இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.(எபிரேயர் 13:8)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

இறைவாக்குத்தத்தம்

நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்: உன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை:
நானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்: தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்:
தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்.
(எசாயா 60:15)

   குருக்களுக்கான செபம் 

பழைய மொழிபெயர்ப்பு

என்அன்பான ஆண்டவரே! குருக்களைக் காப்பாற்றும்படியாக உம்மை மன்றாடுகிறேன். அவர்கள் உம்முடையவர்களானதாலும், அவர்களுடைய ஜீவியம் உமது பலிபீடத்தில் ஏறுகிறதினாலும், அவர்களைக் காப்பாற்றும். உலகமும் சரீரமும் பலமானவையாதலாலும், சாத்தான் அவர்களைத் தப்பிதத்தில் விழத்தாட்ட ஆயிரம் வலைகள் வீசுகிறதினாலேயும், அவர்களைக் காப்பாற்றும். அவர்கள் உலகத்தை விட்டு பிரிந்தாலும் உலகத்தின் நடுவில் ஜீவிக்கிறதினாலேயும், உலக இன்பங்கள் அவர்களைச் சோதிக்கிறதினாலும், அவர்களை உமது இருதயத்தில் வைத்துக் காப்பாற்றும்.
அவர்கள் தனிமையாய் இருக்கும் போதும், உபத்திரவப்படும் போதும், அவர்களுடைய ஆத்துமங்களில் பலி ஜீவியமெல்லாம் வீணாகத் தோன்றும் பொழுதும், அவர்களைக் காப்பாற்றும். ஆண்டவரே அவர்களுக்கு உம்மைத்தவிர வேறு ஒருவரும் இல்லையென்றும், ஒவ்வொறு துன்பத்தையும் உணருகின்ற மனித இருதயம் உண்டென்று நினைத்து அவர்களைக் காப்பாற்றும். இது தான் என் ஜீவியத்தின் ஒரு ஜெபம். உமது அரவணைப்பில் அவர்களை வைத்துக் காப்பாற்றும். அவர்களுடைய நினைவையும் வார்த்தையையும் கிரிகையையும் ஆசீர்வதியும் ஆண்டவரே. இதுதான் என் ஜீவியத்தின் ஒரு மன்றாட்டு. உம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களில் ஒருவரையாவது நீர் இழந்து போகாதபடி என்னை உமக்குப் பலியாக்கும். -ஆமென்

புதிய மொழிபெயர்ப்பு:

அன்பான ஆண்டவரே! குருக்களைக் காப்பாற்றும்படியாக உம்மை மன்றாடுகிறேன். அவர்கள் உம்முடையவர்கள். அவர்களுடைய வாழ்க்கை திருப்பலிப் பீடத்தில் பணிபுரிவது என்பதனால், அவர்களைச் சிறப்பாக காப்பாற்ற வேண்டுகிறேன். அவர்கள் உலகைவிட்டுப் பிரிந்தாலும், உலகின் நடுவில் வாழ்கிறார்கள். பல்வேறு உலக இன்பங்களும் நாட்டங்களும் அவர்களைச் சோதிக்கின்றன. எனவே அவர்களை உமது இதயத்தில் வைத்துப் பேணிட மன்றாடுகிறேன்.
அவர்கள் தனிமையில் தவிக்கும்போது, துன்பங்களினால் வாடும்போது, அவர்களுடைய தியாக வாழவே வீண்எனத் தோன்றும்போது அவர்களை அருகிருந்து காப்பாற்றும். அவர்களின் அருட்பணிகள் பலன் தருமாறு அவர்களை ஆசீர்வதியும்.
சிறப்பாக நீர் எங்களுக்கு வழங்கியுள்ள குருக்களுக்காக மன்றாடுகிறோம் அவர்களை நீர் உமது அன்பில் என்றும் நிலைத்திருக்கச் செய்து, உமக்கும் மக்களுக்கும் அவர்கள் பணிவுடனும் பயனுடனும் தொண்டாற்றச் செய்தருளும். என்றென்றும் வாழும் குருவாம் கிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம். -ஆமென்.

மற்றுமொறு மொழிபெயர்ப்பு:

ஓ! தூய ஆவியே எழுந்தருளி வாரும்! சத்திய திருச்சபையின் குருக்கள் அனைவருக்கும் புதியதோர் உள்ளத்தைத் தந்தருளும்! இயேசுவின சற்பிரசாத உடல்மீதும், அவரது மறைஉடல் மீதும், தனக்குள்ள கடமைகளை, அவர்கள் விடாது, சிறந்தவிதமாக நிறைவேற்றி வருவார்களாக. கிறிஸ்துவின் சீடரும் அப்போஸ்தலருமாகிய அவர்களுக்கு தூய உள்ளத்தை அருள்வீராக. அவர்கள் அனைத்திற்கும் மேலாக இறைவனுக்கு அன்பு செய்வார்களாக. வல்லமையுள்ள உமது குரலுக்கு அவர்களின் இருதயம் என்றும் கீழ்ப்படிவதாக. இழிவான ஆசைகளுக்கும் உலகப் பொருள்களுக்கும் அவர்களது உள்ளம் என்றும் அடைபட்டிருப்பதாக.
திருமறையின் நலனுக்காகவே அவர்கள் வாழ்வார்களாக. கிறிஸ்துவின் இதயத்ததைப் போல் அவர்களும் விசாலமான இதயம் உள்ளவர்களாய் அகில கிருச்சபையின் நலன்மீதும் என்றும் அக்கறை கொண்டிருப்பார்களாக. அனைவருக்கும் அன்புசெய்து அனைவருக்கும் பணிபுரிந்து, அனைவருக்காகவும் தங்கள் துன்ப வேதனை, சோதனைகளைச் சகிப்பதற்கான வலிமைமிக்க இதயத்தை குருக்கள் அனைவருக்கும் அருள்வீராக -ஆமென்.

இறை அழைத்தல் பெருக வேண்டுதல்

இயேசுவே ! ஆன்மாக்களின் தெய்வீக ஆயரே ! அன்று மீன் பிடிப்போரை, மனிதரைப் பிடிப்போராக்கிய ஆண்டவரே ! இன்று ஆர்வமும் தாராள மனமும் கொண்டுள்ள இளைஞரை உம்மைப் பின்பற்றுபவர்களாகவும், உம் திருப்பணியாளர்களாகவும் ஆக்கியருளும். அனைத்துலக மக்களின் மீட்புக்காக உமக்கிருக்கும் தாகத்தில் அவர்களும் பங்குபெறச் செய்தருளும். இந்த மீட்புக்காகவே ஒவ்வொரு நாளும் பலி மேடையில் திருப்பலியை நீர் புதுப்பித்து வருகின்றீர்.
இயேசுவே ! எங்கள் ஆண்டவரே ! எங்களுக்காகப் பரிந்துரைக்க, எங்களிடம் எப்பொழுதும் வாழ்கின்றீர். உண்மையின் ஒளிக்காக, அன்பின் அனலுக்காக ஏங்கும் அனைத்து மக்களின் மீதும் உமது மாட்சியின் எல்லையை விரிவடையச் செய்யும். இளைஞர் பலர் உமது அழைப்பை ஏற்று உமது திருப்பணியைத் தொடர்ந்து புரியவும் உமது மறையுடலாகிய திருச்சபைக்கு அணிகலனாகத் திகழவும், உலகின் உப்பாகவும், ஒளியாகவும் விளங்கவும் அருள் செய்யும்.
ஆண்டவரே ! உமது அன்பின் அழைப்பைத் தூய உள்ளமும், தாராளமனதுள்ள பெண்கள் பலருக்குத் தந்தருளும். நன்னெறியில் வளர அவர்கள் கற்றுக் கொள்வார்களாக. அயலாரின் சேவைக்காகவும், அவர்கள் தங்களை அர்ப்பணம் செய்ய அருள்புரியும் , ஆண்டவரே. -ஆமென்.