வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


மன்னார் மடுமாதா சிறிய குருமட ஒளிவிழா

மன்னார் மறைமாவட்டத்தில் வருங்கால அருட்பணியாளர்களை தயார் செய்வதற்கான நாற்று மேடையாகத் திகழும் மன்னார் மடுமாதா சிறிய குருமட மாணவர்களின் கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டிய ஒளிவிழா 09.12.2017 சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு மன்னார் மடுமாதா சிறிய குருமட அதிபர் அருட்பணி. அ.ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விருந்தினர்களை வரவேற்ற பின் மாலை திருப்பலியோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின. இத்திருப்பலியை மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி மற்றும் விவிலிய பணிக்குழுவின் இயக்குனர் அருட்பணி. பி.சே.றெஜினோல்ட் அவர்கள் நிறைவேற்றி மாணவர்களின் வளர்ச்சிக்கான இறைவார்த்தைச் செய்தியை வழங்கினார். இதனைத் தொடர்ந்து சிறிய குருமடத்தின் கேட்போர் கூடத்திலே கிறிஸ்து பிறப்பையொட்டிய கலை பண்பாட்டு கலை பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. இங்கு மன்னார் தூய சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் றெஜினோல்ட் ( மணி) அவர்கள் மாணவர்களுக்கான கிறிஸ்து பிறப்பு ஒளிவிழாச் செய்தியை வழங்கினார்.

இங்கு முன்னைநாள் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வரும், சிறிய குருமடத்தின் முன்னைநாள் இயக்குனருமான அருட்பணி. அ.சேவியர் குரூஸ் அடிகளாரும், பல அருட்பணியாளர்களும், அருட்சகோதரிகளும், முன்னைநாள் மாணவர்களும்,ஆசிரியர்களும், பெற்றோரும், நலன் விரும்பிகளும், உதவியாளர்களுமெனப் பலர் சமூகமளித்திருந்தனர். சிறிய குருமடமாணவர்கள் தங்களது ஆற்றல்களைக் கொண்டு மிகவும் தாக்கமானதும், உணர்வுபூர்வமானதும், யதார்த்தமானதும், சமகால நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டுவதுமான கிறிஸ்தவ நல் விழுமியங்களோடு கூடியதுமான கலைப்படைப்புக்களை உருவாக்கி வெளிக் கொணர்ந்தனர் [2017-12-12 23:28:06]


‘இளையோர் நாம் - கிறிஸ்துவின் ஒளியில் மாறிடுவோம்

இளையோர் நாம் - கிறிஸ்துவின் ஒளியில் மாறிடுவோம் மாற்றத்தை நோக்கி’ - குழு பாடல் போட்டி டிச.9 யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் அமரர் அருட்பணி சரத்ஜீவன் ஞாபகார்த்த கிறிஸ்து பிறப்பு குழு பாடல் போட்டி இன்று காலை மறைகல்வி நிலையத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றிய இயக்குனர் அருட்பணி அன்ரன் ஸரீபன் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இப்போட்டியில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்குகளிலிருந்து 13 இளையோர் ஒன்றிய குழுக்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றி நிகழ்வினை சிறப்பித்தார்கள். அமரர் அருட்பணி சரத்ஜீவன் அடிகளாரின் சகோதரி நித்திலா மரியாம்பிள்ளை ஒளியேற்ற மறைகல்வி நிலைய இயக்குனர் அருட்பணி பெனட் அடிகளார் அசீர் வழங்கி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள். ‘இளையோர் நாம் - கிறிஸ்துவின் ஒளியில் மாறிடுவோம் மாற்றத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் புத்தாக்க பாடல்கள் அனைத்தும் அமைந்திருந்தன. இப்போட்டியில் முதலாம் இடத்தை வசாவிளான் புனித யாகப்பர் ஆலய இளையோரும், இரண்டாம் இடத்தை முழங்காவில் செபமாலை மாதா ஆலய இளையோரும், மூன்றாம் இடத்தை மல்வம் திருக்குடும்ப ஆலய இளையோரும் பெற்றுக்கொண்டார்கள். இவர்களுக்கான பரிசில்களை யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் வழங்கினார். இப்போட்டியில் பங்குபற்றிய அனைத்த இளையோர் ஒன்றியத்தினருக்கும் நினைவு பரிசில்கள் வழங்கப்பட்டன. [2017-12-12 23:12:29]


உறுதி பூசுதல் அருட்சாதன வழங்கல் சடங்கு

மட்டக்களப்பு மறைமாவட்ட மரியாள் பேராலய அமல உற்பவ அன்னை பெருவிழாவும் முதல் நன்மை உறுதி பூசுதல் அருட்சாதன வழங்கல் சடங்கும் 08,12,2017 அன்று மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு. பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்களால் நிகழ்த்தப்பட்டது [2017-12-12 23:10:51]


ஞானப்பிரகாசர் முத்தமிழ் கலை விழா 2017

இலங்கை தேசிய குருமடத்தின் இறையியல் பிரிவு மாணவர்கள் ஞானப்பிரகாசர் முத்தமிழ் கலை விழாவினை 03/12/2017 அன்று கண்டியில் உள்ள தேசிய குருமடத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அமல மரித்தியாகிகள் சபையின் யாழ் மாகாண முதல்வர். அருட்திரு. எட்வின் வசந்தராசா அடிகளார் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். திருப்பலியுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வு பின்னர் அருட்சகோதரர்களால் மேடையேற்றப்பட்ட கலை நிகழ்வுகளால் களைகட்டியது. மிகவும் கருத்துள்ள நல்ல பல கலை நிகழ்வுகளை ஞானப்பிரகாசர் தமிழ்க்கழக இறையியல் மாணவர்கள் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. [2017-12-09 12:44:03]


அன்னைக்கு விழாக் கொண்டாடி மகிழ்ந்தது பேசாலை பங்கு

அன்னை மரியாவின் அமலோற்பவப் பெருவிழா (08.12.2017) வெள்ளிக்கிழமை உலகெங்கும் நினைவு கூர்ந்து கொண்டாடப்படும் வேளையில் தங்கள் பாதுகாவலியான அன்னை மரியாவை வெற்றி மாதா என்னும் நாமம் சூடி வழிபட்டு வரும் பேசாலை பங்குச் சமூகம் இன்று அன்னைக்கு விழாக் கொண்டாடி மகிழ்ந்தது. தமது கிராமியப் பண்பாட்டுக் கோலங்களையும் இணைத்து மிகவும் பக்தி அருட்சியோடு இத் திருவிழாவினைக் கொண்டாடினர்.

திருவிழாத் திருப்பலியை மன்னார் மறைக்கொட்ட முதல்வர் அருட்பணி. ச.தேவறாஜா கொடுதோர் தலைமையேற்று நடாத்த, பேசாலைப் பங்குத் தந்தை அருட்பணி.டே.அலெக்சாண்டர் சில்வா, உதவிப் பங்குத் தந்தை அருட்பணி.ப. சாந்தன் சோசை, எழுத்தூர் பங்குத் தந்தை அருட்பணி. பி.யேசுறாஜா, செட்டிகுளம் பங்குத் தந்தை அருட்பணி .ச.ஜெயபாலன் குரூஸ், நானாட்டான் பங்குத் தந்தை அருட்பணி .அருள்றாஜ் குரூஸ், கீளியன்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி ரெறன்ஸ் குலாஸ், மறைமாவட்டத்தின் மூத்த குரு அருட்பணி . யோ.பெ.தேவறாஜா, அருட்பணி . ஜெறோம் லெம்பேட் அ.ம.தி., அருட்பணி. வின்சன் அ.ம.தி ஆகியோர் இணைந்து திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர். இத் திருவிழாவிற்குஅருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், வடமாகாண சுகாதார அமைச்சர் திரு.குணசீலன், மன்னார் பிரதேச செயலர் திரு. மரியதாஸ் பரமதாஸ், பேசாலைப் பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.சிறில், மற்றும் அரச பணியாளர்கள், இறைமக்கள் எனப் பலரும் பங்கேற்றுச் செபித்தனர். திருப்பலி முடிவில் அன்னையின் திருவுருவப் பவனியும் இடம் பெற்றது [2017-12-09 12:42:44]


ஆரம்பப் பணிகளைத் தொடக்கியுள்ளனர்.

இந்தியா மதுரையை பணித்தள மையமாகக் கொண்டு, மன்னார் மறைமாவ ட்டத்தில் பணி புரியும் அமல உற்பவ மாதா துறவற சபை அருட்சகோதரிகள் தாங்கள் அமைக்கவிருக்கின்ற புதிய இல்லத்திற்கான நிலப்பரப்பிலே இன்று (03.12.2017) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பப் பணிகளைத் தொடக்கியுள்ளனர். மன்னார் நகரின் தென் முனையில் கடற்கரையோரமாக சவுத்பார் என்னுமிடத்தில் இருக்கின்ற நிலப்பரப்பிலேயே இவர்களுடைய பணி இல்லம் அமையவிருக்கின்றது. இன்று மாலை இவ்விடத்திலே இடம்பெற்ற ஆரம்பப் பணி நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி கிங்கிலி சுவாம்பிள்ளை, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை, அமல உற்பவமாதா துறைவற சபைகளின் மன்னார் இல்லத் தலைவி அருட்சகோதரி சவிரி மற்றும் அருட் பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இவ்வேளையில் அன்னை மரியாவின் திருவுருவம் அபிஷேகம் செய்து அரியணை ஏற்றப்பட்டதோடு, மரக் கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன [2017-12-05 21:56:25]


புனித. சவேரியார் குருமட விழா

டிச 4. யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சவேரியார் பெரிய குருமட திருவிழா இன்று காலை குருமட அதிபர் அருட்பணி. கிருபாகரன் அடிகளார் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் திருநாள் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது. இத்திருப்பலியில் அருட்சகோதரர்களும் ஏராளமான குருக்களும் இணைந்து கொண்டார்கள். திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புகொடுத்த குருமுதல்வர் மறையுரையில் புனித சவேரியாரும் புனித ஜோசப்வாசும் தங்கள் வாழ்வில் சிலுவைக்கும் செபமலைக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை சுட்டிகாட்டி, இயேசுவின் மறைபணியை ஆற்றும் ஒவ்வொருவரும் சிலுவையையும் செபமலையையும் இரு பெரும் ஆயுதங்களாக தாங்கி மறைப்பணி ஆற்றவேண்டும் என்பதையும் குறிப்பிட்டார். [2017-12-05 21:55:31]


‘கலை ஞான சுரபி’ தியான மண்டப திறப்புவிழா.

‘கலை ஞான சுரபி’ தியான மண்டப திறப்புவிழா. டிச 02. ‘கலை ஞான சுரபி’ தியான மண்டபம், யாழ்ப்பாணம் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்னம் அடிகளாரால் இன்று காலை ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜெபரட்னம் அடிகளார், யாழ்ப்பாணம் திருமறைக் காலமன்றத்தினால் இது அமைக்கபட்டு ஆன்மீக செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு இடமாக இது பயன்படுத்தப்பட இருப்பது மிகவும் சிறப்பான ஒரு விடயமாக அமைந்துள்ளதை சுட்டிக்காட்டினர். இந்நிகழ்வில் திருமரைகலமன்றத்தின் இயக்குனர், அருட்பணியாளர்கள், மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள். [2017-12-03 13:17:48]


சுந்தரபுரம் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்

மன்னார் மறைமாவட்டத்தின் பணி எல்லைக்குள் அமையும், வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள தரணிக்குளம் பங்கின் கிளை ஆலயமான சுந்தரபுரம் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் (29.11.2017) புதன் கிழமை மாலை 04.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட திருத்தூதூப் பணி நிர்வாகி பேரருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டு ஆலயத் திருவிழாவின் தொடக்கநாள் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பங்கினை கப்புச்சியன் துறவற சபை அருட்பணியாளர்கள் பொறுப்பேற்று வழி நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மிகவும் கடினமான பணிமுன்னெடுப்புக்களைக் கொண்ட இந்தப் பங்கிலே கப்புச்சியன் துறவற சபை அருட்பணியாளர்களின் பணிகள் மிகவும் பாராட்டத்தக்கவையாக அமைந்துள்ளன.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னதாக இப் பங்கு வவுனியா பம்பைமடுப் பங்கின் பணிப் பரப்பெல்லைக்கள் இருந்தபோது, அவ்வேளையில் பம்பைமடுப் பங்குப் பணியாளராக இருந்த அருட்பணி இ.அகஸ்ரின் புஸ்பராஜா அடிகளார் இங்கு நீண்ட தூரம் மிகுந்த சிரமத்தின் மத்தியில் பயணம் செய்து இங்கு வாழும் மக்களைச் சந்தித்து அந்த மக்களுக்கான ஆன்மிகப் பணியை முன்னெடுத்துச் சென்றபோது, இம் மக்களுக்கான ஓர் ஆலயம் நிறுவப்படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, ஓய்வு நிலை ஆயர் பேரருட்கலாநிதி இரா.யோசேப்பு ஆண்டகை அவர்களின் அனுமதியோடும் ஆசீரோடும், வவுனியா மறைக்கோட்ட முதல்வராக இருந்த அருட்பணி பெப்பி சோசை அடிகளரின் பிரசன்னத்தில் இவ் ஆலயத்திற்கான அடிக்கல்லை இடுகை செய்து ஆரம்பப் பணிகளை ஊக்குவித்து நெறிப்படுத்தினார். இந் நிகழ்வில், கப்புச்சியன் துறவற சபையின் இந்திய இலங்கை பணித்தள இணைப்பாளர் அருட்பணி. ஜெகதீஸ், பங்குப் பணியாளர் அருட்பணி. ஆரோக்கியசாமி, தரணிக்குளம் கப்புச்சியன் துறவற இல்ல மேலாளர் அருட்பணி.பீற்றர் அமலதாஸ், வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி.இ.அகஸ்ரின் புஸ்பராஜா, வவுனியா இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்குப் பணியாளர் அருட்பணி.ச.சத்தியறாஜ், வேப்பங்குளம் பங்குப் பணியாளர் அருட்பணி.அ.லக்ஸ்ரன் டீ சில்வா, பம்பைமடுப் பங்குப்பணியாளர் அருட்பணி லெஸ்லி ஜெகானந்தன், ஆயரின் செயலர் அருட்பணி நீக்லஸ் ஆகியரோடு இன்னும் பல கப்புச்சியன் துறவற சபை அருட்பணியாளர்கள் அருட்சகோதரிகள், இறைமக்கள் அரச, அரச சார்பற்ற பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்

அதன் பின், சில ஆண்டுகளுக்கு முன்னர் கப்புச்சியன் துறவற சபை அருட்பணியாளர்கள் இந்தப் பங்கினைப் பொறுப்பேற்று சிறப்பாக பணி செய்து வருகின்றனர். அவர்களின் பெருமுயற்சியினாலும்-நிதிப் பங்களிப்பினாலும், அமெரிக்காவில் வாழும் சில இலங்கைத் தமிழர்களின் நிதியுதவியோடும் இவ் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. [2017-12-03 13:16:21]


கத்தோலிக்க இளைஞர்களின் 71வது தேசிய மாநாடு

இலங்கை கத்தோலிக்க இளைஞர்களின் 71வது தேசிய மாநாடு இன்று மன்னார் மடுமாதா திருத்தலத்தில் எழுர்ச்சியோடு ஆரம்பமானது. இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் வருகைதந்திருந்த சிங்கள மற்றும் தமிழ் பேசுகின்ற இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அனைவரும் மடுத்தாயாரின் திருச்சுருப சந்தியிலிருந்து மடுமாதா திருத்தலத்தில் அமைந்துள்ள தியான இல்லத்தை நோக்கி திருச்செபமாலை செபித்துக் கொண்டு பவனியாக வந்தனர். தியான இல்லத்திற்குச் செல்லும் பிரதான வீதியின் தொடக்கத்தில் வைத்து மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும், , மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அன்ரனி விக்ரர். சோசை அடிகளார், இலங்கை கத்தோலிக்க இளைஞர்களுக்கான இயக்குனர் அருட்பணி மல்கம் பெனாண்டோ அடிகளார், மன்னார் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு இயக்குனர் வண பிதா அருட்பணி சந்தாம்பிள்ளை ஜெயபாலன் அடிகளார் மற்றும் ஏனைய மறைமாவட்டங்களின் இயக்குனர்கள் மாலை அணிவித்தும், மாநாட்டுப் பிரதிநிதிகளான இளைஞர்கள் மலர் வழங்கியும் தமிழர் தம் பண்பாண்டுக் கோலங்களை வெளிப்படுத்தும் கோலாட்டம், குதிரையாட்டம் போன்றவற்றின் மூலமாகவும் மாநாட்டு மண்டபம்வரை அழைத்துவரப்பட்டனர். கத்தோலிக்க இளைஞர்களுக்குப் பொறுப்பான இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் வழிகாட்டுடியான யாழ் ஆயா் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் தவிர்க்கமுடியாத காரணத்தில் சமூகமளிக்க முடியவில்லை. அதன்பின் இன்றைய ஆரம்ப நிகழ்வுகளும், கலை பண்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. நாளை 25ம் திகதி சிறப்பு விழிப்புணர்வு வலுவூட்டல் நிகழ்வுகளும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை வங்காலை புனித அன்னமாள் ஆலயத்தில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்கபரிபாலகர் போருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் சிறப்பு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும். [2017-11-26 13:58:31]பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்