வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்மியான்மார் அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை

அரசு ஆலோசகரான பெண்மணியே, அரசு அதிகாரிகளே, ஏனைய நாட்டுத் தூதர்களே, பெரியோரே, பெண்மணிகளே, இந்நாட்டில், மிகச் சிறிய அளவில், அதே வேளை, பக்தி நிறைந்தவர்களாய் வாழும் கத்தோலிக்கர்களுடன் செபிக்கவும், அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தவும் நான் இங்கு வந்துள்ளேன். மியான்மார் நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே நான் இங்கு வந்துள்ளது குறித்து மகிழ்கிறேன். மியான்மாரில் நீதியான, ஒப்புரவான, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க விழையும் அனைவருக்கும், என்னுடைய பயணத்தின் வழியே ஊக்கமளிக்க விரும்புகிறேன். இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மியான்மாரில், அதன் மக்களே இந்நாட்டின் மிகப்பெரிய கருவூலம். அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகளில், கடந்தகாலக் காயங்களை ஆற்றுவதை, முதன்மையான முயற்சியாக நீங்கள் மேற்கொண்டு வருவதை நான் பாராட்டுகிறேன். நீதியை நிலைநாட்டுதல், மனித உரிமைகளை மதித்தல் ஆகியவற்றின் வழியே, ஒப்புரவையும், அமைதியையும் கட்டியெழுப்பமுடியும். உண்மையான, நீடித்த அமைதியின் அடித்தளமாக, அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்க வழிசெய்யும் நீதி அமைந்துள்ளது. இரண்டு உலகப்போர்களின் கொடுமைகள் இந்த எண்ணத்தை உறுதி செய்கின்றன. இதன் பயனாக, ஐக்கிய நாடுகள் அவையும், மனித உரிமைகளின் அனைத்துலக அறிக்கையும் உருவாயின. அமைதி, மியான்மாரின் எதிர்காலமாக அமையவேண்டும். மற்றவர்களையும், அவர்களுக்குரிய உரிமைகளையும் மதிப்பதில் இந்த அமைதி அடங்கியுள்ளது. தேசிய ஒப்புரவிலும், ஒருங்கிணைப்பிலும் மியான்மார் நாட்டின் அனைத்து மதங்களும் முக்கிய பணியாற்றவேண்டும். மதங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள், நம்மைப் பிரிப்பதற்குப் பதில், ஒருங்கிணைப்பதற்கு உதவவேண்டும். மனதளவிலும், ஆன்மீக அளவிலும் காயப்பட்டவர்களைக் குணமாக்க, மதங்கள் பெரும் பங்காற்றமுடியும். இந்நாட்டில் உள்ள சமயத் தலைவர்கள் பலரும் இணைந்து மேற்கொண்டுவரும் அமைதி முயற்சிகள், பெரும் நம்பிக்கை தரும் அடையாளங்கள். இந்நாட்டின் வருங்காலம், இளையோர் கரங்களில் உள்ளது. தரமான கல்வி, தகுதியான வேலைவாய்ப்பு ஆகியவற்றின் வழியே, இளையோரை ஊக்குவிப்பது, தலைசிறந்த முதலீடு. இளையோரை பல்வேறு தொழில்நுட்பங்களில் பயிற்றுவிக்கும் வேளையில், நேர்மை, மனித நேயம் ஆகிய நன்னெறி விழுமியங்களிலும் அவர்களைப் பயிற்றுவிக்கவேண்டும். வருங்காலத்தைக் குறித்த நம்பிக்கை, இளையோர் உள்ளங்களிலிருந்து திருடப்படாமல் காப்பது அவசியம். அந்த நம்பிக்கையே, இந்நாட்டின், இன்னும் சொல்லப்போனால், ஒட்டுமொத்த மனித குடும்பத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும். அரசு ஆலோசகரான பெண்மணியே, நண்பர்களே, என் பயண நாட்களில், கத்தோலிக்கர்களை, அவர்களது நம்பிக்கையில் தளராதவண்ணம் உற்சாகப்படுத்த விரும்புகிறேன். அவர்கள் ஆற்றும் மனிதாபிமான, பிறரன்புப் பணிகள் வழியே, ஒப்புரவு, உடன்பிறந்த உணர்வு என்ற நற்செய்தி இந்நாட்டில் பரவட்டும். ஏனைய மதத்தினரோடும், நல்மனம் கொண்ட அனைவரோடும் இணைந்து, அன்புக்குரிய இந்நாட்டில், முன்னேற்றம் நிறைந்த புது யுகத்தை அனைவரும் உருவாக்குவார்களாக! ஞானம், சக்தி, அமைதி அனைத்தையும் வழங்கும் இறைவனின் ஆசீர் உங்கள் மீது தங்குவதாக! (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-28 22:25:57]


திருத்தந்தை பிரான்சிஸ் : மியான்மாரில் முதல் நாள் நிகழ்வு

பர்மா என்றும் அறியப்படும் மியான்மார், தென்கிழக்கு ஆசியாவில் இறையாண்மையுடன் விளங்கும் நாடாகும். இந்தியாவை, ஓர் எல்லையாகக் கொண்டுள்ள இந்நாடு, உலகளாவிய கத்தோலிக்கத் தலைவர் ஒருவரை, முதல் முறையாக, தனது மண்ணில் வரவேற்ற ஆனந்தத்தில் விழாக் கோலம் கொண்டுள்ளது. “நான் மியான்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு, இன்று இரவு திருத்தூதுப் பயணத்தைத் தொடங்குகிறேன், அந்நாடுகளில் எனது பிரசன்னம், நெருக்கம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக அமைய வேண்டுமென்று செபியுங்கள்” என்று, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு இரவு 10.10 மணிக்கு, உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, ஆல் இத்தாலியா A-330 விமானத்தில், மியான்மாருக்குப் புறப்பட்டார். இப்பயணத்தின் ஆரம்பத்தில், தன்னுடன் பயணம் செய்த, பல நாடுகளின் ஏறத்தாழ ஐம்பது செய்தியாளர்களிடம், என்னோடு பயணம் செய்வதற்கு நன்றி, உங்களின் பணிகள் எப்போதும் நல்ல பலன்களைக் கொண்டு வருகின்றது, உங்களுக்கு என் வாழ்த்து என்று சொன்னார் திருத்தந்தை. மியான்மார் அதிக வெப்பமாக இருக்கும் என்று சொல்கிறார்கள், பரவாயில்லை, இப்பயணம் அந்நாட்டு மக்களுக்குப் பலனுள்ளதாக அமைய வேண்டும் என்றும் சொன்னார் திருத்தந்தை. மியான்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கான, இத்திருத்தூதுப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர், இஞ்ஞாயிறு மாலையில் உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று, உரோம் மக்களுக்கு சுகமளிக்கும், Salus Populi Romani அன்னை மரியாவிடம் செபித்து, இப்பயணத்தை அன்னையிடம் அர்ப்பணித்தார். மேலும், இந்த நீண்ட திருத்தூதுப் பயணத்தில் தான் கடந்து சென்ற, இத்தாலி, குரோவேஷியா, போஸ்னியா-எர்செகொவினா, மொந்தேநெக்ரோ, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜார்ஜியா, அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு, வாழ்த்தும், ஆசீரும், செபமும் அடங்கிய தந்திச் செய்திகளையும் அனுப்பினார், திருத்தந்தை பிரான்சிஸ். மியான்மார் நாட்டின் பெரிய நகரமும், முன்னாள் தலைநகருமான யாங்கூன் பன்னாட்டு விமான நிலையத்தை, நவம்பர் 27, இத்திங்கள் உள்ளூர் நேரம் பகல் 1.22 மணிக்குச் சென்றடைந்தார், திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இந்திய - இலங்கை நேரம் பகல் 12.22 மணியாகும். மியான்மார் திருப்பீடத் தூதர் பேராயர் Paul Tschang In-Nam அவர்கள், விமானத்திற்குள்ளே சென்று, திருத்தந்தையை வரவேற்று அழைத்து வந்தார். விமான நிலையத்தில், மியான்மார் பிரதமர் Htin Kyaw அவர்கள், திருத்தந்தையை அதிகாரப்பூர்வமாக வரவேற்றார். மேலும், அங்கு, அந்நாட்டின் ஆயர்களும், மரபு உடைகளில் நூறு சிறாரும், பல்வேறு இன மக்களும் திருத்தந்தையை வரவேற்றனர். திருத்தந்தை சிறாரை அரவணைத்தும், கைகுவித்தும் வாழ்த்தினார். 21 துப்பாக்கிகள் முழங்க இடம்பெற்ற வரவேற்புக்குப் பின்னர், யாங்கூன் பேராயர் இல்லத்திற்குக் காரில் சென்றார் திருத்தந்தை. திருத்தந்தை சென்ற சாலையின் இரு பக்கங்களிலும், ஆயிரக்கணக்கணக்கில் மக்கள், வத்திக்கான் மற்றும் மியான்மார் நாடுகளின் கொடிகளை வைத்துக்கொண்டு திருத்தந்தையை வாழ்த்தி, மகிழ்ந்தனர். அவ்வில்லத்தில், தனியாகத் திருப்பலி நிறைவேற்றி, இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை. நவம்பர் 28, இச்செவ்வாயன்று, மியான்மாரின் புதிய தலைநகரான NayPyiTaw சென்று, பயண நிகழ்வுகளை நிறைவேற்றும் திருத்தந்தை, அன்று மாலையில் யாங்கூன் நகருக்குத் திரும்புவார். நவம்பர் 30ம் தேதி மதியம் வரை, யாங்கூனில் பயண நிகழ்வுகளை நிறைவேற்றிய பின்னர், பங்களாதேஷ் நாட்டிற்குப் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-27 23:48:39]


திருத்தந்தை: 'சிறியோர்' என்று அழைக்கப்படுவதே ஒரு வரம்

வறியோருக்கும், வாழ்வில் வாய்ப்பிழந்தோருக்கும் பிரான்சிஸ்கன் சபையின் பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்தோர் ஆற்றி வரும் பணிகள் குறித்து தன் மகிழ்வையும், பாராட்டுக்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்தார். அசிசி நகர் புனித பிரான்சிஸ் பெயரால் பணியாற்றிவரும் குடும்பத்தின் முதல் நிலை, மற்றும் மூன்றாம் நிலை உறுப்பினர்களை நவம்பர் 23, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இத்துறவு குடும்பத்தின் உறுப்பினர்கள், Minors அதாவது, 'சிறியோர்' என்று அழைக்கப்படுவதே ஒரு வரம் என்று குறிப்பிட்டார். இறைவனைச் சந்தித்து, ஆழ்நிலை தியானத்தில் மூழ்கியதிலும், கிறிஸ்துவின் எளிய, சிறிய சகோதரர்களான வறியோருக்கு உதவியதிலும் புனித பிரான்சிஸ் அவர்களின் வாழ்வு கழிந்தது என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை. சிறியோராய் இருப்பது என்ற நிலை, இறைவனைச் சந்திக்க, அனைத்து மனிதரையும், சகோதர, சகோதரிகளாகச் சந்திக்க, படைப்பைச் சந்திக்க, என்ற மூன்று சந்திப்புக்களுக்கு ஏற்ற நிலை என்று தன் உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த மூன்று நிலைகளுக்கும் விளக்கங்கள் வழங்கினார். கோவிலை சீர்செய்து, கட்டியெழுப்புமாறு இறைவன் வழங்கிய அழைப்பைக் கேட்டு, தன் பணிவாழ்வைத் துவங்கிய புனித பிரான்சிஸ் வழங்கியுள்ள ஆன்மீகத்தில், சீர்செய்வதும், கட்டியெழுப்புவதும் ஓர் அடிப்படை அம்சமாக உள்ளது என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை. நாம் சந்திக்கும் அனைத்து மனிதருக்கும் இணையாக, அல்லது, தாழ்ந்தவராக நம்மைக் கருதுவது, 'சிறியோர்' என்ற அழைப்பின் முக்கிய பண்பு என்பதை வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, இத்தகைய மனநிலை ஒருவருக்கு இரக்கம், பரிவு ஆகிய குணங்களையும் வழங்கும் என்று கூறினார். படைப்பு அனைத்தையும் தன் உடன்பிறந்தோராகப் பாவித்த புனித பிரான்சிஸ் காட்டியுள்ள வழியில், நாம் அனைவருமே, நமது பொதுவான இல்லமாகிய படைப்பைப் பேணும் பண்பை வளர்த்துக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரான்சிஸ்கன் சபைகளின் பிரதிநிதிகளிடம் கூறினார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-26 18:46:49]


பாசமுள்ள பார்வையில்.. தாயின் செயல் கற்றுத் தந்த பாடம்

அந்த வகுப்பு ஆசிரியர், தன் மாணவர்களுக்கு இயற்கைப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக, ஒரு காட்டுப் பாதை வழியாக அவர்களுடன் சென்று கொண்டிருந்தார். வழியில், பழைய, கிழிந்த ஒரு ஜோடி காலணிகளை அவர்கள் பார்த்தனர். அவை, அங்கு வயலில் களை எடுத்துக்கொண்டிருந்த ஒரு வயது முதிர்ந்த ஏழை அம்மாவுடையது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். அந்தக் காலணிகளை ஒளித்து வைத்து வேடிக்கை பார்க்க விரும்பினர் மாணவர்கள். ஆனால் ஆசிரியரோ, வயதானவர்களுடன் இப்படி விளையாடக் கூடாது, அதற்குப் பதிலாக, காலணிகளில் காசுகளை வைத்து ஒளித்து வைப்போம் என்று ஆலோசனை கூறினார். மாணவர்களும் அதன்படி செய்து, அந்த அம்மா வந்து காலணிகளைத் தேடிப் போடும்வரைக் காத்துக் கொண்டிருந்தனர். அன்று வேலையை முடித்து தன் காலணிகளைத் தேடி எடுத்த அந்த அம்மா, முதலில் ஒன்றை மாட்டினார். அதில் ஏதோ கனமாகத் தென்படுவதை உணர்ந்து அதைக் கழற்றிப் பார்த்தார். காசுகள் இருப்பதைக் கண்டார் அவர். அடுத்த காலணியையும் போட்டபோது அவ்வாறே உணர்ந்து அதிலிருந்தும் காசுகளை எடுத்தார். அந்த இடத்தில் யாரும் இல்லையென்பதை அறிந்து அந்தக் காசுகளை தன் முந்தானையில் முடிந்துகொண்டார் அந்த அம்மா. பின் அந்த இடத்திலே மண்டியிட்டு கைகளை விரித்து, கடவுளே, எனது வயதான கணவரின் மருந்துச் செலவுக்கும், என் குடும்பத்தின் உணவுக்கும், இன்று யாரோ ஒருவர் வழியாக, படியளந்ததற்கு கோடான கோடி நன்றிகள் என்று, கண்ணீர்மல்கச் செபித்தார். பின்னர் வீட்டிற்குப் புறப்பட்டார் அவர். அந்நேரத்தில் மாணவர்கள் கண்களிலும் கண்ணீர். பிறருக்குத் தொல்லைகளை உருவாக்குவதைத் தவிர்த்து, நம்மால் இயன்றபோதெல்லாம் பிறருக்கு உதவ வேண்டும். ஏனென்றால் கொடுப்பது, பிறருக்கு மட்டுமல்ல, கொடுப்பவருக்கும் மகிழ்வைத் தருகின்றது என்ற பாடத்தை அன்று மாணவர்கள் கற்றுக்கொண்டனர். அந்த வகுப்பு ஆசிரியர், தன் மாணவர்களுக்கு இயற்கைப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக, ஒரு காட்டுப் பாதை வழியாக அவர்களுடன் சென்று கொண்டிருந்தார். வழியில், பழைய, கிழிந்த ஒரு ஜோடி காலணிகளை அவர்கள் பார்த்தனர். அவை, அங்கு வயலில் களை எடுத்துக்கொண்டிருந்த ஒரு வயது முதிர்ந்த ஏழை அம்மாவுடையது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். அந்தக் காலணிகளை ஒளித்து வைத்து வேடிக்கை பார்க்க விரும்பினர் மாணவர்கள். ஆனால் ஆசிரியரோ, வயதானவர்களுடன் இப்படி விளையாடக் கூடாது, அதற்குப் பதிலாக, காலணிகளில் காசுகளை வைத்து ஒளித்து வைப்போம் என்று ஆலோசனை கூறினார். மாணவர்களும் அதன்படி செய்து, அந்த அம்மா வந்து காலணிகளைத் தேடிப் போடும்வரைக் காத்துக் கொண்டிருந்தனர். அன்று வேலையை முடித்து தன் காலணிகளைத் தேடி எடுத்த அந்த அம்மா, முதலில் ஒன்றை மாட்டினார். அதில் ஏதோ கனமாகத் தென்படுவதை உணர்ந்து அதைக் கழற்றிப் பார்த்தார். காசுகள் இருப்பதைக் கண்டார் அவர். அடுத்த காலணியையும் போட்டபோது அவ்வாறே உணர்ந்து அதிலிருந்தும் காசுகளை எடுத்தார். அந்த இடத்தில் யாரும் இல்லையென்பதை அறிந்து அந்தக் காசுகளை தன் முந்தானையில் முடிந்துகொண்டார் அந்த அம்மா. பின் அந்த இடத்திலே மண்டியிட்டு கைகளை விரித்து, கடவுளே, எனது வயதான கணவரின் மருந்துச் செலவுக்கும், என் குடும்பத்தின் உணவுக்கும், இன்று யாரோ ஒருவர் வழியாக, படியளந்ததற்கு கோடான கோடி நன்றிகள் என்று, கண்ணீர்மல்கச் செபித்தார். பின்னர் வீட்டிற்குப் புறப்பட்டார் அவர். அந்நேரத்தில் மாணவர்கள் கண்களிலும் கண்ணீர். பிறருக்குத் தொல்லைகளை உருவாக்குவதைத் தவிர்த்து, நம்மால் இயன்றபோதெல்லாம் பிறருக்கு உதவ வேண்டும். ஏனென்றால் கொடுப்பது, பிறருக்கு மட்டுமல்ல, கொடுப்பவருக்கும் மகிழ்வைத் தருகின்றது என்ற பாடத்தை அன்று மாணவர்கள் கற்றுக்கொண்டனர். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி [2017-11-26 18:41:12]


முக்கிய அறிவிப்பு

நவம்பர் 26, இஞ்ஞாயிறிலிருந்து வத்திக்கான் வானொலியின் தமிழ் தினசரி மாலை ஒலிபரப்பு, 41 மீ.பா. 7250 கி.ஹெ. மற்றும் 31 மீ.பா. 9505 கி.ஹெ.ல் இடம்பெறுகின்றது. [2017-11-26 00:33:02]


சீனாயிலுள்ள மசூதி தாக்கப்பட்டதற்கு திருத்தந்தை கண்டனம்

எகிப்து நாட்டின் வட சீனாய்ப் பகுதியிலுள்ள Al Roda மசூதியில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல், மிகுந்த வேதனயளிக்கின்றது எனவும், இதில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு தனது ஒருமைப்பாட்டுணர்வையும், ஆறுதலையும், செபங்களையும் தெரிவிப்பதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். சுன்னி இஸ்லாமியப் பிரிவினரின் இம்மசூதியில், இவ்வெள்ளியன்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, குண்டுகளை வெடித்தும், பக்தர்கள் மீது நச்சு மருந்துகளைத் தெளித்தும், துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 300க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். செபம் செய்துகொண்டிருந்த அப்பாவி மக்கள்மீது, அறிவற்றதனமாய் நடத்தப்பட்டுள்ள இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராய், மிகக் கடுமையாகக் கண்டனம் தெரிவிப்பதாகவும், காழ்ப்புணர்வால் கடினப்பட்டுள்ள இதயங்கள், இத்தகைய பெரும் துன்பங்களை வருவிக்கின்ற வன்முறைப் பாதையைப் புறக்கணித்து, அமைதியின் பாதையைத் தழுவிக்கொள்ள, நல்மனம் கொண்டவர்களுடன் இணைந்து செபிப்பதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார். திருத்தந்தையின் இச்செய்தியை, எகிப்துக்கு அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின். கடந்த ஆண்டில், பயங்கரவாதிகள், கெய்ரோவிலும், ஏனைய நகரங்களிலும், கிறிஸ்தவ ஆலயங்களைக் குண்டு வைத்து தாக்கியுள்ளனர். இதில், பல கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இவ்வாண்டில், ஏழு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவக் குடும்பங்கள், சீனாய்ப் பகுதியைவிட்டு வெளியேறியுள்ளனர். மேலும், இப்பயங்கரவாதத் தாக்குதலில் இறந்தவர்கள் நினைவாக, எகிப்தில் மூன்று நாள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-26 00:28:12]


இரக்கம்நிறை ஆண்டவர் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை

இரக்கம்நிறை ஆண்டவர், தம் சகோதர, சகோதரிகளை ஒருபோதும் கைவிடுவதில்லை, அதேநேரம், அவர்களின் காயங்களை, தம் காயங்களுடன் இணத்துக்கொள்கிறார் என்பதை, சிலுவை அடையாளம் தொடர்ந்து நமக்கு நினைவுபடுத்துகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கூறினார். கத்தோலிக்க மற்றும், கீழை வழிபாட்டுமுறை அசீரியத் திருஅவைகளின் இறையியல் கலந்துரையாடல் குழுவின் உறுப்பினர்களை, இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அருளடையாள வாழ்வு குறித்து, இக்குழு அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டு, வெளியிடுவது குறித்த மகிழ்வையும் தெரிவித்தார். கத்தோலிக்க மற்றும், கீழை வழிபாட்டுமுறை அசீரியத் திருஅவைகள், ஒரே பீடத்தில் முழு ஒன்றிப்பைக் கொண்டாடும் நாளுக்காக, இந்த இறையியல் உரையாடல் குழு தொடர்ந்து உழைப்பதற்கு, தான் செபிப்பதாகவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். இப்புதிய அறிக்கையில், அனைத்து அருளடையாளக் கொண்டாட்டங்களில், ஒற்றுமையின் வெளிப்படையான அடையாளமாக சிலுவை அடையாளம் குறிப்பிடப்பட்டிருப்பதை வலியுறுத்த விரும்புவதாகக் கூறியத் திருத்தந்தை, அசீரியத் திருஅவை மரபில், சிலுவையிலுள்ள கிறிஸ்து, நல்ல மருத்துவராகவும், வாழ்வின் மருந்தாகவும் நோக்கப்படுவது பற்றியும் குறிப்பிட்டார். ஏனைய கிறிஸ்தவ சபைகளைப் போலவே அசீரியத் திருஅவையின் கிறிஸ்தவர்களும் கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி, புலம்பெயர்ந்துள்ளனர் என்றும் கவலை தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அசீரியக் கிறிஸ்தவர்கள், தாங்கள் வாழ்கின்ற இடங்களில், அனைவரையும் முழுமையாக மதித்து, அமைதி மற்றும் ஒப்புரவுக்காகத் தொடர்ந்து உழைப்பார்கள் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-26 00:19:12]


நவம்பர் 26, துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கும் நாள்

தங்கள் கடவுள் நம்பிக்கைக்காக, உலகின் பல நாடுகளில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று ஒருங்கிணைந்து செபிக்க, அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்கர்களுக்கு, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் டேனியல் டி'னார்டோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். நவம்பர் 26, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் கிறிஸ்து அரசர் பெருவிழா, உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கும் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை அறிவித்துள்ளது. "துன்பத்தில் ஒருங்கிணைய" என்ற தலைப்பில், நவம்பர் 26ம் தேதி துவங்கி, டிசம்பர் 3ம் தேதி நிறைவு பெறும் விழிப்புணர்வு வாரம், மதத்தின் காரணமாக துன்புறும் அனைவரையும் நினைவுகூரும் வாரமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Aid to the Church in Need அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு வாரத்தில், சிறப்பு திருப்பலிகள், செப வழிபாடுகள், மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி) [2017-11-23 23:20:08]


திருத்தந்தை: திருப்பலி, நலிந்தோருக்கு வழங்கப்படும் மருந்து

கொடுமையான பசி ஆதிக்கம் செலுத்தும் உலகில் நாம் வாழ்கிறோம் என்றும், ரொட்டி மனித ஒருமைப்பாட்டிற்கு ஓர் அடையாளமாக இல்லை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் கூறினார். Tv2000 என்ற இத்தாலிய தொலைக்காட்சி நிறுவனம், "எங்கள் தந்தாய்" என்ற தலைப்பில், உருவாக்கியுள்ள ஒரு தொடரின் ஐந்தாவது பகுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியைக் குறித்தும், உலகில் நிலவும் பசி, பட்டினி ஆகிய கொடுமைகள் குறித்தும் தன் கருத்துக்களைக் கூறியுள்ளார். இறைவனின் பிரசன்னம், நாம் திருப்பலியில் பகிர்ந்தளிக்கும் அப்பத்தில் உள்ளது என்று கூறியத் திருத்தந்தை, திருப்பலி, வலியோருக்கு வழங்கப்படும் விருந்து என்பதைவிட, நலிந்தோருக்கு வழங்கப்படும் மருந்து என்று கூறுவதே பொருந்தும் என்று எடுத்துரைத்தார். இன்றைய உலகில் பரவியுள்ள ‘துரித உணவு’ என்ற கருத்தியலுக்கு மாற்று கருத்தியலை உருவாக்கி, அதன் வழியே, பாரம்பரிய உணவு வகைகளை மக்கள் உண்டு, நலமாக வாழும் வழிமுறைகளை சொல்லித்தரும் 'மெதுவான உணவு' என்ற அமைப்பை நிறுவிய கார்லோ பெத்ரீனி என்ற இத்தாலியரின் நேர்காணல், இந்த தொலைக்காட்சி நிகழ்வில் இடம்பெற்றது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-23 23:06:24]


திருத்தந்தை, சவுதி அரேபிய அதிகாரி சந்திப்பு

“நாம் பிறரைச் சந்திக்கும்போது, பிறரன்பின் கதகதப்பை வழங்குகிறோமா அல்லது பூட்டிய அறைக்குள், நெருப்பின் முன்னே அமர்ந்து, நம்மை நாமே கதகதப்பாக்கிக் கொள்கிறோமா?” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில் இப்புதனன்று வெளியிட்டுள்ளார். மேலும், இப்புதன் காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் பொது மறைக்கல்வியுரையை வழங்குவதற்குச் செல்லுமுன், முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தின் ஓர் அறையில், சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சகத்தின் அதிகாரி, Abdullah bin Fahad Allaidan அவர்களைச் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இப்புதன் பொது மறைக்கல்வியுரையின் இறுதியில், உணவு வங்கி நிறுவனத்தின் பிரதிநிதிகளை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற சனிக்கிழமையன்று, ஏழைகளுக்காக உணவு சேகரிக்கும் இவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தினார். கடந்த ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக வறியோர் நாளின் தொடர்ச்சியாக, உணவு வங்கி நிறுவனத்தினர் இப்பணியை மேற்கொண்டுள்ளனர் என்று கூறினார், திருத்தந்தை, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட புனித செசீலியாவின் விழாவையும் நினைவுபடுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரையறையின்றி அன்புகூர்வது பற்றியும், தூய்மையான அன்பு பற்றியும் புனித செசீலியாவிடமிருந்து கற்றுக்கொள்ளவும் கேட்டுக்கொண்டார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-22 22:19:03]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்