வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்புதிய கருத்தரங்கு ஒன்றைத் தொடங்கிவைக்கும் திருத்தந்தை

தேவ அழைத்தல்களுக்குப் புதுத் தூண்டுதல்களை வழங்கும் நோக்கத்தில், கற்புடைமை, தேவ அழைத்தல், பாரம்பரியம் என்ற மையக்கருத்துடன் கருத்தரங்கு ஒன்றைத் திருப்பீடத்தில் தொடக்கிவைக்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆயர்களுக்கான திருப்பேராயம், மற்றும் தேவ அழைத்தல் குறித்து ஆய்வு செய்யும் மையம் ஆகியவைகளினால் ஏற்பாடு செய்யப்பட்டு, பிப்ரவரி 17 முதல் 19 வரை, வத்திக்கானின் புனித திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கைத் திருத்தந்தை துவக்கிவைப்பார். “குருத்துவத்தின் அடிப்படை இறையியல் நோக்கி” என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில், பயணிக்கும் திருஅவையின் உறுப்பினர்களாக ஆயர்கள், அருள்பணியாளர்கள், பொதுநிலையினர், துறவறத்தார் என பல்வேறு தரப்பு பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என அறிவித்துள்ளார் ஆயர்களுக்கான திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் Marc Quellet. கத்தோலிக்கத் தலைமைப்பீடத்தில் உள்ள பல்வேறு உயர் துறைகளின் தலைமையில் வழிநடத்தப்படவுள்ள இந்த மூன்று நாள் கருத்தரங்கில் “பாரம்பரியமும் புதிய கீழ்வானங்களும்”, “தூய மூவொரு கடவுள், மறைப்பணி, அருளடையாளங்கள்”, “கற்புடைமை, தனிவரம், ஆன்மிகம்” என்ற மூன்று தலைப்புகளில் வழிகாட்டுதல் உரைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. [2022-02-06 22:24:14]


Querida Amazonia ஏட்டை திருத்தந்தை வெளியிட்டதன் இரண்டாம் ஆண்டு

தென் அமெரிக்காவின் Amazon பகுதி மக்கள் வாழ்வு, மற்றும் உண்மை மாற்றத்திற்கான அவர்களின் குரலை மதித்து ஏற்றுச் செயல்பட திருஅவை வழங்கிய வாக்குறுதி, என இரண்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டு வருவதாக உலக ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலர் உரைத்துள்ளார். Amazon பகுதி குறித்த ஆயர் மாமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவைகளின் தொகுப்பை 2020ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டதன் இரண்டாம் ஆண்டை முன்னிட்டு செய்தி வெளியிட்ட கர்தினால் Mario Grech அவர்கள், Querida Amazonia என்ற தலைப்பில் திருத்தந்தையால் வெளியிடப்பட்ட ஏடு, எதிர்பார்க்கப்பட்ட பயனளித்துக்கொண்டிருக்கிறது என்றார். அன்றைய பரிந்துரைகள் எனும் விதைகள் இன்னும் தொடர்ந்து விதைக்கப்பட்டு வருவதாகவும், பல பலன் கொடுத்துள்ளதாகவும், ஏனையவை பலன் கொடுக்கும் நிலையில் உள்ளதாகவும் உரைத்த உலக ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் Grech அவர்கள், சமூக, கலாச்சார, சுற்றுச்சூழல், மற்றும், திருஅவைத் தொடர்புடைய கனவுகளை உள்ளடக்கிய Querida Amazonia ஏடு, Amazon பகுதி மக்களுக்ககான திருத்தந்தையின் அன்புக் கடிதமாகவும் உள்ளது எனவும் எடுத்துரைத்தார். Amazon பகுதிவாழ் ஏழை மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேய்ப்புப்பணித் திட்டங்கள் தீட்டப்படவேண்டும் என்ற திருத்தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க, பல திட்டங்கள் மக்கள் நலன் கருதி திருஅவையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால் Grech. [2022-02-06 22:17:24]


Querida Amazonia ஏட்டை திருத்தந்தை வெளியிட்டதன் இரண்டாம் ஆண்டு

[2022-02-06 22:15:57]


திருப்பீடத்தில் வேதியலாளர்களை சந்தித்தார் திருத்தந்தை

சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள் இடம்பெற்ற வரும் இன்றயைச் சூழலில், தொழிலாளர் சமூகத்துடன் திருஅவையின் நெருக்கத்தை வெளிப்படுத்த விரும்புவதாக சனிக்கிழமையன்று அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். ஜனவரி 29, சனிக்கிழமையன்று, தோல் தயாரிப்பு பொருள்கள் தொடர்பான வேதியலாளர்கள் குழுவைத் திருப்பீடத்தில் சந்தித்தது உரை வழங்கி திருத்தந்தை, பழமகாலம் தொட்டே உலகில் இருந்து வரும் தோல் தயாரிப்பு தொழிலில் தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களைப் புகுத்தி செயலாற்றி வரும் வேதியல் வல்லுனர்களின் பணி குறிப்பிடும்படியானது என எடுத்துரைத்தார். தானும் வேதியல் துறையில் பயின்றதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெருந்தொற்று நோயில் மேலும் தீவிரமடைந்துள்ள சமூகப் பொருளாதார நெருக்கடிகளால் தொழிலாளர்கள் துயரங்களை அனுபவித்து வருவதையும் சுட்டிக்காட்டினர். பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள், எக்காலத்திலும் தொழில்துறையில் நீதியையும் பாதுகாப்பையும் ஒதுக்கிவைப்பதை நியாயப்படுத்த முடியாது என்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை. தோல் தொடர்புடைய உற்பத்தித் தொழிலில் ஈடுபடுவோர், அனுபவம் வாய்ந்த முதியோர்களின் ஆலோசனைகளையும் இளையோரின் ஆர்வத்தையும் ஒன்றிணைத்து சமுதாத்திற்குப் பங்காற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேதியல் பொருளகள் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வேளையில், சுற்றுப்புறப் பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார். [2022-01-29 22:52:27]


மனித மாண்பு மீண்டும் சிதைக்கப்படாத எதிர்காலத்தை உருவாக்க

ஜனவரி 27 வியாழன் அன்று சர்வதேச நாத்சி படுகொலைகள் நினைவு தினத்தை உலகம் சிறப்பித்துவரும் நிலையில், நாத்சி ஆட்சியின் கைகளில் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கான மக்கள், குறிப்பாக யூதர்கள் பற்றி இளைய தலைமுறையினருக்கு நினைவூட்டுமாறு குடும்பங்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கல் வலியுறுத்தினார். ஜனவரி 26, இப்புதனன்று தனது புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், ஷோவா (Shoah) என்றும் அழைக்கப்படும் நாத்சி படுகொலைகளை நினைவு கூருவதற்கு உலகம் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் எனத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வேண்டுகோளை விடுத்தார். 1945 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி ஆஷ்விச்-பிர்கெனாவ் (Auschwitz-Birkenau) படுகொலை முகாமிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்டதன் நினைவாக, சர்வதேச நாத்சி படுகொலை நினைவு தினம் ஜனவரி 27, வியாழனன்று அனுசரிக்கப்படுகிறது. மில்லியன் கணக்கான யூதர்கள், பல்வேறு நாட்டவர்கள் மற்றும் மத நம்பிக்கையாளர்கள் கொன்றழிக்கப்பட்டதை உலகம் நினைவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பாவின் ஏறத்தாழ 6 மில்லியன் யூதர்கள், அல்லது கண்டத்தின் மூன்றில் இரண்டு பங்கு யூத மக்கள், நாத்சி ஆட்சியின் கைகளில் இனப்படுகொலை செய்யப்பட்டதாக வேதனைத் தெரிவித்தார். அனைவருமே, அதிலும் குறிப்பாக கல்வியாளர்களும், குடும்பங்களும், மனித வரலாற்றில் நிகழ்ந்த இந்த இருண்ட பக்கத்தின் கொடூரங்கள் பற்றிய விழிப்புணர்வை, இளைய தலைமுறையினருக்கு ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, அப்போதுதான் மனித மாண்பு மீண்டும் ஒருமுறை மிதிக்கப்படாத எதிர்காலத்தை உருவாக்க முடியும்" என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டு, கத்தோலிக்க அருளப்பணியாளர் புனித மாக்சிமிலியன் கோல்பேயும், அவருடன் கொல்லப்பட்ட 1.1 மில்லியன் மக்களும் வாழ்ந்த Auschwitz-Birkenau வதை முகாமின் எஞ்சியிருக்கும் பகுதிகளைத் திருத்தந்தை பிரான்சிஸ் பார்வையிட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் எந்த வார்த்தையும் பேசவில்லை, ஆனால், முகாமில் இருந்து மீட்கப்பட்டு உயிருடன் வாழும் சிலரை மட்டுமே சந்தித்தார். அப்போது அங்கிருந்த வரவேற்பறை நன்மதிப்பு புத்தகம் ஒன்றில், "ஆண்டவரே, உமது மக்கள்மேல் இரக்கமாயிரும். ஆண்டவரே, இவ்வளவு கொடுமைகளையும் மன்னியுங்கள்!” என்று எழுதினார். [2022-01-27 22:29:57]


புனித பவுலடியார் மனமாற்ற விழா குறித்த திருத்தந்தையின் மறையுரை

ஜனவரி 18 முதல் 25 வரை திருஅவையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்வ ஒன்றிப்பு செப வாரத்தின் இறுதி நாளான ஜனவரி 25, இச்செவ்வாயன்று, அதாவது, புனித பவுலின் மனமாற்ற விழாவன்று மாலை உரோம் நேரம் 5.30 மணிக்கு, இந்திய நேரம் இரவு 10 மணிக்கு ஏனைய கிறிஸ்தவ சபை பிரநிதிநிதிகளுடன் இணைந்து செபவழிபாடு ஒன்றை நடத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். தனது மறையுரைக்கான மையக்கருத்தாக மூன்று ஞானிகளின் பயணத்தை எடுத்துக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1. கிழக்கில் அவர்களின் தொடக்கம் 2. ஜெருசலேம் வழியாக அவர்களின் பாதை 3. பெத்லகேமுக்கு அவர்களின் இறுதி வருகை, ஆகிய தலைப்புகளில் தன் சிந்தனையை வழங்கினார். முதலாவதாக, சூரியன் உதிக்கும் கிழக்கில் விண்மீனைக் கண்ட ஞானிகள் தங்கள் சொந்த அறிவு மற்றும் மரபுகளில் திருப்தி அடையாமல், அதைவிட மேலான ஒன்றை அடைய விரும்பினர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சோர்வுறச் செய்யும் நீண்ட பாதையைக் குறித்து கவலைப்படாமல் விண்மீனான இயேசுவையும், ஒற்றுமைக்கான அவரது அழைப்பையும் பின்பற்றுமாறு அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். இரண்டாவதாக, ஏரோதும் அவருடன் எருசலேம் மக்களும் கலக்கம் அடைந்திருந்த வேளையில், ஞானிகள் மூவரும் எருசலேம் திருநகருக்குக் கொண்டுவரப்பட்டார்கள் என்றும், புனித நகரத்தில், ஞானிகள் விண்மீனின் ஒளியை காணவில்லை, ஆனால் இந்த உலகின் இருண்ட சக்திகளின் எதிர்ப்பை அனுபவித்தனர் என்றும் தெரிவித்தார். முழு கிறிஸ்தவ ஒற்றுமையை நோக்கிய நமது பயணத்தில், அந்த மக்களை முடக்கிய அதே காரணத்திற்காக நாமும் குழப்பம், மற்றும் பயத்தால் பயணத்தின் இடையே நிறுத்தப்படலாம் என்று கூறிய திருத்தந்தை, நமது பாரம்பரியங்களையும் பழக்கவழக்கங்களையும் சீர்குலைக்கும் நவீனமயங்களுக்குப் பயப்படாமல், ஒருவரையொருவர் நம்பி ஒன்றாகப் பயணிக்க கிறித்தவ மக்களுக்கு அழைப்பு விடுத்தார். மூன்றாவதாக, ஞானிகள் மூவரும் பெத்லேகம் சென்று இயேசுவைக் கண்டு வணங்கினார்கள் என்பது நற்செய்திகளின் இறுதியில் கலிலேயா மலையில் உயிர்த்த ஆண்டவர் முன்பு, சீடர்கள் அனைவரும் அவரை வணங்கினார்கள் என்பதை முன்னுரைக்கிறது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை. மேலும், இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒற்றுமையின் முழுமைக்காக ஏங்கும் சமகால கிறிஸ்தவர்களுக்கு இறைவாக்கு நிறைவேறும் அடையாளங்களாக மாறுகின்றன என்றும், இந்த ஒற்றுமையை, இறைவனை வணங்குவதன் வழியாக மட்டுமே அடைய முடியும் என்றும் விளக்கிய திருத்தந்தை, முழு ஒற்றுமையை நோக்கிய நமது பயணத்திற்கு, இன்னும் தீவிரமான இறைவேண்டலும், இறைவழிபாடும் தேவை என்று வலியுறுத்தினார். ஞானிகள் குழந்தை இயேசுவுக்கு கொடுத்த பரிசுப்பொருள்கள் குறித்துப் பேசியபோது, இது இறைவன் நம்மிடமிருந்து பெற விரும்பும் பரிசுகளை அடையாளப்படுத்துகிறது என்று கூறிய திருத்தந்தை, தங்கம், கடவுள் நமது வாழ்வில் முதல் இடத்தில் இருக்கவேண்டும் என்பதையும், தூபம், இறைவேண்டலின் முக்கியத்துவத்தையும், சிலுவையிலிருந்து இறக்கப்பட்ட இயேசுவின் உடலை பெருமைப்படுத்த நம்மை அழைக்கும் வெள்ளைப்போளம், ஏழைகளின் காயங்களில் பிரதிபலிக்கும் இயேசுவினுடைய துன்புறும் உடலுக்கான அக்கறை குறித்து நம்மிடம் பேசுகிறது என்றுரைத்தார். இறுதியாக, ஞானியரின் வாழ்வை பின்பற்ற அழைத்த திருத்தந்தை, மூன்று ஞானியரும் வேறு வழியாக தங்களின் நாடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள் என்றும், புனித பவுலடியாரும் மனமாற்றம் பெற்ற பிறகு வேறுவழியை அதாவது கிறிஸ்துவின் வழியை தெரிந்துகொண்டார் என்றும் எடுத்துக்காட்டி, இறைவன் நமக்குச் சுட்டிக்காட்டும் பணிவு, சகோதரத்துவம் மற்றும் இறை வணக்கத்திற்குரிய பாதைகளைத் தெரிந்துகொள்வோம் என்று கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார். [2022-01-27 22:27:06]


உக்ரைன் நாட்டில் பதட்ட நிலைகள் அதிகரிப்பது குறித்து திருத்தந்தை

உக்ரைன் நாட்டின் அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அந்நாட்டில் பதட்ட நிலைகள் அதிகரித்து வருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை. ஜனவரி 23, இஞ்ஞாயிறன்று நண்பகல் மூவேளை செப உரை இறுதியில் இதனை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜனவரி 26, புதன்கிழமையன்று, அமைதிக்காக செபிக்கும் நாளாகக் கடைபிடிக்க வேண்டும் என அனைவருக்கும் அழைப்புவிடுத்தார். உக்ரைன் நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தலாகவும், ஐரோப்பாவின் பாதுகாப்பு நிலைகளுக்கு, ஆபத்தாகவும் மாறி வரும் அந்நாட்டின் பதட்ட நிலைகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை, இன்றைய மோதல்கள் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தையும் சுட்டிக்காட்டினார். பிரிவினைவாதங்களைக் கைவிட்டு, மனிதகுல உடன்பிறந்த நிலைக்காக நல்மனம் கொண்ட அனைவரும் உழைக்க வேண்டும் என, இறைவனை நோக்கி அனைவரும் செபிப்போம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை, ஜனவரி 26, புதன்கிழமையன்று அமைதிக்கான செப நாளாகக் கடைபிடிப்போம் எனவும் வேண்டினார். 2013ம் ஆண்டு இறுதியில் உக்ரைன் நாடு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் அரசியல், பொருளாதாரத் தொடர்புகளைக் கொள்ளத் துவங்கியதிலிருந்தும், 2014ம் ஆண்டு மார்ச் மாதம் சுயாட்சித் தீவான Crimeaவை இரஷ்யா தன்னோடு இணைத்துக் கொண்டதிலிருந்தும், இரஷ்ய ஆதரவுடன் உக்ரைன் நாட்டின் Donetsk மற்றும் Lahansk பகுதிகள் தங்களை சுதந்திரப் பகுதிகள் என அறிவித்ததிலிருந்தும், தற்போது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இரஷ்ய இராணுவ வீரர்கள் உக்ரைன் எல்லையில் நிறுப்பட்டிருப்பதாலும் பதட்ட நிலைகள் தொடர்கின்றன. [2022-01-25 23:47:51]


Tonga தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவேண்டல்

Tonga தீவில் ஜனவரி மாதம் 15ம் தேதி இடம்பெற்ற எரிமலை வெடிப்பு, உலக மக்களுக்கு வெகுதூரமாகத் தெரிந்தாலும், இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்கள் நமக்கு அருகாமையிலேயே உள்ளன என எடுத்துரைத்தார் கர்தினால் Michael Czerny. பசிபிக் பெருங்கடலிலுள்ள Tonga தீவு நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனவரி 24, திங்கள் மாலையில் உரோம் நகரின் Santa Maria பேராலயத்தில் செபவழிபாடு ஒன்றை தலைமை தங்கி நடத்திய, ஒருங்கிணைத்த மனிதகுல வளர்ச்சிக்கான இடைக்காலத் தலைவர், கர்தினால் Czerny அவர்கள், மூன்று உயிர்கள் இழக்கப்பட்டுள்ள நிலையில், பொருள் சேதத்தின் மதிப்பு மிகப் பெரியது என்றார். மக்கள் தங்கள் மன தளர்ச்சிகளிலிருந்து வெளிவரவும், இயற்கைமீதான வன்முறைகள் களையப்படவும். புதிய சமூகக் கட்டுமானப் பணிகள் துவங்கப்படவும் இறைவனை நோக்கி ஒன்றிணைந்து செபிப்போம் என இச்செபவேளையில் அனைவருக்கும் அழைப்புவிடுத்தார் கர்தினால் Czerny. இவ்வுலகில் வாழும் மக்களிடையே வேறுபாடுகளும் பன்முகத்தன்மைகளும் இருப்பினும், அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்பதை மனதில் கொண்டவர்களாக ஒருவர் ஒருவருக்காக இறைவேண்டல் செய்வோம் என்ற அழைப்பையும் கர்தினால் Czerny அவர்கள் முன்வைத்தார். சான் எஜிதியோ என்ற பிறரன்பு அமைப்பால் உரோமின் Trastevereயிலுள்ள புனித மரியன்னை பேராலயத்தில் Tonga மக்களுக்கான செப வழிபாட்டில் உரையாற்றிய கர்தினால் Czerny அவர்கள், அந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரின் ஒன்றிணைந்த கரங்கள் தேவைப்படுகின்றன என்றார். [2022-01-25 23:42:07]


உலகளவில் கிறிஸ்தவர்களுக்கெதிராக அதிகரித்து வரும் துன்புறுத்தல்கள

ஜனவரி 19, புதன்கிழமை அன்று, Open Doors International அமைப்பு வெளியிட்ட 2022 உலக கண்காணிப்பு பட்டியல் (WWL) ஒன்றை வெளியிட்டுள்ளது. நெதர்லாந்தை மையமாகக் கொண்ட இந்த மதச்சார்பற்ற அமைப்பு, அதன் 2022 உலக கண்காணிப்பு பட்டியலில், கிறிஸ்தவர்கள் தங்கள் மத நம்பிக்கைக்காக மிக மோசமான துன்புறுத்தலை அனுபவிக்கும் முதல் 50 நாடுகளைத் தரவரிசைப்படுத்தியுள்ளது. அதன்படி, 2020ம் ஆண்டு அக்டோபர் 1 முதல், செப்டம்பர் 30, 2021 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய கணக்கெடுப்பில், குறிப்பாக, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் துன்புறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதையும், COVID 19 தொற்றுநோய் பாகுபாட்டை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. இதுகுறித்து முழுமையாகப் பகுப்பாய்வு செய்துள்ள, மதச் சுதந்திரத்திற்கான சர்வதேச நிறுவனம் (IRF), 36 கோடிக்கும் அதிகமான மக்கள் (அதாவது உலகளவில் 7 இல் 1 பேர்), கடந்த ஆண்டு தங்கள் நாட்டில் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளை அனுபவித்தனர் என்று எடுத்துக்காட்டுகிறது. மேலும், ஒட்டுமொத்தமாக, 5,898 கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், 5,110 வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டதாகவும் அல்லது மூடப்பட்டதாகவும், 6,175 கிறிஸ்தவர்கள் விசாரணையின்றி கைது செய்யப்பட்டதாகவும், மற்றும் 3,829 பேர் கடத்தப்பட்டதாகவும் புள்ளிவிபரங்களுடன் தெரிவிக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு எதிரான நாடுகளில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் இருப்பதாகவும், நைஜீரியா மற்றும் இந்தியாவில் வன்முறைகளும் தாக்குதல்களும் தொடர்ந்து அதிகரிப்பதாகவும் கூறும் இப்பட்டியல், இத்தகைய வன்முறைச் செயல்களால் கிறிஸ்தவர்கள் கட்டாய இடம்பெயர்தலுக்கு உள்ளாகி வருவதோடு, தாக்குதல்களால் கிறிஸ்தவப் பெண்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று மேலும் தெரிவிக்கிறது. [2022-01-23 18:27:09]


பொதுநிலையினருக்குப் புதிய பணிகள் வழங்குகிறார் திருத்தந்தை

ஜனவரி 23, ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெறும் இறைவார்த்தையின் ஞாயிறு வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று சிறப்பிக்கிறார் என்று புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியை ஊக்குவிப்பதற்கான திருப்பீட அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியை ஊக்குவிப்பதற்கான திருப்பீட அமைப்பு வழங்கியுள்ள விளக்கத்தின்படி, இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் வழிபாட்டு முறை முக்கியமான சில வழிமுறைகளை உள்ளடக்கியுள்ளது என்றும், இந்த கொண்டாட்டத்தின்போது, ​​திருத்தந்தை புதிதாக நிறுவப்பட்ட மறைபோதகப் பணியை, பெண்கள் மற்றும் ஆண்கள் என பல விசுவாசிகளுக்கு வழங்குவார் என்றும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்படவிருக்கும் திருப்பலியில் மறையுரைக்குப் பின்பு, இறைவார்த்தை மற்றும் மறைக்கல்வி ஆசிரியப் பணிக்கான ஆணை (ministry of the Lectorate and the ministry of Catechist) வழங்கப்படும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.. தென் கொரியா, பாகிஸ்தான், கானா மற்றும் இத்தாலியின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுநிலையினரின் பிரதிநிதிகளாக வருபவர்கள் இறைவார்த்தைப் பணிக்கான ஆணையைப் பெறுவார்கள் என்றும், பெரு, பிரேசில், போலந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து வரும் சிலர் மறைக்கல்வி ஆசிரியப் பணிக்கான ஆணையைப் பெறுவார்கள் எனவும் அறிக்கைத் தெரிவிக்கிறது. கத்தோலிக்கர்கள் அனைவரும் இறைவார்த்தையை அறிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதற்காக, 30 செப்டம்பர் 2019 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் இக்கொண்டாட்டத்தை நிறுவியதிலிருந்து, இறைவார்த்தை ஞாயிறு ஆண்டுதோறும் பொதுக் காலத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை (இந்த ஆண்டு ஜனவரி 23 அன்று நிகழும்) அனுசரிக்கப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது. [2022-01-22 23:06:10]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்