வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்

மரணங்கள் இனியும் வேண்டாம், நிக்கராகுவா ஆயர்கள்

மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவாவில், பதட்டநிலைகள் தொடர்ந்து நிலவி வருகின்றபோதிலும், தலத்திருஅவைத் தலைவர்கள் அந்நாட்டின் Masaya நகருக்குப் பேரணியாகச் சென்று, அமைதிக்காகச் செபித்து, அதற்காக அழைப்பு விடுத்துள்ளனர். நிக்கராகுவா அரசுத்தலைவர் டானியேல் ஒர்த்தேகா அவர்கள், சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத்தில் சீர்திருத்தங்களை அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 18ம் தேதி எதிர்ப்புப் போராட்டங்கள் கிளம்பின. இப்போராட்டங்கள் பரவிவந்ததையடுத்து அரசின் மாற்றங்கள் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆயினும், இப்போராட்டங்களின் ஆரம்பத்தில் பாதுகாப்புப் படைகளால் நாற்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் இப்போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன என செய்திகள் கூறுகின்றன. இவ்வாரத்தில், Masaya நகரை அரசுப் படைகள் சூழ்ந்துள்ளவேளை, இப்பிரச்சனையில் இடைநிலை வகித்து, வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அழைப்பு விடுக்கும் எண்ணத்தில், அந்நாட்டின் கர்தினால் Leopoldo José Brenes, ஆயர் Silvio José Báez, திருப்பீட தூதர் பேராயர் Stanislaw Waldemar Sommertag ஆகியோர் திருநற்கருணையை ஏந்தியவண்ணம் அந்நகரில் பவனியாகச் சென்றுள்ளனர். மரணங்கள் இனியும் வேண்டாம், வன்முறையை நிறுத்துங்கள் எனவும் ஆயர்கள் கேட்டுக்கொண்டனர் Masaya, துன்பங்களை அதிகமாக அனுபவித்த நகரம் என்று கூறிய அந்நகரைச் சேர்ந்த ஆயர் Báez அவர்கள், துன்புறும் அம்மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து அமைதிக்கு அழைப்பு விடுத்தார். இவ்வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. (ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி) [2018-06-24 01:00:04]


இமயமாகும் இளமை – பிறந்தநாள் சொல்லித்தரும் பாடங்கள்

இஞ்ஞாயிறன்று, திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். மன்னன் ஆனாலும் சரி, மதத்தலைவர்கள் ஆனாலும் சரி, மனதில் தோன்றிய உண்மையை அஞ்சாமல் கூறிய இளம் இறைவாக்கினர் திருமுழுக்கு யோவான். மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை (லூக்கா 7:28) என்று இயேசுவால் புகழப்பட்ட புனிதர் இவர். திருஅவையில், மூவருக்கு மட்டும், மண்ணுலகில் அவர்கள் பிறந்தநாட்கள் கொண்டாடப்படுகின்றன. இயேசுவின் பிறந்தநாள், அன்னை மரியாவின் பிறந்தநாள், திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள். இயேசுவின் பிறந்த நாளும், யோவானின் பிறந்தநாளும் கொண்டாடப்படும் நாட்கள் சிந்தனைகளை எழுப்புகின்றன. ஜூன் 24, யோவானின் பிறந்தநாள். டிசம்பர் 25, இயேசுவின் பிறந்தநாள். நமது பூமிக்கோளம், சூரியனைச் சுற்றி வரும் பாதையில், இவ்விரு நாட்களும் குறிப்பிடத்தக்கவை. பகல் பொழுது மிகவும் நீண்டுள்ள நாள், ஜூன் 24. பகல் பொழுது மிகவும் குறைந்துள்ள நாள் டிசம்பர் 24 என்று பழங்காலத்தில் கணக்கிட்டனர். ஜூன் 24 துவங்கி, பகல் நேரம் சிறிது, சிறிதாகக் குறைந்துவரும். டிசம்பர் 24க்குப் பின், பகல் நேரம் மறுபடியும் அதிகரிக்க ஆரம்பிக்கும். இயேசு என்ற ஆதவன் உலகிற்கு வந்ததால், இனி பகல் நேரம் கூடுதலாகும் என்பதைக் காட்ட டிசம்பர் 25ம் தேதி, கிறிஸ்து பிறந்த நாளாகக் குறிக்கப்பட்டது. அந்த ஆதவன் உதிப்பதற்காய் தான் தேயவேண்டும் என்று சொன்ன திருமுழுக்கு யோவான் பிறந்த நாள் ஜூன் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்று முதல், பகல் நேரம் குறைந்து வருவதுபோல், திருமுழுக்கு யோவானும் தான் தேய்ந்து, இயேசு என்ற ஆதவன் உதயமாகக் காரணமாய் இருந்தார் என்ற எண்ணங்களைக் குறிக்கவே, ஜூன் 24 மற்றும் டிசம்பர் 25 ஆகிய நாட்கள், யோவான், இயேசு ஆகியோரின் பிறந்தநாள்களாகத் திருஅவையால் தேர்ந்தெடுக்கப்பட்டன. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-06-24 00:51:49]


தேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்

உதவி தேவைப்படும் நம் அயலவரை வரவேற்பதற்கு அஞ்ச வேண்டாமென, உலக புலம்பெயர்ந்தவர் நாளான இப்புதன்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாரையும் கேட்டுக்கொண்டுள்ளார். ஜூன் 20, இப்புதனன்று, புலம்பெயர்ந்தவர் உலக நாளை ஐ.நா. நிறுவனம் கடைப்பிடித்ததையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தன் டுவிட்டரில், ஏழைகள், புறக்கணிக்கப்பட்டோர் அல்லது புலம்பெயர்ந்தவரில் நாம் இயேசுவைச் சந்திக்கின்றோம், எனவே, தேவையில் இருக்கும் நம் அயலவரை வரவேற்கும் பாதையில், அச்சத்திற்கு இடமளிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டுள்ளார். இன்னும், இந்த புலம்பெயர்ந்தவர் உலக நாளில், திருத்தந்தை வெளியிட்ட மற்றுமொரு டுவிட்டர் செய்தியில், ஒரு மனிதரின் மாண்பு, அவர் குடிமகனாகவோ, புலம்பெயர்ந்தவராகவோ அல்லது குடிபெயர்ந்தவராகவோ இருப்பதில் சார்ந்து இல்லை. போர் மற்றும் துன்பங்களுக்குத் தப்பித்துவரும் மக்களைக் காப்பாற்றுவது, ஒரு மனிதாபிமானச் செயலாகும் என்ற வார்த்தைகள் பதிவாகியிருந்தன. மேலும், இந்த புலம்பெயர்ந்தவர் உலக நாளுக்கென காணொளி செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், புலம்பெயர்ந்தவர்களுக்கு ஒருமைப்பாடும், பரிவிரக்கமும் காட்டப்பட்டு, அவர்களின் துன்பங்கள் களையப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார். போர்கள் அல்லது அடக்குமுறைகளால், உலகில் ஆறு கோடியே எண்பது இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள், அதாவது தாய்லாந்து நாட்டின் மொத்த மக்கள் தொகைக்கு ஏறக்குறைய சமமான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும், இவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு முதல்படியாக, ஒன்றிப்பும் ஒருமைப்பாடும் அவசியம் என்றும் கூறியுள்ளார், கூட்டேரெஸ். புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நம்மால் இன்னும் என்ன செய்ய முடியும் என்பதை, புலம்பெயர்ந்தவர் உலக நாளில் சிந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ள ஐ.நா. பொதுச் செயலர், இம்மக்களை ஏற்கும் நாடுகளுக்கு இவர்கள் ஆற்றிவரும் நன்மைகளை அங்கீகரித்து, இவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படுமாறு கூறியுள்ளார். (ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி) [2018-06-22 01:04:07]


ஜெனீவாவில் திருத்தந்தையுடன் கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டம்

இவ்வியாழன் மாலை 3.45 மணிக்கு, உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் மையத்திலுள்ள Visser’t Hooft அறையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலில், WCC மன்ற பொதுச் செயலர் போதகர் Olav Fykse Tveit அவர்கள் உரையாற்றினார். “ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே, இன்று அக்களிப்போம், அகமகிழ்வோம்(தி.பா.118:24)” என்ற திருப்பா வார்த்தைகளுடன் உரையைத் தொடங்கினார், போதகர் Tveit. இன்று நாமிருக்கும் நிலையை எட்டுவதற்கு எழுபது ஆண்டுகள் எடுத்துள்ளன. இந்நாள் வரலாற்றில் திருப்புமுனையாக உள்ளது. இந்தப் பயணத்தைத் தொடர்வோம் என்றார் போதகர் Tveit. மேலும், இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்தில் திருத்தந்தையே வரவேற்றுப் பேசிய, WCC மன்றத்தின் மையக்குழுவின் தலைவர் Agnes Abuom அவர்கள், திருத்தந்தையே, உம் வரவு, WCC மன்றத்தின் உறுப்பு சபைகளுக்கும், உலகிலுள்ள நன்மனம்கொண்ட ஏராளமான மக்களுக்கும், நம்பிக்கையும் ஊக்கமும் தருவதாக உள்ளன. எம் பயணத்தில் உடன் திருப்பயணிகளாக உம்மோடு சேர்ந்து எம்மால் பயணிக்க இயலும் என்றார். துன்புறுவோரைச் சந்திப்பதற்கும், வாழ்வெனும் கடவுளின் கொடையைக் கொண்டாடுவதற்கும், நீதி மற்றும் அமைதி தேவைப்படும் இடங்களில் வாழும் மக்களை உயர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், திருத்தந்தையே, உம்மோடு சேர்ந்து எம்மால் பயணிக்க இயலும். நீ வேகமாகப் போக விரும்பினால் தனியாகச் செல். தொலைதூரமாகச் செல்ல விரும்பினால் சேர்ந்து செல் என்ற ஓர் கூற்று ஆப்ரிக்காவில் உள்ளது. உலகில் துன்புறும் மக்களுக்காகச் செபிப்போம் என்று கூறினார் Agnes Abuom. சேர்ந்து செபித்தல், சேர்ந்து நடத்தல், சேர்ந்து பணியாற்றுதல் என்ற தலைப்பில் நடைபெற்ற இச்சந்திப்பில், திருத்தந்தையும் உரையாற்றினார். இச்சந்திப்பை நிறைவுசெய்து, ஜெனீவா Palexpo மையத்தில் கத்தோலிக்கருக்குத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியை நிறைவுசெய்து உரோமைக்குப் புறப்படுவது திருத்தந்தையின் ஜெனீவா பயணத்திட்டத்தில் உள்ளது. மார்ட்டின் லூத்தர் அவர்களால் கிறிஸ்தவத்தில் ஏற்பட்ட சீர்திருத்தத்தை முதலில் ஏற்ற நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும். கால்வின் நகரம் என அழைக்கப்படும் ஜெனீவாவுக்குச் சென்ற மூன்றாவது திருத்தந்தையாக, இவ்வியாழனன்று அங்குச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் இந்த ஒருநாள் ஜெனீவா பயணம், அவரின் 23வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணமாகும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்புக்காக எடுத்துவரும் முயற்சிகள் பலன்தர செபிப்போம். மேலும், கத்தோலிக்க இளையோரின் பாதுகாவலரான புனித அலோசியுஸ் கொன்சாகா அவர்களின் விழாவான ஜூன் 21, இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இளையோருக்கு அன்பு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார். “அன்பு இளையோரே, அடிக்கடி கடினப்படும் வயதுவந்த எங்களின் இதயங்களுக்கு உதவுங்கள். உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தின் பாதையைத் தேர்ந்துகொள்ள எங்களுக்கு உதவுங்கள்” என்பது, திருத்தந்தையின் டுவிட்டரில் வெளியானது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-06-22 00:58:47]


ஏமன், புலம்பெயர்ந்த மக்களின் சார்பாக திருத்தந்தை

இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், ஏமன் நாட்டில் இடம்பெறும் சண்டையினால் கடும் மனிதாபிமான நெருக்கடிகள் இடம்பெறும்வேளை, அந்நாட்டில் அமைதி நிலவ செபிக்குமாறு விண்ணப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். ஏமனின் Hudaydah துறைமுக நகரை, Houthi புரட்சியாளர்களிடமிருந்து கைப்பற்றுவதற்காக, சவுதி அரேபியப் படைகள், ஏமன் படைகளுடன் போரிட்டு வருவதால், ஏமனில் கடும் மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. ஏமனில் மூன்றாண்டுகளுக்கு மேலாக இடம்பெற்றுவரும் சண்டையில், குறைந்தது 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர், கடும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அச்சண்டையில் இதுவரை பத்தாயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். ஏமன் நாட்டில் போரிடும் தரப்புகள் பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்குவதற்கு உலகளாவிய சமுதாயம் அவற்றை வற்புறுத்துமாறும், இதனால், அந்நாட்டில் ஏற்கனவே நிலவும் கடும் மனிதாபிமான நெருக்கடிகள், மேலும் மோசமடையாமல் இருப்பதற்கு உதவ முடியும் என்றும், திருத்தந்தை கூறினார். மேலும், ஜூன் 20, வருகிற புதன்கிழமையன்று உலக புலம்பெயர்ந்தவர் நாள் கடைப்பிடிக்கப்படுவதையும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயுத மோதல்கள் மற்றும் சித்ரவதைகளுக்கு அஞ்சி புலம்பெயரும் அனைத்து மக்களையும் இந்த உலக நாளில் நினைவுகூர்வோம் என்றும் கூறினார். இன்னும், வெனெசுவேலா நாட்டின் கரகாசில், Maria Carmen Rendiles Martinez அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டிருக்கும்வேளை, துன்புறும் அந்நாட்டு மக்களுக்காகச் செபிப்போம் என்றும் திருத்தந்தை கூறினார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-06-18 21:34:18]


குடும்பம், கடவுளின் திட்டத்தின் மையம்

இத்தாலியில் குழந்தை பிறப்பு அதிகரிப்புக்கு ஆதரவளிப்பதிலும், குழந்தைகளுக்கு ஆதரவாக கொள்கைகள் உருவாக்கப்படுவதன் முக்கியத்துவத்தை நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஒருபோதும் மனம்தளர வேண்டாமென, ஓர் இத்தாலிய குடும்பநல அமைப்பினரிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். குடும்ப கழகங்கள் கூட்டமைப்பின் ஏறக்குறைய 150 பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமை நண்பகலில் வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நாட்டின் மிகப்பெரும் முதலீடாகவும், அதன் வருங்கால வளமைக்கு முதன்மையான காரணமாகவும் குழந்தைகள் இருக்கும்வேளை, அவர்களின் பிறப்பு, குடும்பங்களின் வறுமைக்குக் காரணம் என அடிக்கடி சொல்லப்படுகின்றது, பல நிலைகளில் குடும்பங்கள் போதுமான உதவிகளைப் பெறாமல் இருப்பதே இதற்குக் காரணம் என்று கூறினார். இப்பிரச்சனையும், ஏனைய பிரச்சனைகளும், மனஉறுதி மற்றும் பிறரன்புடன் எதிர்கொள்ளப்பட வேண்டும் என்றும், குடும்பங்கள் மீது காட்டப்படும் அக்கறை, மனிதரின் மாண்பை அடிப்படையாகக் கொண்டிருப்பதாய் இருக்க வேண்டும் என்றும் உரைத்த திருத்தந்தை, குடும்பம் மற்றும் மனித வாழ்வுக்கு ஆதரவாக, இந்த அமைப்பினர் ஆற்றிவரும் பணிகளை ஊக்குவித்தார். குடும்ப கழகங்கள் கூட்டமைப்பு, குடும்பங்களின் அழகை உணர்த்துவதற்கு, கடந்த 25 ஆண்டுகளாக எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டிய திருத்தந்தை, இந்த அமைப்பினர் பல்வேறு வழிகளில் ஊக்குவிக்கும் குடும்பம், கடவுளின் திட்டத்தின் மையமாகும் என்றும், குடும்பம், மனித வாழ்வின் தொட்டில் என்றும் கூறினார். இந்த அமைப்பினர், அன்பின் மகிழ்வுக்குச் சான்றுகளாய் வாழுமாறும், தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-06-17 02:48:33]


நவம்பர் 18ல் மூவாயிரம் ஏழைகளோடு திருத்தந்தை உணவு

இரண்டாவது உலக வறியோர் நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள செய்தியை, இவ்வியாழனன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட புதிய வழி நற்செய்தி அறிவிப்பு அவைத் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்கள், அந்த உலக நாளின் நிகழ்வுகள் பற்றியும் அறிவித்தார். வருகிற நவம்பர் 18ம் தேதி ஞாயிறு காலை 9.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ஏழைகளையும், பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களையும் சந்திப்பார், பின்னர் அவர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றுவார். அதன்பின்னர், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தின் முகப்பில் ஏறக்குறைய மூவாயிரம் ஏழைகளுடன் உணவருந்துவார். இந்நாளில் ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவை, 'Ente Morale Tabor' அமைப்புடன் சேர்ந்து, உரோம் நகரிலுள்ள இத்தாலிய Hilton அமைப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில், பல்வேறு பங்குத்தளங்கள், தன்னார்வலர் மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்படும் என, பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள் அறிவித்தார். நவம்பர் 17ம் தேதி சனிக்கிழமை மாலையில், உரோம் புனித இலாரன்ஸ் பசிலிக்காவில், ஏழைகள் மற்றும், பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுடன் திருவிழிப்பு செபங்கள் நடைபெறும். அன்று 600 ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். நவம்ப்ர 12 திங்கள் முதல் அந்த வாரம் முழுவதும், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திற்கு அருகிலுள்ள இடத்தில் நலவாழ்வு முகாம்கள் அமைக்கப்பட்டு, ஏழைகளுக்கு, நலவாழ்வு சார்ந்த உதவிகள் வழங்கப்படும் எனவும் பேராயர் அறிவித்தார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-06-15 21:37:35]


இந்த ஏழை கூவியழைத்தான், ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்

“இந்த ஏழை கூவியழைத்தான், ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார் (தி.பா.34,6)” என்ற தலைப்பில், வருகிற நவம்பர் 18ம் தேதி சிறப்பிக்கப்படும், இரண்டாவது உலக வறியோர் நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள செய்தியை, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது திருப்பீடம். கூவியழைத்தல், பதிலளித்தல், சுதந்திரமாக இருத்தல் போன்றவை பற்றி அச்செய்தியில் விளக்கியுள்ள திருத்தந்தை, ஏழைகளின் அழுகுரல்களுக்குத் தெளிவான செயல்கள் வழியாகப் பதிலளிக்கும் விதமாக, உலக வறியோர் நாளைச் சிறப்பிக்குமாறு, உலகலாவியத் திருஅவைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதிகாரமும், செல்வமும் கொண்டுள்ளவர்களைப் போற்றி அவர்களைப் பின்பற்றி நடப்பதற்கு விரும்பும் உலகம், ஏழைகளை ஒதுக்கி, அவர்களை, வீணானவர்கள் மற்றும் வெட்கத்துக்குரியவர்களாக நோக்குகின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை, இத்தகைய சிந்தனைகளை மாற்றுமாறு ஏழைகள் விண்ணப்பிக்கின்றனர் எனக் கூறியுள்ளார். தன்னலம், தற்பெருமை, பேராசை, அநீதி ஆகியவற்றால் ஏழ்மை உருவாக்கப்படுகின்றது என்றும், ஏழைகளின் குரல் கேட்கப்படாமல், மௌனமாக்கப்படுகின்றது என்றும், பாதுகாப்பின்மை, நிலையற்றதன்மை, தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையானோர் போன்ற நமது உதவி தேவைப்படும் இவர்களும் புறக்கணிக்கப்படும் ஏழைகள் என்றும், குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை. ஆயர்கள், அருள்பணியாளர்கள், குறிப்பாக, திருத்தொண்டர்கள், துறவிகள், பங்குத்தளங்களில் பல்வேறு திருஅவை இயக்கங்களிலும், கழகங்களிலும் உறுப்பினர்களாக இருக்கின்ற பொதுநிலை விசுவாசிகள் ஆகிய எல்லாரும், இந்த உலக வறியோர் நாளை, புதியவழி நற்செய்தி அறிவிப்புக்கு சிறப்பான வாய்ப்பாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை. ஏழைகள் நமக்கு நற்செய்தி அறிவிக்கின்றனர், நற்செய்தியின் அழகை ஒவ்வொரு நாளும் கண்டுகொள்வதற்கு அவர்கள் உதவுகின்றனர் என்றும், இந்த அருளின் வாய்ப்பை இழக்காதிருப்போம் என்றும், ஏழைகளுக்கு நாம் கடன்பட்டவர்கள் என, அந்த உலக வறியோர் நாளில் நாம் எல்லாரும் உணர்வோம் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார். இரக்கத்தின் யூபிலி ஆண்டின் நிறைவு நிகழ்வில் திருத்தந்தை உருவாக்கிய உலக வறியோர் நாள், திருவழிபாட்டு ஆண்டின் 33ம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது. 2018ம் ஆண்டில், இரண்டாவது முறையாகச் சிறப்பிக்கப்படும் இந்த உலக நாள், வருகிற நவம்பர் 18ம் தேதி இடம்பெறுகின்றது. புதிய வழி நற்செய்தி அறிவிப்பு அவைத் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா, அந்த அவையின் செயலர், பேரருள்திரு கிரகாம் பெல் ஆகிய இருவரும், இச்செய்தியை வெளியிட்டு, இச்செய்தி பற்றிய தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-06-14 18:16:07]


உலக கோப்பை கால்பந்து போட்டி, சந்திப்பின் தருணமாக அமைய..

இரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில், ஜூன் 14, இவ்வியாழனன்று தொடங்கும், 2018ம் ஆண்டின் உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் வீரர்கள், FIFA நிர்வாகத்தினர், சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக இப்போட்டிகளைப் பார்ப்பவர்கள் போன்ற எல்லாருக்கும், தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். இப்புதன் காலை பத்து மணியளவில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, பொதுமறைக்கல்வியுரை வழங்கிய பின்னர், இவ்வாறு தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த முக்கியமான விளையாட்டு நிகழ்வு, நாடுகள் மத்தியில் ஒருமைப்பாட்டையும் அமைதியையும் ஊக்குவித்து, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே, உரையாடலையும், உடன்பிறப்பு உணர்வையும், சந்திப்பையும் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பை வழங்கும் தருணமாக அமையட்டும் என வாழ்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ். 32 அணிகள் போட்டியிடும் 2018ம் ஆண்டின் உலக கோப்பை கால்பந்து போட்டி, ஜூன் 14ம் தேதி முதல், ஜூலை 15ம் தேதி வரை, இரஷ்யாவின், 11 நகரங்களில், 12 விளையாட்டு திடல்களில் நடைபெறுகின்றது. மேலும், ஜூன் 13, இப்புதனன்று புனித அந்தோனியார் விழா சிறப்பிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, அப்புனிதர், திருஅவையின் மறைவல்லுனர் மற்றும் ஏழைகளின் பாதுகாவலர் என்றுரைத்த திருத்தந்தை, உண்மையான மற்றும் கைம்மாறு கருதாத அன்பின் அழகை நமக்குக் கற்றுத்தருகிறார் என்று கூறினார். அன்புகூர்வதால் நாம் அன்புகூரப்படுகின்றோம், உங்களைச் சுற்றியுள்ள எவரும் ஒதுக்கப்பட்டதாக உணரக்கூடாது, அதேநேரம், நீங்கள் ஒவ்வொருவரும், வாழ்வின் துன்பநேரங்களில், மேலும் மேலும் உறுதியாய் இருங்கள் எனவும், இப்புதன் பொதுமறைக்கல்வியுரையில் கலந்துகொண்டவர்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-06-14 18:05:33]


இவ்வுலகை மாறியமைக்க உதவும் விசுவாசம்

உண்மையான விசுவாசம் என்பது, இவ்வுலகை மாற்றியமைக்கவும், உயரிய மதிப்பீடுகளை பரப்பவும், இதைவிட சிறந்த உலகை அடுத்த தலைமுறைகளுக்கு விட்டுச் செல்லவும் ஆழமான ஆவலைக் கொண்டுள்ளது, என, பெல்ஜியம் நாட்டிலிருந்து தன்னைச் சந்திக்க இச்சனிக்கிழமையன்று வந்திருந்த ‘லோஜியா’ ("Logia") என்ற அமைப்பினரிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். சமூகத் துறையிலும், பல்வேறு விவாதங்களிலும் கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு இடம் கொடுத்தல் என்ற நோக்கத்தில் துவக்கப்பட்ட இந்த அமைப்பின் அங்கத்தினர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் படிப்பினைகளை பின்பற்றுவது என்பது, நம் மனிதாபிமானத்தை இழக்க உதவுவதில்லை, மாறாக, மனிதாபிமானமும், சகோதரத்துவமும், நீதியும் நிறைந்த உலகை கட்டியெழுப்பவே உதவுகின்றது என கூறினார். இயேசுவின் நற்செய்தி நம்மை பாவங்களிலிருந்தும், கவலைகளிலிருந்தும், உள்மன வெறுமைகளிலிருந்தும், தனிமை உணர்வுகளிலிருந்தும் விடுவித்து, யாராலும் பறிக்க முடியாத மகிழ்வை நமக்குத் தருகின்றது என்று கூறியத் திருத்தந்தை, இந்த மகிழ்வைப் பெறுவதற்கு செபிப்பதும், அருளடையாளங்களை அணுகுவதும் அவசியம் எனவும் கூறினார். பெல்ஜியம் நாட்டின் பிளான்டெர்ஸ் (Flanders) நகரில் துவக்கப்பட்ட 'லோஜியா' என்ற கத்தோலிக்கக் கழகம், பொருளாதாரம், மதம், கலை, அறிவியல் என்ற அனைத்து தளங்களிலும் அறிவு சார்ந்த விவாதங்களை மேற்கொண்டு வருகிறது. இந்தக் குழுவில் 150க்கும் மேற்பட்ட அறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-06-12 22:30:02]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்