வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்கிறிஸ்துவின் ஒப்புரவு, அமைதிச் செய்தியை அறிவிக்க வருகிறேன்

இயேசு கிறிஸ்துவின் ஒப்புரவு, மன்னிப்பு மற்றும் அமைதிச் செய்தியை அறிவிப்பதற்கு, அவரின் நற்செய்திப் பணியாளராக, உங்கள் நாட்டிற்கு வருகை தருகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்களாதேஷ் நாட்டிற்கு காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இம்மாதம் 30ம் தேதி முதல், டிசம்பர் 2ம் தேதி வரை பங்களாதேஷ் நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களுக்கு, இச்செவ்வாயன்று அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில், இப்பயண நாள்கள், நாட்டினர் எல்லாருக்கும் நம்பிக்கை மற்றும் உற்சாகத்தைத் தருவதாய் அமையுமாறு செபிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். இப்பயணம், பங்களாதேஷ் கத்தோலிக்க சமுதாயத்தின் விசுவாச மற்றும் நற்செய்திக்குச் சான்று பகரும் வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டிருக்கின்றது என்று அச்செய்தியில் பேசியுள்ள திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரின் மாண்பைப் போதித்து, மற்றவர்க்கு, குறிப்பாக, ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு நம் இதயங்களைத் திறப்பதற்கு நற்செய்தி அழைப்பு விடுக்கின்றது என்றும் கூறியுள்ளார். அதேநேரம், பங்களாதேஷ் மக்கள் அனைவரையும், சிறப்பாக, Ramnaவில் சமயத் தலைவர்களைச் சந்திக்கும் நேரத்திற்காகவும் ஆவலாய்க் காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற முறையில், ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்வதிலும், மதிப்பதிலும், ஆதரவளிப்பதிலும் ஊக்கப்படுத்த வேண்டுமென்ற உணர்வு, ஒவ்வோர் இடத்திலும், மத நம்பிக்கையாளர்கள் மற்றும், நல்மனம் கொண்டவர்கள் மத்தியில் நிலவிவரும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். பங்களாதேஷில், இப்பயணத் தயாரிப்புப் பணிகளில் பலர் ஈடுபட்டுள்ளதை அறிவேன், அவர்கள் எல்லாருக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீங்களும், உங்கள் குடும்பங்களும் மகிழ்விலும் அமைதியிலும் வாழ்வதற்காகச் செபிக்கின்றேன், விரைவில் சந்திப்போம் என்று, இக்காணொளி செய்தியை நிறைவு செய்துள்ளார். இம்மாதம் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை மியான்மார் நாட்டிலும், பின்னர், டிசம்பர் 2ம் தேதி வரை பங்களாதேஷ் நாட்டிலும் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றவுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். இப்பயணம் ஆசியாவுக்கான அவரின் 3வது பயணமாகவும், 21வது வெளிநாட்டுப் பயணமாகவும் அமைகின்றது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-21 23:04:47]


அன்னை மரியாவின் புன்னகை நம் மகிழ்வின் ஊற்று

“வாழ்வின் துன்பங்களை நாம் எதிர்கொள்ளும்வேளையில், அன்னைமரியின் தூய்மையும், எளிமையும் நிறைந்த புன்னகை, நம் ஒவ்வொருவர் மகிழ்வின் ஊற்றாக அமைவதாக” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இச்செவ்வாயன்று வெளியாயின. அன்னை மரியா ஆலயத்தில் நேர்ந்தளிக்கப்பட்ட விழாவாகிய நவம்பர் 21, இச்செவ்வாயன்று, நம் துன்பநேரங்களில் அன்னை மரியாவை நோக்குமாறு திருத்தந்தை தன் டுவிட்டரில் கூறியுள்ளார். மூன்று வயதில் ஆலயத்தில் நேர்ந்தளிக்கப்பட்ட அன்னை மரியா, தனது 12வது வயதுவரை ஆலயத்தில் வளர்ந்தார். எருசலேமில் அழிக்கப்பட்ட ஆலயத்துக்கு அருகில், பைசான்டின் பேரரசர் முதலாம் ஜஸ்டீனியன், கி.பி.543ம் ஆண்டில் புனித மரியா ஆலயம் ஒன்றை எழுப்பினார். இந்த ஆலயம் திருப்பொழிவு செய்யப்பட்டதையொட்டி, அன்னை மரியா ஆலயத்தில் நேர்ந்தளிக்கப்பட்ட விழா, கிறிஸ்தவத்தில் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், இத்தாலியின் ரெஜ்ஜியோ கலாபிரியா-போவா மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி Enzo Petrolino அவர்கள், “திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எண்ணத்தில் தியோக்கோன் அழைப்பு : ஏழைகளுக்கான ஏழைத் திருஅவை” என்ற தலைப்பில் எழுதியுள்ள புதிய நூல் ஒன்றுக்கு, முன்னுரை எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனோஸ் அய்ரெஸ் உயர்மறைமாவட்டத்தில் பேராயராகப் பணியாற்றியது முதல், உரோம் ஆயராக, அண்மைக் காலங்களில் தியோக்கோன் இறையழைப்பு பற்றிக் கூறியுள்ள பல்வேறு கூற்றுக்களை இந்நூல் கொண்டுள்ளது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-21 22:59:26]


திருத்தந்தையின் நண்பகல் மூவேளை செப உரை

அனைவரும் மதிப்புடன் கூடிய ஒன்றிணைந்த வாழ்வை மேற்கொள்ளமுடியும் என்பதற்கு, மத்தியக் கிழக்குப் பகுதிக்கும், உலகம் முழுமைக்கும், லெபனான் நாடு தொடர்ந்த எடுத்துக்காட்டாக விளங்கமுடியும் என்ற தன் நம்பிக்கையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார். இஞ்ஞாயிறு, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த 20,000த்திற்கும் மேற்பட்ட விசுவாசிகளுக்கு, நண்பகல் மூவேளை செப உரை வழங்கியபின், லெபனான் குறித்த தன் அக்கறையை வெளியிட்டத் திருத்தந்தை, போராலும், மோதல்களாலும் வேதனைகளை அனுபவித்துவரும் லெபனான் நாட்டில், பதட்ட நிலைகள் அதிகரித்துவருவதை மனதில் கொண்டு, அனைத்துலக சமுதாயம், அமைதிக்கான முயற்சிகளை, குறிப்பாக, மத்தியக் கிழக்குப் பகுதியில் மேற்கொள்ளவேண்டும் என்று விண்ணப்பித்தார். அர்ஜென்டீனா நாட்டில், காணாமல் போயிருக்கும் இராணுவ நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றிய அனைவருக்காகவும் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்தார். மேலும், கடவுளைக் குறித்து எவரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை, ஏனெனில், அவர் ஒரு கண்டிப்பான முதலாளி அல்ல, மாறாக, அன்பும், கனிவும், நன்மைத்தனமும் கூடிய ஒரு தந்தை என்று தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை. சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் குறித்த உலக நாள், இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படுவதையும் தன் மூவேளை செப உரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாயத்தின் கடமைகளையும், ஓட்டுனர்களின் பொறுப்புணர்வையும் தான் வலியுறுத்துவதாகத் தெரிவித்தார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-20 21:54:14]


பாராமுகமாக இருப்பதே, வறியோருக்கு எதிரான பெரும் பாவம்

உதவி தேவைப்படும் நிலையிலுள்ள நம் சகோதர, சகோதரிகள் குறித்து பாராமுகமாக இருப்பதே, வறியோருக்கு எதிரான மிகப்பெரும் பாவம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று தன் மறையுரையில் கூறினார். முதல் உலக வறியோர் நாளை முன்னிட்டு உரோம் நகர் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் 6000க்கும் அதிகமாக ஏழைகள் குழுமியிருக்க, அவர்களுக்கு திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமையைக் குறித்த கவலை அதிகரித்துவரும் அதே வேளை, அது குறித்து எதுவும் செய்யாமல், பாராமுகமாக இருக்கும் நிலையும் அதிகரித்து வருகிறது என்று கூறினார். வறியோருக்கு உதவ வேண்டியது, திருஅவையின் நற்செய்தி கடமையாகிறது, ஏனெனில், அவர்களே திருஅவையின் உண்மையான செல்வங்கள் எனவும் தன் மறையுரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை, இந்நாளின் நற்செய்தி வாசகம் எடுத்துரைத்த தாலந்து உவமையுடன் ஏழைகள் மீது நாம் காட்டும் அக்கறையைத் தொடர்பு படுத்தி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். ஒவ்வொருவரும் சமூகத்தில் பயனுடையவர்களே, ஏனெனில், ஒவ்வொருவருக்கும், அவரவருக்கு உகந்த வகையில் இறைவன் கொடைகளை வழங்கியுள்ளதால், அவற்றைப் புதைத்துவைக்காமல், மற்றவர்களுடன் பகிர்வதன் வழியே அவற்றைப் பெருக்கிக்கொள்ள முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை. ஏழைகளைப் பராமரிப்பது என் பணியல்ல, அது சமூகத்தின் கடமை என்று எண்ணி பாராமுகமாகச் செயல்படுவதும் பாவமே என்று, தன் மறையுரையில் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமைகளைக் கடிந்துகொள்வது மட்டும் போதாது, மாறாக, நல்லவற்றை ஆற்றுவதும் அவசியம் என்று மேலும் கூறினார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-20 21:35:54]


பாசமுள்ள பார்வையில்.. நேர்மையை உணர்த்திய தாய்

ஓர் ஊரில் இரத்தினசாமி என்ற சுயநலமிக்க செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் நகருக்கு சென்று திரும்பும் வழியில் முப்பது தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டு சோர்வுடன் திரும்பிக்கொண்டிருந்தார். அவரை வழியில் கண்ட ஏழைத் தாய் ஒருவர், அவர் சோர்வாக இருப்பதற்குக் காரணம் கேட்டார். சில நாட்கள் சென்று, அந்த ஏழைத் தாய் நகருக்குச் சென்று திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதைக் கண்டார். அந்தப் பை இரத்தினசாமி செல்வந்தருடையது எனத் தெரிந்துகொண்டு, அதை அவரிடம் கொடுத்தார். தங்க நாணயங்களைப் பெற்றுக்கொண்ட இரத்தினசாமி, இதை வைத்து ஒரு திட்டம் தீட்ட நினைத்தார். அவர் அத்தாயிடம், நான் இந்த பையில் நாற்பது தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்தப் பையில் இப்போது முப்பது தங்க நாணயங்களே உள்ளன, அதனால் மீதமிருக்கும் பத்து நாணயங்களைத் திருப்பித் தரவேண்டுமென கேட்டார். அந்த ஏழைத் தாயின் குணம் பற்றி ஊரில் அனைவருக்கும் தெரியும். இதனால் இந்த குழப்பத்திற்கு முடிவுகட்ட நண்பர்கள் இருவர், ஊர் தலைவரிடம் சென்றனர். விவரத்தைக் கேட்ட ஊர் தலைவர், இரத்தினசாமியிடம், நீ எவ்வளவு தங்க நாணயங்களைத் தொலைத்தாய் எனக் கேட்டார். அதற்கு அவர், நாற்பது தங்க நாணயங்கள் என பொய் சொன்னார். இப்போது ஊர் தலைவர், ஏழைத் தாயைப் பார்த்து, நீ எவ்வளவு தங்க நாணயங்களைக் கண்டுபிடித்தாய் என்றார். அதற்கு அவர், முப்பது தங்க நாணயங்கள் என்றார். இருவரின் பதிலையும் கேட்ட ஊர் தலைவர், இரத்தினசாமியைப் பார்த்து, அப்பெண் கண்டெடுத்திருப்பது வெறும் முப்பது தங்க நாணயங்கள், நீ தொலைத்திருப்பதோ நாற்பது தங்க நாணயங்கள். எனவே இது உன்னுடையதாக இருக்க முடியாது. இனி யாராவது நாற்பது தங்க நாணயங்களைக் கொண்டுவந்தால் உனக்குச் சொல்லி அனுப்புகிறேன், இப்போது நீ கிளம்பலாம் என்றார். பின் அந்த ஏழைத் தாயைப் பார்த்த தலைவர், அம்மா, நீ கண்டெடுத்திருப்பது இரத்தினசாமியின் தங்க நாணயங்கள் கிடையாது, எனவே இதை நீயே வைத்துக் கொள்ளலாம் என்றார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-19 20:47:28]


ஒப்புரவு,மன்னிப்பு,அமைதியை அறிவிக்க மியான்மாருக்கு வருகிறேன்

இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியாகிய, ஒப்புரவு, மன்னிப்பு மற்றும் அமைதியை அறிவிப்பதற்காக, மியான்மாருக்கு வருகை தருகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டுக்கு காணொளிச் செய்தி ஒன்றை, இவ்வெள்ளியன்று அனுப்பியுள்ளார். இம்மாதம் 27ம் தேதி முதல், 30ம் தேதி வரை மியான்மாருக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், இத்திருத்தூதுப் பயணத்தின் நோக்கத்தை விளக்கியுள்ளார். மியான்மார் கத்தோலிக்க சமூகத்தின் கடவுள் நம்பிக்கையையும், அச்சமூகம் நற்செய்திக்குச் சான்று பகர்வதையும், உறுதிப்படுத்தும் நோக்கத்திலும், இத்திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை. நற்செய்தி, ஒவ்வொரு மனிதரின் மாண்பைப் போதித்து, நாம் ஒவ்வொருவரும், மற்றவருக்கு, குறிப்பாக, ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு நம் இதயங்களைத் திறக்கச் செய்கின்றது எனவும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார். அதேநேரம், பொது மக்கள் மத்தியில், நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியையும் மதித்து ஊக்கப்படுத்தும் நல்லுணர்வில் இந்நாட்டைப் பார்வையிட விரும்புகிறேன் என்றும், அச்செய்தியில் பேசியுள்ளார் திருத்தந்தை. ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற முறையில், ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்வதிலும், மதிப்பதிலும், ஆதரவளிப்பதிலும் நாம் வளரவேண்டுமென்ற உணர்வு, மத நம்பிக்கையாளர்கள் மற்றும், நல்மனம் கொண்டவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம், ஏனென்றால் நாம் எல்லாரும் கடவுளின் பிள்ளைகள் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார். மியான்மாரில், இப்பயணத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள எல்லாருக்கும் தனது நன்றியையும் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் அனைவரும் மகிழ்விலும் அமைதியிலும் வாழ்வதற்காகச் செபிக்கின்றேன், விரைவில் சந்திப்போம் என்று, இக்காணொளி செய்தியை நிறைவு செய்துள்ளார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-18 21:29:07]


அர்ஜென்டீனா நீர்மூழ்கி கப்பலில் காணாமல்போயுள்ளவர்க்கு செபம்

“இறைமக்களின் செபங்களின் ஆதரவின்றி, பேதுருவின் வழிவருபவர் தனது திருப்பணியை நிறைவேற்ற இயலாது. உங்கள் அனைவரின் செபங்களில் நம்பிக்கை வைத்துள்ளேன்!” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியிட்டார். வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயம் மற்றும், உரோம் புனித பவுல் பசிலிக்கா நேர்ந்தளிப்பு திருநாளாகிய இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை, தனது தலைமைப்பணிக்கு விசுவாசிகளின் செபம் மிகவும் அவசியம் என்று, தன் டுவிட்டரில் எழுதியுள்ளார். மேலும், தென் அட்லாண்டிக் பெருங்கடலில், கடந்த புதன்கிழமை முதல் காணாமல்போயுள்ள, அர்ஜென்டீனா நாட்டு நீர்மூழ்கி போர்க் கப்பலில் பணியாற்றிய 44 பேருக்காக, தான் உருக்கமாகச் செபிப்பதாக, அந்நாட்டு இராணுவ ஆன்மீகப் பணியாளருக்குச் செய்தி அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். அர்ஜென்டீனா நாட்டு இராணுவ ஆன்மீகப் பணியாளர் ஆயர் சந்தியாகோ ஒலிவேரா அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், காணாமல்போயுள்ளவர்களின் குடும்பங்களுக்கும், அர்ஜென்டீனா இராணுவ அதிகாரிகளுக்கும், நாட்டு மக்களுக்கும், திருத்தந்தையின் செபங்களும், ஒருமைப்பாடும் நிறைந்த செய்தியை அனுப்பியுள்ளார். நீர்மூழ்கி கப்பலில் காணாமல்போயுள்ளவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள எல்லாரையும் ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை. 'Ara San Juan' என்ற அர்ஜென்டீனா நாட்டு கடற்படை நீர்மூழ்கி கப்பல், தனது வழக்கமான பணியை முடித்து திரும்பிக்கொண்டிருந்தபோது, புவனோஸ் அய்ரெஸ் கடற்கரைக்கு 430 கிலோ மீட்டர் தூரத்தில், கடந்த புதனன்று காணாமல்போயுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா உட்பட பல நாடுகள், இக்கப்பலைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-18 21:21:57]


வறியோர்க்கான மருத்துவ முகாமைப் பார்வையிட்டார் திருத்தந்தை

“நாம் ஏழைகளைச் சந்திக்கவும், பகிர்ந்துகொள்வது எப்படி என்பதையும், கற்றுக்கொள்ள வேண்டும். இதன் வழியாக நம் வாழ்வுமுறை மாற்றம் பெறும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியாயின. மேலும், உரோம் நகர் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இவ்வியாழன் மாலையில் பார்வையிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். நவம்பர் 19, வருகிற ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும், முதல் உலக வறியோர் நாளையொட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ முகாமில் பணியாற்றும் தன்னார்வலப் பணியாளர்கள் மற்றும், சிகிச்சைக்காகக் காத்திருந்த ஏழைகளையும் சந்தித்து சிறிதுநேரம் உரையாடினார் திருத்தந்தை. இந்த இலவச மருத்துவ முகாம், இத்தாலிய செஞ்சிலுவை சங்கத்தால், இந்த வாரம் முழுவதும் காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரை இயங்கி வருகிறது. இதயம், தோல் உள்ளிட்ட, சில நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்கள் இந்த முகாமில் பணியாற்றுகின்றனர். இரக்கத்தின் யூபிலி ஆண்டின் நிறைவில் திருத்தந்தை அறிவித்த உலக வறியோர் நாள் நிகழ்வுகளை, திருப்பீட புதியவழி நற்செய்தி அறிவிப்பு அவை நடத்தி வருகின்றது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-17 21:36:29]


உடன்பிறந்த உணர்வு, உண்மையிலேயே மகிழ்வளிக்கிறது-திருத்தந்தை

நல்லாயனாம் கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நற்செய்தி அறிவிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அருள்பணியாளரிடையே நிலவும் உடன்பிறந்த உணர்வு, உண்மையிலேயே நம்மை மகிழ்வளிக்கிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். அருள்பணியாளரின் திருத்தூது ஒருமைப்பாட்டு அமைப்பின் பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொள்ள வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள பிரதிநிதிகளை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, "சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது!" என்ற திருப்பாடல் வரிகளுடன் தன் உரையைத் துவக்கினார். இக்கூட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள, "மறைமாவட்டக் குழுமத்தில், குழுமத்துடன், குழுமத்திற்காக" என்ற மையக்கருத்து, மறைமாவட்ட அருள்பணியாளரின் முக்கியமான ஆன்மீகத்தை வெளிப்படுத்துகிறது என்று திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார். அருள்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள், அவர்களது தனிப்பட்ட திறமைகளையும், சக்தியையும் மட்டும் சார்ந்தவை அல்ல, மாறாக, இறைவனின் செயல்பாடு என்பதை அனைவரும் உணரவேண்டும் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார். மறைமாவட்டத்தில், அமைப்புக்களையும், இயக்கங்களையும் உருவாக்குவதற்கு முன்னர், அக்குழுமத்தில் வாழும் மக்களின் ஒட்டுமொத்த நாடித்துடிப்பை உணர்ந்து, அதற்குத் தகுந்த திட்டங்களை வகுப்பது, அருள்பணியாளர்களின் முக்கிய கடமை என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-17 01:06:48]


வறியோருடன் மதிய உணவருந்தும் திருத்தந்தை பிரான்சிஸ்

நவம்பர் 19 வருகிற ஞாயிறன்று, வறியோரின் முதல் உலக நாளை சிறப்பிக்கும் வகையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காவில் தலைமையேற்று நிகழ்த்தும் திருப்பலியில் கலந்துகொள்ள, ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களிலிருந்து வறியோர் வருகை தருகின்றனர். 4000த்திற்கும் அதிகமாக வத்திக்கானுக்கு வருகை தரும் வறியோர் அனைவருக்கும், திருப்பலிக்குப் பின், மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், இவர்களில் 1500 பேருடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளாளர் ஆறாம் பால் அரங்கத்தில் மதிய உணவருந்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உரோம், பாரிஸ், வார்சா, பிரஸ்ஸல்ஸ், லக்ஸம்பர்க் ஆகிய நகரங்களிலிருந்து வருகை தரும் வறியோருக்கு, உரோம் நகரின் பல்வேறு குருத்துவ பயிற்சி மையங்கள், கல்லூரிகள் மற்றும் உணவகங்களில் மதிய உணவு வழங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திற்கருகே நவம்பர் 13, இத்திங்கள் முதல், 19, வருகிற ஞாயிறு முடிய இயங்கி வரும் மருத்துவ முகாமில், வறியோருக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகளும், உதவிகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று, இந்த உலக நாள் நிகழ்வுகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும், புதிய வழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை அறிவித்துள்ளது. உரோமையப் பேரரசர் முன், வறியோரை அழைத்துச் சென்று, "இவர்களே, திருஅவையின் உண்மையான கருவூலம்" என்று கூறிய தியாக்கோனாகிய புனித லாரன்ஸ் நினைவாக எழுப்பப்பட்டுள்ள பசிலிக்காவில், நவம்பர் 18, சனிக்கிழமை, வறியோர் உலக நாளின் திருவிழிப்பு வழிபாடு ஒன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2017-11-15 23:30:53]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்