஆகியோர் பொன்விழாத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர். இவ்வேளையில் மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோவச் கிங்கிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும் பிரசன்னமாகியிருந்தார்கள்.

1940ம் ஆண்டு சித்திரை மாதம் 16ந் திகதி நெடுந்தீவில் பிறந்த ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் 1967ம் ஆண்டு மார்கழி மாதம் 13ம் திகதி குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார். 25 வருடங்கள் யாழ் மறைமாவட்டத்தில் அருட்பணியாளராகப் பணியாற்றியபோது 1992ம் ஆண்டு ஆடி மாதம் 06ம் திகதி மன்னார் மறைமாவட்டத்திற்கான இரண்டாவது ஆயராகத் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டார்.

பின்னர் 1992ம் ஆண்டு ஜப்பசி மாதம் 20ம் திகதி பேரருட்கலாநிதி தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்களால் மடுமாதா திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்டத்திற்கான ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டு சுமார் 23 வருடங்கள் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணிபுரிந்து உடல் நலம் குன்றிய இயலாமை நிலையின் அடிப்படையில் 2016ம் ஆண்டு தை மாதம் 14ம் திகதி முதல் திருத்தந்தையிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஓய்வு அனுமதியுடன் ஆயர் பணிநிலையிலிருந்த ஓய்வு பெற்றார். [2017-12-16 13:15:49]


‘அரசும் மதமும் ஒன்றை மற்றொன்று வரையறை செய்தல்’ ஆயர் தியோகுப்பிள்ளை அறக்கொடைப் பேருரை

டிச.14. யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட, ஆயர் தியோகுப்பிள்ளை அறக்கொடைப் பேருரை இன்று மாலை 3.30 மணிக்கு, யாழ். அச்சக வீதியில் அமைந்துள்ள பாதுகாவலன் மண்டபத்தில், யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத் தலைவர் அருட்பணி டேவிட் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆயர் தியோகுப்பிள்ளையின் உருவப்படத்திற்கு மலர் மலை அணிவிக்க, யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் ஒளியேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் பங்குபற்றி ‘ அரசும் மதமும் ஒன்றை மற்றொன்று வரையறை செய்தல்: பிரச்சனைகளும் இலங்கையில் சீர்திருத்தத்திற்கான வாய்ப்புகளும் ‘ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். உரையின் முடிவில் இவ்வுரை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் குருக்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், பல்கலைகழக மாணவர்களென நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். [2017-12-16 13:12:12]


ஆயராகப் பொறுப்பேற்கும் திருநிகழ்வு இம்மாதம் 30ந் திகதி

மன்னார் மறைமாவட்டதின் நான்காவது ஆயராகப் பொறுப்பேற்கவுள்ள பேரருட்கலாநிதி ல.பி.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் மறைமாவட்டதிற்கான ஆயராகப் பொறுப்பேற்கும் திருநிகழ்வு இம்மாதம் 30ந் திகதி (30.12.2017) சனிக்கிழமை இடம்பெறும். இதற்காக மன்னார் ஆயர் இல்லத்தில் ஒன்றுகூடிய மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்கள் பணித்திட்டங்களை வகுத்துள்ளனர். திருத்தூதுப் பணி நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையின் ஆலோசனையோடும் வழி நடாத்துதலோடும், மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அவர்களின் தலைமையின் கீழ் இத் திருநிகழ்வின் அனைத்துப் பணித்திட்டங்களும் முன்னெடுத்துச் செல்லப்படும். இதற்காகப் பல்வேறு பணிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு பணிப் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

13.12.2017) ஆயர் இல்லத்தில் எல்லா அருட்பணியாளர்களுக்கும், ஆயராகப் பொறுப்பேற்கும் திருநிகழ்வுக்கான தங்கள் பணித்திட்டங்களின் ஆலோசனைகளை அந்தத்தக் குழுவுக்குப் பொறுப்பான குழுக்களின் இணைப்பாளர்கள் தெரியப்படுத்தினர். மாலை 03.00 மணிக்கு, ஏற்கனவே வகுத்த திட்டத்தின் படி மன்னார் மாவட்டச் செயலர் மதிப்புக்குரிய திரு.தேசப்பரிய அவர்களுடான கலந்துரையாடல் இடம்பெற்றது. மன்னார் ஆயராகப் பொறுப்பேற்கவுள்ள பேரருட்கலாநிதி ல.பி.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் மறைமாவட்டதிற்கான ஆயராகப் பொறுப்பேற்கும் திருநிகழ்வுக்கு அரசின் பல்வேறு நிர்வாக அலகுகளின் உதவிகளையும், பங்களிப்பினையும் பெறும் பொருட்டு மாவட்டச் செயலர் அவர்கள் மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து அரச திணைக்களங்களின் தலைவர்களையும், மற்றும் பொலிஸ் அதிகாரிகளையும் இக் கூட்டத்திற்கு அழைத்திருந்தார்.

அவரே இக் கூட்டத்திற்கு தலைமையேற்று தேவையான உதவிகள் ,செய்யப்படவேண்டிய வேலைகள், ஆயத்தங்கள், வேறு விதமான முன்னெடுப்புக்கள் ஆகியவற்றை மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அவர்களிடமிருந்து கேட்டுறிந்த பின் அனைத்து அரச திணைக்களத் தலைவர்களிமும் ஆலோசனையைப் பெற்று இதற்கான அனைத்துப் பணிகளையும் உடனடியாகத் தொடங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். எல்லாத் திணைக்களத் தலைவர்களும் தங்களுடைய பங்களிப்பை முழுமையாக வழங்குவதாக உறுதியளித்தனர்.

இவ் ஒன்று கூடலில் மாவட்ட மேலதிக செயலர் திருமதி ஸ்ரனி டிமெல், மன்னார் பிரதேச செயலர் திரு.மரியதாசன் பரமதாஸ், மன்னார் உள்ளுராட்சித் திணைகள உதவி ஆணையாளர் திரு துரம், மன்னார் நகரசபைச் செயலர் திரு. பிறிற்றோ லெம்பேட். மன்னார் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.ஞானறாஜ், மன்னார் மாவட்ட வைத்திய அதிகாரி. திரு.றோய் பீரிஸ்,வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியிலாளர் திரு.அன்ரனி மற்றும் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ச் செயலகப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் குருமுதல்வர் தலைமையில் மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்கள் சிலரும் கலந்து கொண்டனர் [2017-12-16 13:11:25]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்