வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்ஈரானில் விமான விபத்து – திருத்தந்தையின் அனுதாபத் தந்தி உக்ரைன் நாட்டு விமான விபத்தில்

உக்ரைன் நாட்டு விமான விபத்தில் இறந்தோர் அனைவரையும், இரக்கம் நிறைந்த இறைவனின் அன்பில் ஒப்படைக்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன் - திருத்தந்தை ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் உக்ரைன் நாட்டு விமானம், ஈரான் நாட்டில் விமான விபத்துக்கு உள்ளானதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அனுதாபத்தை வெளிப்படுத்தும் தந்தி ஒன்றை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார். விமான விபத்தில் இறந்தோருக்க் இறையமைதி ஈரான் நாட்டின் Tehran நகருக்கருகே நிகழ்ந்த விமான விபத்தில் இறந்தோர் அனைவரையும், இரக்கம் நிறைந்த இறைவனின் அன்பில் ஒப்படைப்பதாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார். இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இறைவனின் சக்தியும், அமைதியும் கிடைக்கும்படி திருத்தந்தை தன் ஆசீரை வழங்கியுள்ளதாக கர்தினால் பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள தந்திச் செய்தி கூறுகிறது. உக்ரைன் நாட்டு விமானம் விபத்து சனவரி 8, இப்புதனன்று காலை 6 மணியளவில், ஈரான் நாட்டின் தலைநகர் Tehranன் Imam Khomeini விமானத் தளத்திலிருந்து, உக்ரைன் தலைநகர் Kyiv நோக்கி புறப்பட்ட உக்ரைன் நாட்டு விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 176 பேரும் உயிரிழந்தனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. விமானம் புறப்பட்டு பத்து கிலோமீட்டர் தூரத்தில் நிகழ்ந்த இந்த விபத்திற்கு இன்னும் தெளிவான காரணங்கள் கிடைக்கவில்லை என்றும், இதில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர், உக்ரைன் மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. ஆஸ்திரேலியாவுக்காக செபிக்க... மேலும், சனவரி 8, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில், ஆஸ்திரேலியாவின் பல பகுதிகள் தீயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் குறித்து தன் கவலையை வெளியிட்டதோடு, கூடியிருந்தோரையும், மக்கள் அனைவரையும், ஆஸ்திரேலியாவுக்காக செபிக்குமாறு அழைப்புவிடுத்தார். [2020-01-09 01:15:39]


ஆஸ்திரேலிய பேரிடர் துடைப்பில் கத்தோலிக்கர்

ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில், ஒரு கோடியே 20 இலட்சம் ஏக்கர் காட்டுப்பகுதி தீயில் கருகியுள்ளது. இது, கடந்த ஆண்டில் அமேசானில் தீப் பற்றியெரிந்த காட்டுப்பகுதியைவிட இருமடங்கு அதிகம் கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள் ஆஸ்திரேலியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, தற்போது அந்நாட்டின் பெரும்பகுதியில் பரவியுள்ள காட்டுத்தீயில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை. இந்த இயற்கை பேரிடர் குறித்து ஆஸ்திரேலிய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரான Brisbane பேராயர் Mark Coleridge அவர்கள், சனவரி 7, இச்செவ்வயான்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்பேரிடரில் உயிரைப் பணயம் வைத்து மீட்புப்பணியாற்றும் தீயணைப்புப் படையினரைப் பாராட்டியுள்ளார். இத்துன்பங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, அவ்விடங்களிலிருந்து வெளியேற்றும் பணி, மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது என்று கூறியுள்ள பேராயர் Coleridge அவர்கள், வார்த்தைகளைவிட செயல்கள் மேலும் அதிகம் தேவைப்படுகின்றன என்றும் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகள், மற்றும், துறவு சபைகள் அனைத்தும் இடர்துடைப்புப் பணிகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பேராயரின் அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையே, ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில், ஒரு கோடியே 20 இலட்சம் ஏக்கர் காட்டுப்பகுதி தீயில் கருகியுள்ளது. இது, கடந்த ஆண்டில் அமேசானில் தீப் பற்றியெரிந்த காட்டுப்பகுதியைவிட இருமடங்கு அதிகம் எனக் கூறப்படுகின்றது. மேலும், ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து காட்டுத்தீயில் சிக்கி இலட்சக்கணக்கான விலங்குகள் இறந்துள்ளன, அவ்வெண்ணிக்கை இதுவரை 50 கோடி எனவும், இரண்டாயிரம் வீடுகள் எரிந்துள்ளன எனவும் செய்திகள் கூறுகின்றன. (Catholicleader) [2020-01-09 01:08:18]


வாழ்வு புனிதமானது, கருணைக்கொலைக்கு மறுப்பு

மருத்துவப் பணிகளில் ஒவ்வொரு மனிதரின் மாண்பும், வாழ்வும் ஊக்குவிக்கப்பட வேண்டும், குணமாக்க முடியாத நிலையில் உள்ளவர்களையும்கூட, கருணைக்கொலைச் செய்வதற்கு எவ்விதத்திலும் உடன்படக் கூடாது மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள் உலகில் ஒவ்வொருவரும் தங்களின் உடல்நலனைப் பாதுகாத்து பேணுவதற்கு உதவுவதற்கென, தகுந்த சகிச்சைகள் வழங்கப்படுவதில் ஒத்துழைப்பை உறுதிசெய்வதற்கு தோழமையுணர்வு மற்றும், அரசின் கொள்கைகளால் முயற்சிகள் எடுக்கப்படும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். வருகிற பிப்ரவரி மாதம் 11ம் தேதி சிறப்பிக்கப்படும், 28வது நோயாளர் உலக நாளுக்கென, சனவரி 3, இவ்வெள்ளியன்று செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிதி குறித்த கவலையில், சமுதாய நீதி புறக்கணிக்கப்படக் கூடாது என, உலகிலுள்ள அனைத்து நலவாழ்வு நிறுவனங்கள் மற்றும், அரசுத் தலைவர்களை விண்ணப்பிப்பதாகக் கூறியுள்ளார். “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்.11:28) என்ற இயேசு கிறிஸ்துவின் அருள்வாக்கை மையப்படுத்தி, இச்செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, கிறிஸ்துவின் இச்சொற்கள், புண்பட்டுள்ள மற்றும், துன்புறும் மக்களுடன், அவரின் தோழமையுணர்வை வெளிப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார். இயேசு எவரையும் ஒதுக்காமல், அவர்களின் உடல்நல நிலைகளுடன், அனைவரையும் முழுமையாக அணைத்துக் கொள்கிறார் என்றும், இவர்கள் நோய்களால் உடல் அளவில் மட்டுமன்றி, உறவு, அறிவு, பாசம், ஆன்மீகம் போன்ற எல்லா நிலைகளிலும் துன்புறுகின்றனர் என்றும், இதனால், நோயாளிகள் தங்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதோடு, தங்கள் மீது அக்கறை காட்டப்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார். நோயாளிகளுடன் அவர்களின் குடும்பங்களும் துன்புறுகின்றன, அதனால் அக்குடும்பங்களுக்கும் ஆதரவும், ஆறுதலும் அவசியம் எனவும், நோயாளிகள் எல்லாருமே, ஒருவிதத்தில், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்கள்தான்” எனவும் கூறியுள்ள திருத்தந்தை, திருஅவை இவர்களுக்கு, அதிகமதிகமாக நல்ல சமாரியராக மாறுவதற்கு விரும்புகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவத்துறைப் பணியாளர்கள் மருத்துவப் பணியாளர்கள் மற்றும், நோயாளிகளுக்கு உதவுகின்ற தன்னார்வலர்கள் எல்லாருக்கும் நன்றி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோய்கள் பற்றிய ஆய்வு, சிகிச்சை, மறுவாழ்வு போன்ற அனைத்திலும் மனிதர் என்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கருணைக்கொலைக்கு மறுப்பு மருத்துவப் பணிகளில் ஒவ்வொரு மனிதரின் மாண்பும், வாழ்வும் ஊக்குவிக்கப்பட வேண்டும், குணமாக்க முடியாத நிலையில் உள்ளவர்களையும்கூட, கருணைக்கொலைச் செய்வதற்கும், மருத்துவர் உதவியுடன் செய்யப்படும் தற்கொலைக்கும் எவ்விதத்திலும் உடன்படக் கூடாது என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, வாழ்வு புனிதமானது, அது கடவுளுக்கு உரியது, அது மீறப்பட முடியாதது, எனவே வாழ்வை, தன்விருப்பத்துடன் முடித்துக்கொள்ள எவருக்கும் உரிமை கிடையாது என்பதை வலியுறுத்தியுள்ளார். மனித வாழ்வு, தாயின் கருவில் உருவானது முதல், இயற்கையான மரணம் அடையும்வரை, பாதுகாக்கப்பட வேண்டும், மருத்துவத் துறையில் பணியாற்றுகின்றவர்கள், கிறிஸ்தவப் பிறரன்பால் உந்தப்பட்டு, வாழ்வதற்குள்ள உண்மையான மனித உரிமையைப் பாதுகாப்பதற்கு உழைக்க வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார். மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படுதல் போர்கள் மற்றும், வன்முறைச் சூழல்கள் சிலவற்றில், மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படுகின்றனர், சில பகுதிகளில், அரசியல் அதிகாரிகள் தங்களின் ஆதாயங்களுக்காக, மருத்துவக் கவனிப்புக்களைத் தடுக்க முயற்சிக்கின்றனர், இவ்வாறு, மருத்துவத் துறையினரின் நியாயமான சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றனர், இப்பணியாளர்கள் தாக்கப்படுகையில் அதுபற்றி எவரும் கவலைப்படாமலும் இருக்கின்றனர் என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது. வறுமையில் வாழ்கின்ற காரணத்தால், மருத்துவ உதவிகள் கிடைக்காமல் உலகெங்கும் துன்புறும் பல சகோதரர் சகோதரிகளை, இந்த 28வது நோயாளிகள் உலக நாளில் நினைத்துப் பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காரணத்தால், நிதி குறித்த கவலையில், இவர்களுக்கு சமுதாய நீதி புறக்கணிக்கப்படக் கூடாது என, உலகிலுள்ள அனைத்து நலவாழ்வு நிறுவனங்கள் மற்றும், அரசுத் தலைவர்களை விண்ணப்பிப்பதாகக் கூறியுள்ளார். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால், கத்தோலிக்கத் திருஅவையில் 1992ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி உருவாக்கப்பட்ட நோயாளிகள் உலக நாள், 1993ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி லூர்து அன்னை திருநாளன்று முதல் முறையாக சிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11ம் தேதி, இந்த உலக நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. டுவிட்டர் மேலும், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்.11:28). 28வது உலக நோயாளிகள் நாளுக்குச் செய்தி என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியிலும் இடம்பெற்றுள்ளன. [2020-01-04 01:56:49]


கர்தினால் Grech அவர்களுக்கு திருத்தந்தையின் இறுதி மரியாதை

"அன்னை மரியாவிடமிருந்து, மென்மையின் புரட்சி ஆரம்பமானது. குழந்தை இயேசுவைக் காணும் திருஅவை, அந்தப் புரட்சியைத் தொடர அழைக்கப்பட்டுள்ளது" - திருத்தந்தையின் டுவிட்டர் [2020-01-04 01:51:23]


'மரியா, இறைவனின் தாய்' பெருவிழா - திருத்தந்தையின் மறையுரை

இன்றைய உலகில் பெண்மையும், தாய்மையும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள், பெண்ணிடமிருந்து பிறந்த கடவுளுக்கு எதிரான குற்றம் – திருத்தந்தை பிரான்சிஸ் ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் 'மரியா, இறைவனின் தாய்' பெருவிழாவான, சனவரி 1, இவ்வியாழன் காலை 10 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியை தலைமையேற்று நடத்தினார். இத்திருப்பலியில், திருத்தந்தை வழங்கிய மறையுரையின் சுருக்கத்திற்கு இப்போது செவிமடுப்போம்: மறையுரை சுருக்கம் "காலம் நிறைவேறியபோது, கடவுள் தம் மகனை, பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்." (கலா. 4:4). ஒரு பெண்ணின் உதரத்தில் கருவாகத் தோன்றி, ஒவ்வொரு நாளாக, ஒவ்வொரு மாதமாக வளர்ச்சியடைந்ததன் வழியே, இறைவன் மனிதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். நம் இறைவனில் மனிதரின் சதை உள்ளது! இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே நிகழ்ந்த இந்த திருமண உறவை, ஆண்டின் முதல் நாளன்று நாம் கொண்டாடுகிறோம். பெண்ணிடம் பிறந்தவர். மனிதம் மீண்டும் பிறந்தது, பெண்ணிடமிருந்து துவங்கியது. பெண்கள், வாழ்வின் ஊற்றுகள். எனினும், அவர்கள் தொடர்ந்து, அடிபட்டு, பாலின வல்லுறவுக்கு உட்பட்டு, கருவில் வளரும் குழந்தையைக் கொல்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர். இன்றைய உலகில் பெண்மையும், தாய்மையும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள், பெண்ணிடமிருந்து பிறந்த கடவுளுக்கு எதிரான குற்றம். பெண்ணிடம் பிறந்தவர். வாழ்வைப் பேணிக்காக்கும் பண்பு, பெண்களுக்கு அதிகம் உண்டு. வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அவர்கள் உள்ளத்தில் ஏந்துவதால், அவர்களால் வாழ்வைப் பேணவும், காக்கவும் முடிகிறது. இதையே இன்று நற்செய்தியில் நாம் கேட்டோம். "மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்." (லூக். 2:19) உள்ளத்தில் இருத்துவது எப்போதும் மகிழ்வைத் தருவது அல்ல, இருந்தாலும், மரியா அதை தன் பழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால், அவரால் வாழ்வை பேணிக்காக்க முடிந்தது. புத்தாண்டினை துவங்கும் இவ்வேளையில், நாம் நம்மையே இக்கேள்வி கேட்போம்: "என்னால், பிறரை என் உள்ளத்தால் பார்க்க முடிகிறதா? அவர்கள் மேல் அக்கறை கொள்ள முடிகிறதா? அனைத்திற்கும் மேலாக, ஆண்டவரை என் உள்ளத்தின் மையமாகக் கொண்டிருக்க முடிகிறதா?" வாழ்வின் மீது நமக்கு அக்கறை இருந்தால் மட்டுமே, அதை எவ்விதம் உள்ளத்தில் இருத்தி பாதுகாக்க முடியும் என்பதை அறிந்துகொள்வோம். அப்போதுதான், உலகில் நிலவும் அக்கறையற்ற நிலை மாறி, மற்றவர்களைப் பாதுகாக்கும் பண்பு வளரும். அமைதியின் இளவரசர், ஒரு பெண்ணிடமிருந்து பிறந்தார். பெண், அமைதியை மற்றவர்களுக்கு வழங்கும் வழியாக விளங்குகிறார். நம்பிக்கை கொண்ட அனைவரையும் இணைக்கும் இறைவனின் தாயை நாடி வந்திருக்கிறோம். ஓ அன்னையே, எங்கள் உள்ளங்களில் நம்பிக்கையை உருவாக்கும். ஒற்றுமையைக் கொணரும். மீட்பின் வாயிலாக விளங்கும் அன்னையே, இந்த ஆண்டினை உம்மிடம் நாங்கள் ஒப்படைக்கிறோம். அதை உமது உள்ளத்தில் இருத்தும். உம்மை நாங்கள் இறைவனின் அன்னையே, இறைவனின் அன்னையே, இறைவனின் அன்னையே என்று வாழ்த்துகிறோம்! [2020-01-02 01:21:37]


வன்முறைக்கு பலியானோருக்காக அனைவரும் செபிக்க அழைப்பு

Mogadishu நகரில் தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்துள்ளோர் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் சொமாலியாவின் Mogadishu நகரில், இச்சனிக்கிழமையன்று நிகழ்ந்த, தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஏறத்தாழ 90 பேர் உயிரிழந்துள்ளது குறித்து, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் சொமாலியா தாக்குதல் குறித்து தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை, இந்த தீவிரவாத தாங்குதலுக்கு பலியானோர், மற்றும், காயமடைந்தோருடன் தான் செபத்தால் ஒன்றித்திருப்பதாகக் கூறினார். இறந்தோர், மற்றும், காயமுற்றோரின் குடும்ப அங்கத்தினர்களுடன் தான் மிக நெருக்கமாக இருப்பதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலியானோர், மற்றும், பாதிக்கப்பட்டோருக்காக அனைவரும் செபிக்குமாறு அழைப்புவிடுத்து, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த அனைவரோடும் இணைந்து, 'அருள்நிறை மரியே' என்ற செபத்தை செபித்தார். சொமாலியாவின் தென்பகுதியை, தலைநகர் Mogadishuவுடன் இணைக்கும் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியின் மீது, வெடிகுண்டு ஏற்றிய காரைக் கொண்டு மோதியதில், இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இச்சனிக்கிழமையன்று காலையில் இடம்பெற்ற இத்தாக்குதலில், பல்கலைக்கழக மாணவர்களும், இராணுவ வீரர்களும், பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். [2019-12-31 13:57:55]


உறவுகளின் தரத்தால், வாழ்வு, முக்கியத்துவம் பெறுகிறது

திருக்குடும்பத்தின் கரங்களில் இவ்வுலகின் அனைத்துக் குடும்பங்களையும், குறிப்பாக, சிரமங்களாலும், மனத்துயரங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை ஒப்படைப்போம் - திருத்தந்தை கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் வாழ்வில் எளிமையின் அவசியத்தை நமக்கு கிறிஸ்மஸ் குடில் கற்றுத்தருகிறது என்ற கருத்தை மையமாக வைத்து தன் டுவிட்டர் செய்தியை, டிசம்பர் 30, இத்திங்களன்று வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். கொண்டிருக்கும் பொருட்களின் எண்ணிக்கைகளால் அல்ல, மாறாக, உறவுகளின் தரத்தைக் கொண்டே வாழ்வு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, கிறிஸ்மஸ் குடில் காட்சியின் உண்மையான எளிமை நினைவூட்டுகிறது. உடைமைகளில் ஏழையாகவும், அன்பில் வளமுடையவராகவும் இருக்கும் இறைவனை நோக்கி நம் பார்வையைத் திருப்பும்போது, வாழ்வில் எது முக்கியமானது என்பது நினைவுக்கு வருகிறது, என உரைக்கிறது, திருத்தந்தையின் திங்கள் தின டுவிட்டர் செய்தி. மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'இன்று திருக்குடும்பத்தின் கரங்களில் இவ்வுலகின் அனைத்துக் குடும்பங்களையும் ஒப்படைப்போம், குறிப்பாக, சிரமங்களாலும், மனத்துயரங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை ஒப்படைத்து, அவர்கள் மீது இறைபாதுகாப்பை இறைஞ்சுவோம்’, என்ற சொற்களைப் பதிவுசெய்துள்ளார். [2019-12-31 13:46:24]


பிலிப்பீன்ஸ் சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கு செபங்கள்

பிலிப்பீன்ஸ் நாட்டைத் தாக்கியுள்ள Phanfone சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளோரின் துயரங்களோடு தான் இணைவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 26, இவ்வியாழனன்று வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் பிலிப்பீன்ஸ் நாட்டைத் தாக்கியுள்ள Phanfone சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளோரின் துயரங்களோடு தான் இணைவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 26, இவ்வியாழனன்று வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார். இந்தச் சூறாவளியால் இறந்தோர், காயமுற்றோர், மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்காகவும் தான் செபிப்பதாகக் கூறியத் திருத்தந்தை, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த அனைவரோடும் இணைந்து, 'அருள்நிறை மரியே' செபத்தைச் சொன்னார். மேலும், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டி, உரோம் நகரிலிருந்தும், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தனக்கு அனுப்பப்பட்ட வாழ்த்துக்களுக்காக நன்றி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும், தன்னால், தனிப்பட்ட முறையில் பதில் அளிக்க இயலாது என்றும், அவர்கள் அனைவருக்காகவும் தான் செபிப்பதாகவும் தெரிவித்தார். வாழ்த்துக்களுடன், தங்கள் செபங்களை தனக்காக எழுப்பியுள்ள உள்ளங்களுக்கு, தன் சிறப்பான நன்றி என்று கூறிய திருத்தந்தை, மீண்டும் ஒருமுறை, அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா காலத்தின் மகிழ்வைப் பகிர்ந்துகொள்வதாகக் கூறினார். டிசம்பர் 24, இச்செவ்வாய் இரவு முதல், பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கிய Phanfone சூறாவளியால் இதுவரை, 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 58,000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்ற [2019-12-28 22:14:16]


புனித ஸ்தேவான் திருநாள் - திருத்தந்தையின் மூவேளை செப உரை

தன்னைக் கொலை செய்தோரையும் மன்னித்த வண்ணம் இறந்த புனித ஸ்தேவான், கிறிஸ்மஸ் காலத்தின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் - திருத்தந்தை பிரான்சிஸ் ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் மகிழ்வு நிறைந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழா காலத்தில், முதல் கிறிஸ்தவர் ஒருவர் கொல்லப்பட்டதன் நினைவைக் கொண்டாடுவது பொருத்தமற்றதாகத் தெரியலாம், ஆனால், நம் கிறிஸ்தவ நம்பிக்கையின் கண்ணோட்டத்தில், இதுதான் உண்மையாகவே, கிறிஸ்மஸ் காலத்தின் பொருளை விளக்குகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 26, இவ்வியாழனன்று கூறினார். வன்முறையை அன்பு வென்றது முதல் மறைசாட்சியாக உயிர் துறந்த புனித ஸ்தேவான் திருநாள், டிசம்பர் 26ம் தேதி சிறப்பிக்கப்பட்டதையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கிய மூவேளை செப உரையில் திருத்தந்தை இவ்வாறு கூறினார். ஸ்தேவானின் மறைசாட்சிய மரணத்தில், வன்முறையை அன்பு வென்றது, மரணத்தை வாழ்வு வென்றது என்று தன் உரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைக் கொலை செய்தோரையும் மன்னித்த வண்ணம் இறந்த புனித ஸ்தேவான், கிறிஸ்மஸ் காலத்தின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் என்று கூறினார். நம் எண்ணங்களை வான் நோக்கித் திருப்பும் ஸ்தேவான் தூய ஆவியாரின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்று நோக்கியவண்ணம் தன் உயிரை ஈந்த ஸ்தேவான், நமது கண்களையும், எண்ணங்களையும் வான் நோக்கித் திருப்புகிறார் என்றும், மனிதமானது அனைத்தும் விண்ணை நோக்கித் திருப்பப்படவேண்டும் என்பதை உணர்த்துகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை. திருஅவையில் முதல் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு தியாக்கோன்களில், ஸ்தேவானும் ஒருவர் (காண்க. தி.ப. 6:1-6) என்பதை தன் மூவேளை செப உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உணர்வையும், நற்செய்தியின் பிறரன்பையும் இணைப்பது எவ்விதம் என்பதை நாம் இப்புனிதரிடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினார். மறைசாட்சிகளை நினைவுகூருவோம் மத நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்ட முதல் சாட்சியான புனித ஸ்தேவானை நினைவுகூரும் விழா, வரலாற்றில், மறைசாட்சிகளாக இறந்த அனைவரையும், இன்றும் கொல்லப்படும் அனைவரையும் எண்ணிப்பார்க்க நம்மை அழைக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார். [2019-12-27 03:10:59]


இறைவனின் நெருக்கத்தை கொண்டாட...

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, ஞாயிறு நற்செய்தி மற்றும் குடில் ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள மூன்று டுவிட்டர் செய்திகள் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, ஞாயிறு நற்செய்தி மற்றும் குடில் ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு நாள்களில், மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார். கிறிஸ்மஸ் குடில் நினைவுறுத்துவது... "கடவுள், விண்ணகத்தில், நம் கண்களுக்குத் தோன்றாத வகையில் தங்கிவிடவில்லை, மாறாக, இவ்வுலகில், மனிதராக இறங்கிவந்தார் என்பதை, கிறிஸ்மஸ் குடில் நமக்கு நினைவுறுத்துகிறது. எனவே, குடில் அமைப்பதன் வழியே, இறைவனின் நெருக்கத்தை கொண்டாடவும், அவரது உண்மையான அன்பை கண்டுகொள்ளவும் முடிகிறது" என்ற சொற்கள், #குடில் என்ற ஹாஷ்டாக்குடன், இத்திங்களன்று, திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன. ஞாயிறு டுவிட்டர் செய்திகள் மேலும், இஞ்ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தியை மையப்படுத்திய ஒரு சிந்தனையையும், தன் மூவேளை செப உரையில் கூறிய ஒரு கருத்தையும், இரு டுவிட்டர் செய்திகளாக இஞ்ஞாயிறு வெளியிட்டார் திருத்தந்தை. "இன்றைய நற்செய்தியில் (மத். 1:18-24) கூறப்பட்டுள்ள யோசேப்பின் அனுபவம், நம்மை கிறிஸ்மசை நோக்கி அழைத்துச் செல்கிறது. நம்மிடம் வரும் இயேசுவுக்கு செவிசாய்க்கவும், அவரை, நமது திட்டங்களிலும், நாம் எடுக்கும் முடிவுகளிலும் இணைத்துக்கொள்ளவும், யோசேப்பு நமக்கு கற்றுத்தருகிறார்" என்ற கருத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியாக அமைந்தது. “இன்னும் மூன்று நாள்களில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுவோம். இவ்விழாவையொட்டி, வெகு தூரங்களிலிருந்து குடும்பமாகக் கூடிவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்வோரை எண்ணிப்பார்க்கிறேன். கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, நமக்குள் உடன்பிறந்த உணர்வை வளர்க்கும் நேரமாகவும், தேவையில் இருப்போருடன் ஒருங்கிணையும் விழாவாகவும் அமையட்டும்” என்ற சொற்கள், அவரது இரண்டாவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன. இதுவரை, 2,263 டுவிட்டர் செய்திகள் ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன. டிசம்பர் 24, இத்திங்கள் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,263 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 82 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன. [2019-12-25 04:21:36]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்