இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.(எபிரேயர் 13:8)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

இறைவாக்குத்தத்தம்

நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்: உன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை:
நானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்: தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்:
தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்.
(எசாயா 60:15)

  புதிய திருமறைச் சுவடி

(1) - மனித வாழ்க்கையும் கடவுளும்

மனிதர் இவ்வுலகில் மகிழ்சியாக வாழ விரும்புகின்றனர். உண்மையான மகிழ்சியைத் தருபவரும், அதற்கு ஊற்றாக இருப்பவரும் கடவுளே. எனவே, கடவுளை அடைவதில்தான் மனிதர் உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும்.

1. கடவுளை நாம் எவ்வாறு அடையலாம்?
கடவுளை அறிந்து, அவரை அன்பு செய்து, அவருடைய பிள்ளைகளாகிய எல்லா மனிதரையும் அன்பு செய்து வாழ்ந்தால் நாம் கடவுளை அடையலாம்.

2. கடவுளை நாம் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்?
கடவுள் தாம் படைத்த பொருள்கள் வழியாகத் தம்மை வெளிப்படுத்துகிறார். அவற்றைப் பார்த்து, படைத்தவரை நாம் அறிந்துகொள்ள முடியும். சிறப்பாக, இறைவளிப்பாடு வழியாகவும் அவரை அறிந்துகொள்ளலாம்.

3. கடவுளை நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?
கடவுள் நம்மைப் படைத்துக் காத்துவரும் தந்தை; நாம் அவருடைய பிள்ளைகள். ஆகவே நாம் அவரை அன்பு செய்ய வேண்டும்.

4. கடவுளை நாம் எவ்வாறு அன்பு செய்ய வேண்டும்?
கடவுளின் விருப்பப்படி வாழ்வதன் வழியாக நாம் அவரை அன்பு செய்ய முடியும்.

5. கடவுள் நம்மிடம் விரும்புவது என்ன?
தாம் அளித்த கட்டளைகளுக்கும் நம் மனச்சான்றுக்கும் ஏற்ப நாம் வாழ வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறார்.

6. எல்லா மனிதரையும் நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?
நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்; இதனால் நாம் அனைவரும் சகோதரர் சகோதரிகள். ஆகவே நாம் எல்லா மனிதரையும் அன்பு செய்ய வேண்டும்.

7. நாம் மற்றவர்களை எவ்வாறு அன்பு செய்ய வேண்டும்?
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அன்பு செய்ததுபோல நாமும் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும்

(2) - மீட்புக்குத் தயாரிப்பு

நாம் இவ்வுலகப் படைப்பிலே அழகையும் ஒழுங்கையும் காண்கிறோம். அவற்றைக் கண்டு பெரிதும் வியப்பு அடைகிறோம். ஆனால் இந்த அழகான உலகில் பாவமும் தீமையும் துன்பமும் இருப்பதைக் காண்கிறோம். இவற்றின் காரணத்தை அறிய ஆவல் கொள்கிறோம்.

8. அனைத்தையும் படைத்தவர் யார்?
கடவுள்.

9. கடவுளின் மிகச் சிறந்த படைப்புகள் எவை?
உடல் இல்லாத வானதூதரும், உடலும் ஆன்மாவும் கொண்ட மனிதரும் ஆவர்.

10. வானதூதர் என்பவர் யார்?
கடவுளை ஏற்று, அவருக்குப் பணி செய்து, அவரது பெரு மகிழ்வில் பங்குபெறுவர்களே வானதூவர் ஆவர்.

11. அலகையைப் பற்றி நாம் அறிவது என்ன?
கடவுளை ஏற்க மறுத்து நரகத்திற்குச் சென்றவர்களே அலகை ஆவர்.

12. கடவுள் உலகை எதற்காகப் படைத்தார்?
கடவுள் தம்முடைய அன்பையும் ஞானத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்த உலகைப் படைத்தார். மனிதருக்குப் பயன்படும் வகையில் அதனை அமைத்தார்.

13. கடவுள் மனிதரை எவ்வாறு படைத்தார்?
கடவுள் மனிதரைத் தம் உருவிலும் சாயலிலும் படைத்தார்.

14. கடவுள் மனிதரை எதற்காகப் படைத்தார்?
தம்மை அறிந்து, அன்பு செய்து, தமக்குப் பணி புரிந்து, தம்முடைய பெரு மகிழ்வில் பங்குகொள்ளக் கடவுள் மனிதரைப் படைத்தார்.

15. பெரு மகிழ்வில் பங்குகொள்ளக் கடவுள் மனிதருக்கு அளித்த கொடை என்ன?
மனிதரைத் தம்முடைய பிள்ளைகள் என்னும் நிலைக்கு உயர்த்தி, தம்மை அப்பா என அழைக்கும் உரிமையை அளித்தார். இதுவே கடவுள் மனிதருக்கு அளித்த கொடையாகும். இதை அருள் நிலை என்றும் அழைக்கிறோம்.

16. மனிதர் இந் நிலையை எவ்வாறு இழந்தனர்?
அலகையை நம்பி, கடவுளின் கட்டளையை மீறி, பாவம் செய்ததால் மனிதர் அருள் நிலையை இழந்தனர்.

17. முதல் பெற்றோரின் பாவத்தினால் மனிதர் பெற்ற தண்டனை யாது?

1) கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையை இழந்தனர்.
2) கடவுள் கொடுத்த அருள் நிலையை இழந்தனர்.
3) பாவ நாட்டம், துன்பம், சாவு முதலிய இன்னல்களுக்கும் நரகத் தண்டனைக்கும் உள்ளாயினர்.

18. பாவ நிலையிலேயே கடவுள் மனிதரை விட்டுவிட்டாரா?
இல்லை. மனிதரைப் பாவ நிலையிலிருந்து விடுவிக்க ஒரு மீட்பரை அனுப்புவதாகக் கடவுள் வாக்களித்தார்.

(3) - இயேசு கிறிஸ்து உலக மீட்பர்

கடவுளுக்குக் கீழ்ப்படியாத முதல் பெற்றோரின் குற்றத்தைத் தொடர்ந்து, மனிதர் மேன்மேலும் பாவத்தில் மூழ்கினர். இருப்பினும் கடவுள் உலகின் மீது இரக்கம் கொண்டார். தமக்கும் மனிதருக்கும் இடையே நட்பையும் உறவையும் ஏற்படுத்த இஸ்ரயேல் மக்களின் தந்தையான ஆபிரகாம் வழியாக உடன்படிக்கை செய்துகொண்டார். எகிப்து நாட்டில் அடிமைகளாய் இருந்த இஸ்ரயேல் மக்களை, மோசே தலைமையில் மீட்டு, சீனாய் மலையில் அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். வாக்களிக்கப்பெற்ற கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுத்தார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பெற்ற இஸ்ரயேல் மக்களோ இந்த உடன்படிக்கையை பல முறை மீறினார்கள்; கடவுளைப் புறக்கணித்தார்கள். எனினும் கடவுள் அவர்களைப் புறக்ககணிக்கவில்லை; மாறாக, இறைவாக்கினர்களை அனுப்பி, மீட்பரின் வருகையை அவர்களுக்கு எடுத்துரைத்தார். எனவே இஸ்ரயேல் மக்கள் மற்றும் உலக மக்கள் அனைவருமே மீட்பராகிய இயேசுவின் வருகையை எதிர்நோக்கி இருந்தார்கள்.

19. கடவுள் வாக்களித்த மீட்பர் யார்?
இயேசு கிறிஸ்து.

20. இயேசு கிறிஸ்து என்னும் பெயருக்குப் பொருள் என்ன?
இயேசு என்பதற்கு மீட்பர் என்றும், கிறிஸ்து என்பதற்கு அருள்பொழிவு பெற்றவர் என்றும் பொருள் ஆகும்.

21. இயேசு எந்த நாட்டில் பிறந்தார்?
பாலஸ்தீன் என்னும் இஸ்ரயேல் நாட்டில் பிறந்தார்.

22. இயேசு எந்த ஊரில் பிறந்தார்?
பெத்லகேம் என்னும் ஊரில் பிறந்தார்.

23. இயேசுவின் தாய் யார்?
எப்பொழுதும் கன்னியான தூய மரியா.

24. இயேசு கன்னி மரியாவிடம் எப்படிப் பிறந்தார்?
தூய ஆவியாரின் வல்லமையால் வியத்தகு முறையில் கருவாகி, இயேசு மனிதராகப் பிறந்தார்.

25. இயேசுவின் தந்தை யார்?
கடவுளே இயேசுவின் தந்தை. புனித யோசெப்பு அவருடைய வளர்ப்புத் தந்தை மட்டுமே.

26. இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றி நாம் அறிவது என்ன?

1) இயேசு பிறந்த நாற்பதாம் நாள் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்டார்.
2) நாசரேத்தில் வளர்ந்து வந்தார்.
3) தம் தாய் தந்தையருக்குப் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.
4) தம் பன்னிரண்டாம் வயதில்போதகர் நடுவில் கற்பித்தார்.
5) ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.

27. இயேசு திருமுழுக்குப் பெற்றாரா?
ஆம். தமது முப்பதாம் வயதில் திருமுழுக்குப் பெற்றார்.

28. யாரிடம் திருமுழுக்குப் பெற்றார்?
திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.

29. இயேசு திருமுழுக்குப் பெற்றவுடன் என்ன நிகழ்ந்தது?
வானம் திறக்க, கடவுளின் ஆவியார் புறா வடிவில் இயேசு மீது இறங்கி வந்தார். அப்பொழுது, #8220;என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. இதன் பிறகு இயேசு தமது மீட்புப் பணியை வெளிப்படையாகத் தொடங்கினார்.

30. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் என்ன அறிந்துகொள்கின்றோம்?
கடவுள் ஒருவரே என்றும், அவர் தந்தை, மகன், தூய ஆவியார் என மூன்று ஆள்களாய் இருக்கிறார் என்றும் அறிந்து கொள்கிறோம். இந்த உண்மையையே மூவொரு கடவுளின் மறைபொருள் என்கிறோம்.

31. தந்தை கடவுளா?
ஆம், கடவுள்தான்.

32. மகன் கடவுளா?
ஆம், கடவுள்தான்.

33. தூய ஆவியார் கடவுளா?
ஆம், கடவுள்தான்.

34. இம் மூவரும் மூன்று கடவுளா, ஒரே கடவுளா?
ஒரே கடவுள்.

35. எப்படி ஒரே கடவுள்?
யாதொரு வேறுபாடும் இன்றி, மூவருக்கும் ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே.

36. இயேசு தம் மீட்புப் பணிக்குத் துணையாக யாரைத் தேர்ந்துகொண்டார்?
இயேசு தம் சீடர்களுள் பன்னிருவரைத் தேர்ந்து கொண்டார்; அவர்களைத் திருத்தூதர் என்று அழைத்தார்.

37. கடவுளின் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன?

1) கடவுள் நம் அனைவரின் அன்புத் தந்தை; நாம் அனைவரும் அவருடைய பிள்ளைகள்.
2) அனைத்திற்கும் மேலாக நாம் கடவுளை அன்பு செய்ய வேண்டும்.

38. பிறர் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன?

1) இயேசு நம்மை அன்பு செய்வதுபோல நாமும் ஒருவரை ஒருவர் அன்பு செய்ய வேண்டும்.
2) பகைவரையும் நாம் அன்பு செய்ய வேண்டும்.
3) இயேசு நம்மை மன்னிப்பதுபோல நாமும் பிறரை மன்னித்து வாழ வேண்டும்.

39. தாம் கடவுளின் மகன் என்பதை இயேசு எவ்வாறு வெளிப்படுத்தினார்?
தம் அரும் அடையாளங்களாலும் போதனையாலும் பாவிகளை மன்னித்ததாலும் சிலுவைச் சாவையே ஏற்றதாலும் தாம் கடவுளின் மகன் என்பதை இயேசு வெளிப்படுத்தினார்.

40. இயேசு செய்த முக்கியமான அரும் அடையாளங்கள் யாவை?

1) தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றினார்.
2) அப்பம் பலுகச் செய்தார்.
3) புயலை அடக்கினார்; கடல்மீது நடந்தார்.
4) நோய்களைக் குணப்படுத்தினார்.
5) பேய்களை ஓட்டினார்.
6) இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார்.
7) தாம் இறந்த மூன்றாம் நாள் உயிர்த்திழுந்தார்.

41. ஆகவே, இயேசு கிறிஸ்து யார்?
இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுளும் மனிதரும் ஆனவர்; பாவத்திலுருந்து நம்மை மீட்பவர். கடவுளுக்கும் மனிதருக்கும் உள்ள உறவில் நிறை வாழ்வு காண நமக்கு வழி காட்டுபவர்.

42. இயேசு எவ்வாறு நம்மை மீட்டார்?
இயேசு தம் விண்ணகத் தந்தையின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். நம் பாவங்களுக்காகப் பாடுபட்டு, சிலுவையில் இறந்தார். கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்தர். இவ்வாறு நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்தார்.

43. இயேசு நமக்காக அனுபவித்த முக்கியமான பாடுகள் யாவை?

1) யூதத் தலைவர்களால் எதிர்க்கப்பட்டார்.
2) கெத்சமனித் தோட்டத்தில் இரத்த வியர்வை சிந்தினார்.
3) யூதாசால் காட்டிக் கொடுக்கப்பட்டார்.
4) கல்தூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டார்.
5) முள்முடி சூட்டப்பட்டார்.
6) சிலுவையில் அறையுண்டு வேதனைப்பட்டு அவலச் சாவுக்கு உள்ளானார்.

44. சிலுவைச் சாவோடு இயேசுவின் வாழ்வு முடிந்துவிட்டதா?
இல்லை. இயேசு தாம் முன்னுரைத்தவாறு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணேற்றம் அடைந்தார். உலக முடிவு வரை எந்நாளும் நம்முடன் இருக்கிறார்.

45. உயிர்த்த இயேசு விண்ணேற்றம் அடையும் வரை என்ன செய்தார்?
உயிர்த்த இயேசு தம் சீடர்களுக்குப் பல முறை தோன்றி, அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தி வந்தார்.

46. இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா என்றால் என்ன?
இயேசு பாடுபட்டு, இறந்து உயிர்த்ததையே இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா என்கிறோம்.

47. கிறிஸ்தவருடைய பாஸ்கா என்பது என்ன?
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து தந்தையிடம் சென்றது போல, நாமும் பாவத்தை விட்டெழுந்து, அருள் வாழ்வுக்குக் கடந்து செல்ல வேண்டும். இதுவே கிறிஸ்தவருடைய பாஸ்கா.

48. இயேசு கிறிஸ்து விண்ணகம் சென்ற பத்தாம் நாள் யாரை அனுப்பினார்?
தூய ஆவியாரை அனுப்பினார்.

49. இயேசு கிறிஸ்து இப்பொழுது எங்கே இருக்கிறார்?
இறைத் தந்தையுடன் ஒன்றுபட்டு, இயேசு கிறிஸ்து உலகம் எங்கும் இருக்கிறார். அருள்சாதன முறையில் சிறப்பாக நற்கருணையில் இருக்கிறார்.

(4) - தூய ஆவியார்

தாம் இவ்வுலகில் ஆற்றிவந்த மீட்புப் பணி உலக் முடிவு வரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று கிறிஸ்து விரும்பினார். எனவே தமக்குப் பின் இப் பணி தொடர்ந்து நடைபெறத் தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித்தார். அதன்படி தாம் விண்ணகம் சென்ற பத்தாம் நாள் தூய ஆவியாரை அனுப்பினார். தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்ட திருத்தூதர்கள் அச்சம் இன்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்தனர். அதற்குச் செவிகொடுத்த பல ஆயிரக்கணக்கான மக்கள் மனந்திரும்பித் திருமுழுக்குப் பெற்றார்கள். இவ்வாறு திருச்சபை பிறந்து வளரத்தொடங்கியது.

50. தூய ஆவியார் யார்?
தந்தையோடும் மகனோடும் ஒரே கடவுளாக ஒன்றுபட்டு இருக்கும் மூன்றாம் ஆள்.

51. தூய ஆவியார் திருச்சபையில் எவ்விதம் செயலாற்றுகிறார்?
உடலுக்குள் உயிர் இருப்பது போல், தூய ஆவியார் திருச்சபையில் இருந்து, அதனை வழிநடத்துகிறார்; அதைப் புனிதப்படுத்தி வளரச் செய்கிறார்.

52. நம் ஒவ்வொருவரிடத்திலும் தூய ஆவியார் என்ன செய்கிறார்?
தூய ஆவியார் நம்முள் குடிகொண்டு நம்மைப் புனிதப்படுத்துகிறார். தந்தையோடும் மகனோடும் நம்மை இணைக்கிறார். இறைவனின் பிள்ளைகளுக்க்கு உரிய அன்புறவுடனும் சுதந்திரத்துடனும் நாம் வாழ நமக்கு ஆற்றல் அளிக்கிறார்.

53. தூய ஆவியார் மீது நமக்குள்ள கடமை என்ன?
தூய ஆவியாருடைய தூண்டுதல்களுக்குப் பணிந்து, அவர்மீது அன்பு கொண்டு, அவரது வழிநடத்துதலுக்கு ஏற்ப நாம் வாழ வேண்டும்.

(5) - திருச்சபை

கடவுள் தம் மீட்புத் திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரயேல் என்னும் ஒரு மக்களினத்தைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தக் கிறிஸ்து திருச்சபையை ஏற்படுத்தினார்.

54. திருச்சபை என்றால் என்ன?
இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, திருமுழுக்குப் பெற்ற இறைமக்கள் சமூகமே திருச்சபை ஆகும்.

55. திருச்சபையை ஏற்படுத்தியவர் யார்?
திருச்சபையை ஏற்படுத்தியவர் இயேசு கிறிஸ்து.

56. திருச்சபைக்குத் தலைவர் யார்?
இயேசு கிறிஸ்துவே திருச்சபைக்குத் தலைவர்.

57. இயேசு தமக்குப் பின் திருசபைக்குத் தலைவராக யாரை நியமித்தார்?
திருத்தூதர் பேதுருவை நியமித்தார்.

58. திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றல்கள் யாவர்?
திருத்தந்தையர்கள்.

59. திருத்தூதர்களின் வழித்தோன்றல்கள் யாவர்?
ஆயர்கள்.

60. உலகத்தில் திருச்சபை ஆற்றும் பணிகள் யாவை?

1) மீட்பின் நற்செய்தியை அறிவிக்கின்றது.
2) மக்களைப் புனிதப்படுத்துகின்றது.
3) மக்களை இறை வழியில் நடத்துகின்றது.

61. திருச்சபையின் உறுப்பினர் என்னும் முறையில் நமக்குள்ள கடமை என்ன?
திருச்சபையின் போதனைப்படி வாழ்வதும், அதன் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்பதும் நம் கடமை ஆகும்.

(6) - திருவிவிலியம்

கடவுள் தம்மையும் தம் மீட்புத் திட்டத்தையும் மனிதருக்குச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்திய உண்மைகளையும் நிகழ்த்திய வரலாற்றையும் கொண்ட நூல்களின் தொகுப்பே திருவிவிலியம். இது தூய ஆவியாரின் தூண்டுதலால் எழுதப்பட்டது.

62. திருவிவிலியம் என்றால் என்ன?
தூய ஆவியாரின் தூண்டுதலால் எழுதப்பட்ட இறைவார்த்தை அடங்கிய நூல்களின் தொகுப்பே திருவிவிலியம் ஆகும்.

63. திருவிவிலியத்தின் இரு பெரும் பிரிவுகள் யாவை?

1) பழைய ஏற்பாடு
2) புதிய ஏற்பாடு

64. பழைய ஏற்பாட்டில் எத்தனை நூல்கள் உள்ளன?
பழைய ஏற்பாட்டில் மொத்தம் நாற்பத்தாறு நூல்கள் உள்ளன.

65. பழைய ஏற்பாடு நமக்குக் கூறும் செய்தி என்ன?
இஸ்ரயேல் மக்களுக்கும், அவர்கள் வழியாக உலகம் அனைத்திற்கும் கடவுள் தம்மையும் தம் மீட்புத் திட்டத்தையும் வெளிப்படுத்தி, கிறிஸ்துவின் வருகைக்காக மானிடரைத் தாயார் செய்த வரலாற்றைப் பழைய ஏற்பாடு நமக்குக் கூறுகிறது.

66. புதிய ஏற்பாட்டில் எத்தனை நூல்கள் உள்ளன?
புதிய ஏற்பாட்டில் மொத்தம் இருபத்தேழு நூல்கள் உள்ளன.

67. நற்செய்தி நூல்கள் யாவை?
நற்செய்தி நூல்கள் நான்கு.

1) மத்தேயு எழுதிய நற்செய்தி
2) மாற்கு எழுதிய நற்செய்தி
3) லூக்கா எழுதிய நற்செய்தி
4) யோவான் எழுதிய நற்செய்தி

68. புதிய ஏற்பாடு நமக்குக் கூறும் செய்தி என்ன?
கிறிஸ்துவின் வாழ்வு, மீட்புப் பணி, தொடக்கத் திருச்சபையின் வரலாறு, கிறிஸ்துவர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் புதிய ஏற்பாடு நமக்குக் கூறுகிறது.

(7) - திருவருள்சாதனங்கள்

மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கிறிஸ்து நம்மோடு உறவு கொண்டு, நம்மை அருள் வாழ்வில் வளரச் செய்கின்றார்; தம் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகிய பாஸ்கா மறை நிகழ்ச்சியில் நாம் பங்கேற்கச் செய்கின்றார். இவ்வாறு மனித வாழ்வில் முக்கிய கட்டங்களில் கிறிஸ்து ஆற்றும் செயல்களே திருவருள்சாதனங்கள் ஆகும்.

69. திருவருள்சாதனம் என்றால் என்ன?
அருள் வாழ்வைக் குறித்துக் காட்டவும், அதனை வழங்கவும், கிறிஸ்து ஏற்படுத்திய நிலையான அடையாளமே திருவருள்சாதனம் ஆகும்.

70. திருவருள்சாதங்கள் எத்தனை?
ஏழு.

71. அவை யாவை?

1) திருமுழுக்கு
2) உறுதிப்பூசுதல்
3) நற்கருணை
4) ஒப்புரவு
5) நோயில்பூசுதல்
6) குருத்துவம்
7) திருமணம்

72. திருவருள்சாதனங்கள் வழியாக நாம் என்ன பெறுகிறோம்?
திருவருள்சாதனங்கள் வழியாக நாம் அருள் வாழ்வைப் பெறுகிறோம்.

73. திருமுழுக்கு என்றால் என்ன?
பிறப்புநிலைப் பாவத்தையும் செயல்வழிப் பாவத்தையும் போக்கி, கிறிஸ்துவோடு நம்மை இணைத்து, கடவுளின் பிள்ளைகளாகவும் திருச்சபையின் உறுப்பினர்களாகவும் ஆக்குகின்ற அருள்சாதனமே திருமுழுக்கு ஆகும்.

74. உறுதிபூசுதல் என்றால் என்ன?
தூய ஆவியாராலும் அவருடைய கொடைகளாலும் நம்மை நிரப்பி, திருச்சபையின் பணிகளில் கடமை உணர்வோடு ஈடுபட நமக்கு ஆற்றலைத் தருகிற அருள்சாதனமே உறுதிபூசுதல் ஆகும்.

75. தூய ஆவியார் நமக்கு எவ்வாறு உதவுகிறார்?
நம்பிக்கையில் நாம் உறுதியாய் நிலைத்திருக்கவும், கடவுள்மேல் நிறைவான அன்பு கொண்டு வாழவும், கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக விளங்கவும், தம் கொடைகளை வழங்கி நமக்கு உதவுகிறார்.

76. தூய ஆவியாரின் கொடைகள் யாவை?

1) ஞானம்
2) மெய்யுணர்வு
3) அறிவுரைத் திறன்
4) நுண்மதி
5) ஆற்றல்
6) இறைப்பற்று
7) இறை அச்சம்

77. தூய ஆவியார் விளைவிக்கும் கனிகள் யாவை?

1) அன்பு
2) மகிழ்ச்சி
3) அமைதி
4) பொறுமை
5) பரிவு
6) நன்னயம்
7) நம்பிக்கை
8) கனிவு
9) தன்னடக்கம்
10) பணிவு நயம்
11) தாராள குணம்
12) நிறை கற்பு

78. நற்கருணை என்றால் என்ன?
அப்ப இரச குணங்களுக்குள், இயேசு கிறிஸ்துவின் திருஉடலும் திருஇரத்தமும் அவருடைய இறை இயல்பும் மனித இயல்பும் அடங்கி இருக்கிற அருள்சாதனமே நற்கருணை ஆகும்.

79. இயேசு எப்பொழுது நற்கருணையை ஏற்படுத்தினார்?
இயேசு தமது இறுதி இரவு உணவின்போது நற்கருணையை ஏற்படுத்தினார்.

80. இயேசு எவ்வாறு நற்கருணையை ஏற்படுதினார்?
தாம் கையளிக்கப்பட்ட இரவில், இயேசு அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, வாழ்துரைத்து, அதைப் பிட்டு, தம் சீடருக்கு அளித்துக் கூறியதாவது: அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்; ஏனைனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, உணவு அருந்தியபின், கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடருக்கு அளித்து அவர் கூறியதாவது: அனைவரும் இதைவாங்கிப் பருகுங்கள்; ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம். இது பாவ மன்னிப்புக்கு என்று உங்களுக்காகவும் எல்லோருக்காகவும் சிந்தப்படும். இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
இவ்வாறு இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார்.

81. திருப்பலியில் இது எவ்வாறு நிறைவேறுகிறது?
திருப்பலியில் அப்பம் கிறிஸ்துவின் திருஉடலாகவும், திராட்சை இரசம் அவருடைய திருஇரத்தமாகவும் மாறுகின்றன.

82. இயேசு நற்கருணையை ஏன் ஏற்படுத்தினார்?
இறைமக்களின் ஆன்ம உணவாகவும், தம்முடைய பாடுகள், இறப்பு, உயிர்ப்பு இவற்றின் நினைவாகவும், தாம் நம்முடன் இருப்பதை உணர்த்தும் அருள்சாதனமாகவும் இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார்.

83. நற்கருணை வாங்குவோர் எந்த நிலையில் இருக்க வேண்டும்?
பாவ நிலையில் இல்லாமல், கடவுளோடும் தம் சகோதரர் சகோதரிகளோடும் நல்லுறவில் நிலைத்திருக்க வேண்டும்.

84. திருப்பலியில் இரு பெரும் பகுதிகள் யாவை?
இறைவாக்கு வழிபாடு, நற்கருணை வழிபாடு

85. திருப்பலியில் பங்கேற்பது எவ்வாறு?
வெறும் பார்வையாளர்கள் போல் இராமல், திருப்பலியில் முழுமையாக பங்கேற்க வேண்டும். இறைவார்த்தையைக் கவனமுடன் கேட்டு, திருச்சடங்குகளில் ஒன்றித்து இறை வேண்டல்களிலும் பாடல்களிலும் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும்.

86. ஒப்புரவு அருள்சாதனம் என்றால் என்ன?
திருமுழுக்குப் பெற்ற பின் நாம் செய்யும் பாவங்களை எல்லாம் போக்கி, நம்மைக் கடவுளோடும் பிறரோடும் மீண்டும் இணைக்கிற அருள்சாதனமே ஒப்புரவு ஆகும்.

87. ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்குபெறும் முறை யாது?

1) செய்த பாவங்களை நினைவுக்குக் கொண்டுவருதல்.
2) அவற்றிற்காக மனம் வருந்துதல்.
3) இனிமேல் பாவம் செய்வதில்லை எனத் தீர்மானித்தல்.
4) குருவிடம் பாவங்களை மறைக்காமல் அறிக்கையிடுதல்.
5) பாவப் பரிகாரமாகவும், பாவ மன்னிப்பிற்கு நன்றியாகவும் குரு கொடுத்த கட்டளையை நிறைவேற்றுதல்.

88. நோயில்பூசுதல் என்றால் என்ன?
நலம் தரும் மருத்துவராகிய கிறிஸ்துவைச் சந்திக்க வைத்து, நம் பாவங்களையும் அவற்றிற்கு உரிய தண்டனைகளையும் போக்கி, நம்மை விண்ணக வாழ்விற்குத் தயாரிக்கிற அருள்சாதனமே நோயில்பூசுதல் ஆகும்.

89. குருத்துவம் என்றால் என்ன?
திருப்பலி மற்றும் திருவருள்சாதனங்களை நிறைவேற்றவும், நற்செய்தி அறிவிக்கவும், இறைமக்களை வழி நடத்தி உருவாக்கவும் உரிமை அளிக்கிற அருள்சாதனமே குருத்துவம் ஆகும்.

90. திருமணம் என்றால் என்ன?
ஆணையும் பெண்ணையும் கணவன் மனைவியாக இணைத்து, அவர்கள் ஒருவர் ஒருவரை இறுதிவரை அன்பு செய்யவும், தம் பிள்ளைகளைக் கிறிஸ்துவ நெறியில் வளர்க்கவும், இல்லத் திருச்சபையை உருவாக்கவும் இறையருளை அளிக்கிற அருள்சாதனமே திருமணம் ஆகும்.

(8) - கிறிஸ்தவரின் அன்றாட வாழ்க்கை

மனித வாழ்வு சிறப்பாக அமைக் கடவுளே சில சட்ட திட்டங்களை நமக்கு வகுத்துக் தந்துள்ளார்; நம் இதயத்தில் பதித்து வைத்துள்ளார். இவற்றைப் பத்துக் கட்டளைகள் என அழைக்கிறோம். இந்தக் கட்டளைகளை இயேசுவே கடைப்பிடித்து நமக்கு முன்மாதிரி காட்டியுள்ளார். மேலும், கிறிஸ்துவின் போதனைகளைச் செம்மையாக கடைப்பிடிப்பதற்குத் திருச்சபையும் சில வழி முறைகளைக் கொடுத்துள்ளது. இவற்றைத் திருச்சபையின் ஒழுங்கு முறைகள் என்கிறோம். தூய ஆவியாரின் துணை கொண்டு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுவதே அன்றாடக் கிறிஸ்துவ வாழ்க்கை ஆகும்.

91. உண்மையன கிறிஸ்தவ வாழ்க்கை நடத்துவது எவ்வாறு?
நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய கிறிஸ்தவ நற்பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்வதன் வழியாக, நாம் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை நடத்துகிறோம்.

92. நம்பிக்கை என்றால் என்ன?
தம்மை நமக்கு வெளிப்படுத்தும் கடவுளின் திட்டத்தை ஏற்று, நம்மை அவரிடம் ஒப்படைப்பதே நம்பிக்கை ஆகும்.

93. எதிர்நோக்கு என்றால் என்ன?
கடவுளுக்கு நாம் கீழ்ப்படிந்து வாழ்ந்தால், அவர் நம்மைக் கைவிடாமல் பாதுகாத்து, வழிநடத்தி, நிலைவாழ்வில் சேர்ப்பார் என்னும் மனவுறுதியே எதிர்நோக்கு ஆகும்.

94. அன்பு என்றால் என்ன?
அனைத்திற்கும் மேலாகக் கடவுளை அன்பு செய்யவும், தம்மைப் போல் மற்றவர்களை அன்பு செய்யவும் கடவுள் நமக்கு அளிக்கும் அருளாற்றாலே அன்பு ஆகும்.

95. கடவுளுக்கு உகந்த வாழ்க்கை நடத்த அவர் நமக்குத் தந்துள்ள கட்டளைகள் யாவை?
பத்துக் கட்டளைகள்:

1. நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். ஃ எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது.
2. உன் கடவுளாகிய ஆன்டவரின் பெயரை ஃ வீணாகப் பயன்படுத்தாதே.
3. ஓய்வுநாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் ஃ கருத்தாய் இரு.
4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட.
5. கொலை செய்யாதே.
6. விபச்சாரம் செய்யாதே.
7. களவு செய்யாதே.
8. பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே.
9. பிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே.
10. பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே.

இந்தப் பத்துக் கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும்:

முதலாவது, எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை அன்பு செய்வது.
இரண்டாவது, தன்னை அன்பு செய்வது போல பிறரையும் அனபு செய்வது.

96. திருச்சபையின் ஒழுங்குமுறைகள் யாவை?

திருச்சபையின் ஒழுங்குமுறைகள்:

1. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் திருப்பலியில் முழுமையாய்ப் பங்கேற்க வேண்டும். இந் நாள்களின் புனிதத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.
2. ஆன்டிற்கு ஒரு முறையாவது தகுந்த தயாரிப்புடன் ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்கேற்க வேண்டும்.
3. பாஸ்கா காலத்தில் ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்கேற்று நற்கருணை உட்கொள்ள வேண்டும்.
4. திருச்சபை குறிப்பிட்டுள்ள நாள்களில் இறைச்சி உண்ணாதிருக்க வேண்டும். நோன்பு நாள்களில் ஒரு வேளை மட்டும் முழு உணவு உண்ணலாம்.
5. குறைந்த வயதிலும் திருமணத் தடை உள்ள உறவினரோடும் திருமணம் செய்யாதிருக்க வேண்டும்.
6. திருச்சபையின் தேவைகளை நிறைவேற்ற நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும்.

97. கடவுளுடைய கட்டளைகளையும் திருச்சபையின் ஒழுங்குமுறைகளையும் நாம் மீறினால் என்ன நேரும்?
கடவுளோடும் திருச்சபையோடும் சமுதாயத்தோடும் நாம் கொண்டுள்ள நல்லுறவு பாதிக்கப்படும். இதையே பாவம் என்கிறோம்.

98. எத்தனை வகைப் பாவங்கள் உள்ளன?
பிறப்புநிலைப் பாவம், செயல்வழிப் பாவம் என இரண்டு வகைப் பாவங்கள் உள்ளன.

99. பிறப்புநிலைப் பாவம் என்றால் என்ன?
முதல் பெற்றோரின் கீழ்ப்படியாமையால் உண்டாகி, நம்மோடு பிறக்கிற பாவம்.

100. செயல்வழிப் பாவம் என்றால் என்ன?
நன்மை தீமை அறிந்த நிலையில், ஒருவர் முழு மனத்துடன் செய்யும் பாவம்.

101. செயல்வழிப் பாவம் எத்தனை வகைப்படும்?
சாவான பாவம், அற்ப பாவம் என இரண்டு வகைப்படும்.

102. சாவான பாவம் என்றால் என்ன?
கடவுளுடைய கட்டளையை முழு அறிவுடனும், முழு விருப்பத்துடனும் மீறி, பெரியதொரு தீங்கைச் செய்து, அவரது அன்பை முறித்துக்கொள்ளுவது சாவான பாவம்.

103. அற்ப பாவம் என்றால் என்ன?
முழுமையான அறிவோ விருப்பமோ இன்றி, கடவுளுடைய அன்புக்கு எதிராகச் செயல்படுவது அற்ப பாவம். இப் பாவத்தை தொடர்ந்து செய்யும்போது, அது சாவான பாவத்திற்கு வழி வகுக்கிறது.

104. தலையான பாவங்கள் எத்தனை?
ஏழு.

105. அவை யாவை?

1. தற்பெருமை
2. சீற்றம்
3. காம வெறி
4. பேராசை
5. பெருந்தீனி விரும்பல்
6. பொறாமை
7. சோம்பல்

106. தலையான பாவங்களுக்கு எதிரான நற்பண்புகள் யாவை?

1. தாழ்ச்சி
2. பொறுமை
3. கற்பு
4. தாராள குணம்
5. அளவோடு உண்ணல்
6. பிறரன்பு
7. சுறுசுறுப்பு

107. அருள் வாழ்வு சார்ந்த மூன்று நற்பண்புகள் யாவை?

1. நம்பிக்கை
2. எதிர்நோக்கு
3. அன்பு

108. புனிதர்களுக்கு வணக்கம் செலுத்துவது முறையா?
முறையே. ஏனெனில் புனிதர்கள் கடவுளோடு நெருங்கிய உறவு கொண்டுள்ளார்கள்; நமக்காக கடவுளிடம் பரிந்துரைக்கிறார்கள்.

109. புனிதர் வணக்கம் சிலை வழிபாடு ஆகுமா?
ஆகாது. கடவுளுக்கு மட்டுமே நாம் வழிபாடு செய்கிறோம். புனிதர்களுக்கு நாம் செலுத்துவது வணக்கம் மட்டுமே.

110. நாம் கடவுளோடு கொண்டுள்ள நட்புறவை வளர்க்கத் துணைபுரிபவை யாவை?
1. இறைவேண்டல்
2. இறைவார்த்தை
3. திருவருள்சாதனங்கள்

111. இறைவேண்டல் என்றால் என்ன?
கடவுளோடு அன்புடன் உரையாடுவதே இறைவேண்டல். அதாவது, பிள்ளைகள் தங்கள் தந்தையிடம் நம்பிக்கையுடன் பேசுவது இறைவேண்டல் ஆகும்.

112. இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல் என்ன?
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

113. நாம் கிறிஸ்துவின் சீடர்களாக வாழ்வது எப்படி?
கிறிஸ்துவை நம் முன்மாதிரியாகக கொண்டு, அவரிடம் விளங்கிய அன்பு, உண்மை, நீதி முதலிய பண்புகளைக் கடைப்பிடித்து, அவருடைய பணிகளை ஆற்றுவதன் வழியாக நாம் கிறிஸ்துவின் சீடர்களாக வாழ முடியும்.

114. கிறிஸ்துவப் பெற்றோரின் கடமை என்ன?
1. கணவனும் மனைவியும் ஒருவர் ஒருவரிடம் தன்னலம் அற்ற அன்பும், நேர்மையான் பற்றும் கொண்டிருக்க வேண்டும்.
2. தங்கள் பிள்ளைகளுக்குக் கிறிஸ்தவ வாழ்வில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.
3. தங்கள் பிள்ளைகளை நன்னடத்தையிலும் கிறிஸ்தவ நம்பிக்கையிலும் வளர்க்க வேண்டும்.

115. பிள்ளைகளின் கடமை என்ன?
பிள்ளைகள் இயேசுவைப் பின்பற்றி, தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, அன்பில் வளர வேண்டும்.

116. கிறிஸ்தவக் குடும்பங்களின் சாட்சிய வாழ்வு எப்படி இருக்க்க வேண்டும்?

1. பெற்றோரும் பிள்ளைகளும் இறைவார்த்தை வழியில் வாழ வேண்டும்.
2. அருள்சாதன வாழ்வில் அக்கறையும் நம்பிக்கையும் கொண்டு வாழ வேண்டும்.
3. திருச்சபையின் வளர்ச்சிக்காகவும் சமூக நலனுக்காகவும் தன்னலம் இன்றி உழைக்க வேண்டும்.

117. கிறிஸ்தவ வாழ்வுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவோர் யாவர்?
கடவுளின் தாயும் என்றும் கன்னியுமான தூய மரியாவும் மற்றப் புனிதர்களும் ஆவர்.

(9) - மனிதரின் நிறைவு நிலை

இறப்புடன் மனித வாழ்வு முடிவு அடைவதில்லை; வாழ்வு மாறுபடுகிறதே அன்றி அழிக்கப்படுவதில்லை என்பதே நமது நம்பிக்கை. அதைப் பற்றிக் கிறிஸ்தவப் போதனையின் அடிப்படையில் திருச்சபை சில உண்மைகளைத் தெளிவுபடுத்தியுள்ளது.

118. கிறிஸ்துவர் இறப்பை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?
இறப்பு விண்ணக வாழ்வின் பிறப்பு. ஆகவே இறப்பின்மீது வெற்றி கொண்ட நம் மீட்பராகிய கிறிஸ்துவை, முழுமையாகச் சந்திக்கும் வேளை என்னும் மனநிலையோடு, கிறிஸ்தவர் இறப்பை எதிர்கோள்ள வேண்டும்.

119. இறப்புக்கு பின் என்ன நடக்கும்?
தனித் தீர்ப்பு நடக்கும்.

120. தனித் தீர்ப்பு என்றால் என்ன?
ஒவ்வொருவரும் அவரவர் செய்த நன்மை, தீமைக்கு ஏற்பத் தீர்ப்பிடப்படுவதையே தனித் தீர்ப்பு என்கிறோம்.

121. தனித் தீர்ப்புக்குப் பின் என்ன நடக்கும்?

1. எவ்விதப் பாவமும் இல்லாதவர்கள் விண்ணகம் செல்வார்கள்.
2.சாவான பாவம் உள்ளவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள்.
3.அற்ப பாவம் உள்ளவர்கள் தூய்மை பெறும் நிலைக்குச் செல்வார்கள்.

122. நல்லவர்கள் விண்னகத்தில் அடையும் பேறு என்ன?
கடவுளை நேருக்கு நேராகக் கண்டு, முடிவில்லா பெருமகிழ்வில் திளைத்து, அவரோடு என்றென்றும் வாழ்வார்கள்.

123. பாவிகள் நரகத்தில் படுகின்ற வேதனை என்ன?
கடவுளை ஒருபொழுதும் காணாமல், அவரைப் பிரிந்து, அலகையோடு முடிவில்லாத் துன்பத்திற்கு உள்ளாவார்கள்.

124. தூய்மை பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு என்ன நடக்கும்?
அவர்கள் தங்கள் பாவங்களுக்கு உரிய வேதனைப்பட்டு, தூய்மை அடைவார்கள். முற்றிலும் தூய்மை அடைந்த பிறகு, விண்ணகம் செல்வார்கள்.

125. உலக முடிவில் என்ன நடக்கும்?
பொதுத் தீர்ப்பு நடக்கும்.

126. பொதுத் தீர்ப்பு என்றால் என்ன?

1. உலக முடிவில் இயேசு கிறிஸ்து மாட்சியோடு மீண்டும் வருவார்.
2. இறந்தோர் எல்லாரும் உடலோடும் ஆன்மாவோடும் உயிர்ப்பிக்கப் பெறுவர்.
3. இவர்கள் உயிருடன் உள்ளவர்களோடு தீர்ப்புக்கு வருவர்.

127. பொதுத் தீர்ப்புக்குப் பின் நடப்பது என்ன?
நல்லவர்கள் நிலை வாழ்வையும் பாவிகள் நிலையான தண்டனையும் பெறுவார்கள்.

(10) - அன்னை மரியா

அளவில்லாக் கருணையும் ஞானமும் உள்ள கடவுள் உலகை மீட்க ஆவல் கொண்டு, தம் மகனை உலகிற்கு அனுப்பினார். இந்த மகன் மானிடரான நமக்காகவும் நம் மீட்ப்புக்காகவும் வானகமிருந்து இறங்கினார். தூய ஆவியாரால் கன்னி மரியாவிடம் மனிதரானார். நம்பிக்கை கொண்டோர் நம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் தாயும் எப்பொழுதும் கன்னியுமான மாட்சிமிரூஉநவெ;க்க மரியாவுக்கு சிறப்பான வணக்கம் செலுத்துகின்றனர்.

128. அன்னை மரியாவைப் பற்றிய மறை உண்மைகள் யாவை?

1. தூய மரியா கடவுளின் தாய்.
2. அவர் எப்பொழுதும் கன்னி.
3. அவர் அமல உற்பவி.
4. அவர் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணேற்பு அடைந்தவர்.

129. செபமாலையின் மறை உண்மைகள் யாவை?

1. மகிழ்வின் மறை உண்மைகள்.
2. ஒளியின் மறை உண்மைகள்.
3. துயரின் மறை உண்மைகள்.
4. மாட்சியின் மறை உண்மைகள்.

130. மகிழ்வின் மறை உண்மைகள் யாவை?

1. கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்கு தூது உரைத்தது.
2. இறை அன்னை எலிசபெத்தை சந்தித்தது.
3. இயேசு பெத்லகேமில் பிறந்தது.
4. இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
5. காணாமல்போன இயேசுவை கோவிலில் கண்டடைந்தது.

131. ஒளியின் மறை உண்மைகள் யாவை?

1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றது.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியது.
3. இயேசு இறையரசை போதித்தது.
4. இயேசு தாபோர் மலையில் தோற்றம் மாறியது.
5. இயேசு நற்கருணை ஏற்படுத்தியது.

132. துயரின் மறை உண்மைகள் யாவை?

1. இயேசு இரத்த வியர்வை சிந்தியது.
2. இயேசு கல்தூணில் கட்டுண்டு அடிபட்டது.
3. இயேசு முள்முடி சூட்டப்பட்டது.
4. இயேசு கல்வாரி மலைக்குச் சிலுவை சுமந்து சென்றது.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டுத் தம் ஆவியைத் துறந்தது.

133. மாட்சியின் மறை உண்மைகள் யாவை?

1. இயேசு இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது.
2. இயேசு விண்ணகம் சென்றது.
3. அன்னை மரியாமீதும் திருத்தூதர்கள் மீதும் தூய ஆவியார் எழுந்தருளி வந்தது.
4. இறை அன்னை விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
5. இறை அன்னை விண்ணக, மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டது.