வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


கேள்ன் மாநகரில் கோலாகாலமாக இடம்பெற்ற நற்கருணை மாநாடு

கடந்த ஜுன் 5 தொடக்கம் 9 வரையாக கேள்ன் உயர் மறைமாவட்டத்தின் ஏற்பாட்டில் யேர்மன் ஆயர் ஒன்றிய அனுசரணையுடன் இடம்பெற்ற நற்கருணை மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சிறப்பித்திருந்தனர். இறுதி நாளான 09.06.13 ஞாயிறு கேள்ன் விளையாட்டரங்கில் யேர்மன் ஆயர் ஒன்றிய முதல்வர் பேரருட்திரு சொலிச் தலைமையில் பல கருதினால்கள், ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான இறைமக்கள் ஒன்றிணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர். ஆரம்பத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்துச்செய்தி வாசிக்கப்பட்டது. இதில் திருத்தந்தை, யேர்மன் வாழ் கத்தோலிக்கர்கள் உயிர்த் துடிப்பான விசுவாச சாட்சிய வாழ்வை வாழுமாறு அறைகூவினார். அத்துடன் துறவிகளும் பொதுநிலையினரும் கடவுளை உலகிற்கும், உலகைக் கடவுளுக்கும் கொண்டுவரும் கடமையைக் கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். இத் திருப்பலியில் வரவேற்பு உரையாற்றிய கருதினால் மைஸ்னெர், இந்த நற்கருணை மாநாடு இன்று நிறைவுபெறுவது தனக்குக் கவலையளிக்கின்றது, இருப்பினும் தன்னைப் பொறுத்தவரை நற்கருணை மாநாடு இன்றுதான் உண்மையாக ஆரம்பிக்கின்றது எனவும் தனது குறிப்புப் புத்தகத்தில் கடந்த 4 நாட்களிலும் எடுத்துக் கொண்ட பல்வேறு குறிப்புகளை நடைமுறையாக்குவது தனது பணியாகவுள்ளது என்றார். இந்த நற்கருணை மாநாடு இவ்வருடம் தமது ஆயர் பணியிலிருந்து ஓய்வுபெறும் கேள்ன் உயர்மறைமாவட்ட பேராயர் கருதினால் மைஸ்னெர் அவர்களுக்கு ஒரு சிறப்பு நிகழ்வாக அமைந்தது எனலாம். இந்த மாநாட்டை நடத்துவதற்குப் பொறுப்பு வகித்த அருட்பணி கிளைன் தெரிவிக்கையில், இந்த ஐந்து நாட்களிலும் ஏறத்தாழ 60,000 மக்கள் வருகை தந்ததாகவும் இதில் 6,500 பாடசாலை மாணவர்களும், 2,000 இளவயதினரும் அடங்குவர் என்றார். 600 உதவியாளர்கள், 800 அருட்பணியாளர்கள், 72 ஆயர்கள் மற்றும் கருதினால்கள் மற்றும் 570 அருட்சகோதரிகள் பங்கேற்றிருந்தனர். இறுதிநாள் திருப்பலியில் ஏறத்தாழ 25,000 மக்கள் பங்கேற்றிருந்தனர், இதில் 200 முதல்நன்மை சிறார்கள், 1,200 பீடப்பணியாளர்கள் அடங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. [2013-06-13 01:00:00]


கேள்ன் மாநகரில் நற்கருணை மாநாடு 2013

யேர்மன் ஆயர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் நற்கருணை மாநாடு எதிர்வரும் 05.06 தொடக்கம் 09.06.2013 வரையாக கேள்ன் மாநகரில் சிறப்பாக இடம்பெறவுள்ளது. “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்?’’ (யோவான் 6:68) எனும் மையக்கருவில், கடந்தமுறை சர்வதேச இளைஞர் தினக் கொண்டாட்டம் போன்று இவ்விழாவும் கோலாகலமாக இடம்பெற கேள்ன் உயர் மறைமாவட்டம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. புதன்கிழமை 05.06 அன்று தொடக்கநாள் திருப்பலியுடன் ஆரம்பிக்கும் இம் மாநாட்டில் பல்வேறு வழிபாடுகள், சிறப்புரைகள், கருத்தரங்குகள், இசை நிகழ்வுகள், யாத்திரைகள், விளக்கவுரைகள், தியானங்கள் போன்றவை கேள்ன் மாநகரிலுள்ள ஆலயங்கள், மண்டபங்கள், திறந்தவெளியரங்குகள், மைதானங்கள் போன்றவற்றில் இடம்பெறவுள்ளன. இறுதி நாளான ஞாயிறு 09.06.2013 அன்று நிறைவுநாள் திருப்பலி கேள்ன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இது குறித்த மேலதிக விபரங்களை கீழ்வரும் இணையத்தளத்தில் பார்வையிடலாம் www.eucharistie2013.de [2013-05-08 09:11:17]


ஜெர்மன் இயேசு சபை அருள்பணியாளரின் சமஸ்கிருத இலக்கணப் பிரதி வெளியிடப்பட்டுள்ளது

ஜெர்மன் இயேசு சபை அருள்பணியாளர் Johann Ernst Hanxleden எழுதிய சமஸ்கிருத இலக்கணப் பிரதி ஒன்று பெல்ஜியத்தில் கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Arnos Padre என அழைக்கப்பட்ட அருள்பணியாளர் Hanxleden ஒரு மெய்யியலாளர் மற்றும் சொற்களஞ்சிய மேதையாவார். 300 ஆண்டுகளுக்கு முன்னர் சமஸ்கிருத மொழியில் இவர் எழுதிய இலக்கணம், சமஸ்கிருதத்திலுள்ள பழமையான மறைப்பணியாளர்களின் இலக்கணமாக நோக்கப்படுவதாக, திருச்சூர் Arnos Padre கழகத்தின் இயக்குனர் இயேசு சபை அருள்பணியாளர் Roy Thottathil தெரிவித்தார். 'Grammatica Grandonica' என்ற 88 பக்க கையெழுத்துப் பிரதி 300 ஆண்டுகளுக்கு மேலாகக் காணாமற்போயிருந்தது என்றுரைத்த அருள்பணியாளர் Thottathil, இதனை Montecompatri கார்மேல் சபை துறவு இல்ல நூலகத்தில் கடந்த ஆண்டில் பெல்ஜிய நாட்டுப் பேராசிரியர் Toon Van Hal என்பவர் கண்டுபிடித்தார் என்று கூறினார். ஜெர்மனியின் Ostercappelnல் பிறந்த இயேசு சபை அருள்பணியாளர் Hanxleden, 1700ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்தியாவுக்கு வந்தார். இவர் 1712ம் ஆண்டில் வேலூரில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தைக் கட்டினார். தனது எஞ்சிய வாழ்நாளை அங்கேயே செலவிட்டார் என்று UCA செய்தி நிறுவனம் கூறுகிறது. [2013-04-26 08:06:54]


முன்ஸ்ரர் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பேரருட்திரு றைன்காட் லெற்மான் இறையடி சேர்ந்தார்

முன்ஸ்ரர் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பேரருட்திரு றைன்காட் லெற்மான் தமது 80வது வயதில் திருப்பயணியாக பெத்லகெம் சென்றிருந்தவேளை சுகவீனம் காரணமாக கடந்த 16.04. அன்று காலமானார். 1973ல் முன்ஸ்ரர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமனம் பெற்ற இவர் 1980 முதல் 2008 வரை முன்ஸ்ரர் மறைமாவட்டத்தின் ஆயராக சிறப்புடன் பணியாற்றினார். இவரது பணிக்காலத்திலேயே முன்ஸ்ரர் மறைமாவட்டத்திலுள்ள கேவலார் யாத்திரைத் தலத்தில் எமது பணியகத்தால் தமிழர் திருயாத்திரை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து சிறப்பாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஆயர் லெற்மான் எமது பணியகத்திற்கும் எமது மக்களுக்கும் ஆற்றிய அனைத்து உதவிகளையும் இவ்வேளையில் நினைவுகூர்ந்து அவருக்கு நன்றி கூறுவதுடன் அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை இறைஞ்சுவோம். [2013-04-17 09:42:22]


திருத்தந்தை பிரான்சிஸ் யேர்மன் எவாங்கலிச ஆலயபீட முதல்வரை வரவேற்றார்

புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை யேர்மன் ஆயர்கள் சந்திப்பதற்கு முன்பாக, யேர்மன் எவாங்கலிச ஆலயபீட முதல்வர் நிக்கொலஸ் ஸ்னைடெர் அவர்களை 08.04.2013 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கானில் வரவேற்றார். இச் சந்திப்பு இரு ஆலய பீடங்கள் இடையே கடந்த காலங்களில் இருந்த உறைவு நிலையிலிருந்து மீளவும் நட்புறவைக் வளர்ப்பதற்கான கலந்துரையாடலுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இச் சந்திப்புக் குறித்து யேர்மன் எவாங்கலிச ஆலயபீட முதல்வர் ஸ்னைடெர் தெரிவிக்கையில், புதிய திருந்தந்தையுடனான சந்திப்பு மிகவும் நட்பு ரீதியாகவும், உற்சாகம் தரக்கூடியதாகவும் அமைந்திருந்ததெனவும், திருத்தந்தை தாம் உரோமையின் ஆயர் என்ற அதிகாரத்தை வெளிப்படுத்தாமல், பொறுப்புமிகு திருஅவையின் தலைவராக அனைத்து மதங்களையும் மதித்து எம்மையும் வரவேற்றதுடன், எமது கலந்துரையாடல் இரு மறைகளுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையாக இல்லாமல் எமது இதயங்களைத் திறந்து பேசியதாக அமைந்திருந்தது என்றார். [2013-04-11 01:00:00]


திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணியேற்பு மறையுரைக்கு பாராட்டு

19.03.2013 அன்று வத்திக்கான் பேதுரு சதுக்கத்தில் பல்வேறு சமய, அரசியல், தலைவர்கள் முன்னிலையில் புனித பேதுருவின் 266வது வாரிசாக திருத்தந்தை பிரான்சிஸ் பொறுப்பேற்ற நிகழ்வு உணர்ச்சிமயமாகவும் இறை அனுபவமுமாக இருந்ததாக யேர்மன் தலைவர்கள் குறிப்பிட்டனர். இவர்களில் குறிப்பிடத்தக்க வகையில் யேர்மன் அதிபர் அஞ்செலா மேர்க்கெல், உதவி அதிபர் பிலிப் றொஸ்லெர், சபாநாயகர் நோபேட் லமேற் ஆகியோரும், யேர்மன் கத்தோலிக்க திருச்சபை சார்பில் கருதினால்கள் மார்க்ஸ், கஸ்பார் மற்றும் வொல்கி மற்றும் பேராயர் சொலிற்ஸ், பேராயர் முல்லெர், மற்றும் அட்வேனியாற் உதவி நிறுவன அதிபர் மேதகு கிளஸ்கா அத்துடன் பெரு எண்ணிக்கையான யேர்மன் நாட்டின் ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவிகள், பொதுநிலையினர் பங்கேற்றிருந்தனர். புதிய திருத்தந்தையின் மறையுரை ஏழைகள்ää கைவிடப்பட்டவர்கள் மீது அக்கறை மிகுந்ததாக அமைந்திருந்தது யேர்மன் ஆலய வட்டத்தில் பெரு வரவேற்பைப் பெற்றுள்ளது. [2013-03-21 01:09:44]


ஜேர்மனியில் புனித.பத்திசிரியாரின் பசுமைத் திருநாள் கொண்டாட்டம்

புனித பேட்ரிக் அடிகள் மூவிதழ் இலையை வைத்து பிதா சுதன் பரிசுத்த ஆவி என்ற திரித்துவக் கோட்பாட்டை மக்களுக்கு விளக்கியதால் அவருடைய நாளை இலையுடன் பச்சை நிறத்தோடு தொடர்புபடுத்தி "புனித பேட்ரிக்கின் பசுமைத் திருநாள்" என்று ஜேர்மனியில் 17.03.2013 அன்று கொண்டாடப்பட்டது. முன்சன் நகரில் இருந்து தொடங்கிய பசுமை ஊர்வலம் ஓடியோன்ஸ்பலாட்ஸில்(Odeonsplatz) முடிவடைந்தது. இவ்விழா அயலர்லாந்தில் முறைப்படி கொண்டாடப்படுகிறது.
அயர்லாந்து நாட்டிலிருந்து ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்தோர் அங்கும் தங்கள் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இவ் விழாவை கொண்டாடினர். [2013-03-20 23:55:09]


'நோயுற்றோருக்கான உலக நாள்' நிகழ்வுகள் ஜெர்மனியில் ஆரம்பம்

ஒவ்வோர் ஆண்டும் திருஅவையால் கொண்டாடப்படும் 'நோயுற்றோருக்கான உலக நாள்' நிகழ்வுகள் இவ்வியாழன் பிற்பகல் மூன்று மணியளவில் ஜெர்மனியின் Eichstätt-Ingolstadt பல்கலைக் கழகத்தில் ஆரம்பமாயின.
'நோயுற்றோருக்கான உலக நாள்' நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று இயேசு கூறிய வார்த்தைகளை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு கருத்தரங்கை நலப்பணியாளர் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski, துவக்க உரையாற்றி ஆரம்பித்து வைத்தார். பிப்ரவரி 7 இவ்வியாழன் ஆரம்பமாகியுள்ள 21வது 'நோயுற்றோருக்கான உலக நாள்' நிகழ்வுகள், பிப்ரவரி 11, வருகிற திங்களன்று கொண்டாடப்படும் லூர்து அன்னை மரியா விழாவன்று, ஆடம்பரத் திருப்பலியுடன் முடிவடையும். 1992ம் ஆண்டு மேமாதம் 13ம் தேதி முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் அறிவிக்கப்பட்ட 'நோயுற்றோருக்கான உலக நாள்' 1993ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி லூர்து அன்னை மரியா விழாவன்று முதன் முறையாகக் கொண்டாடப்பட்டது.
இவ்வாண்டு கொண்டாடப்படும் 21வது 'நோயுற்றோருக்கான உலக நாள்', ஜெர்மனியின் புகழ்பெற்ற Altötting அன்னை மரியா திருத்தலத்தில் சிறப்பிக்கப்படுகிறது. இவ்விழாவில் கலந்துகொள்ள திருத்தந்தையின் பிரதிநிதியாக பேராயர் Zimowski சென்றுள்ளார். [2013-02-16 00:25:37]


நட்சத்திர சிறார்கள் யேர்மன் பிரதமரைத் தரிசித்தனர்

யேர்மன் மறைமாவட்டங்கள் அனைத்திலுமிருந்து தேர்ந்து கொள்ளப்பட்ட 100 சிறார்கள் மூவரசர்கள் தினமான ஜனவரி 6 அன்று மூவரசர்கள் போன்று உடை அணிந்து யேர்மன் பிரதமர் அஞ்ஜெலா மேர்க்கெல் அவர்களை அவரது அலுவலகத்தில் தரிசித்தனர். அவ்வேளையில் தாம் கடந்த வருடம் சேகரித்த பணத்தில் வாங்கப்பட்ட முதலுதவி வாகனத்தையும் எடுத்துச் சென்று அவரது அலுவலகம் முன்பாக நிறுத்தியிருந்ததுடன் விரைவில் இவ் வாகனம் தன்சானியா நாட்டில் வைத்திய சேவைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வருடாவருடம் யேர்மன் முழுவதும் அரை மில்லியன் கத்தோலிக்க சிறார்கள் ஜனவரி முதல் வாரத்தில் வீடுவீடாகச் சென்று பணம் சேகரித்து வறுமையான நாடுகளில் வாழும் சிறார்களுக்கு உதவி புரிவது வழக்கமாகும். உலகெங்கும் இடம்பெறும் சிறுவர்களால் சிறுவர்களுக்கு மேற்கொள்ளப்படும் உதவித் திட்டங்களில் இதுவே பெரிதானது என்பது குறிப்பிடத்தக்கது. [2013-01-30 08:21:00]