வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கப்பட்ட Lamborghini கார்

"வாழ்வின் பெரும் துணையாளராக இருப்பது, நம்பிக்கை. தன் படைப்புக்களை ஒருபோதும் தனிமையில் தவிக்கவிடாத தந்தையை உணர்வதற்கு நம்பிக்கை உதவுகிறது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இப்புதனன்று வெளியாயின. மேலும், இத்தாலி நாட்டில், கார்கள் உற்பத்தியில் புகழ்பெற்ற Lamborghini என்ற நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், அந்நிறுவனத்தின் Huracán என்ற பெயர் கொண்ட வாகனத்தை, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பரிசாக அளித்தனர். திருத்தந்தை தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிறக் கார், திருத்தந்தையிடம் வழங்கப்பட்டது. இந்தக் கார் ஏலத்தில் விடப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் தொகை, திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டின் நினிவே சமவெளியில் கிறிஸ்தவர்களை மீண்டும் குடியமர்த்தும் பணிகளுக்கும், பாலியல் கொடுமைகளின் துயரங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டங்களுக்கும் இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-15 23:23:27]


கர்தினாலின் மரணம் குறித்து பிரான்சுக்கு அனுதாபச் செய்தி

பிரான்ஸ் நாட்டின் Marseilles முன்னாள் பேராயர், கர்தினால் Bernard Panafieu அவர்களின் மறைவையொட்டி, தன் ஆழ்ந்த இரங்கலை வெளியிடும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். Marseilles பேராயர் Georges Pontier அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ளச் செய்தியில், அப்பெருமறைமாவட்ட விசுவாசிகளுக்கும், கர்தினால் Panafieu அவர்களின் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்குமாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இன மக்கள் வாழும் Marseilles உயர் மறைமாவட்டத்தில், பல்வேறு கலாச்சாரங்களிடையேயும், மதங்களிடையேயும் அமைதியான இணக்க வாழ்வை உருவாக்குவதில் கர்தினால் Panafieu அவர்கள் எடுத்த அரிய முயற்சிகளை பாராட்டுவதாகவும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 1931ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் பிறந்த, கர்தினால் Panafieu அவர்கள், 1956ம் ஆண்டு அருள்பணியாளராகவும், 1974ம் ஆண்டு ஆயராகவும் அருள் பொழிவு பெற்றார். 1995ம் ஆண்டு Marseilles உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்ற இவர், 2003ம் ஆண்டு, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். கர்தினால் Panafieu அவர்களின் மறைவைத் தொடர்ந்து, திருஅவையில் தற்போது கர்தினால்களின் எண்ணிக்கை 218 ஆக குறைந்துள்ளது. இதில், 120 பேர் மட்டுமே, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய, 80 வயதிற்குட்பட்டவர்கள். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-14 19:27:02]


ஈரான் ஈராக் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருடன் திருத்தந்தை

ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையில், ஞாயிறன்று இரவு இடம்பெற்ற நில நடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்திகள், அவ்விரு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. ஈரானின் மேற்கு பகுதியில், ஈராக்குடன் இணையும் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் இதுவரை 440 பேர் வரை இறந்துள்ளதாகவும் 7460 பேர் காயமடைந்துள்ளதாகவும் அப்பகுதியிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செபத்துடன் கூடிய ஒருமைப்பாட்டை தெரிவிப்பதாகவும், இறந்தவர்களுக்காக செபிப்பதாகவும், காயமுற்றோர் மற்றும் அவர்களுடன் பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு இறைவனின் ஆறுதல் நிறைந்த ஆசீரை இறைஞ்சுவதாகவும், திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இந்நாடுகளுக்கு அனுப்பியுள்ள தனித்தனிச் செய்திகள் கூறுகின்றன. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-14 19:21:54]


கிறிஸ்துவின் ஒளிக்கு எவராலும் தடைபோட முடியாது

நமக்கு இறைவன் வழங்கும் ஒளியை எவராலும் தடை செய்யமுடியாது என்ற கருத்தை மையமாக வைத்து இச்செவ்வாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 'கிறிஸ்து நம் இதயத்திலும், அவரின் நண்பர்களின் முகத்திலும் வழங்கும் ஒளியை எவராலும், எதனாலும் தடை செய்யமுடியாது' என உரைக்கிறது, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி. மேலும், இத்திங்களன்று வெளியிடப்பட்ட திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, 'கிறிஸ்தவர் என்பவர் ஒருபோதும் எதிர்மறை மனப்பான்மையினராக இருக்கமுடியாது' என உரைக்கிறது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-14 19:16:33]


பாசமுள்ள பார்வையில்...: நானென்ன கைம்மாறு செய்ய முடியும்?

ஆரோக்கியதாஸ் என்ற பெயர் கொண்ட எல்லோரும் ஆரோக்கியமாக இருப்பதில்லை என்பது உண்மைதான். நம் கதையில் வரும் ஆரோக்கியதாசும் 4 வயது வரை நன்றாகத்தான் இருந்தார். அதன்பின்தான், போலியோவால் தாக்கப்பட்டு கால்களின் செயல்பாட்டை இழந்தார். கடந்த 45 ஆண்டுகளுக்கு மேல், அவர் தாய்தான் ஆரோக்கிதாசை நன்றாகக் கவனித்து பராமரித்து வந்தார். திடீரென்று ஒரு நாள் இரவு அவருக்கு வியர்த்துக் கொட்ட, நெஞ்சு வலி அதிகரித்தது. அம்மா, என அலறியவரை பக்கத்து வீட்டாரின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தார் தாய். உடனேயே அவரின் இரத்தக்குழாய் அடைப்பை நீக்கும் அறுவைச்சிகிச்சைக்கு, 6 இலட்சம் ரூபாயைக் கட்டச் சொன்னார்கள். மலைப்பாக இருந்தது, ஆரோக்கியதாசுக்கு. இரண்டு அடைப்பை நீக்க, அதுவும் 3 மணி நேரம் கூட நடக்காத சிகிச்சைக்கு 6 இலட்சம் என்றால், இத்தனை ஆண்டுகள் தன் அருகே இருந்து தன்னை பொன்போல் காப்பாற்றி வரும் தன் தாய்க்கு என்ன கொடுத்து ஈடு செய்ய முடியும் என எண்ணினார் ஆரோக்கியதாஸ். தாயன்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால், தன் தாய்க்கு தன்னால் என்ன கைம்மாறு செய்ய முடியும் என திணறினார். அன்றுதான், முதன்முதலாக, தன் தாயின் நலனுக்காக, இறைவனிடம் செபிக்கத் துவங்கினார், ஆரோக்கியதாஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-13 01:05:51]


நோயுற்றோரிடையே பணிபுரிவோருக்காக செபிப்போம்

நோயுற்றோரிடையே அர்ப்பணத்துடன் பணிபுரிவோருக்காக நாம் செபிக்க வேண்டியதன் கடமையை வலியுறுத்தி, இச்சனிக்கிழமையன்று, டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 'நோயாளிகளின் பராமரிப்பில் அர்ப்பணத்துடனும், தியாக உணர்வுடனும் பணிபுரியும் அனைவரையும் நம் செபங்களில் நினைவுகூர்வோம்' என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி கூறுகின்றது. மேலும், இதே நாளில், ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் Bernardito Auza அவர்களையும், வியன்னாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீட பிரதிநிதியாகப் பணியாற்றும், பேரருட்திரு Janusz Urbanczyk அவர்களையும் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது நாள் வரை ஈரான் நாட்டின் சார்பில், திருப்பீடத்தூதராகப் பணியாற்றி, பணியிடம் மாறிச் செல்லும் Mohammad Taher Rabbani அவர்களையும் சந்தித்து உரையாடினார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-13 00:59:06]


நாணயம் அச்சிட்டு அருள்சகோதரியை கௌரவிக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் தொழுநோயை அகற்றுவதற்கு அயராது போராடி, இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்த ஜெர்மன் அருள்சகோதரி Ruth Martha Pfau அவர்களை கௌரவிக்கும் விதமாக 50,000 நாணயங்களை வெளியிட உள்ளது பாகிஸ்தான் அரசு. 1960ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் தொழுநோயாளர்களிடையே பணியாற்றி வந்த அருள்சகோதரி Martha Pfau அவர்கள், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி உயிரிழந்தபோது, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அருள்சகோதரி Martha Pfau அவர்களின் தியாகத்தாலும், தன்னலமற்ற சேவையாலும் பயனடைத்துள்ள பாகிஸ்தான் நாடு, அவருக்கு கடன்பட்டுள்ளது என தெரிவித்தார், பாகிஸ்தான் பிரதமர் Shahid Khaqan Abbasi. பாகிஸ்தான் பிரதமரின் தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில், 50 ரூபாய் மதிப்புடன் கூடிய 50,000 நாணயங்களை, அருள்சகோதரி Martha Pfau அவர்களை கௌரவிக்கும் விதமாக வெளியிட உள்ளதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் மத்திய வங்கியும், இந்த நாணய வெளியீட்டிற்கு தன் ஒப்புதலை வழங்கியுள்ளது. (ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2017-11-12 01:14:53]


கடலை அடிநீர் கல்லறைகளாக மாற்றியது யார்

கடல் நீர் மட்டம் உயர்வதாலும், கடல் வளங்கள் அழிவுக்குள்ளாகி வருவதாலும், சுற்றுச்சூழல் அழிவு, மற்றும், தட்ப வெப்ப நிலை மாற்றங்களாலும், பல்வேறு பாதிப்புக்களை சந்தித்து வரும் மக்கள் மீது அக்கறை காட்டி செயல்பட்டு வரும் பசிபிக் தீவுகளின் தலைவர்களை பாராட்டுவதாகத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். பசிபிக் தீவுகளின் தலைவர்கள் கூட்டமைப்பு என்ற குழுவின் பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'கடலின் வியக்கத்தக்க வளங்களை நிறமும் உயிருமற்ற நீரடிக் கல்லறைகளாக மாற்றியது யார்' என 30 ஆண்டுகளுக்கு முன்னரே பிலிப்பீன்ஸ் ஆயர்கள் எழுப்பிய கேள்வியை நினைவூட்டினார். இயற்கையைச் சுரண்டும் மனிதரின் சுயநலப் போக்குகளே அனைத்திற்கும் காரணம் என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, இத்தகைய பாதிப்புக்களால் வேறு புகலிடம் செல்ல முடியாமல் தவிக்கும் மக்களின் பிரச்னைகளுக்கு, அனைத்துலக அளவில் ஒன்றிணைந்த நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்தினார். மனிதர்களை பெருமளவில் பாதிக்கும் சுற்றுச்சூழல் அழிவை தவிர்க்கும் பொருட்டு, உலகளாவிய பார்வை, ஒத்துழைப்பு, ஒருமைப்பாடு, யுக்திகளைப் பகிர்தல் போன்றவற்றைக் கையாளுவதுடன், பாராமுகம் எனும் போக்கையும் சமூகங்கள் களைய வேண்டும் என விண்ணப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட பல்வேறு கழிவுகளால் கடல்கள் மாசு கேடடைந்து வருவதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடற்கரையோர மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்து அனைவரும் பொறுப்புடன் செயல்படவேண்டியதையும் வலியுறுத்தினார். பசிபிக் பகுதி தீவுகளின் இந்த கூட்டமைப்பினருடன் திருத்தந்தை நடத்திய இந்த சந்திப்பில், ஆஸ்திரேலியா, குக் தீவு, மைக்ரோனேசியா கூட்டமைப்பு, ஃப்ரெஞ்ச் மொழி பேசும் பொலினேசியா தீவுகள், நியூசிலாந்து, பாப்புவா நியூ கினி, மார்ஷல் தீவு, Kiribati, Nauru, Samoa, Vanuatu ஆகிய நாடுகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-12 01:07:57]


திருப்பலியில் புகைப்படங்கள் எடுப்பது வேண்டாம் - திருத்தந்தை

திருப்பலி வேளையில், தங்களிடம் உள்ள தொலைபேசியைக் கொண்டு புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்துவோரைக் காணும்போது தான் அதிகம் வேதனை அடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். நவம்பர் 8, இப்புதனன்று, திருப்பலியை மையப்படுத்தி, புதன் மறைக்கல்வி உரை வழங்கிய வேளையில், புனித பேதுரு பசிலிக்கா, மற்றும் வளாகத்தில் தான் திருப்பலியாற்றும் வேளையில், பலர், தங்கள் கைப்பேசியைக் கொண்டு புகைப்படங்கள் எடுப்பது தனக்கு வேதனை தருகிறது என்று கூறியத் திருத்தந்தை, திருப்பலி ஒரு கேளிக்கை காட்சியல்ல என்று வலியுறுத்திக் கூறினார். புகைப்படங்கள் எடுப்பது, விசுவாசிகள் மட்டுமல்ல என்றும், அருள்பணியாளர்கள், ஆயர்கள் என்று அனைவரும் இந்த தவறை செய்து வருகின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, இந்தத் தவறை அனைவரும் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று விண்ணப்பித்தார். திருப்பலியின் நடுவே, பலியாற்றும் அருள்பணியாளர், 'இதயங்களை மேலே எழுப்புங்கள்' என்று சொல்கிறாரே தவிர, 'தொலைப்பேசிகளை மேலே எழுப்புங்கள்' என்று சொல்வதில்லை என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, திருப்பலி நேரத்தில் ஆண்டவர் மட்டுமே நம் முழு கவனத்தையும் பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று கூறிய இச்சொற்கள், தற்போது, சமூக வலைத்தளத்தில் பெருமளவு பகிரப்பட்டு வருகின்றன. (ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி) [2017-11-10 20:18:34]


திருத்தந்தை முதலாம் ஜான் பால் - வணங்கத்தக்கவர் என அறிவிப்பு

இறையடியாரான திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்களை புனிதரென அறிவிக்கும் முயற்சியின் அடுத்த நிலையாக, அவரை, 'வணங்கத்தக்கவர்' (“Venerable”) என்ற நிலைக்கு உயர்த்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார். புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள், நவம்பர் 8, இப்புதனன்று பிற்பகல், திருத்தந்தையிடம் சமர்ப்பித்த எட்டுப்பேரில் ஒருவராக, இறையடியார், முதலாம் ஜான் பால் அவர்களின் பெயரும் இடம்பெற்றிருந்தது. 1912ம் ஆண்டு இத்தாலியின் வெனெத்தோ பகுதியில் பிறந்த ஆல்பினோ லூசியானி அவர்கள், 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி, முதலாம் ஜான் பால் என்ற பெயருடன், திருத்தந்தையாகப் பொறுப்பேற்று, 33 நாட்களுக்குப்பின், செப்டம்பர் 28ம் தேதி, இறையடி சேர்ந்தார். மேலும், John Brenner என்ற மறைமாவட்ட அருள்பணியாளர், மற்றும், Leonella Sgorbati என்ற அருள் சகோதரி ஆகிய இருவரும், மறைசாட்சிகளாக உயிர் நீத்தனர் என்பதையும், Baden நகரின் அருளாளர் பெர்னார்ட் அவர்களின் புண்ணிய வாழ்வையும் திருத்தந்தை ஏற்றுக்கொண்டார். இவர்களோடு, பிரான்சிஸ்கன் துறவி, Gregorio Fioravanti, இயேசு சபை துறவி,Thomas Morales Pérez, பொதுநிலையினரான Marcellino da Capradosso என்ற பேராசிரியர், புனித மகுடத்தின் மரியா என்ற அருள்சகோதரிகள் சபையை உருவாக்கிய Teresa Fardella ஆகியோரின் புண்ணிய வாழ்வு சாட்சியங்களையும் திருத்தந்தை ஏற்றுக்கொண்டார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-10 20:07:02]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்