வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


மறை சேராத மாணவர்கள் தொகை அதிகரிப்பு

கடந்த வருடம் நோட்றைன் வெஸ்ற்பாலென் மாநிலத்தில் கல்வி பயிலும் 2,1 மில்லியன் மாணவ மாணவிகளுள், 8 மாணவர்களுள் ஒருவர் எந்த மறையையும் சாராதவர்களாக இருந்துள்ளனர். 1997ல் எடுத்த கணிப்பின்படி 8 விழுக்காடாக இருந்த எந்த மறையையும் சேராத மாணவர்கள் தொகை கடந்த வருடம் 12,8 விழுக்காடாக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. முழுத் தொகையில் கத்தோலிக்க மாணவர்களின் தொகை 47,2 விழுக்காட்டிலிருந்து 40,9 விழுக்காடாகவும், எவாங்கலிச மாணவர்களின் தொகை 31,7 விழுக்காட்டிலிருந்து 28,6 விழுக்காடாகவும் தற்போது குறைவடைந்துள்ளது. அதேவேளை 15 வருடங்களுக்கு முன்பு இம் மாநிலத்தில் 9 விழுக்காடாக இருந்த இஸ்லாமிய மாணவர்கள் தொகை தற்போது 13,1 விழுக்காடாக அதிகரித்துள்ளதுள்ளதாக அண்மையில் இம்மாநில அரசால் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. [2013-01-15 01:00:00]


திருத்தந்தையின் செயலர் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்

06.01.2013 ஞாயிறு அன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ற் தமது நீண்டகாலப் பிரத்தியேகச் செயலர் அருட்திரு. ஜோர்ஜ் கென்ஸ்வைன் அவர்களை வத்திக்கான் புனித பேதுரு தேவாலயத்தில் ஆயராகத் திருநிலைப்படுத்தினார். 56 வயதான இவர் யேர்மன் பிறைபேர்க் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் ஆயர் பதவிக்கு உயர்த்தப்பட்ட பின்பும் திருத்தந்தையின் செயலராகப் பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பட்டமளிப்பில் பிறைபேர்க் மறைமாவட்ட ஆயர் மேதகு றொபேட் சொலிற்ஸ் தலைமையில் பெருமளவிலான அருட்பணியாளர்கள் உறவினர்கள் நண்பர்கள் பங்கேற்றனர். பட்டமளிப்பின் பின்பாக ஆயருக்கான வரவேற்பு உபசாரம் வத்திக்கான் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றது. [2013-01-06 01:00:00]


ஜெர்மனியில் வளர்ந்து வரும் ஆயுதத் தொழிற்சாலை குறித்து ஆயர்கள் கண்டனம்

ஜெர்மனியில் வளர்ந்து வரும் ஆயுதத் தொழிற்சாலை குறித்துக் குறைகூறியுள்ள அதேவேளை, உலகில் ஆயுதம் தாங்கிய சண்டைகள் இடம்பெறுவதை நிறுத்துவதற்குத் தங்களை மிகுதியாக அர்ப்பணிக்குமாறு அந்நாட்டினரை வலியுறுத்தியுள்ளனர் ஜெர்மன் கத்தோலிக்க ஆயர்கள். உலக அமைதி நாளுக்கென ஜெர்மன் ஆயர் பேரவையின் சார்பில் 24 பக்க செய்தி வெளியிட்டுள்ள Freiburg பேராயர் Robert Zollitsch, அமைதி என்பது அரசியல்வாதிகளின் வேலை மட்டுமல்ல, மாறாக, வளம்கொழிக்கும் தொழிலாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும்போது அமைதி குறித்த ஆர்வம் நம்மைத் தட்டி எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
உலகில் ஆயுத ஏற்றுமதியில், அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஜெர்மனி இருக்கின்றது என்று Der Spiegel வார இதழ் குறிப்பிட்டுள்ளது. ஜெர்மனியில் ஆயுதத் தொழிற்சாலைகளில் எண்பதாயிரம் பேர் வேலை செய்கின்றனர். ஆயுத ஏற்றுமதியால் ஆண்டுக்கு 180 ஆயிரம் கோடி டாலர் இலாபம் கிடைக்கின்றது என்றும் Der Spiegel இதழ் கூறியுள்ளது. மேலும், ஜெர்மன் ஆயர் பேரவையின் இச்செய்தி குறித்துப் பேசிய Freiburg உயர்மறைமாவட்டப் பேச்சாளர் Robert Eberle, ஆயுத ஏற்றுமதி தொழில் செய்வோர் மத்தியில் திருஅவையின் குரல் கேட்கப்படும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார். [2013-01-05 22:53:07]


திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சிறுவனாக இருந்தபோது குழந்தை இயேசுவுக்கு எழுதிய மடல்

குழந்தை இயேசுவே, விரைவாக உலகிற்கு வாரும், எனக்கும், என்னைப் போன்ற குழந்தைகளுக்கும் மகிழ்வைக் கொண்டுவாரும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சிறுவனாக இருந்தபோது மடல் ஒன்றை எழுதி இருந்தார். திருத்தந்தை ஏழு வயது சிறுவனாக இருந்தபோது எழுதிவைத்த ஒரு கடிதம் அவர் வளர்ந்துவந்த Marktl am Inn என்ற சிற்றூரில் திருவருகைக் காலத்தின் ஆரம்பத்திலிருந்து மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
1934ம் ஆண்டு, திருத்தந்தை எழுதிய இக்கடிதத்தில், தனக்கு ஒரு திருப்பலி செபப்புத்தகமும், திருப்பலியில் குருக்கள் அணியும் ஆடைகளும் பரிசாக வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார். திருத்தந்தை வாழ்ந்துவந்த ஓர் இல்லம் புதுப்பிக்கப்பட்டபோது, அங்கு கண்டுபிடிக்கப்பட்ட இக்கடிதம் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று CNA கத்தோலிக்க செய்தி நிறுவனம் கூறியது. [2012-12-30 10:01:49]


கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு ஜெர்மனியில் ஆயிரம் கைதிகள் விடுதலை

கிறிஸ்மஸ் பெருவிழாவை வரவிருப்பதை முன்னிட்டு ஆயிரம் கைதிகளை விடுதலை செய்ய ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இது குறித்துப் பேசிய Rhineland-Palatinate நீதித்துறையின் தகவல் தொடர்பாளர், கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு ஆயிரம் சிறைக் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளனர் என்று அறிவித்தார்.
கொடூரமான வன்முறை, தீவிரவாதம், திருட்டு மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்தப் பொது மன்னிப்பு கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு அதிகபட்சமாக நார்த் ரைன் – வெஸ்ட்ஃபேலியா மாநிலத்தில் 710 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.
அதற்கு அடுத்ததாக, ஹெசி மாநிலத்தில் 150 முதல் 200 பேர் வரை விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [2012-12-30 10:03:17]