வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்கருக்கலைத்தல் சட்டம் குறித்து அயர்லாந்து ஆயர்கள்

வளரும் உயிரைப் பறிப்பதற்கு தங்கள் மனச்சான்று இடம்கொடுக்காதச் சூழலில், மற்றொரு மருத்துவரை அடையாளம் காட்டி, உயிரைப் பறிக்க உதவுவது, எவ்வகையில் நியாயம் - அயர்லாந்து ஆயர்கள் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் அயர்லாந்தில், கருக்கலைத்தலை அனுமதிக்கும் சட்டம், இன்னும் சில மாதங்களில் நிறைவேற்றப்படவிருக்கும் சூழலில், அது குறித்து, மருத்துவத் துறையில் பணியாற்றுவோருக்கு, சில வழிகாட்டுதல்களை, அந்நாட்டு ஆயர்கள் வெளியிட்டுள்ளனர். கரு உருவான 12 வாரங்களுக்குள், மருந்துகள் வழியே அதைக் கலைப்பதற்கு அனுமதி வழங்கும் இப்புதிய சட்டப்பிரிந்துரை, மருந்து விற்பனையாளர்கள், இம்மருந்தை விற்க மறுப்பதற்கு தேவைப்படும் உரிமையை வழங்கவில்லை என்பதை, அயர்லாந்து ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தங்கள் மனச் சான்றுக்குக் கீழ்ப்படிந்து, கருக்கலைத்தல் சிகிச்சையை செய்ய மறுக்கும் உரிமை, மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளபோதிலும், அம்மருத்துவர்கள், கருக்கலைத்தல் சிகிச்சையை செய்யக்கூடிய மற்றொரு மருத்துவரை அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயம் உள்ளதென்று சட்டம் வலியுறுத்துவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். வளரும் உயிரைப் பறிப்பதற்கு தங்கள் மனச்சான்று இடம்கொடுக்காதச் சூழலில், மற்றொரு மருத்துவரை அடையாளம் காட்டி, உயிரைப் பறிக்க உதவுவது, எவ்வகையில் நியாயம் என்று, அயர்லாந்து ஆயர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கருவில் வளரும் உயிரைக் கொல்வதற்கு மறுக்கும் மருத்துவப் பணியாளர்கள், சட்டரீதியாக தண்டிக்கப்பட மாட்டார்கள், பாகுபாட்டுடன் நடத்தப்பட மாட்டார்கள் என்ற உறுதியையும், அயலர்லாந்து அரசு வழங்கவேண்டும் என்று ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர். [2018-10-07 22:56:11]


நம்பிக்கையின் நாயகர்கள், இளையோர் - திருத்தந்தை

தங்கள் கனவுகளை நிறைவேற்ற விரும்பும் இளையோர், எதற்கும் அஞ்சாமல், தங்கள் கடமைகளை கையிலெடுத்து, நம்பிக்கையின் நாயகர்களாகத் திகழவேண்டும் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தங்கள் கையில் வைத்திருக்கும் இன்றைய இளையோர், நம்பிக்கையின் முக்கிய கதாபாத்திரமாக உள்ளனர் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு காணொளி நேர்காணலில் கூறியுள்ளார். இளையோரை மையப்படுத்தி, 15வது உலக ஆயர் மாமன்றம் இடம்பெற்றுவரும் வேளையில், இளையோருக்கு எதை கொடையாக வழங்க விரும்புகிறீர்கள் என, பிரான்ஸ் நாட்டு லியோன் மறைமாவட்ட துணை ஆயர் Emmanuel Gobilliard அவர்களுடன் மேற்கொண்ட ஒரு நேர்காணலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார். நிகழ்காலமும் வருங்காலமும், நம்பிக்கையுமாக இருக்கும் இளையோரே, எதற்கும் அஞ்சாமல், கடமைகளை மேற்கொண்டு, உங்கள் கனவுகளை நிறைவேற்றுங்கள் என்று இளையோருக்கு கூற விழைவதாக திருத்தந்தை கூறியுள்ளார். மக்களின் வாழ்வுக்கு ஆணிவேராக இருக்கும் முதியோரின் அனுபவங்களிலிருந்து பலன்பெறும்பொருட்டு, முதியோருடன் உரையாடுங்கள் என இளையோரிடம் விண்ணப்பித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆழமாக வேரூன்றியவர்களாக, மக்களின் வரலாற்றில் இணைந்தவர்களாக, உறுதியான உள்ளத்துடன், உரையாடல்களை மேற்கொள்ளுங்கள் எனவும் இளையோரை ஊக்கப்படுத்தியுள்ளார். உங்கள் முன்னேற்றத்தின் வேராக உங்கள் வரலாறு உள்ளது, என்பதை உணர்ந்தவர்களாக இச்சமூகத்தை முன்னோக்கி அழைத்துச் செல்லுங்கள், நாமனைவரும் பானமா நாட்டில் உலக இளையோர் தினத்தில் சந்திப்போம் என தன் காணொளி நேர்காணலை நிறைவுச் செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ் [2018-10-06 19:36:13]


இளையோரின் வாழ்வு சாட்சியங்கள், அதிகமதிகமாகத் தேவை

உறுதியற்ற விசுவாசம் உள்ளவர்கள், தங்களின் உடன் சகோதரர்களுக்கு நற்செய்தியை எடுத்துரைப்பது இயலாத ஒன்று கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் திருமண வாழ்வுக்குத் தயாரித்தல், குடும்பத்தில் தந்தையின் இடம், இளம் குடியேற்றதாரர்கள், இளையோரின் வாழ்வு சாட்சியங்கள் ஆகியவை, ஆயர் மாமன்றக் கூட்டத்தின் இரண்டாம் நாளில் முக்கிய இடம் வகித்ததாக போலந்து ஆயர்கள் தெரிவித்தனர். இரண்டாம் நாள் கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் என்றும், சிலர், குடும்ப உறவுகள் முறிவுபட்டுக் கிடப்பது குறித்து கவலை கொண்டுள்ளதாகவும், திருமண தயாரிப்புக்கான மறைக்கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டியது குறித்து வலியுறுத்தியதாகவும் எடுத்துரைத்தார் போலந்து ஆயர் Marian Florczyk. கடந்த காலங்களில் குடும்பத்தில் தந்தையின் இடம், முக்கியத்துவம் பெற்றதாக இருந்து, அவரின் விசுவாச வாழ்வு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தது, ஆனால். அத்தகைய நிலை இன்று பல குடும்பங்களில் இல்லை என்பதை சில பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்ட ஆயர் Florczyk அவர்கள், உறுதியற்ற விசுவாசம் உள்ளவர்கள், தங்கள் உடன்வாழ்பவர்களுக்கு எவ்விதம் நற்செய்தியை அறிவிக்க முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது என்றார். தங்கள் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு நற்செய்தியை எடுத்துரைக்க வேண்டிய இளையோரின் பணி குறித்தும், சில கிறிஸ்தவ அடிப்படைவாத குழுக்களால் எழும் அச்சுறுத்தல்கள் குறித்தும், சில பிரதிநிதிகள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறினார் ஆயர் Florczyk. [2018-10-06 19:30:19]


அருளாளர் ரொமேரோ புனிதப்பொருள், பானமா நாட்டில்...

புனிதராக உயர்த்தப்படவிருக்கும் அருளாளர் ரொமேரோ அவர்களின் புனிதப் பொருள், பானமா நாட்டின் பல்வேறு நகரங்களுக்குப் பவனியாக எடுத்துச் செல்லப்படும். ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் 2019ம் ஆண்டு பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கென அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாவலர்களில் ஒருவரான, அருளாளர் ஆஸ்கர் ஆர்னுல்போ ரொமேரோ (Óscar Arnulfo Romero) அவர்களின் புனிதப் பொருள், அக்டோபர் 2, இச்செவ்வாயன்று, பானமா நாட்டை அடைந்தது. அருளாளர் ரொமேரோ அவர்கள், திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் கொல்லப்பட்டபோது, அவர் அணிந்திருந்த உடையின் இரத்தம் தோய்ந்த ஒரு துண்டு, புனிதப் பொருளாக, பானமாவின் புனித தொன் போஸ்கோ பசிலிக்காவை அடைந்த வேளையில், அதனை, பானமா பேராயர், José Domingo Ulloa அவர்கள் வரவேற்றார். அருளாளர் ரொமேரோ அவர்களின் புனிதப் பொருள், பானமா நாட்டின் பல்வேறு நகரங்களுக்குப் பவனியாக எடுத்துச் செல்லப்படும் என்றும், 2019ம் ஆண்டு சனவரி மாதம், அங்கு நடைபெறும் இளையோர் உலக நாள் நிகழ்வுகளின் போது, இப்புனிதப் பொருளும் இளையோரின் வணக்கத்திற்காக வைக்கப்படும் என்றும், பானமா உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது. அக்டோபர் 14, ஞாயிறன்று, அருளாளர்களான ரொமேரோ, மற்றும், திருத்தந்தை 6ம் பவுல் ஆகியோருடன், இன்னும் ஐந்து அருளாளர்கள், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் புனிதர்களாக உயர்த்தப்படுவர். 2019ம் ஆண்டு சனவரி 22ம் தேதி முதல் 27ம் தேதி முடிய பானமா நாட்டில் நடைபெறும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், 6 இலட்சத்திற்கும் அதிகமான இளையோர் கலந்துகொள்வர் என்று, இந்நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர். [2018-10-05 19:07:50]


உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான் இளைஞர்

பாகிஸ்தான் இளையோர், வாழ்வில் சந்திக்கும் சவால்களை மேற்கொள்ள மத நம்பிக்கை எவ்விதம் உதவமுடியும் என்பதை, திருஅவை தங்களுக்குச் சொல்லித் தரவேண்டும் - இளம் மருத்துவர், டேனியல் பஷீர் ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் தங்கள் பணியிடங்களில் ஒதுக்கப்படுதல் என்பது, பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவ இளையோர் சந்திக்கும் பல சவால்களில் ஒன்று என்று, அந்நாட்டு இளம் மருத்துவர், டேனியல் பஷீர் அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார். வத்திக்கானில் நடைபெறும் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ள சிறப்பு அழைப்பு பெற்றுள்ள இளையோரில் ஒருவரான பஷீர் அவர்கள், பாகிஸ்தான் இளையோர், ஒவ்வொரு நாள் வாழ்விலும் சந்திக்கும் சவால்களை மேற்கொள்ள மத நம்பிக்கை எவ்விதம் உதவமுடியும் என்பதை, திருஅவை தங்களுக்குச் சொல்லித் தரவேண்டும் என்று கூறினார். வறுமை நிலை காரணமாக, பாகிஸ்தான் இளையோர், ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்லும் கட்டாயம் உருவாகிறது என்றும், இதனால், ஞாயிறு திருப்பலிகளையும் அவர்கள் இழக்க நேரிடுகிறது என்றும், பஷீர் அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானில் பணியாற்றும் அருள்பணியாளர்களும் ஆயர்களும், மேய்ப்புப்பணியில் ஆர்வமும், திறமையும் கொண்டிருந்தாலும், இளையோருக்குச் செவிமடுத்தல், அவர்களை வழிநடத்துதல் போன்றவற்றில், குறிப்பிட்ட திறமையின்றி இருப்பதால், இளையோர் அவர்களை அணுக தயங்குகின்றனர் என்று, இளம் மருத்துவர் பஷீர் அவர்கள் எடுத்துரைத்தார். உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு தயாரிப்பு நிகழ்வாக, இவ்வாண்டு மார்ச் மாதம், உரோம் நகரில் நடைபெற்ற ஓர் இளையோர் கூட்டத்திலும், பாகிஸ்தான் இளம் மருத்துவர் பஷீர் அவர்கள் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. [2018-10-05 18:58:35]


ஆயர் மாமன்ற துவக்கத் திருப்பலி - திருத்தந்தையின் மறையுரை

நாம் அனைவரும் நம்மைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறையுள்ளவர்களாகச் செயல்படுவோம் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் அன்பு நெஞ்சங்களே, இளையோரை மையப்படுத்தி, உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டம், வத்திக்கானில், அக்டோபர் 3, இப்புதன் முதல் இம்மாதம் 28ம் தேதி முடிய இடம்பெறுகிறது. இந்த மாமன்றக் கூட்டத்தின் துவக்கத் திருப்பலியை இப்புதனன்று காலை, வத்திக்கான், புனித பேதுரு வளாகத்தில் நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தில் பங்குபெறும் மாமன்றத் தந்தையர், மற்றும் பிரதிநிதிகளுடன் இணைந்து, வளாகத்தை நிறைத்திருந்த விசுவாசிகளுக்கு, திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள் வழங்கிய மறையுரையின் சுருக்கத்திற்கு இப்போது செவிமடுப்போம். “என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்” (யோவான் 14:26). என்று இயேசு கூறுவதன் வழியாக, தன் சீடர்களிடம் ஒப்படைக்கப்படும் அனைத்து மறைப்பணிகளிலும் துணையாளராம் தூயஆவியார் உடனிருப்பார் என்ற உறுதியை வழங்குகிறார். இளையோரை மையப்படுத்தி, நடைபெறும் இந்த ஆயர் மாமன்றக் கூட்டத்தின் துவக்கத்திலும், நாம், இயேசு வாக்களித்த துணையாளரின் உதவியை நாடுவோம். அத்துடன், முதியவர்கள் அனைவரும், நம் கனவுகளையும் நம்பிக்கைகளையும் இளையோரோடு பகிர்ந்துகொள்வோம். கனவு காணுதல் மற்றும் நம்பிக்கையுடனிருத்தல் என்ற கொடைகளால் அருள்பொழிவு செய்யப்பட்டவர்களாக வாழும் வரத்தை, ஆயர் மாமன்றத் தந்தையருக்கு, தூய ஆவியானவர் வழங்குவாராக. நம் இதயங்களைத் தூண்டிவிட்டு, தூய ஆவியாரின் வழிகளை நாம் கண்டுகொள்ள இது உதவுவதாக. தூய ஆவியாரின் குரலை அமைதியுடன் செவிமடுக்க, உலகின் பல பகுதிகளிலிருந்தும், ஆயர்கள் கூடிவந்திருக்கும் இவ்வேளையில், முதன்முறையாக, சீனாவிலிருந்தும் இரு ஆயர்கள், மாமன்றத்தில் கலந்துகொள்ள வந்துள்ளது குறித்து மகிழ்வோம். நம்பிக்கையால் அருள்பொழிவுச் செய்யப்பட்டவர்களாக, இந்த ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தைத் துவக்குவோம். அலைகடலில் தத்தளிப்பவர்களாக, விசுவாச சமூகத்தின் துணையற்ற அநாதைகளாக, வாழ்வின் பொருளும், வாழ்க்கைப் பாதையின் வழியும் தெரியாதவர்களாக, இளையோரை எண்ணிப்பார்க்கும் நம் மன நிலைகளைக் கைவிட்டு, நம் பார்வையையும் இதயத்தையும் விரிவுபடுத்த முன்வருவோம். இளையோரின் கண்களை உற்றுநோக்கி, அவர்களின் நிலைகளைப் புரிந்துகொள்ள முயல்வோம். நிச்சயமற்ற நிலை, ஒதுக்கிவைத்தல், வன்முறை பொன்றவற்றை, நம்பிக்கையின் துணைகொண்டு, இளையோருக்கு மாற்றியமைப்போம். இளையோர், மாண்பு நிறைந்த வழியில் தங்கள் வாழ்வை முன்னோக்கி எடுத்துச் செல்லும்போது, தடையாக இருப்பனவற்றை அகற்ற உதவுமாறு, நம்மை நோக்கிக் கேட்கின்றனர். அவர்களின் வாழ்வை இருளாக்கும், மற்றும், அடக்கி ஒடுக்கும் தடைகளிலிலிருந்து விடுவிக்க உதவும் வகையில் நம் அர்ப்பணத்தை அவர்கள் கேட்கின்றனர். ‘நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்’ (பிலி. 2:4), என்ற தூய பவுலின் வாரத்தைகள், இன்று, கனவு காணும் நம் தேவைக்கு அவசியமானதாக உள்ளன. நாம் தன்னலம் கருதாதவர்களாக, ஒருவருக்கொருவர் செவிமடுப்பவர்களாக செயல்படவேண்டிய அவசியம் உள்ளது. நேர்மையாக, செப உதவியுடன் நாம் பிறருக்கு செவிமடுக்கும்போது, இறைமக்களின் நிலைகளைப் புரிந்துகொள்ள அது உதவும். மக்களின் அழுகுரல்களுக்கு செவிமடுக்கும்போது, நம்மை அழைக்கும் கடவுளின் விருப்பத்தைப் புரிந்துகொள்ளலாம். அன்பு சகோதர சகோதரிகளே, இத்தருணத்தை, அன்னை மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைப்போம். அன்பு ஆயர் மாமன்ற தந்தையரே, மாண்பு, சுதந்திரம், தனி மனித உரிமை போன்றவற்றை உள்ளடக்கிய சமூகத்தை இளையோர் கட்டியெழுப்பவேண்டும் என்பதில் திருஅவை ஆர்வமாக உள்ளது. இளையோர், தங்கள் வாழ்வில், நம்பிக்கையை வெளிப்படுத்தி, தங்கள் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பவைகளில் நம்பிக்கை வைக்கட்டும். சுயநலப் போக்குகளை அவர்கள் கைவிடட்டும். வன்முறைக்கும் பகைமைக்கும் இட்டுச் செல்லும் வழிகளைக் கைவிட்டு, தராள மனதுடையவர்களாகவும், தூய மனதினராகவும், நேர்மையாளர்களாகவும், பிறரை மதிப்பவர்களாகவும் இளையோர் மாறுவார்களாக. இவ்வாறு தன் மறையுரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ் [2018-10-04 21:23:34]


இந்தோனேசியாவிற்கு திருத்தந்தை அனுப்பிய ஒரு இலட்சம் டாலர்கள்

தன் இளமையின் திட்டவட்டமான ஒரு தருணத்தில், அசிசி நகர் புனித பிரான்சிஸ், நற்செய்தியை வாசித்தார்" – திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் அக்டோபர் 4, இவ்வியாழனன்று, அசிசி நகர் புனித பிரான்சிஸ் திருநாள் கொண்டாடப்பட்டதையும், அக்டோபர் 3, வத்திக்கானில், இளையோரை மையப்படுத்தி உலக ஆயர்கள் மாமன்றம் துவங்கியுள்ளதையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார். "தன் இளமையின் திட்டவட்டமான ஒரு தருணத்தில், அசிசி நகர் புனித பிரான்சிஸ், நற்செய்தியை வாசித்தார். இன்றும், நற்செய்தி, வாழும் இயேசுவை அறிந்துகொள்ள உதவுகிறது; உன் உள்ளத்தில் பேசி, உன் வாழ்வை மாற்றுகிறது" என்ற சொற்களை, திருத்தந்தை, @pontifex என்ற தன் டுவிட்டர் முகவரியில் வெளியிட்டார். மேலும், அக்டோபர் 3, இப்புதனன்று காலை, ஆயர்கள் மாமன்றத் திருப்பலிக்கு முன்னதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காவில் அமைந்துள்ள 'பியெத்தா' அன்னை மரியா திரு உருவத்திற்கு முன், சீனாவிலிருந்தும் வியட்நாமிலிருந்தும் வந்திருந்த திருப்பயணிகளைச் சந்தித்தார். இதற்கிடையே, இந்தோனேசியாவின் நிலநடுக்கத்தில் பாதிக்கபப்ட்டோருக்கு அவசர உதவிகள் செய்வதற்கென, 1 இலட்சம் டாலர்கள் நிதி உதவியை திருத்தந்தை அனுப்பி வைத்துள்ளார் என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருஅவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. [2018-10-04 21:19:50]


இந்தோனேசியாவில் கத்தோலிக்க அமைப்புகளின் உதவிகள்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்ய, கத்தோலிக்க அமைப்புகள் இணைந்து வந்துள்ளன. ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் செப்டம்பர் 28ம் தேதி இந்தோனேசியாவின் Sulawesi தீவில் உருவான நிலநடுக்கம், சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்ய, கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்களும், தலத்திருஅவையும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளன என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது. இந்தோனேசியாவின் காரித்தாஸ் அமைப்பு, கத்தோலிக்க துயர் துடைப்பு பணிகள், மற்றும் பல்வேறு மறைமாவட்டங்களின் பணிக்குழுக்கள் இணைந்து வந்துள்ளன என்று கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால், அப்பகுதியில் அமைந்திருந்த விமான நிலையம் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களுக்குத் தேவையான உதவிகளை விமானங்கள் வழியே கொண்டு செல்வது கடினமாகியுள்ளது என்றும், பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் காரணமாக, சாலை வழி உதவிகளும் தாமதமாகின்றன என்றும் காரித்தாஸ் பணிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர். இந்நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றால், இதுவரை, 1407 பேர் இறந்துள்ளனர் என்றும், இன்னும் பலரது நிலை அறியப்படவில்லை என்றும் ஊடங்கங்கள் கூறுகின்றன. இதற்கிடையே, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கருகே, Soputan எனுமிடத்தில் எரிமலையிலிருந்து சாம்பல் வெளிப்பட துவங்கியுள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை .விடப்பட்டுள்ளது என்று ஆசிய செய்தி கூறுகிறது. [2018-10-04 21:11:52]


அருள்பணியாளர்கள், 'சூப்பர்' நாயகர்கள் அல்ல - திருத்தந்தை

அருள்பணியாளராக அழைக்கப்பட்டவர்கள், 'சூப்பர்' நாயகர்களாக செயலாற்ற அல்ல, மாறாக, காயமுற்று, இறந்து உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளனர் - திருத்தந்தை கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் திருஅவையின் உறுப்பினர்களில் ஒருசிலர் செய்த தவறுகளால், திருஅவை என்ற படகு, தற்போது மிக வலுவான எதிர்காற்றைச் சந்தித்து வருகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த பிரான்ஸ் நாட்டு அருள்பணியாளர்களிடம் கூறினார். பிரான்ஸ் நாட்டின் Créteil மறைமாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமான அருள்பணியாளர்களை, அக்டோபர் 1ம் தேதி, திங்களன்று, வத்திக்கான், கிளமெந்தீனா அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை, தன்னைச் சந்திக்க வந்திருந்த அம்மறைமாவட்ட ஆயர் Santier, மற்றும் அருள்பணியாளர்கள் வழியே, Créteil மறைமாவட்ட மக்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அருள்பணியாளராக அழைக்கப்பட்ட அனைவரும், அனைத்து சக்தியும் பெற்ற 'சூப்பர்' நாயகர்களாக செயலாற்ற அழைக்கப்படவில்லை, மாறாக, காயமுற்று, இறந்து, உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளனர் என்று, திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார். அடுத்துவரும் சில நாட்கள், இம்மறைமாவட்ட பிரதிநிதிகள் உரோம் நகரில் தங்கி, தங்கள் மேய்ப்புப்பணி குறித்த ஆலோசனைகளை மேற்கொள்ளும் வேளையில், தங்கள் சொல் வல்லமையால் அல்ல, மாறாக, தங்கள் வாழ்வால், அருள்பணியாளர்கள், இளையோரை எவ்விதம் திருஅவை வாழ்வில் இணைவதற்கு ஈர்க்கமுடியும் என்று சிந்திப்பது நல்லது என்று திருத்தந்தை ஆலோசனை வழங்கினார். அருள்பணியாளர்களின் வாழ்வில் வெளிப்படும் மகிழ்வு, வறியோர், மற்றும், சிறியோர் மட்டில் அவர்கள் காட்டும் அக்கறை ஆகியவை வழியே, அவர்கள் கிறிஸ்துவின் சீடர்கள் என்ற பணியை திறம்பட ஆற்றமுடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறைமாவட்ட அருள்பணியாளர்களிடம் எடுத்துரைத்தார். [2018-10-02 02:10:09]


இந்தோனேசியா சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு செபம்

நிலநடுக்கம், மற்றும், சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேசிய மக்களுக்காக செப உறுதியை வழங்கியதோடு, விசுவாசிகளோடு இணைந்து செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் இந்தோனேசியாவின் சுலாவேசி பகுதியில், நிலநடுக்கம், மற்றும், சுனாமியால் உயிரிழந்தவர்கள், மற்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு, தன் செப உறுதியை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். மிகப்பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்துள்ள இம்மக்களுக்காக தான் செபித்ததாகவும், காயமுற்றோர், வீடுகளையும் வேலைகளையும் இழந்தோர் என அனைவரையும் தன் செபத்தில் நினைவுகூர்ந்ததாகவும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதிக்கப்பட்டோருக்கு இறைவன் ஆறுதலை வழங்குவதோடு, இம்மக்களுக்கு உதவ முன்வந்திருப்போருக்கு ஊக்கத்தையும் வழங்குவாராக என வேண்டினார். இந்நோக்கங்களுக்காக அன்னை மரியின் பரிந்துரையை வேண்டி, 'அருள் நிறை மரியே' என்ற செபத்தை, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த அனைவருடனும் இணைந்து செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்தோனேசியாவின், மத்திய மாநிலமான சுலவேசியில் இடம்பெற்ற நிலநடுக்கம், மற்றும், சுனாமியால், இதுவரை, குறைந்தது, 832 பேர் உயிரிழந்துள்ளதாகவும், எண்ணற்றோர் காணாமல் போயுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென அப்பகுதியின் மனாடோ மறைமாவட்டம், குழு ஒன்றை அமைத்து, நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது [2018-10-02 02:04:45]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்