இறைவாக்குத்தத்தம்

நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள் (மத்தேயு 21:22)

இறைவார்த்தை

நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.(மத்தேயு 6:6)

இறைவாக்குத்தத்தம்

இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்: அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.
(திருவெளிப்பாடு 3:20)

இறைவாக்குத்தத்தம்

இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.
(திருவெளிப்பாடு 22:7)


ஆன்மீகவழிகாட்டி


விசுவசியுங்கள் உங்களுக்கு கைகூடும்
ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும். (மாற்கு 11:24)
செபம் என்பது என்ன?
கடவுளோடு உரையாடுவது செபம். ஒரு நல்ல நண்பர் நமக்கு இருந்தால் நம் எல்லா விஷயங்களையும் மனம் விட்டு பகிர்ந்து கொள்வது நட்புக்கான இலக்கணம். கடவுளிடம் நாம் நம் வாழ்க்கையை பற்றி பேசுவதே செபம். நாம் கடவுளிடம் நமது இதயத்தை திறந்து பேசுவதும், நம்மோடு பேசும் கடவுளின் வார்த்தைக்கு திறந்த மனத்துடன் செவிமடுப்பதுமே செபம்.

எதற்காக செபம் செய்ய வேண்டும்?
கடவுளின் அருகில் நாம் நெருங்கிவர செபம் நமக்குத் துணைசெய்கிறது. கடவுளிடம் நாம் பெற்ற நன்மைகளுக்கு நன்றிசொல்லும் போதும், அவர் புகழ் பாடும் போதும், நமது பாவங்களுக்காக மனம் வருந்தும் போதும், நமது பலகீனத்தில் அவரது உதவியை நாடும் போதும், அவர் சித்தத்தை நிறைவேற்றும் போதும், கடவுள் நம்மோடு பேசுகிறார். கடவுள் நமது சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றி நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதைச் செய்யத் தூண்டுகிறார். செபம் செய்வதன் மூலம் கடவுளின் சித்தத்தை நிறைவேற்ற அதிக வாய்ப்பை நமக்குக் கொடுக்கின்றார். இதன் மூலம் நாம் கடவுளில் இணைந்து வாழும் பேற்றைப் பெறுகிறோம். முத்திப்பேறு பெற்ற அன்னைத் தெராசாவும் மற்ற புனிதர்களும் இப் பேற்றைப் பெற்றவர்களே.

கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும். (யோவான் 16:24)


யாரிடம் செபம் செய்ய வேண்டும்? கடவுளிடமா? யேசுவிடமா? தூய ஆவியிடமா? புனிதர்களிடமா?
நாம் கடவுளிடமோ அல்லது யேசுவிடமோ அல்லது தூய ஆவியிடமோ செபம் செய்யலாம்.இந்த மூவரிடமும் எழுப்பப்படும் செபங்கள் விவிலியத்தில் அனேக இடங்களில் காணப்படுகின்றன. கடவுள் ஒருவர்தான். இயேசுவிடம் செபம் செய்யும் போது இறைத் தந்தையிடமும் நாம் செபம் செய்கிறோம். நாம் செபம் செய்யும் வார்த்தைகளையும் கடந்து கடவுள் நம் உள்ளத்தையும் எண்ணங்களையும் அறியக்கூடியவர்.

புனிதர்கள் கடவுள் அல்ல. அவர்கள் கடவுளின் விருப்பத்தின்படி இவ்வுலகில் வாழ்ந்த மனிதர்கள். தங்களின் தூய வாழ்வால் விண்ணகத்தை சுதந்தரித்துக் கொண்டவர்கள். அவர்கள் இறைவனின் அருகில் அமர்ந்திருக்கிறார்கள், நமக்காக கடவுளிடம் பரிந்து பேசுகிறார்கள், நாம் செய்யும் வேண்டுதல்களை கடவுளிடம் மன்றாடி நமக்குப் பெற்றுத் தருகிறார்கள் என்பதே நமது விசுவாசம்.

சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை முன்னிட்டும் தூய ஆவி நம் உள்ளத்தில் பொழிந்துள்ள அன்பை முன்னிட்டும் நான் உங்களைக் கேட்டுக் கொள்வது; எனக்காகக் கடவுளிடம் வேண்டி, என் போராட்டத்தில் எனக்குத் துணை செய்யுங்கள் எனக்காகக் கடவுளிடம் வேண்டி, என் போராட்டத்தில் எனக்குத் துணை செய்யுங்கள். -உரோ 15:30


கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிலை வழிபாடு செய்கிறார்களா?
இல்லை. சிலைவழிபாடு என்பது ஒரு குறிப்பிட்ட சிலைக்கு சக்தி இருக்கிறது என்று நம்பி அந்த சிலையை தெய்வமாக வழிபடுவது. கத்தோலிக்க ஆலயங்களில் நிறுபப்பட்டிருக்கும் சுரூபங்கங்கள் (சொரூபம் - மாதிரி) இயேசுவை அல்லது அந்தந்த புனிதர்களை நம் நினைவில் கொண்டுவர, தியானிக்க, அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது. அந்த சுரூபங்களுக்கு சக்தி இருப்பதாகவோ அல்லது அவைகளையே கடவுளாகவோ நாம் வழிபடுதில்லை. புனிதர்களை நாம் நம் வாழ்வின் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். புனிதர்கள் கடவுள் அல்ல. புனிதர்களுக்கு, அன்னை கன்னிமரியாள் உட்பட அனைவருக்கும் நாம் வணக்கம் மட்டுமே செலுத்துகிறோம். புனிதர்கள் இந்த உலகில் வாழ்ந்தபோது இறைவனுக்கு ஏற்புடைய வாழ்கை வாழ்ந்து மரித்தவர்கள்(உம் - அன்னை தெரசா). புனிதர்கள் இறைவனோடு விண்ணகத்தில் இருப்பதால் புனிதர்களிடம் நாம் நமக்காக இறைவனிடம் பரிந்துபேச அழைப்பு விடுவிக்கின்றோம்.

கடவுளாகிய இயேசு ஏன் செபம் செய்தார்?
இயேசு கடவுளும் மனிதனுமானவர். இந்த உலகில் இயேசு முழு மனிதனாக அவதரித்தார். அவர் கடவுளாயிருந்தாலும் இந்த உலகின் மனிதரைப் போல் மனிதராக வாழ்ந்தார். அவர் இறை தந்தையைச் சார்ந்து வாழ்ந்தார். எல்லாவற்றிலும் இறை தந்தையின் சித்தத்தையே நிறைவேற்றுகின்றார். இறை தந்தையை முழுமையாக அன்பு செய்து அவரில் வாழ்வதே வாழ்வாகக் கொண்டிருந்தார். ஆகவே அவரோடு உரையாடுவதில் அதிக நேரத்தை கழிக்கின்றதை நாம் நற்செய்திகளில் காண்கின்றோம்.

அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்றவல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். எபிரே 5:7-8


கடவுள் நம் தேவைகளையும் அறிந்திருப்பவர். பின்னர் நாம் ஏன் நம் தேவைகளுக்ககாக செபிக்க வேண்டும்? ஏன் மீண்டும் மீண்டும் செபிக்கவேண்டும்?
நாம் செபம் செய்யும் போது தாழ்ச்சியான உள்ளத்தையும் கடவுள் முன் நம்முடைய இயலாமையையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறு செய்வது கொடுத்துக்கொண்டே இருக்கின்ற கடவுளின் கொடைகளை நாம் பெறுவதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ளும் கருவியாக செபம் அமைகின்றது. ஆகவே நாம் தொடாந்து செபம் செய்ய வேண்டும்.

உம் அடியானின்; மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். என் துன்ப நாளில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; நீரும் எனக்குப் பதிலளிப்பீர். சங்கீதம் 86:4-7


எந்த நிலையில் செபம் செய்யவேண்டும்? முழந்தாள்படியிட்டு? கைகூப்பி?
விவிலியத்தில் மக்கள் செபம் செய்யும் போது பல்வேறு நிலைகளில் செபிக்கின்றதைக் காண்கிறோம். நின்றுகொண்டு, கைகளை உயர்தி, கவிழ்ந்து, உட்கார்ந்து, முழந்தாள்படியிட்டு செபித்திருக்கிறார்கள். எந்நிலையிலும் செபிக்கலாம் என்றாலும் முடிகின்ற சூழ்நிலைகளில் முழந்தாள் படியிட்டு கைகூப்பி செபிப்பது கடவுளுக்கு முன் நமது தாழ்ச்சியையும் பணிவையும் எடுத்துக்காட்டும் வண்ணமாக அமைகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையாக, பயபக்தியோடு செபிப்பது உகந்தது.

என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. சங்கீதம் 51:15-17


கடவுளிடம் நாம் செய்யும் செபம் சில வேளைகளில் கேட்கப்படுவதில்லையே ஏன்?
கடவுள் நம்மைவிட ஞானம் மிக்கவர். யார் யாருக்கு என்ன தேவை எப்போது தேவை என்பதை அவர் அறிவார். அவர் எப்போழுதும் நமக்கு நன்மையே செய்வார். சிலவேளைகளில் கடவுளின் திட்டம் மனித ஞானத்திற்கு எட்டுவதில்லை. ஆகவே கடவுள் நம் செபத்தை கேட்காதவர் போல் நமக்குத் தெரிகிறது.
சிலவேளைகளில் சுயநலத்தோடு செபம் செய்கிறோம். அரசர் சாலமோன் கடவுளிடம் ஞானத்தைக் கேட்டார். பொருட்செல்வமோ அல்லது படையோ, மேலும் அதிகாரத்தையோ அல்லது மேலும் அரசுகளையோ கேட்காததால் கடவுள் அனைத்தையும் அவருக்குக் கொடுத்தார்.
அல்லது கடவுளின் திட்டத்திற்கு மாறுபட்டு நம் எண்ணங்கள் அமைவதால் நம் செபம் கேட்கப்படுவதில்லை. சில சமயங்களில் நம் செபம் நேரடியாகக் கேட்கப்படாமல் வேறுவிதமாக நிறைவேற்றப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள் நம் செபங்களைக் கேட்டருள்வார் என்ற ஆழ்ந்த விசுவாசமும் கடவுளின் அன்பும் பராமரிப்பும் நம் வாழ்வில் நிலைபெறும் என்ற உறுதியான நம்பிக்கையும் அனைத்திலும் கடவுளின் சித்தம் நிறைவேற்றப்படவும் தொடர்ந்து செபிக்க வேண்டும்.


அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.பின் ஆண்டவர் அவர்களிடம், "நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். - லூக்கா 18: 1, 6-8


பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்; "தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று கூறினார். லூக்கா 22:41-42

அச்சிடப்பட்ட அல்லது மனப்பாடம் செய்த செபங்கள் செபிப்பதற்கு உகந்ததா?
இப்படித்தான் செபம் செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை கடவுள் நம்மிடம் எதிர்பார்கவில்லை. அச்சிடப்பட்ட அல்லது அனுதினம் நாம் அறிந்த செபங்களைப் பயன்படுத்துவது செபம் செய்ய உதவிசெய்யுமானால் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக கர்த்தர் கற்பித்த செபம், மங்கள வார்தை செபம், தெரிந்த சங்கீதங்களை செபிப்பது அல்லது பாடுவது சிறந்த செபம். அச்சிடப்பட்ட செபங்களை செபிக்கும் போது கடகட வென ஒப்பிக்காமல், பொருளுணர்ந்து மன ஈடுபாட்டுடன் செபிப்பது மேன்மைக்குரியது. (எடுத்துக்காட்டு: பரிசுத்த ஆவியானவர் செபம்).

மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்;" விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! ..... மத் 6:7-9

திருவிவிலியத்தில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்தும் உண்மையா?
இந்தகேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல இயலாது. திருவிவிலியம் என்பது கடவுளின் வார்த்தை. எழுதப்பட்ட அனைத்தும் கடவுளால் தூண்டப்பட்டு எழுதப்பட்டிருந்தாலும், எழுத்து வடிவில் எழுதியது மனிதரே. தனிப்பட்ட ஒரு ஆசிரியரோ அல்லது ஒரு சமூகமோ தங்கள் இறைஅனுபவத்தை வார்த்தையாக்கிய உன்னதமான நூல். விசுவாச அடிப்படையில் இதில் தவறு ஏதும் இல்லை. விவிலியத்தில் அடங்கியிருப்பது மீட்பு பற்றிய செய்தியாகும். கடவுள் மனிதரை ஏன் படைத்தார்? மனித வாழ்கையின் குறிக்கோள் என்ன? அக்குறிக்கோளை அடைவது எப்படி, இவைபோன்ற கேள்விகளுக்குப் பதில் தருகின்ற போது தவறான போதனையைத் தருவதில்லை. இது ஒரு விசுவாச நூலானதாலும், மனிதரால் பல்வேறு காலக்கட்டத்தில் எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட நூல் என்பதாலும், தரப்படுகின்ன எல்லா தகவல்களும் அறிவியல் ரீதியாகவும் சரித்திர ரீதியாகவும் 100 விழுக்காடு சரியானவைகளாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. மனித அறிவின் எல்லைக்கு உட்பட்டே அந்த நூல்கள் உருவாகின. விவிலிய நூல்கள் சமய நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகி வளர்ந்தவை. அவற்றில் காணப்படும் செய்தி சமய நம்பிக்கையை நம்மில் வளர்ப்பதற்காக அமைந்ததே தவிர, நமக்கு அறிவியல் சார்ந்த கருத்துக்களை வழங்குவதற்காகவோ வரலாற்று நிகழ்ச்சிகளை விமர்சிப்பதற்காக எழுதப்படவில்லை. குறிப்பாக வரலாற்று காலத்திற்கு முற்பட்ட நிகழ்சிகளை (தொடக்க நூலில் ஆபிரகாமிற்கு முந்திய பகுதிகள்) விவரிக்கின்ற பகுதிகள் விசுவாசம் சார்ந்த உண்மைகளை விளக்குவதற்காக பல்வேறு பாரம்பரியங்களில் உலவிவந்த செய்திகளின் தொகுப்பு எனலாம். பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து நூல்களும் முதலில் பாரம்பரியமாக சொல்லப்பட்டவைகளின் அடிப்படையில் எழுந்த பாரம்பரிய செய்திகள் பின்னர் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எழுத்து வடிவில் எழுதப்பட்டவை. பின்னர் பல நூற்றாண்டுகளில் தொகுக்கப்பட்டவை. எனவே, கடவுள் மனிதருடைய முழுநலனுக்காக எதைஎதை எல்லாம் நமக்கு வழங்க விரும்பினாரோ அவைகள் மட்டுமே விவிலியத்தில் உள்ளது என நாம் ஏற்றுக்கொள்கிறோம். விவிலியத்தின் எந்த பகுதியையும் வார்த்தைக்கு வார்த்தை பொருள் கொண்டால் அது சரியான பொருளை உணர்த்தாது. எந்த ஒரு பகுதியும் அதன் ஆசிரியர் என்ன நோக்கத்தோடு எழுதினார்; அதன் பின்னி என்ன; அதன் முழுமையான பொருள் என்ன; என்பதை அறிந்தே அதன் உண்மைப் பொருளை உணரமுடியும். இதற்கு, பாரம்பரியம் (அவ்விவிலியப் பகுதி அக்கால மக்களால் புரிந்து கொள்ளப்பட்ட முறை) மிக முக்கியம். அதை சரியான முறையில் புரிந்து கொள்ள திருச்சபையின் மறைவல்லுனர்களின் விளக்கமும், திருச்சபையின் அதிகாரப்பூர்வ விளக்கமும் பெரிதும் உதவும்.

நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. -2திமோத்தேயு 3:15-16


கடவுள் எதற்காக உலகைப் படைத்தார்?
அன்பே உருவானவர் கடவுள். அந்த அன்பை பகிர்ந்து கொள்ள கடவுள் உலகையும் மனிதனையும் படைத்தார். உலகையும் அதில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் படைத்து இறுதியாக மனிதனையும் படைத்து அனைத்தையும் மனிதனுக்குக் கொடுக்கிறார். இயற்கையோடும், மற்ற விலங்குகளோடும், மற்ற மனிதர்களோடும் மனிதன் அன்பிபோடும் மகிழ்ச்சியோடும் வாழ்ந்து இறைப் பதம் அடையவே கடவுள் உலகைப் படைத்தார்.

அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார். -தொடக்கநூல் 1:26

கடவுள் எவ்வாறு உலகைப் படைத்தார்?
எந்தப் பொருளையும் நாம் உண்டாக்குவதற்கு எதாவது ஒரு மூலப் பொருள் தேவை. ஆனால் கடவுள் ஒன்றுமில்லாமையிலிருந்து அனைத்தையும் உண்டாக்கினார். கடவுளால் முடியாதது ஒன்றுமில்லை.

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். -தெடக்கநூல் 1:1-3


மனிதரின் இரத்தத்தை உறிஞ்சி நோயையும், தூக்கமின்மையையும் ஏற்படுத்துகிற "கொசு" க்களைப் ஏன் கடவுள் படைத்தார்?
எல்லா உயிரினங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்ற நியதி இறைவன் கொடுத்த நியதி. அவை ஒன்றுக்கொன்று உதவிசெய்கின்றன. ஒருவேளை தனிப்பட்ட ஒரு பூச்சியோ விலங்கோ மனிதருக்கு நேரடியாக உதவிசெய்யவில்லை என்றாலும் மற்ற உயிரினங்களுக்கு உதவி செய்யவோ அல்லது உணவாகவோ கடவுள் அவைகளைப் படைத்திருக்கிறார். ஆனால் கொசுவைப் படைத்த கடவுள் அதன் கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஆயிரம் வழிமுறைகளைக் கொடுத்திருக்கிறார்.

எனவே, நீ நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் நலமார்ந்த நெறிகள் அனைத்தையும் தெரிந்துகொள்வாய்.ஞானம் உன் உள்ளத்தில் குடிபுகும்; அறிவு உன் இதயத்திற்கு இன்பம் தரும். அப்பொழுது, நுண்ணறிவு உனக்குக் காவலாய் இருக்கும்; மெய்யறிவு உன்னைக் காத்துக்கொள்ளும். -நீதிமொழிகள் 2:9-11


மூட்டைபூச்சியையும் கடவுள் படைத்தார் எனில் அதை நாம் நசுக்குவது சரியா?
எல்லா உயிரினங்களுக்கும் அதிபதியாக மனிதரைப் படைத்தாலும் நாம் விரும்பியவாறு உயிரினங்களை கொல்ல அல்லது கொடுமைப்படுத்த, மனிதருக்கு உரிமையில்லை. அவைகளும் வாழவேண்டுமென்றே கடவுள் படைத்துள்ளார். இருந்தாலும் நமது உணவிற்காக கொல்வதும் அல்லது நமது அன்றாட வாழ்விற்கு பெரும் இடைஞ்சலாக இருக்கும் சூழ்நிலைகளில் அதை அப்புறப்படுத்துவதுவதோ அல்லது கொல்வதோ குற்றமாகாது. ஈக்கள் வாழ வேண்டிய இடம் நமது வீடு அல்ல. அதனால் வீட்டிற்குள் புகும் ஈக்களையெல்லாம் கொல்வதும் சரியான செயல் ஆகாது. ஈக்கள் வராமலிருக்க நாம் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்வதும் உணவு வகைகளை மூடிவைப்பதும் நாம் செய்யும் மேலான செயல்களாகும். நமக்குத் தீங்கிளைக்கும் விலங்குகளை கொல்லாமல், அவைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளைச் செய்வதே சரியான வழியாகும். கூடுகட்டும் சிலந்திப் பூச்சிகளை அழிப்பதை விட்டு விட்டு அவை கூடுகட்டாமலிருக்க அடிக்கடி சுத்தம் செய்வது நற்செயலாகும். தலைமுடியில் வாழும் பேனுக்கும், மூட்டை பூச்சிக்கும் இது பொருந்தும்.

கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார். -தொடக்க நூல் 1:28


சிலநேரங்களில் குழந்தைகளும் சிறார்களும் ஏன் இறக்கின்றனர்?
பிறந்த எல்லாமே இறக்கவேண்டும் என்பது கடவுளின் நியதி. தீயது நினைக்காத, செய்யாத மரம் செடி, கொடி விலங்குகள் உட்பட அத்தனைக்கும் இது பொருந்தும். மனித உடல் இறந்தாலும் ஆன்மா இறப்பதில்லை என்பது கிறிஸ்தவ விசுவாசம். மனிதர் நோயினால், விபத்தினால், இயற்கையின் சீற்றத்தால் எப்படிவேண்டுமானாலும் இறக்கலாம். ஒருவரின் இறப்பை வைத்து வாழ்கையை நாம் தீர்ப்பிட இயலாது. ஒருசிலருக்கு 1 மாதமோ அல்லது 5 வருடமோ 50 வருடமோ அல்லது 100 வருடமோ கடவுள் கொடுக்கின்றார். இவ்வுலக வாழ்க்கை மிகவும் குறுகியது. கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் ஒவ்வொறு வினாடிக்கும் நாம் நன்றி செலுத்த வேண்டும். இவ்வுலக வாழ்கையே கதி என்றிறாமல் நமக்குக் கொடுக்கப் பட்டிருக்கின்ற நேரத்தையும் வாய்ப்புக்களையும், திறமைகளையும், அருட்செல்வத்தையும் பொருள் செல்வத்தையும் பயன்படுத்தி விண்ணுலக செல்வத்தை சம்பாதித்துக்கொள்ள வேண்டும். இவ்வுலக வாழ்கைக்குப் பின் நிலையான மறுஉலக வாழ்வு உண்டு. இறப்பு என்பது மறுஉலக வாழ்வின் பிறப்பு.

ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே.எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்துகொள்வதென எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டுக்குமிடையே ஒரு இழுபறி நிலையில் உள்ளேன். உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம். - இதுவே மிகச் சிறந்தது. -ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம். - இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது. -பிலிப்பியர் 1:21-24


உயிர் சேதமும் பொருட்சேதமும் மனத்துயரையும் வறுமையையும் விளைவிக்கின்ற "போர்" ரை கடவுள் ஏன் அனுமதிக்கின்றார்?
போர் என்பது கடவுள் அனுமதிக்கின்ற ஒன்று இல்லை. மனிதனின் சுய நலத்தினாலும் அகம்பாவத்தினாலும், ஆணவத்தினாலும் கோபமிகுதியாலுமே போர் நிகழ்கிறது. கடவுளின்சித்தம் யாரும் யாரையும் கொல்ல வேண்டுமென்பதில்லை. அனைவரும் கடவுளின் அன்புப்பிள்ளைகளாக வாழ கடவுள் ஆசிக்கின்றார்.

உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; போராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெறமுடிவதில்லை. நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. யாக்கோபு 4:1-2


கோவிலுக்கே செல்லாதவர்களின் நிலை என்ன?
கோவிலுக்குச் செல்வதால் மட்டுமே மோட்சம் சென்றுவிடமுடியாது. அல்லது கோவிலுக்குச் செல்லாதவர்கள் அனைவரும் நரகத்திற்குச் செல்வார்கள் என்று கூறிவிடவும் முடியாது. கிறிஸ்தவன் தன்னுடைய விசுவாசத்தாலும் வாழ்கையாலுமே கிறிஸ்தவனாக முடியும். கிறிஸ்துவில் வாழ வழிகாட்டுதலும் பலமும் சக்தியும் கோவிலில் கிடைக்கிறது. அதோடு நாம் அனைவரும் கடவுளின் அன்புமக்கள் என்ற உணர்வும் அனைவரும் சேர்ந்து செபிக்கும் பேறும் நமக்கு கிடைக்கிறது. கோவிலுக்குச் செல்லாதவர்கள் இதைஎல்லாம் இழந்து நிற்கின்றார்கள்.

இக்காலத்தில் தமது நீதியைக் கடவுள் பொறுமையோடு காட்டி வருகிறார். ஆம், அவர் நீதியுள்ளவர். இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி வருகிறார். அப்படியிருக்க, பெருமை பாராட்ட இடமேது? இடமில்லை. எந்த அடிப்படையில் பெருமைபாராட்ட இடமில்லை? செயல்களின் அடிப்படையிலா? இல்லை; நம்பிக்கையின் அடிப்படையில்தான். ஏனெனில் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின்மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் எனக் கருதுகிறோம். -உரோமையர் 3:26-28


வானதூதர்கனை கடவுள் படைத்ததாக விவிலியத்தில் சொல்லப்படவில்லை. அவர்களைப் படைத்தது யார்?
நாயை கடவுள் படைத்ததாக விவிலியத்தில் சொல்லப்படவில்லை. இருந்தாலும் கடவுள்தான் நாயைப் படைத்தார். ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் கடவுளே! உடல் ஏதும் இல்லாமல் சுத்த அரூயஅp;பியான வானதூதர்கள் உட்பட.

அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்; அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள். அவை ஆண்டவரின் பெயரைப் போற்றட்டும்; ஏனெனில், அவரது கட்டளையின்படி எல்லாம் படைக்கப்பட்டன. -திருப்பாடல்கள் 147:2,5


எரியுட்டப்பட்ட உடலை கடவுள் எவ்வாறு உயிர்பிக்கமுடியும்?
நம்மைப்படைத்தவர் கடவுள். நம்மை உண்டாக்கிய கடவுள் நாம் மண்ணில் மக்கினாலும், சாம்பலாகப் புதைந்தாலும் நம் உடலை உயிர்ப்பிக்கவல்வவர். உயிர்தெழும் போது அது சாதாரண உடலாக இருக்காது. மகிமைபெற்ற மாற்றுருபெற்ற உடலாகவே அது விண்ணகம் செல்லும்.

சகோதர சகோதரிகளே! இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். -1தெசலோனிக்கர் 4:13-14.


மோட்சம் நரகம் உண்டா? அது எப்படிஇருக்கும்?
மோட்சம் நரகம் கட்டாயம் உண்டு. ஏனெனில் இறுதித் தீர்ப்பின்போது கடவுள் நல்லவர்களுக்கு முடிவில்லா வாழ்வையும் தீயவர்கள் தண்டனைக்கும் உள்ளாவர் என்பதை சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த மோட்சத்தையும் நரகத்தையும் நாம் கற்பனை செய்து பார்க்க இயலாது. நல்லவர்கள் கடவுளோடு அமர்ந்து, கடவுளை என்றும் நேரடியகப் பார்க்கும் முடிவில்லா மகிழ்ச்சி நிலையைப் பெறுவர். தீயவர்களோ கடவுளைக் காண இயலா பெரும் துன்ப நிலையை அடைவர். அதிலிருந்து அவர்களால் மீள இயலாத துன்ப நிலை.இவைகளை மனித கற்பனையாக எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து," என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். -மத்தேயு 25:34,41


கத்தோலிக்கத் திருச்சபையில் பிரிவுகள் உண்டா?
இயேசு கிறிஸ்துவால் நிறுவப்பட்ட, அப்போஸ்தலர் பேதுருவிடம் ஒப்புவிக்கப்பட்ட, அவர்களின் வழிவந்த திருத்தந்தையால் வழிநடத்தப்படுவரும் கத்தோலிக்கத் திருச்சபை ஒன்றுதான். கத்தோலிக்கத் திருச்சபையில் பல ரீதிகள் (வழிபாட்டு முறையில் மாறுபட்ட வகையில்) இருக்கின்றன. லத்தீன் ரீதி, பiசாட்டைன் ரீதி, கோப்திக் ரீதி, எத்தியோப்பிய ரீதி, கல்தீன் ரீதி, அர்மீனியர் ரீதி, சீரோ மலபார், சீரோ மலங்கரா, சீரியன் ரீதி. இவை அனைத்துத்ம் ஒரே கத்தோலிக்க விசுவாசத்தை அறிக்கையிடுபவை. ஆனால் வழிபாட்டு முறைகள் வேறுபடும்.

விசுவாசத்தால் மட்டுமே மீட்பு பெற முடியுமா?
16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கத்தோலிக்க குருவாக இருந்த மார்டின் லூதர் கத்தோலிக்கத் திருச்சபையில் மறுமலர்ச்சி இயக்கத்தை ஆரம்பித்தார். அதன்படி கிறிஸ்தவர்கள் மீட்படைய விசுவாசம் (இயேசு கிறிஸ்துவின் மேல் பற்றுறுதி, நம்பிக்கை) ஒன்றே போதும் நம்முடைய எந்த முயற்சிகளும் நற்செயல்களும் மனிதருக்கு மீட்பை தராது என்பது அவரது வாதம். அதற்கு ஆதாரமாக அவர் கூறிய விவிலியப் பகுதிகள்: ரோமையர் 3:20-22, 5:1, 5:9, கலாத்தியர் 2:16, 3:11. இன்னும் இதைப்போன்ற பகுதிகள். இந்தப் பகுதிகள் அனைத்தும் பழைய ஏற்பாட்டு சட்டமும் அல்லது சட்டங்களைக் கடைப்பிடிப்பதாலும் நமக்கு மீட்பைத் தருவதில்லை மாறாக இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள பற்றுறுதியே நம்மை கடவுளுக்கு ஏற்புடையவராக்கும் என்பதை பவுல் இப்பகுதிகளில் வலியுறுத்துகிறார். (பின்னர் மார்டின் லூதர் விவிலியத்தை விளக்க விவிலியம் மட்டுமே போதும், மேலும் நற்கருணையில் இறைபிரசன்னம் இல்லை, குருக்கள் மணத் துறவு காணத்தேவை இல்லை, பாப்பரசர் அப்போஸ்தலர்களின் வழிவந்தவர் அல்ல மற்றும் ஞான அதிகாரம், தவராவரமில்லை என்று சொல்லி தனியாகப் பிரிந்து சென்றார்.) உண்மைதான். சட்டத்தை கடைப்பிடிப்பதால் மட்டுமே மீட்படைய முடியாது. இயேசு கிறிஸ்துவே இக்கருத்தை ஆழமாகச் சொல்லியிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் மோயீசனின் சட்டங்களை மிக நுனுநுனுக்கமாக கடைப்பிடித்து வந்தார்கள். அவ்வாறு செய்வதே மோயீசன் வழியாக இறைவன் தங்களுக்கு கொடுத்த கட்டளையாக அதை கடைப்பிடித்து வந்தார்கள். கோவிலில் காணிக்கை செலுத்தவேண்டுமென்பது மோயீசன் கொடுத்த கட்டளை. அதை யூதர்கள் சிரமேல் கொண்டு கடைப்பிடித்து வந்தார்கள். ஆனால் இயேசு புதிய கட்டளை கொடுக்கின்றார். நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள் என்கிறார் இயேசு. (மத்தேயு 5 :23-24). கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதை விட சகோதரரிடம் அன்புறவே முக்கியம் என்கிறார். அன்பு இரக்கம் பரிவு ஆகியவைகளைக் கடைப்பிடிக்காமல் சட்டத்தை மட்டுமே போதித்த பரிசேயர்களை சதுசேயர்களை வெள்ளையடிக்கப்படட கல்லரைகள் என்கிறார் இயேசு.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து," என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்பார். (மத்தேயு 25:34-36)ஆக நற்செயல்கள் கட்டாயம் தேவை என்பதை நமக்கு விளக்குகிறது.

மேலும் அதே புனித பவுல் அடியார் ரோமையருக்கு எழுதிய மடலின் பின் பகுதிகளில் அதிகாரம் 12, 13, 14 அனைத்துப் பகுதிகளிலும் நாம் திருமுழுக்கின் வழியாக இறைவனுக்கு ஏற்புடையவராக்கப்பட்ட நாம், அதில் நிலைத்து வாழ என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் மிகத் தெளிவாகக் கூறுகிறார். புனித யாக்கோபு தம் மடலில் "அறிவிலிகளே, செயலற்ற நம்பிக்கை பயனற்றது என நான் எடுத்துக்காட்ட வேண்டுமா? நம் மூதாதையாகிய ஆபிரகாமைப் பாருங்கள். தம் மகன் ஈசாக்கைப் பீடத்தின்மேல் பலிகொடுத்தபோது அவர் செய்த செயல்களினால் அல்லவோ கடவுளுக்கு ஏற்புடையவரானார்? அவரது நம்பிக்கையும் செயல்களும் இணைந்து செயல்பட்டன என்றும், செயல்கள் நம்பிக்கையை நிறைவுபெறச் செய்தன என்றும் இதிலிருந்து புலப்படுகிறது அல்லவா? "ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்" என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் அவர் கடவுளின் நண்பர் என்றும் பெயர் பெற்றார். எனவே மனிதர் நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர் எனத் தெரிகிறது. அவ்வாறே, இராகாபு என்ற விலைமகள் தூதர்களை வரவேற்று வேறு வழியாக அனுப்பியபோது, செயல்களால் அல்லவா கடவுளுக்கு ஏற்புடையவரானார்! உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே." -யாக்கோபு 2:20-26
ஆக மீட்புப் பெற இயேசுகிறிஸ்துவின் மேல் விசுவாசமும் (பற்றுறுதி) அதன்மூலம் நாம் பெற்றுக்கொண்ட அருளில் நிலைபெற்று நிற்க நற்செயல்களும் தேவை என்பதே தூய பவுலின் போதனை. அதையே கத்தோலிக்கத் திருச்சபையும் போதிக்கிறது. (விவிலியத்தின் ஒரு பகுதியை மட்டும் படித்து, அதன் அடிப்படையில் விளக்கமோ, கொள்கை முடிவுகளோ எடுப்பது சரியான முடிவாக அமைய வாய்ப்பில்லை).

கிறிஸ்தவர் அல்லாத யூதர்களும், இந்துக்களும், முஸ்லிம்களும் மீட்புப் பெறுவார்களா?
மீட்பு பெறுதல் என்பது நாம் கடவுளோடு கொண்டுள்ள அன்புறவைப் பொருத்தது. இந்த அன்புறவு எப்படி ஏற்படும் என்றால் நாம் கடவுள் மீது கொண்டுள்ள பற்றுதியாலும் விசுவாச வாழ்வாலும் நம்மையே நாம் கடவுளுக்கு அற்பணிக்கும் வாழ்கை வாழ்தாலும் எற்படும் உறவாகும். இத்தகைய வாழ்கை வாழ்வதற்கு திருமுழுக்கு என்னும் திருவருட்சாதனத்தின் வழியாக நாம் கடவுளின் அருளைப் பெறுகிறோம். திருமுழுக்கு என்னும் திருவருட்சாதனத்தின் மூலம் நாம் கடவுளின் பிள்ளைகளாகிறோம். நமது அனைத்துப் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. கடவுளின் அருளைப் பெற்று கிறிஸ்துவில் புதுவாழ்வு வாழ அழைக்கப்படுகிறோம். ஆதலால் திருமுழுக்கு என்பது மீட்புப் பெற தேவை என்பதில் ஐயமில்லை. ஆனால் திருமுழுக்குப் பெற்றவர்கள் அனைவரும் மீட்பு பெறுவார்கள் என்று உறுதிகூறவும் இயலாது. திருமுழுக்கைப் பெற்றவர் கடவுளிடம் அன்புறவை எற்படுத்தும் செயல்களை செய்யவில்லைஎனில் கடவுளோடுள்ள அன்புறவில் நீடிக்க இயலாமல் போகக்கூடும். அல்லது கடவுளின் விருப்பத்திற்கு மாறாக அவரின் அன்புறவைப் புறக்கணித்து அவரின் கட்டளைகளை மீறி நம் சொந்த விருப்பத்தின் படி வாழ்வதால் கடவுளின் அன்புறவில் நிலைத்து நிற்க இயலாது. 1964 ஆண்டில் நிறைவுபெற்ற இரண்டாம் வத்திக்கான் சங்க கருத்துப்படி "யாரும் தங்களுடைய சொந்த தவறால் அல்லாமல் கிறிஸ்துவை அறியாமல் இருந்தாலும்கூட நேரிய உள்ளத்துடன் கடவுளைத் தேடுகிறவர்களும் அவர்கள் அறிகின்றபடி கடவுளின் விருப்பப்படி வாழ்கிறவர்களும், வாழ்ந்தவர்களும் கடவுளின் மீட்பைப் பெறக்கூடும். இதுவே 'ஆசை திருமுழுக்கு' எனப்படுகிறது.


ஏழைகளுக்கு உதவவேண்டும் என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். பல இலட்சக்கணக்கான எழைகள் உலகத்தில் இருக்கிறார்கள் இது எவ்வாறு சாத்தியம்?
கடவுள் அன்பும் இரக்கமும் நிறைந்தவர். கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் கொடைகளுக்கு நன்றி செலுத்துவதோடு நின்றுவிடாமல் நாமும் பிறரிடம் இரக்கத்துடன் நடந்துகொள்வது அவசியம். நம்மால் முடிந்த வரை நமக்கு அருகில் உள்ளவர்கள், உதவி தேவைப்படுவோர் ஆகியோர்க்கு, கட்டாயம் உதவி செய்யவேண்டும். இதுதான் கிறிஸ்தவப் பண்பு. பிறருக்கு உதவும் தர்ம ஸ்தாபனங்களுக்கும் நாம் தாராள உள்ளத்தோடு நடந்துகொள்ளலாம். ஒவ்வொறுவரும் இவ்வாறு செய்யும் போது பலர் பயனடையும் வாய்ப்பு உள்ளது.

உலகம் போய்கொண்டிருக்கிற நிலையைப் பார்த்தால் கடவுளின் மீட்புத் திட்டம் இந்த உலகில் சரிவர நிகழவில்லை என்றுகூறலாமா? இறையரசு மலருமா?
கடவுளின் மீட்புத் திட்டம் கட்டாயம் நிறைவுபெறும். இந்த மீட்புத் திட்டம் நிறைவடையும் நாளில் நாம் அனைவரும் ஒரே சமூகமாக எந்தவித ஜாதி, மத, இன, மொழி மற்றும் எந்தவித வேறுபாடுகளுமின்றி கடவுளின் ஒரே அன்பு சமுதாயமாக மாறும் நாள் வரும். திருவெளிப்பாடு நூலில் சொல்லப்பட்டிருக்கின்ற புதிய வானகமும் புதிய வையகமும் மலரும் நாள் வரும். கடவுள் ஆரம்பித்த அன்பு சமுதாயம் நிச்சயமாக இயேசு கிறிஸ்துவின் வழியாக நிறைவைப் பெறும். தூய ஆவியானவர் அதை நோக்கி வழிநடத்திக்கொண்டிருக்கிறார், தொடர்ந்து வழிநடத்துவார். இன்று உலகில் இருக்கின்ற போர், கொலை, கொள்ளை, தீச் செயல்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவும் இருந்தன. அறிவியல் முன்னேற்றத்தாலும், புதிய, நுட்பமான, ஊடக மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்கள் அதிகமாக இருப்பதாலும், உலக மக்கள் தொகை 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட பல மடங்கு அதிகரித்திருப்பதாலும் குற்றங்கள் அதிகரித்திருப்பது போலத் தோன்றுகிறது. ஆனால் உலகம் நிச்சயமாக மெல்ல மெல்ல கடவுளின் திட்டப்படி நிறைவாழ்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அது ஒருநாள் நிறைவை அடையும்.