வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்சிரியாவில் நலிந்தவர்கள் பாதுகாக்கப்பட வலியுறுத்தல்

சிரியாவில் நிலவும் மனிதாபிமானப் பேரிடரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, இயலக்கூடிய எல்லா வழிகளிலும் முயலுமாறு, திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள் சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போர் மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதல்களிலிருந்து அப்பாவி குடிமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்கும் கடிதம் ஒன்றை, சிரியா அரசுத்தலைவர் Bashar Hafez al-Assad அவர்களுக்கு அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் வழியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொடுத்தனுப்பியுள்ள இக்கடிதம் பற்றி வத்திக்கான் செய்திகளிடம் பகிர்ந்துகொண்ட, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், சிரியாவில் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கின்ற மக்களுக்காக, திருத்தந்தை, அக்கடிதத்தில் விண்ணப்பித்துள்ளார் என்று கூறினார். சிரியா அரசுத்தலைவர் அல்-அசாத் அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இக்கடிதம், சிரியாவில், குறிப்பாக, Idlib மாநிலத்தில் நிலவும் அவசரகால மனிதாபிமானச் சூழல் குறித்து, திருத்தந்தையும், திருப்பீடமும் அதிக கவலை கொண்டுள்ளனர் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகின்றது என்று கூறினார், கர்தினால் பரோலின். Idlib மாநிலத்தில் வாழ்கின்ற முப்பது இலட்சத்திற்கு அதிகமான மக்களில், 13 இலட்சம் பேர், அப்பகுதிக்குள்ளே புலம்பெயர்ந்துள்ளனர் என்றும், அப்பகுதியிலிருந்து இராணுவம் அகற்றப்பட்டுவிட்டது இடம் என, கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டதால், இம்மக்கள் அங்கு அடைக்கலம் தேடினர் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் தெரிவித்தார். அண்மையில் அப்பகுதியில் இடம்பெற்ற இரத்தம் சிந்தும் தாக்குதல்களால், அவ்விடங்களைவிட்டு மக்கள் கட்டாயமாக வெளியேறி வருகின்றனர் என்றும், சிரியாவில் போர் தொடர்ந்து இடம்பெறுவதால், துன்புறும் மக்கள், குறிப்பாக, சிறார் குறித்து திருத்தந்தை மிகுந்த கவலை கொண்டுள்ளார் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார். அப்பாவி குடிமக்களின் வாழ்வும், பள்ளிகள், மருத்துவமனைகள், நலவாழ்வு மையங்கள் போன்ற நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார், கர்தினால் பரோலின். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஜூன் 28ம் தேதி கையெழுத்திட்ட இக்கடிதம், ஜூலை 22, இத்திங்களன்று, அரசுத்தலைவர் அல்-அசாத் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. இக்கடிதத்தை சமர்ப்பித்த ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் டர்க்சன் அவர்களுடன், அந்த அவையின் நேரடி பொதுச் செயலர் அருள்பணி நிக்கொலா ரிக்கார்தி அவர்களும், சிரியாவிலுள்ள திருப்பீடப் பிரதிநிதி, கர்தினால் மாரியோ செனாரி அவர்களும் உடன் இருந்தனர். [2019-07-24 01:02:30]


கர்தினால் Llaurens அவர்களின் மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்

ஸ்பெயின் நாட்டின் கர்தினால் José Manuel Estepa Llaurens அவர்கள், இறையடி சேர்ந்தததையடுத்து, இரங்கல் செய்தியொன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் ஸ்பெயின் நாட்டின் கர்தினால் José Manuel Estepa Llaurens அவர்கள், தன் 93வது வயதில் இறையடி சேர்ந்தததையடுத்து, இரங்கல் செய்தியொன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார். கர்தினால் Estepa Llaurens அவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்கள் மற்றும் அவருடன் பணியாற்றிய அருள்பணியாளர்கள் அனைவருக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களை தன் செய்தியில் வெளியிட்டுள்ள திருத்தந்தை, கர்தினால் Llaurens அவர்களின் ஆன்மா நிறை வாழ்வடைய செபிப்பதாகவும் கூறியுள்ளார். 1926ம் ஆண்டு புத்தாண்டு நாளான சனவரி 1ம் தேதி, ஸ்பெயின் நாட்டின் Andújar எனுமிடத்தில் பிறந்த கர்தினால் Estepa Llaurens அவர்கள், 1954ம் ஆண்டு அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றார். 2010ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இவரை கர்தினாலாக உயர்த்தினார். ஜூலை 21, இஞ்ஞாயிறன்று, கர்தினால் Estepa Llaurens அவர்கள், இறையடி சேர்ந்ததையடுத்து, திருஅவையில், கர்தினால்களின் எண்ணிக்கை, 218ஆக குறைந்துள்ளது என்பதும், இவர்களில் 120 பேர், திருத்தந்தையைத் தேர்தெடுக்கும் தகுதியுடையவர்கள் என்பதும், 98 பேர், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கன. [2019-07-23 01:06:16]


நிலவில் கால்பதித்த முதல் மனிதரிடம் புனித திருத்தந்தை 6ம் பவுல்

நிலவில் முதன்முதலில் காலடி பதித்த மனிதர்களுக்கு, புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் வழங்கிய வாழ்த்தையும், ஆசீரையும், அந்நிகழ்வின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு நாளில் நினைவுகூர்ந்துள்ளது வத்திக்கான் வானொலி. மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள் நிலவில் முதன்முதலில் காலடி பதித்த மனிதர்களுக்கு, புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் வழங்கிய வாழ்த்தையும், ஆசீரையும், அந்நிகழ்வின் ஐம்பதாம் ஆண்டு நிறைவான ஜூலை 20, இச்சனிக்கிழமையன்று நினைவுகூர்ந்துள்ளது வத்திக்கான் வானொலி. 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டு மூன்று விண்வெளி வீரர்களை (Neil Armstrong, Buzz Aldrin, Michael Collins), நிலவிற்கு ஏற்றிச்சென்ற அப்போல்லோ 11 விண்கலம், ஜூலை 20ம் தேதி நிலவில் இறங்கியது. நிலவில் வீரர்கள் நிலவில் இறங்கிய அந்த அதிசயத்தை, காஸ்தெல்கந்தோல்போ வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், நிலவை வென்றவர்கள் என்று தன் வாழ்த்தையும், நன்மதிப்பையும் தெரிவித்துள்ளார். மனிதர் நிலவில் நடந்தது, கடவுளின் கைவண்ண வேலையின் மகத்துவத்தை அங்கீகரிப்பதாக உள்ளது என்றும், புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், அச்சமயத்தில் தெரிவித்துள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில், இரஷ்ய விண்வெளி வீரர் யூரி காகரின் அவர்கள், 1961ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி, புவியின் சுற்றுவட்டப்பாதையில் ஒரு சுற்றை நிறைவுசெய்ததையடுத்து, விண்வெளியில் பறந்த முதல் மனிதர் என்று பெயர் பெற்றார். அதற்குப் போட்டியாக, அமெரிக்க ஐக்கிய நாடு நிலவுக்கு மனிதரை அனுப்பியது. நிலா, புவியிலிருந்து 2,40,000 மைல்கள் தொலைவில் உள்ளது. இது புவியை ஒன்பதரை தடவை சுற்றிவருவதற்குச் சமமான தூரமாகும். [2019-07-23 01:00:51]


வத்திக்கான் ஊடகத்துறையில் புதிய நியமனங்கள்

வத்திக்கான் செய்தித்துறையின் இயக்குனராக, முனைவர் மத்தேயோ ப்ரூனி அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 18, இவ்வியாழனன்று நியமித்துள்ளார். ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் வத்திக்கான் செய்தித்துறையின் இயக்குனராக, முனைவர் மத்தேயோ ப்ரூனி (Matteo Bruni) அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 18, இவ்வியாழனன்று நியமித்துள்ளார். இத்துறையின் இடைக்கால இயக்குனராக கடந்த ஆறு மாதங்கள் பணியாற்றிய முனைவர், அலெஸ்சாந்த்ரோ ஜிசோத்தி (Alessandro Gisotti) அவர்களையும், முனைவர் செர்ஜோ செந்தோபாந்தி (Sergio Centofanti) அவர்களையும், திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவில், துணை இயக்குனர்களாக நியமித்துள்ளார், திருத்தந்தை. இந்த நியமனங்கள் ஜூலை 22ம் தேதி முதல் துவங்கும் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறிய திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் தலைவர் முனைவர் பவுலோ ருஃபீனி அவர்கள், வத்திக்கான் செய்தித்துறையின் இடைக்கால இயக்குனராக கடந்த ஆறு மாதங்கள் பணியாற்றிய ஜிசொத்தி அவர்களுக்கு சிறப்பான முறையில் நன்றி கூறினார். வத்திக்கான் செய்தித்துறையின் புதிய இயக்குனராகப் பொறுப்பேற்கவிருக்கும் முனைவர் மத்தேயோ ப்ரூனி அவர்கள், 1976ம் ஆண்டு, நவம்பர் 23ம் தேதி பிரித்தானியாவின் வின்செஸ்டரில் பிறந்து, உரோம் நகரின் சாப்பியென்சா பல்கலைக்கழகத்தில் ‘இன்றைய அன்னிய மொழிகள் மற்றும் இலக்கியம்’ என்ற துறையில் பட்டம் பெற்றார். 2009ம் ஆண்டு முதல், திருப்பீடத்தின் செய்தித்துறை அலுவலகத்தில் பணியாற்றிவரும் ப்ரூனி அவர்கள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிய மொழிகளை அறிந்தவர். 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி முதல், வத்திக்கான் செய்தித் துறையின் இடைக்கால இயக்குனராக பணியாற்றிவந்த ஜிசொத்தி அவர்கள், தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்தும், திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் தலைவர் முனைவர் பவுலோ ருஃபீனி அவர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்ட அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி கூறினார். [2019-07-21 02:09:27]


துன்புறும் மக்களுடன் திருத்தந்தையின் அருகாமை

மக்களின் துயர்நிலைகளை அகற்றுவதற்கு, நல்லதொரு தீர்வைக் கொணரும் பொறுப்பிலுள்ள அனைத்து தரப்பினருக்காகவும் செபிக்க திருத்தந்தை அழைப்பு கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள் வெனிசுவேலா நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கும் நெருக்கடிகளால் துன்புறும் அந்நாட்டு மக்களோடு தன் அருகாமையை வெளியிடுவதாக இஞ்ஞாயிறன்று அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்தவர்களின் பிறரன்பு குறித்து எடுத்துரைத்த இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், வெனிசுவேலா நாட்டின் துன்பநிலைகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்கள், மற்றும், அப்பகுதியில் உள்ள ஏனைய நாடுகளில் வாழும் மக்களின் நலனை மனதில் கொண்டு, நல்ல முடிவுகள் விரைவில் எடுக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார். மக்களின் துயர்நிலைகளை அகற்றுவதற்கு நல்லதொரு தீர்வைக் கொணரும் பொறுப்பிலுள்ள அனைத்து தரப்பினரையும் இறைவன் தூண்டி, அவர்களுக்கு ஒளியூட்ட வேண்டும் என நாம் அனைவரும் செபிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இதே கருத்தை வலியுறுத்தி, இஞ்ஞாயிறன்று டுவிட்டர் செய்தியொன்றையும் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். [2019-07-19 23:36:19]


கொலம்பியாவில் ‘அமைதிக்காக’ வார நிகழ்வு

கொலம்பியாவில், ‘அமைதிக்காக’ எனப்படும் வார நிகழ்வுகளின்போது, தேசிய மனித உரிமைகள் விருது வழங்கப்படும் மற்றும் தேசிய மனித உரிமைகள் நாள் சிறப்பிக்கப்படும். வாழ்வு மற்றும் அமைதிக்காக என, ஒரு நாள் அர்ப்பணிக்கப்படும். மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள் கொலம்பியாவில் ஒவ்வொரு நாளும் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ‘அமைதிக்காக’ எனப்படும் வார நிகழ்வு, இவ்வாண்டு வருகிற செப்டம்பர் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை சிறப்பிக்கப்படவிருக்கின்றது. அந்நாட்டின் பல்கலைக்கழகங்கள், அரசு-சாரா அமைப்புகள், சமய நிறுவனங்கள் சமுதாய இயக்கங்கள் போன்றவற்றின் சமுதாய ஆர்வலர்களைக் கொண்ட குழு, இந்நிகழ்வை ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகின்றது. வருகிற செப்டம்பர் 5ம் தேதியன்று இடம்பெறும் நிகழ்வில், ‘குறைந்தது ஆயிரம் பகுதிகளில் அமைதி’ என்ற அறிக்கை வெளியிடப்படவுள்ளது என, பீதேஸ் செய்தி கூறுகின்றது. கொலம்பியாவில், கடந்த 32 ஆண்டுகளாக சிறப்பிக்கப்பட்டுவரும் இந்நிகழ்வு, ‘நானும், நாமும் அமைதியின் பகுதி’ என்ற தலைப்பில், இவ்வாண்டில் கொண்டாடப்படுகின்றது. (Fides) தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், 1960களின் மத்திய பகுதியில், அரசுக்கும், புரட்சிக்குழுக்களுக்கும் இடையே துவங்கிய உள்நாட்டுப் போர், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றது. 2016ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி, ஹவானாவில் இடம்பெற்ற அமைதி ஒப்பந்தத்தால், அப்போர் முடிவுற்றது. 1958ம் ஆண்டுக்கும், 2013ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும், இப்போரால் 2,20,000பேர் உயிரிழந்தனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. (Fides) [2019-07-19 23:28:36]


கார்மேல் அன்னை மரியா விழா டுவிட்டர் செய்தி

சிலுவைப்போர் சமயத்தில், பாதுகாப்பான இடம் தேடிய துறவிகள் கார்மேல் மலைக்குச் சென்று அங்கு தங்கினர். இன்று திருஅவையில் உள்ள கார்மேல் சபைத் துறவிகள், அன்று அந்த மலையில் வாழ்ந்த துறவிகளின் வழிவருபவர்கள் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள் ஜூலை 16, இச்செவ்வாயன்று, கார்மேல் அன்னை மரியா திருவிழா சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘கார்மேல் அன்னை மரியா’ (#OurLadyofMountCarmel) என்ற ‘ஹாஷ்டாக்’குடன், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார். “கார்மேல் அன்னை மரியா திருவிழாவான இன்று நாம், கிறிஸ்துவின் சிலுவையருகில் நின்ற கன்னி மரியா பற்றித் தியானிக்கிறோம், அது, கிறிஸ்துவுக்கு நெருக்கமான திருஅவையின் இடமும்கூட” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின. எபிரேய மொழியில் தோட்டம் எனப் பொருள்படும் கார்மேல் மலை, பாலஸ்தீன் நாட்டின் ஹைபர் வளைகுடாவில், கடல் மட்டத்திற்கு 1742 அடி உயரத்தில் அமைந்துள்ளது. விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ள கார்மேல் மலையில், இறைவாக்கினர் எலியா தங்கி, மழையின்றி கடும் வறட்சியால் துன்புற்ற இஸ்ரேல் நாட்டிற்காகச் செபித்தார். அங்கு அவர் கன்னி மரியாவின் அடையாளமாக, கார்மேகங்களைக் கண்டார் (எச.7:14). நாட்டில் மழையும் பெய்தது. 12ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 13ம் நூற்றாண்டில், சிலுவைப்போர் சமயத்தில், பாதுகாப்பான இடம் தேடிய துறவிகள் கார்மேல் மலைக்குச் சென்று அங்கு தங்கினர். 13ம் நூற்றாண்டில், புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்ட புனித சைமன் ஸ்டாக் என்பவர், அத்துறவிகளோடு சேர்ந்து வாழத் தொடங்கினார்.1251ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, ஞாயிறன்று, அன்னை மரியா, ஒரு கரத்தில் குழந்தை இயேசுவுடனும், மற்றொரு கரத்தில், மாநிறத்தில் உத்தரியத்துடனும், புனித சைமன் ஸ்டாக் அவர்களுக்குத் தோன்றினார். இன்று திருஅவையில் உள்ள கார்மேல் சபைத் துறவிகள், அன்று கார்மேல் மலையில் வாழ்ந்த துறவிகளின் வாரிசுகள். அந்த மலையில் அந்த துறவிகள் அன்னை மரியாவுக்கு ஒரு சிற்றாலயம் எழுப்பினர். அன்னை மரியா மீது கொண்டிருந்த பக்தியால், கழுத்தில் உத்தரியத்தை அணியும் பக்தியையும், அவர்கள் மக்கள் மத்தியில் பரப்பி வந்தனர். [2019-07-17 00:28:21]


5 திருத்தந்தையர்களுக்காக பணியாற்றிய கர்தினால் மறைவு

தன் 84ம் வயதில் இறையடி சேர்ந்த இத்தாலியக் கர்தினால் பவுலோ சார்தி (Paolo Sardi) அவர்களின் மறைவைக் குறித்து, தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள் ஜூலை 13, கடந்த சனிக்கிழமையன்று, தன் 84வது வயதில் இறையடி சேர்ந்த இத்தாலியக் கர்தினால் பவுலோ சார்தி (Paolo Sardi) அவர்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். இறையியல் வல்லுனராகவும், குருத்துவ உணர்வுடனும் செயல்பட்ட கர்தினால் சார்தி அவர்கள், தன் அறிவு மற்றும் ஞானத்தின் துணைகொண்டு, திருத்தந்தையர்கள் புனித ஆறாம் பவுல், முதலாம் ஜான் பால், புனித இரண்டாம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோரின் படிப்பினைகளில் சிறப்புப் பங்களிப்பு வழங்கியுள்ளதை, தன் செய்தியில் பாராட்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பீடத்திற்கு ஆற்றிய பணி வழியாக அவர் வழங்கிய சாட்சியத்திற்கு நன்றி கூறும் அதேவேளை, அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிப்பதாகவும், கர்தினால் சார்தி அவர்களின் மரணம் குறித்து அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை. 1934ம் ஆண்டு வட இத்தாலியின் ரிக்கால்தோனே (Ricaldone) எனுமிடத்தில் பிறந்த கர்தினால் சார்தி அவர்கள், இம்மாதம் 13ம் தேதி, சனிக்கிழமையன்று இறையடி சேர்ந்ததைத் தொடர்ந்து, திருஅவையில், கர்தினால்களின் எண்ணிக்கை 219 ஆகக் குறைந்துள்ளது. இதில் 120 பேர், திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய, 80 வயதிற்குட்பட்டவர்கள். கர்தினால் சார்தி அவர்களின் அடக்கச் சடங்குத் திருப்பலி, இத்திங்கள் காலை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் இடம்பெற்றது [2019-07-16 02:00:05]


மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்

இங்கிலாந்தைச் சேர்ந்த அருள்சகோதரர் Robinson அவர்கள், கானா நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கு, தன்னை அர்ப்பணித்துள்ளார் மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள் ஆப்ரிக்காவின் கானா நாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கென, சக்கர நாற்காலிகளையும், மூன்று சக்கர மிதிவண்டிகளையும் எளிமையான முறையில், கையால் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளார், மறைப்பணியாளர் ஒருவர். இந்த தனது திட்டம் பற்றி, பீதேஸ் செய்தியிடம் கூறிய, ஆப்ரிக்க மறைப்பணியாளர் சபையின் அருள்சகோதரர் Trevor Robinson அவர்கள், கானா நாட்டின் Tamale நகரில் மூவாயிரத்திர்கு அதிகமான மக்கள் வாழ்கின்றனர், இவர்களில் மாற்றுத்திறனாளி சிறுவர்களும், வயதுவந்தவர்களும் வெளியே செல்ல இயலாமல், எந்தவித உதவியுமின்றி ஒதுக்கப்பட்டவர்களாக, வீடுகளுக்கு அருகிலே வாழ்ந்து வருகின்றனர் என்று கூறினார். இங்கிலாந்தைச் சேர்ந்த அருள்சகோதரர் Robinson அவர்கள், இந்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கு, தனது நற்செய்தி அறிவிப்புப் பணியை அர்ப்பணித்து, எளிய சக்கரநாற்காலிகளை அமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்கள், தான் தயாரிக்கும் மூன்று சக்கர மிதிவண்டிகளைப் பயன்படுத்தி, சாலைகளில் செல்லும் வாய்ப்பைப் பெறுவர் என்று தெரிவித்துள்ள அருள்சகோதரர் Robinson அவர்கள், முதலில் ஒரு வாரத்திற்கு ஏறத்தாழ பத்து வண்டிகள் எனத் தயாரிக்கத் தொடங்கி, தற்போது 50 வண்டிகளைத் தயார் செய்திருப்பதாகக் கூறியுள்ளார். (Fides) [2019-07-15 01:31:15]


திருத்தந்தையின் டுவிட்டர் - கடவுளின் அன்புப் பிள்ளைகள்

'பாலம் அமைப்பவர்' என்ற பொருள்படும் Pontifex என்ற இலத்தீன் சொல்லை, தன் டுவிட்டர் முகவரியாகக் கொண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2012ம் ஆண்டு டிசம்பரில் டுவிட்டர் செய்திகளைத் துவக்கினார் மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள் நாம் கடவுளின் அன்புப் பிள்ளைகள் என்பதை, நம்மில் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பது, விசுவாசமே என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜூலை 12, இவ்வெள்ளியன்று வெளியான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில், “நாம் கடவுளின் அன்புக் குழந்தைகள் என்பதை, ஆழமான மற்றும் அழகான பற்றுறுதியுடன் வாழச் செய்வது, விசுவாசம் எனும் கொடையே” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன. ஜூலை 11, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,043 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 4 கோடியே 88 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன. இத்துடன், @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, அவ்வப்போது வெளியிடப்பட்டு வரும் படங்கள் மற்றும் காணொளிகள், இதுவரை 738 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 62 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன. 'பாலம் அமைப்பவர்' என்ற பொருள்படும் Pontifex என்ற இலத்தீன் சொல்லை, தன் டுவிட்டர் முகவரியாகக் கொண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2012ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி, டுவிட்டர் செய்திகளைத் துவக்கினார். [2019-07-13 01:36:57]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்