வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்நவம்பர் 19, வறியோரின் உலக நாள், முதல் முறையாக...

திருவழிபாட்டின் பொதுக்காலம் 33ம் ஞாயிறு, நவம்பர் 19ம் தேதியன்று சிறப்பிக்கப்படும் வேளையில், அது, முதல் முறையாக, வறியோரின் உலக நாளாக சிறப்பிக்கப்படும். வறியோரின் முதல் உலக நாளான, நவம்பர் 19, ஞாயிறு காலை 10 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருப்பலி நிறைவேற்றுவார் என்று, திருப்பீட வழிபாட்டுத் துறையின் தலைவர், அருள்பணி குயிதோ மரீனி அவர்கள் அறிவித்துள்ளார். 2015, 2016ம் ஆண்டுகளில் சிறப்பிக்கப்பட்ட இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களோடு உரோம் நகரில் யூபிலியை சிறப்பித்த திருத்தந்தை, அதன் விளைவாக, வறியோரின் உலக நாளை உருவாக்கினார். வறியோரின் உலக நாள், இவ்வாண்டு முதன்முறையாக சிறப்பிக்கப்படுவதையொட்டி, "வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நாம் அன்புகூருவோம்" என்ற தலைப்பில், இவ்வாண்டு சூன் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.ஆதாரம் : (வத்திக்கான் வானொலி) [2017-11-10 02:20:39]


சதையைத் தொட்டு, விசுவாசத்தை புதுப்பிக்க...

கடந்த பல வாரங்களாக, கிறிஸ்தவ நம்பிக்கை குறித்த கருத்துக்களை, புதன் மறைக்கல்வி உரைகளில், ஒரு தொடராக வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரத்திலிருந்து, திருப்பலி குறித்த ஒரு புதிய மறைக்கல்வி தொடரைத் துவக்கியுள்ளார். “நானே வாழ்வு தரும் உணவு. என் சதையையே உங்களுக்கு உணவாகத் தருகிறேன், அதை உண்பவர் என்றுமே வாழ்வார்”, என இயேசு கூறிய பகுதியான, யோவான் நற்செய்தி பிரிவு 6, 47 முதல் 51 வரையுள்ள இறைவாக்கியங்கள் முதலில் வாசிக்கப்பட, திருப்பலி குறித்த மறைக்கல்வி தொடருக்கு ஒரு முன்னுரையாக, இப்புதன் மறைக்கல்வி உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். அன்பு சகோதர சகோதரிகளே, திருப்பலி குறித்த ஒரு புதிய மறைக்கல்வித் தொடரை இன்று நாம் துவக்குகின்றோம். திருப்பலி என்பது திருஅவையின் இதயம், மற்றும் திருஅவை வாழ்வின் ஆதாரம். திருப்பலியின் புனிதத்தைக் காப்பதற்கென, எத்தனையோ பேர் மறைசாட்சிகளாக உயிர் துறந்துள்ளனர். இயேசுவின் உடல் மற்றும் இரத்தத்தில் நாம் பங்குபெறுவதன் வழியாக, நாம் மரணத்திலிருந்து வாழ்வுக்கு கடந்து செல்கிறோம் என்ற இயேசுவின் வாக்குறுதியை உறுதி செய்வதாக, இந்த மறைசாட்சிகளின் சாட்சிய வாழ்வு உள்ளது. ஒவ்வொரு திருப்பலியின்போதும், இயேசுவின் சிலுவைப் பலியோடு நம் வாழ்வும் காணிக்கையாக இணைக்கப்படுகின்றது. இவ்வாறு, தந்தையாம் இறைவனுக்கு ஏற்புடையதாக, நம் நன்றி, மற்றும், புகழ்பாடலின் காணிக்கையாக இயேசுவில் மாறும் நம் வாழ்வு, இவ்வுலகின் மீட்புக்காக வழங்கப்படுகிறது. திருப்பலியை, விசுவாசிகள், முழுமையான வகையில் புரிந்துகொள்ளவும், அதில், சிறந்த முறையில் பங்குகொள்ளவும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் அழைப்பு விடுத்த திருவழிபாட்டு புதுப்பித்தல்கள், உதவுவதாக இருந்தன. திருப்பலியில், மெய்யாகவே பிரசன்னமாக இருக்கும் இயேசு கிறிஸ்து, புனித தோமாவைப்போல், நாமும், அவரின் சதையைத் தொடவும், அதன் வழி நம் விசுவாசத்தை புதுப்பிக்கவும் உதவுகிறார். அடுத்துவரும் வாரங்களின் புதன் மறைக்கல்வி உரைகளில், நாம், இந்த உன்னத கொடை குறித்த உண்மையுணர்ந்து போற்றுவதில் மேலும் வளர்வோமாக. நம் வாழ்விற்கு பாதையையும் உன்னத அர்த்தத்தையும் வழங்கும் திருப்பலியின் ஆன்மீக வளத்தில் முழுமையான விதத்தில் பங்கு பெறுவது குறித்தும், வரும் வாரங்களில், சிந்திப்போம். இவ்வாறு, தன் புதன் பொது மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-08 20:52:47]


டெக்ஸாஸ் வன்முறைக்கு திருத்தந்தையின் இரங்கல் தந்தி

மதியற்ற வன்முறையின் காரணமாக, Sutherland Springs என்ற இடத்தில் உள்ள முதல் பாப்டிஸ்ட் ஆலயத்தில் நடைபெற்ற உயிரிழப்புகள் குறித்து, ஆழ்ந்த வேதனையடைந்திருப்பதாக, திருத்தந்தை பிரான்ஸ் அவர்கள், தந்திச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்ஸாஸ் மாநிலத்தின் Sutherland Springs எனுமிடத்தில், நவம்பர் 5, ஞாயிறன்று, ஆலயத்தில், காலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான 26 பேர், மற்றும் காயமுற்ற 20 பேர், மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, திருத்தந்தையின் பெயரால், ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவிக்கும் தந்தியொன்றை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், நவம்பர் 7, இச்செவ்வாயன்று அனுப்பியுள்ளார். முதல் பாப்டிஸ்ட் சபையினருக்கு தன் அனுதாபங்களைத் தெரிவிக்குமாறு கூறும் திருத்தந்தையின் தந்திச் செய்தி, டெக்ஸாஸ் மாநிலத்தின் சான் அந்தோனியோ உயர் மறைமாவட்டத்தின் பேராயர், Gustavo Garcia-Siller அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஞாயிறன்று நடைபெற்ற இந்தக் கோர நிகழ்வைத் தொடர்ந்து, பேராயர் Garcia-Siller அவர்கள் வெளியிட்ட ஒரு செய்தியில், இறைவனின் இல்லத்தில் வழிபடக் கூடியிருந்த, குழந்தைகள், வயதானோர் அனைவர்மீதும் நடத்தப்பட்ட இந்த வன்முறை, நம்மை ஆழ்ந்த அதிர்ச்சியில் நிறைத்துள்ளது என்று கூறியுள்ளார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-08 20:46:33]


வத்திக்கானில் அணு ஆயுதக்களைவு குறித்த உலகக்கருத்தரங்கு

உலகில் ஆயுதக்களைவை உருவாக்கும் வாய்ப்புக்கள் குறித்த ஓர் உலகக் கருத்தரங்கு, வருகிற வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் வத்திக்கானின் ஆயர் மன்ற புதிய அரங்கில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'அணு ஆயுதமற்ற உலகம், மற்றும் ஒன்றிணைந்த ஆயுதக்களைவிற்கு வாய்ப்புக்கள்' என்ற தலைப்பில் வத்திக்கானில் இடம்பெறவுள்ள இந்த இரண்டு நாள் கருத்தரங்கை, ஒருங்கிணைந்த மனிதகுல முன்னேற்ற திருப்பீட அவை ஏற்பாடு செய்துள்ளது. எவ்வித பாகுபாடுமின்றி அனைவரின் வாழ்க்கைத்தரமும் மேம்படுத்தப்படவேண்டும், இயற்கை ஆதாரங்கள் மக்களின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படவேண்டும், அமைதிக்காக உழைக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துவரும் விண்ணப்பங்களுக்கு ஏற்ப, இந்த உலகக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென, ஒருங்கிணைந்த மனிதகுல முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் அறிவித்தார். இக்கருத்தரங்கில், நொபெல் விருதுபெற்ற 11 பேர், ஐ.நா. மற்றும் NATO அதிகாரிகள், அரசுப் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள், பல்வேறு மதங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் என, எண்ணற்ற வல்லுனர்கள் கலந்துகொள்வர் என்றும், இக்கருத்தரங்கின் பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று நண்பகலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-07 21:44:41]


எகிப்தின் இஸ்லாமியத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

எகிப்தின் சுன்னி இஸ்லாம் மதத் தலைவர் அஹ்மது முகமது அல் தாயிப் அவர்கள், இச்செவ்வாய்க் காலையில், திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார். எகிப்தின் கெய்ரோ பல்கலைக் கழகத்தின் தலைவரான அஹ்மது முகமது அல் தாயிப் அவர்கள், ஏற்கனவே, திருத்தந்தையை, 2016ம் ஆண்டு, திருப்பீடத்திலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கெய்ரோவிலும், சந்தித்து உரையாடியுள்ளார். மேலும், இச்செவ்வாயன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி, 'நம் பக்கத்தில், நம்மோடு நடக்கும் நாசரேத்தூர் இயேசு, தன் சொற்கள், மற்றும், தான் ஆற்றும் அடையாளங்கள் வழியாக, தந்தையாம் இறைவனின் அன்பெனும் உயரிய மறையுண்மையை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்' என்பதாக இருந்தது. இதற்கிடையே, திருப்பீட பொது நிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு அவையின் ஒரு பிரிவாக இயங்கிவரும் திருப்பீட வாழ்வுத் துறையின் நேரடிச் செயலராக, இத்தாலியின் பேராசிரியர் கபிரியெல்லா கம்பினோ அவர்களையும், திருப்பீடப் பொதுநிலையினர் துறையின் நேரடித் துணைச் செயலராக, இத்தாலியின் முனைவர் லிண்டா கிசோனி என்பவரையும் நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-07 21:25:08]


அன்பு, எளிமை வழியாக சான்று பகர்ந்த 'புன்னகை சகோதரி'

மேலும், கடந்த சனிக்கிழமையன்று, இந்தியாவின் இந்தூர் நகரில், அருள்சகோதரி இராணி மேரி வட்டாலில் அவர்கள், அருளாளராக அறிவிக்கப்பட்டது குறித்தும், மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். 'தன் அன்பு மற்றும் எளிமை வழியாக, கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்த அருள்சகோதரி இராணி மேரியின் தியாகம், குறிப்பாக, இந்திய மண்ணில் விசுவாசம் மற்றும் அமைதியின் விதையாக உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இரக்கம் நிறைந்தவராக வாழ்ந்த அச்சகோதரியை, 'புன்னகை சகோதரி' என மக்கள் அழைத்து வந்ததையும் சுட்டிக்காட்டினார். கடந்த சனிக்கிழமையன்று காலையில், இந்தூர் நகரின் புனித பவுல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள் தலமையில், இந்தியாவின் நான்கு கர்தினால்கள், எண்ணற்ற ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் கலந்துகொண்ட திருப்பலியில், இறையடியார் இராணிமேரி வட்டாலில் அவர்கள், அருளாளராக அறிவிக்கப்பட்டார். 1995ம் ஆண்டு அச்சகோதரியை 54 முறைகள் கத்தியால் குத்திக் கொலை செய்து, பின் ஆயுள் தண்டனைப் பெற்று, மனந்திருந்திய சமந்தர் சிங் என்பவரும், இத்திருப்பலியில் கலந்துகொண்டார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-07 01:37:04]


பாசமுள்ள பார்வையில் : போர்கள் கொணர்வது, கல்லறைகளே

இறந்த அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளான நவம்பர் 2ம் தேதி நிறைவேற்றிய திருப்பலியில், “கல்லறைகளையும், மரணத்தையும் தவிர, வேறு எதையுமே போர்கள் கொணர்வதில்லை. இதுவரை நிகழ்ந்துள்ள போர்களிலிருந்து மனித சமுதாயம் பாடங்களைக் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை” என்று மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். இலங்கை உள்நாட்டுப் போரில் தன் உறவுகளை இழந்த அன்னையரைப்பற்றி பணிப்புலம் என்ற இணையத்தளத்தில் காணப்படும் கவிதையிலிருந்து சில வரிகள்: போரினால் தம் பிள்ளைகளைப் பிரிந்து தவிக்கும் தாய்மையின் தவிப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது... மூன்று தசாப்தகால யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டதை உலகம் அறிவித்துக்கொண்டிருக்கிறது. பிள்ளைகளைப் பிரிந்த தாய்மாரும் தாய்மாரைத் தேடும் பிள்ளைகளும் கண்ணீர் தேங்கிய விழிகளுடன் அந்த அறிவிப்பை வெறித்துப்பார்த்தபடி கடந்து போகின்றார்கள். அவர்கள் துயரங்கள் முடியாத போதில் யுத்தம் முடிந்தது பற்றி அவர்களுக்கு அக்கறை கிடையாது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-05 23:20:14]


"நாட்டை குணப்படுத்தும் ஞாயிறு" - பிலிப்பீன்ஸ் ஆயர்கள்

பிலிப்பீன்ஸ் நாட்டு ஆயர்கள், நவம்பர் 5, வரும் ஞாயிறை, "நாட்டை குணப்படுத்தும் ஞாயிறாக" அறிவித்துள்ளனர். "இறைவா, எங்கள் நாட்டை குணமாக்கும்" என்ற விருது வாக்குடன், தலைநகர் மணிலாவில் நடைபெறவிருக்கும் ஒரு செப ஊர்வலத்தில் கத்தோலிக்கர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் அவர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொணரும் வகையில், 1986ம் ஆண்டு, மக்கள் சக்தி என்ற புரட்சி உருவான வேளையில், ஊர்வலம் நடத்தப்பட்ட அதே சாலையில், நவம்பர் 5ம் தேதி, செப ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1986ம் ஆண்டு, புரட்சி ஊர்வலத்தில் மக்கள் சுமந்து சென்ற பாத்திமா அன்னையின் அதே திரு உருவம் மீண்டும் ஒருமுறை சுமந்து செல்லப்படும் என்றும், இந்த செப ஊர்வலம் தற்போதைய அரசை கவிழ்க்கும் முயற்சி அல்ல என்றும் பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் அவர்கள் கூறியுள்ளார். இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ள பல்வேறு கிறிஸ்தவ அமைப்புக்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்று UCA செய்தி கூறியுள்ளது. 2016ம் ஆண்டு ஜூன் மாதம் Rodrigo Duterte அவர்கள் பிலிப்பீன்ஸ் நாட்டின் அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றபின் மேற்கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு போரில், இதுவரை 12000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை இயக்கங்கள் கூறிவரும் வேளையில், இதுவரை 6000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது என்று UCA செய்தி கூறியுள்ளது. (ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2017-11-05 00:09:25]


தீவிரவாதத் தாக்குதல்களால் வேதனை அடைந்துள்ள திருத்தந்தை

கடந்த சில நாட்களாக, சோமாலியா மற்றும் ஆப்கானிஸ்தானிலும், இச்செவ்வாயன்று நியூ யார்க் நகரிலும் நிகழ்ந்துள்ள தீவிரவாதத் தாக்குதல்களால் தான் மிகவும் வேதனை அடைந்திருப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்தார். நவம்பர் 1, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்து புனிதர்கள் பெருவிழாவையொட்டி வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, இவ்வுரையின் இறுதியில், தீவிரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தோருக்காக செபிக்கும்படி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இறைவனின் பெயரை பயன்படுத்தி, மரணத்தை விதைக்கும் தீவிரவாதிகளின் உள்ளங்களில் இறைவன் மனமாற்றத்தை உருவாக்கவேண்டும் எனவும், இவ்வுலகை வெறுப்பிலிருந்தும், வன்முறையிலிருந்தும் இறைவன் காத்தருள வேண்டுமென்றும் செபிக்கும்படி திருத்தந்தை விண்ணப்பித்தார். மேலும், இவ்வியாழனன்று, நெத்தூனோ, ஃபோஸ்ஸே அர்தியத்தீனே, ஆகிய கல்லறைகளுக்குச் சென்று, போர்களில் இறந்தோருக்காக தான் செபிக்கவிருப்பதாகக் கூறிய திருத்தந்தை, போர்கள், இவ்வுலகில் மரணத்தையும், கல்லறைகளையும் மட்டுமே உருவாகியுள்ளன என்றும், இந்த அழிவுகளிலிருந்து மனிதகுலம் தனக்குத் தேவையான பாடங்களை இன்னும் கற்றுக்கொள்ளவில்லையென்றும் எடுத்துரைத்தார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-04 00:03:25]


திருத்தந்தை - ஆசிய கிறிஸ்தவர்களுக்காக வேண்டிக்கொள்வோம்

நவம்பர் 1, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவையொட்டி, அனைவரையும் புனிதம் நோக்கி அழைக்கும்வண்ணம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி அமைந்திருந்தது. "அன்பு நண்பர்களே, இந்த உலகிற்கு புனிதர்கள் தேவை. நாம் அனைவரும் எவ்வித விதிவிலக்குமின்றி புனிதத்திற்கு அழைக்கப்பட்டுள்ளோம். அஞ்சாதீர்கள்!" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக நவம்பர் 1, இப்புதனன்று வெளியாயின. மேலும், ஆசிய கிறிஸ்தவர்களையும், பலசமய உரையாடல் மற்றும் அமைதியையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் மாதத்திற்குரிய தன் செப கருத்தை வெளியிட்டுள்ளார். "ஆசிய கிறிஸ்தவர்களுக்காக வேண்டிக்கொள்வோம். நற்செய்தியை தங்கள் சொல்லாலும், செயலாலும் பறைசாற்றி, பிற சமயத்தவரோடு, உரையாடலையும், அமைதியையும் வளர்ப்பதற்கு செபிப்போமாக" என்ற சொற்களை தன் நவம்பர் மாத செபக்கருத்தாக திருத்தந்தை வெளியிட்டுள்ளார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-03 01:01:12]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்