இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.(எபிரேயர் 13:8)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

இறைவாக்குத்தத்தம்

நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்: உன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை:
நானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்: தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்:
தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்.
(எசாயா 60:15)

   இறை இரக்கத்தின் பக்தி 

முன்னுரை:

உலக ஆரம்பத்திலிருந்தே இறைவன் மக்கள் மீது தாம் கொண்டுள்ள இரக்கதை;தை வெளிப்படுத்திவந்துள்ளார். பழைய ஏற்பாடு வரலாற்று நிகழ்சிகள் மூலமும் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துநாதர் மூலமும் இறைவனின் இரக்கம் வெளிப்படுகின்றது. ஆண்டவரை அன்புசெய்கிறவர்களுக்கு அவரது இரக்கம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதென்று வேதாய் தனது கீதத்தில் கூறுகிறார்.
சமீப காலத்தில் பாவிகளுக்குத் தமது நித்திய அன்பின் புதுத் தன்மைகளை அறிவித்து இறைஇரக்கத்தின் பக்தியை ஏற்படுத்த ஆண்டவர் பல அடியார்களுக்கு காட்சி தந்துள்ளார். இந்த பாக்கியத்தைப் பெற்றவர்கள் சகோதரி தெரேசாள்( இறப்பு 1897) சகோதரி பெனினா கோண்சொலாட்டா ( இறப்பு 1916) சகோதரி சோபிய மென்டஸ் ( இறப்பு 1923) சகோதரி மரிய பவுஸ்தீனா கோவல்ஸ்கா (இறப்பு 1938) சகோதரி பெத்ரோன் (இறப்பு 1946) ஆகியோராவர். இறை இரக்கத்தின் பக்தியைப் பரப்பும் பணி சகோதரி பவுஸ்தீனாவிடம் விஷுசமாக அளிக்கப்பட்டது.

தூய மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா

மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா 1905 ஆம் வருடம் ஆகஸ்டு 25 ஆம் நாள் போலந்து நாட்டில் லோட்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார். அவர் கன்னியர் மடத்தில் சேர விரும்பியும் பெற்றோர் மும்முறை அனுமதி மறுத்துவிட்டனர். இருதியாக தனது 20ஆம் வயதில் தேவதாயின் இரக்கத்தின் சகோதரிகள் சபையில் சேர்ந்தார்கள். வார்சாவில் தவசன்னியாசத்தை முடித்து 1928ல் முதல் வார்த்தைப்பாடும் கொடுத்கார்கள். போலந்திலுள்ள பல மடங்களில் தன் படிப்பு குறைவு (மூன்றாம் வகுப்பு வரை) காரணமாக பல தாழ்ந்த வேலைகளைச் செய்து மறைந்த வாழ்வு வாழ்ந்து வந்தார்கள்.

On February 22, 1931, Our Lord and Savior Jesus Christ appeared to this simple nun, bringing with Him a wonderful message of Mercy for all mankind. Saint Faustina tells us in her diary under this date:

"In the evening, when I was in my cell, I became aware of the Lord Jesus clothed in a white garment. One hand was raised in blessing, the other was touching the garment at the breast. From the opening of the garment at the breast there came forth two large rays, one red and the other pale. In silence I gazed intently at the Lord; my soul was overwhelmed with fear, but also with great joy. After a while Jesus said to me, 'paint an image according to the pattern you see, with the inscription: Jesus, I trust in You.'"

இரக்கத்தின் அரசரான இயேசு இவருக்குப் பலமுறை காட்சி தந்தார். இக்காட்சிகள் 1930லிருந்து 1938 வரை நீடித்தன. இறை இரக்கத்தின் பக்தியை குறித்து இயேசு அவருக்கு பல அறிவுரைகள் கூறினர். தமது வார்த்தைகளை பவுஸ்தீனா அவர்களின் கையேட்டில் எழுதிக்கொள்ளுமாறு பணித்தார். அவர்களது 600 பக்கங்களை கொண்ட நாட்குறிப்பிலிருந்தே இக்காட்சிகள் பற்றிய பல தகவல்களை அறியக்கூடியதாய்இருக்கிறது. ஏனெனில் தமது ஆன்ம குருவையும் மடத் தலைவியையும் தவிர வேறொருவருக்கும் அவர் காட்சிகள் பற்றிய செய்தியை அறிவிக்கவில்லை. இந்த நாள் குறிப்புகள் ஆங்கில, இத்தாலிய, ஜெர்மன், இஸ்பானிய, பிரஞ்சு, அரேபிய, ரஷ்ய, ரூயஅp;மேனிய, செக், ஸ்லோவாக்கிய, மலையாளம், கன்னட, தெலுங்கு, ஹிந்தி, தமிழ் இன்னும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சகோதரி மரிய பவுஸ்தீனா சயரோக நோயால் பாதிக்கப்பட்டு மிகத் துன்புற்றார். தன்னுடைய துன்பங்களை பாவிகளுக்காக ஒப்புக்கொடுத்தார். தமது 33ஆம் வயதில் கிராக்கோ எனும் ஊரில் 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் இறைவனடி சேர்ந்தார். 1966ம் ஆண்டு அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு மடத்துக் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. அப்போது போலந்தில் கருதினாலாக இருந்த கரோல் வைத்தீவோ (பின்நாளில் திருத்தைந்தை 2 ஜான் பவுல்) 1968ல் முத்தப் பேறுபட்டத்திற்கான அலுவலை ஆரம்பிக்க அனுமதி வழங்கினார். 1993 ஏப்பல் 18ஆம் நாள் திருத்தைந்தை 2 ஜான் பவுல் முத்திப்பேறுபெற்றவர் என அறிவித்தார். பின்னர் 2000 ஆண்டு ஏப்ரல் 30 நாள் திருத்தைந்தை 2 ஜான் பவுல், சகோதரி மரிய பவுஸ்தினாவை "புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா" வாக அறிவித்தார்.

தூய மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா கையேட்டுக் குறிப்புகள்:

கடவுள் எல்லாரையும் அன்புசெய்கிறார். நாம் எவ்வளவு பெரும் பாவியாக இருந்தாலும் அவரது அளவிடமுடியாத இரக்கத்தில் நம்பிக்கை வைத்து அவரை நாடி நம் பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கோரும்போது கடவுளின் அளவிடமுடியாத இரக்கம் நம்மீது பாய்தோடி வரும். பாவியின் சீர்கேடு எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கு இரக்கத்தை பெறும் உரிமையும் அதிகமாக உள்ளது. ஆழம் காண முடியாத எனது இரக்கத்தில் நம்பிக்கை வைக்க எல்லா ஆன்மாக்களுக்கும் அழைப்பு விடு, எனெனில் எல்லாரையும் மீட்க நான் விரும்புகிறேன். எல்லா ஆன்மாக்களுக்காகவும் சிலுவை மரத்தில் ஈட்டியால் குத்தி திறக்கப்பட்டுள்ளது எனது இரக்கத்தின் ஊற்று. நான் யாரையும் ஒதுக்கி விடுவது இல்லை. என் இரக்கத்தை நீங்கள் பெற்றது போல் நீங்களும் பிறருடன் இரக்கத்தோடு நடந்துகொள்ளுங்கள். நான் மன்னிப்பதுபோல் பிறர் குற்றங்களை நீங்களும் மன்னியுங்கள். பாவத்தில் வீழ்ந்துகிடக்கும் ஆன்மாக்களை இரக்கமுள்ள என் இதயத்தருகே வரும்படி சொல். நான் அமைதியால் நிரப்புவேன். நம்பிக்கையோடு என் இரக்கத்தை நாடி என்னிடம் வருவோருக்கு மீட்பை அள்ளித்தருவேன்.
இறைவனின் இரக்கத்தைப் பெற சிறப்பான வழிகள்:
1.இறை இரக்கத்தின் திருநாள்
2.இறை இரக்கத்தின் ஜெபமாலை
3.இறை இரக்கத்தின் நவநாள்

இறை இரக்கமுள்ள இயேசுவின் படம்:

1931ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் சகோதரி பவுஸ்தீனாவிற்கு இயேசு காட்சி அளித்தபோது அவர் வெண்ணாடை அணிந்தவராகத் தோன்றினார். ஒருகரம் மார்பைத் தொட்டபடியும் மறுகரம் ஆசீரளிக்கும் பாவனையாகவும் இருந்தன. அவரது இதயத்திலிருந்து சிவப்பும் வெண்மையுமான இரு ஒளிக்கதிர்கள் வீசின. இந்த தோற்றத்தைப் படமாக வரையும் படியும் அதற்கடியில் "இயேசுவே நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்" என்னும் சொற்களை எழுதும்படியும் இயேசு அவருக்குக் கூறினார்.
அந்த இரு ஒளிக்கதிர்களுக்கு விளக்கம் கேட்டபோது அவை தமது இதயத்திலிருந்து வெளிப்பட்ட இரத்தத்தையும் தண்ணீரையும் குறிக்கின்றன என்றும் வெண்கதிர் ஆன்மாவைத் தூய்மைப் படுத்தும் தண்ணீருக்கும், செங்கதிர் ஆன்மாவின் உயிரான அருளுக்கும் அடையாளமாக இருக்கின்றன என்றும் விளக்கிய இயேசு "இந்தக் கதிர்கள் எனது தந்தையின் கோபத்திலிருந்து ஆன்மாவைப் பாதுகாக்கின்றன. இதன் அடைக்கலத்தில் வாழ்பவன் பேறு பெற்றவன் எனெனில் இறைவனின் நீதிக்கரம் அவனை ஒருபோதும் தீண்டாது" என்று கூறினார்.
சகோதரி பவுஸ்தீனாவின் வர்ணனைக்கமைய ஒரு நல்ல ஓவியரைக் கொண்டு இப்படம் வரையப்பட்டது. இயேசு கேட்டுக்கொண்டபடியே அப்படம் மடத்து கோவிலில் வணக்கத்துக்கு வைக்கப்பட்டது.

இறை இரக்கத்தின் திருநாள்

உயிர்ப்பு விழாவை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையைத் தமது இரக்கத்தின் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென இயேசு விரும்புகிறார்.
"அந்நாளில் எனது ஆழ்ந்த இரக்கத்தை அனைவரும் அடையக் கூடியதாய் இருக்கும். எனது இரக்கத்தின் ஊற்றை அண்டிவரும் ஆன்மாக்கள் மீது எனது அருட்பெருக்கை கடல்மடை போல் திறந்து விடுவேன். அந்நாளில் பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நற்கருணை பெறுவோர் தமது பாவங்களிலும் அவற்றுக்குரிய தண்டனை அனைத்திலிருந்தும் நீக்கம் பெறுவர்."

இறை இரக்கத்தின் நவநாள்

இந்த நவநாள் எப்போதும் செய்யக் கூடுமாயினும், சிறப்பாக இறை இரக்கத்தில்ன திருநாளுக்கு ஆயத்தமாக செய்யப்படுவதை ஆண்டவர் விரும்புகிறார். அதாவது அது பெரிய வெள்ளியன்று ஆரம்பித்து இறை இரக்கத்தின் திருநாளுடன் முடிவடையும்.
இந்த நவநாளை அனுசரிக்கும் முறையை இயேசு நாதர் தாமே சகோதரி பவுஸ்தினாவிற்கு கற்பித்தார்.
"ஒன்பது நாட்களிலும் எனது இரக்கத்தின் ஊற்றுக்கு ஆன்மாக்களை அழைத்து வரவேண்டும் அவர்கள் வாழ்வின் சோதனைகளின் போது, சிறப்பாக மரணவேளையில் அந்த ஊற்றிலிருந்து பலமும், உற்சாகமும் பெறுவதோடு தமக்குத் தேவையான சகல அருள்வரங்களையும் அடைந்துகொள்வார்கள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான ஆன்மாக்களை அழைத்து வந்து எனது இரக்கக் கடலில் மூழ்கவிடு. ஒவ்வொரு நாளும் இவ்வான்மாக்களுக்குத் தேவையான அருள் வரங்களை எனது கசப்பான பாடுகளின் வழியாகப் பிதாவிடம் இரந்து கேள்"

1ம் நாள் : உலக மாந்தர் மற்றும் பாவிகள்
2ம் நாள் : குருக்கள், கன்னியர், துறவரத்தார்
3ம் நாள் : விசுவாசிகள், பக்தர்கள்
4ம் நாள் : நாஸ்திகர், கடவுளை அறியாதவர்கள்
5ம் நாள் : பிரிந்த சகோதரர்கள்
6ம் நாள் : சாந்தமும் தாழ்ச்சியுமுள்ளவர்கள், குழந்தைகள்
7ம் நாள் : இறைவனின் இரக்கத்தைச் சிறப்பாக மதித்து வணங்குபவர்கள்
8ம் நாள் : உத்தரிக்கும் ஆன்மாக்கள்
9ம் நாள் : வெதுவெதுப்புள்ள ஆன்மாக்கள் (The souls who have become lukewarm)

இறை இரக்கத்தின் ஜெபமாலை

1. தொடக்க ஜெபம்:

பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்
இயேசுவே நீர் மரித்தீர். ஆனால் உமது மரணம் ஆன்மாக்களின் ஊற்றாகவும், இரக்கத்தின் கடலாகவும் திறக்கப்பட்டது. ஓ வாழ்வின் ஊற்றே! ஆழம் கான முடியாத இறைவனின் இரக்கமே! அகில உலகையும் அரவணைத்து, உமது இரக்கம் முழுவதையும் எம்மீது பொழிந்தருளும்.
இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன் .

இயேசு கற்பித்த செபம்

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். -ஆமென்.

மங்கள வார்த்தை செபம்

அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சிஸ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

விசுவாச அறிக்கை :

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். -ஆமென்.

2. பெரிய மணியில்:

நித்திய பிதாவே! எங்கள் ஆண்டவரும் உமது நேச மகனுமான இயேசுக்கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும், ஆன்மாவையும், தெய்வீத்தையும் எங்கள் பாவங்களுக்காகவும் அகில உலகின் பாவங்களுக்காகவம், பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

3. சிறிய மணிகளில்(10):

இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் வழியாக... எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும் பிதாவே ( 10 முறை)
(2, 3ஆம் படிகளை 5முறை சொல்லவும் (5தேவ இரகசியங்களை தியானிப்பதுபோல்))

4. முடிவில்:

புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே! எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்
புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே! எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்
புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே! எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்

இறுதிச்செபம்

மகா தயை நிறைந்த இறைவா! இரக்கத்தின் தந்தையே! ஆறுதலின் தேவனே! உம்மீது விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே. உமது அளவற்ற இரக்கத்தைக் குறித்து எங்கள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத் துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் எல்லா சோதனைகளிலும் உமக்குப் பிரமாணிக்கமாயிருக்க உமது இரக்கத்தின் அருள் கொடைகளை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும், எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து இவற்றை எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.

இறை இரக்கத்தின் நவநாள்

முதல் நாள்

"இன்று மனுக்குலம் முழுவதையும் சிறப்பாக பாவிகள் அனைவரையும் என்னிடம் கூட்டிவந்து, என் இரக்கக் கடலில் முழ்கவை. இதன்மூலம் ஆன்மாக்களின் இழப்பினால் கடுத்துயரத்தில் ஆழ்ந்துள்ள எனக்கு ஆறுதலளிப்பாய்"
மனுக்குலம் முழுவதும் விஷுசமாகப் பாவிகள் இறைவனின் இரக்கத்தை அடையவேண்டுமென்று ஜெபிப்போமாக.
இரக்கம் நிறைந்த இயேசுவே! எங்களுக்கு இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவரே எமது பாவங்களைப் பாராமல் உமது அளவற்ற நன்மைத்தனத்தில் நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாரும். கருணை மிகுந்த உமது இதய இல்லத்தில் எங்களை ஏற்றுக் கொள்ளும். எவரும் அதிலிருந்து பிரிந்து போகவிடாதேயும். பரமதிரித்துவத்தில் பிதாவோடும் தூய ஆவியோடும் உம்மைப் பிணைக்கும் அன்பின் பேரால் உம்மை இரந்து மன்றாடுகிறோம்.
பரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்....
நித்திய பிதாவே உமது திருக்குமாரனும் எமதாண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த இதயத்திலே நம்பிக்கை வைத்துள்ள மனுக்குலத்தின் மீதும் உமது கருணைக் கண்களை திருப்பியருளும். அவரது துயரம் நிறைந்த பாடுகளைப் பார்த்து எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும். எல்லாம் வல்ல உமது இரக்கத்தை என்றென்றும் போற்றுவோமாக. -ஆமென்

இரண்டாம் நாள்

"இன்று குருக்கள், துறவியரின் ஆன்மாக்களை என்னிடம் அழைத்து வந்து ஆழங்காண முடியாத எனது இரக்கத்தில் மூழ்கவிடு. எனது கசப்பான பாடுகளை நான் சகித்துக் கொள்ள எனக்கு சக்தியளித்தவர்கள் இவர்கள்தாம். வாய்க்கால்களாகிய இவர்கள் வழியாக எனது இரக்கம் மனுக்குலத்தின் மேல் பாய்கிறது."
இறைவனின் இரக்கம் மனுக்குலத்தின் மீது பெருகுவதற்கு வழியாயிருக்கும் குருக்கள், துறவியர் அனைவருக்காவும் செபிப்போமாக.
இறக்கம் மிகுந்த இயேசுவே! உம்மிடமிருந்தே எல்லா நன்மையும் வருகின்றன. குருக்கள், துறவியர், கன்னியர்களின் ஆன்மாக்களில் உமது அருட்கொடைகள் பெருகச் செய்யும். அதனால் அவர்கள் தமது பணிகளை தக்கவிதமாகவும், பயன்தரக்கூடியதாகவும் நிறைவேற்றி தமது சொல்லாலும், வாழ்வாலும் அனைவரையும் இறை இரக்கத்தில் பக்தி வணக்கம் கொள்ளச் செய்வார்களாக.
பரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்....
நித்திய பிதாவே! உமது திராட்சைத் தோட்டததிற்கென நீர் தெரிந்துள்ள உமது குருக்கள், கன்னியர், துறவியரின் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருக்குமாரனின் விஷுச அன்புக்குப் பாத்திரமான இவர்களை உமது ஆசீரால் உறுதிப்படுத்தி பிறரை மீட்பின் பாதையில் வழிநடத்தும் ஞானத்தையும், உமது இரக்கத்தை நோக்கி அவர்களை ஈர்க்கின்ற சக்தியையும் அளித்தருளும். - ஆமென்

மூன்றாம் நாள்

"இன்று பக்தி பிரமாணிக்கமுள்ள அனைத்து ஆன்மாக்களையும் அழைத்து வந்து, என் இரக்க சமுத்திரத்தில் மூழ்கவை. என் சிலுவையின் பாதையில் இவர்கள் எனக்கு ஆறுதலாய் இருந்தார்கள். கசப்பான துயரக்கடலின் நடுவில் எனக்கு கிடைத்த ஒரு துளி ஆறுதல் இவர்கள்தான்"
பிரமாணிக்கமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவருக்காகவும் செபிப்போமாக.
இரக்கம் மிகுந்த இயேசுவே! உமது இரக்கக் கருவூலத்திலிருந்து எல்லாருக்கும் உமது அருளை ஏராளமாக பொழிகின்றீர். இரக்கத்தின் இருப்பிடமாகிய உமது இதயத்தினுள் விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஏற்றருளும். அங்கிருந்து அவர்கள் பிரிந்து போகவிடாதேயும்.
ஆவியோடும் உம்மைப் பிணைக்கும் அன்பில் பேரால் உம்மை இரந்து மன்றாடுகிறோம்.
பரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்...
நித்திய பிதாவே! உமது திருமகனின் வாரிசுகளாகிய விசுவாசிகள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம் நிறைந்த அவரது திருப்பாடுகளின் பெயரால் இவர்களுக்கு உமது ஆசிரை வழங்கி, உமது இடைவிடாத பராமரிப்பால் இவர்களை அரவணைத்துக் கொள்ளும். இதனால் அவர்கள் உம்மீது கொண்ட அன்பையும், தமது விசுவாசத்தையும் ஒருபோதும் இழக்காமல் தேவதூதர் புனிதர் சேனைகளுடன் உமது எல்லையில்லா இரக்கத்தை நித்தியத்திற்கும் மகிமைப்படுத்துவார்களாக. -ஆமென்.

நான்காம் நாள்

"இன்று என்னை விசுவசியாதவர்களையும் இன்னும் என்னை அறியாதவர்களையும் என்னிடம் அழைத்துவா. எனது கசப்பான பாடுகளின்போது இவர்களையும் நினைத்துக்கொண்டேன். என்னை அறியவேண்டுமென்ற இவர்களது எதிர்கால ஆர்வம் என் இதயத்திற்கு ஆறுதலாய் இருந்தது. என் இரக்கமாகிய மாபெரும் கடலில் இவர்களை ஆழ்த்திவிடு."
இறைவனின் இரக்கத்தை இன்னும் அறியாத மக்களுக்காக ஜெபிப்போம்.
இரக்கம் மிகுந்த இயேசுவே! நீரே உலகின் ஒளி. உம்மை இன்னும் அறியாத மக்கள் இரக்கத்தின் உறைவிடமாகிய உமது இதயத்தினுள் ஏற்றருளும். உமது அருட்கதிர்கள் இவர்களுக்கு ஒளியூட்ட இவர்களும் எம்மோடு இணைந்து நித்தியத்திற்கும் உமது அற்புதமான இரக்கத்தைப் போற்றுவார்களாக.
பரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்...
நித்திய பிதாவே! உமது திருக்குமாரனும் எமதாண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த இதயத்தை விசுவசியாதவர்கள் மீதும் இன்னும் அறியாத மக்கள் மீதும் கருணைக் கண்நோக்கியருளும். இவர்களை நற்செய்தியின் ஒளிக்கு இழுத்தருளும். உம்மை அன்பு செய்வது எத்துணை இன்பம் என்பதை உணர்ந்து, இவர்களும் உமது இரக்கத்தை ஊழியுள்ள காலமும் வாழ்த்த வரமருளும். -ஆமென்.

ஐந்தாம் நாள்

"இன்று பிரிந்து போன சகோதரர்களின் ஆன்மாக்களைக் கொணர்ந்து என் இரக்கப் பெருங்கடலில் அமிழ்த்து. என் கசப்பான பாடுகளின் போது எனது உடலையும், உள்ளத்தையும் இவர்கள் கிழித்தவர்கள். திருச்சபையின் ஒற்றுமைக்கு இவர்கள் திரும்பி வந்து சேர்ந்தால்தான் என் காயங்கள் குணமாகும். இதன் வழியாக என் பாடுகளின் அகோரத்தை தணிப்பார்கள்."
விசுவாசத்தில் தவறுவோருக்காக செபிப்போமாக.
இரக்கம் மிகுந்த இயேசுவே! நன்மையின் உருவே! உம்மிடம் ஒளியைத்த தேடும் எவரையும் நீர் மறந்ததில்லை. பிரிந்துபோன எம் சகோதரர்களை இரக்கத்தின் உறைவிடமாகிய உமது இதயத்தினுள் ஏற்றருளும். திருச்சபையின் ஒன்றிப்பில் இவர்கள் இணைய உமது ஒளியை இவர்களுக்கு அளித்தருளும். அவர்களும் எம்மோடு சேர்ந்து நித்தியத்திற்கும் உமது இரக்கக் கொடைகளை வணங்குவார்களாக.
பரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்...
நித்திய பிதாவே! பிரிந்துபோன எமது சகோதரர்களின் ஆன்மாக்கள் மீது சிறப்பாக உமது கருணைக்கண்களைத் திருப்பியருளும். அவர்களது குறைகளைப் பாராமல் 'அவர்கள் அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாக' என்று தமது மரணத்திற்கு முந்திய நாள் உம்மை உருக்கமாக வேண்டிய உமது திருக்குமாரனின் அன்பையும், அவர் அனுபவித்த கசப்பான பாடுகளையும் பார்த்தருளும். இவர்கள் மீண்டும் அந்த ஒன்றிப்பில் இணைந்து நித்திய காலத்திற்கும் உமது இரக்கத்தைப் போற்றுவார்களாக. -ஆமென்

ஆறாம் நாள்

"இன்று சாந்தமும் தாழ்ச்சியுமுள்ள ஆன்மாக்களையும், சிறுகுழந்தைகளின் ஆன்மாக்களையும் என்னிடம் அழைத்துவா. என் இரக்கத்தில் மூழ்க வை. இவர்கள் என் இதய கசப்பான வேதனையின் போது எனக்குச் சக்தியளித்தவர்கள். இவர்கள் எனது பீடங்களின் அடியில் கண்விழித்துக் காத்திருக்கும் உலக வானதூதர்களாக இவர்களைக் காண்கிறேன். இவர்கள் மேல் என் அருளைப் பொழிகின்றேன். தாழ்மையான ஆன்மாக்கள் மட்டுமே எனது அருளைப் பெற முடியும். இவர்கள் மட்டுமே என் நம்பிக்கைக்கு உரியவர்கள்."
சிறு குழந்தைகளுக்காகவும் அவர்களைப் போல் ஆகியவர்களுக்காகவும் ஜெபிப்போமாக.
இரக்கம் நிறைந்த இயேசுவே "நான் சாந்தமும் இதய தாழ்ச்சியும் உள்ளவன் என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்" என்று நீர்தாமே சொல்லியிருக்கிறீர். சாந்தமும் தாழ்ச்சியுமுள்ள ஆன்மாக்களையும் சிறு குழந்தைகளின் ஆன்மாக்களையும் இரக்கம் மிகுந்த உம் இதய வீட்டில் ஏற்றருளும்.
இவர்கள் வானுலகைப் பரவசத்தில் ஆழ்த்தி உமது பரலோக தந்தையின் அரியாசனத்தின் முன் மணம் வீசும் மலர்களாக விளங்குவார்கள். உமது திரு இருதயத்தில் நிலையான இடம் கொண்டு இறைவனின் இரக்கத்தை இடையறாது போற்றுவார்களாக.
பரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்...
நித்திய பிதாவே! சாந்தமும் தாழ்ச்சியும் உள்ள உம் அடியார்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இவர்கள் உமது திருக்குமாரனின் சாயலை மிகவும் ஒத்திருக்கிறார்கள். இவ்வான்மாக்களில் நறுமணம் மண்ணுலகிலிருந்து எழுந்து உமது அரியணையை அடைகிறது. இரக்கத்தின் தந்தையே! இந்த ஆன்மாக்கள் மட்டில் உமக்குள்ள அன்பையும் இவர்களில் உமக்குள்ள மகிழ்ச்சியையும் இட்டு, எம்மையும் உலகம் முழுவதையும் ஆசீர்வதித்தருளும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உமது இரக்கத்தை என்றென்றும் போற்றுவோமாக. -ஆமென்

ஏழாம் நாள்

"இன்று எனது இரக்கத்தைச் சிறப்பாக மகிமைப்படுத்தி வணங்கும் ஆன்மாக்களை அழைத்து வந்து என் இதய இரக்கத்தில் மூழ்கச்செய். இவர்கள் என் பாடுகளை எண்ணி வருந்தி என் ஆன்மாவோடு ஆழ்ந்து ஒன்றித்திருக்கிறார்கள். எமது இரக்கமுள்ள இதயத்தின் உயிருள்ள சாயல்கள் இவர்கள். இவ்வான்மாக்கள் மறுவாழ்வில் சிறப்பான ஒளியோடு துலக்குவார்கள். ஒருவரும் நரக நெருப்பிற்கு ஆளாக மாட்டார்கள். மரணவேளையில் இவர்கள் ஒவ்வொருவரையும் பாதுகாப்பேன்"
இறை இரக்கத்தில் பக்தி கொண்டு அதனை பரப்புவதன் மூலம் இயேசுவின் இரக்கம் நிறைந்த இதயத்தின் உயிருள்ள சாயலாக விளங்குவோருக்காகச் செபிப்போமாக.
அன்பையே இதயமாகக் கொண்ட இரக்கம் மிகுந்த இயேசுவே இறை இரக்கத்தின் மேன்மையை சிறப்பாகப் போற்றி வணங்கும் ஆன்மாக்களை உமது இரக்கம் நிறைந்த இதயத்துள் ஏற்றுக் கொள்ளும். இவர்கள் இறைவனிடமிருந்தே தமது சக்தியை பெறுகின்றனர். துன்பதுரிதங்களின் நடுவே நீர் மனுக்குலத்தற்காகப் பட்ட பாடுகளில் பங்கு கொள்ள விழைகின்றார்கள். மென்மேலும் பெருகும் இரக்கத்தால் அவர்களை அரவணைத்து விடாமுயற்சி, திடம், பொறுமை ஆகிய புண்ணியங்களை அவர்களுக்கு அளித்தருளும்.
பரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்...
நித்திய பிதாவே! உமது ஆழங்காணமுடியாத இரக்கத்தை உருக்கமாக போற்றி வணங்கும் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இவர்கள் சொல்லாலும் செயலாலும் உம்மை மகிமைப்படுத்துகின்றனர்.
இவ்வான்மாக்கள் நற்செய்தியன் படி வாழ்பவர்கள். உமது இரக்கத்தைத் தம் வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள். இவர்கள் உம்மீதும் உமது வாக்குறுதிகளிலும் கொண்டுள்ள நம்பிக்கைக்கேற்ப இவர்களுக்கு மேலான இரக்கத்தை காட்டுமாறு உம்மை வேண்டுகிறோம். உமது சொந்த மகிமையயைப் போன்று இவர்களது வாழ்விலும் விஷுசமாக இறுதி வேளையிலும் இவர்களைப் பாதுகாத்தருளும். -ஆமென்.

எட்டாம் நாள்

"இன்று உத்தரிப்பு ஸ்தலத்தில் சிறைப்பட்டுள்ள ஆன்மாக்களை கொணர்ந்து என் இரக்கத்தின் ஆழத்தில் அமிழ்த்து. என் உதிரப்பெருக்கு, இவர்களைச் சுட்டெரிக்கும் தீயை குளிரச்செய்யட்டும். இவ்வான்மாக்கள் என்னால் அதிகம் அன்புசெய்யப்பட்டவர்கள். என் நீதிக்கு பரிகாரம் செய்கின்றார்கள். இவர்களுக்கு விடுதலை அளிப்பது உன் கையில் இருக்கிறது. என் திருச்சபை அளிக்கும் எல்லா பலன்களையும் எடுத்து இவர்களுக்கு ஒப்புக்கொடு. இவர்கள் செலுத்த வேண்டிய கடனைத் தீர்ப்பாய். "
இறைநீதிப்படி உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காக செபிப்போமாக. இரக்கமுள்ள இயேசுவின் திருஇரத்தம் அவர்களின் வேதனையைத் தணிப்பதாக.
இரக்கம் நிறைந்த இயேசுவே! 'என் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்' என்று மொழிந்தீரே. இறைவனுடைய நீதிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்களை இரக்கம் நிறைந்த உமது இதயத்தினுள் ஏற்றருளும். உமது இதயத்திலிருந்து பீறிட்டு வரும் உதிரமும் நீருமாகிய அருவிகள் இவர்களைச் சுத்திஇருக்கும் அனற்பிழம்புகளை அணைக்கட்டும். இதனால் எங்கும் உமது இரக்கத்தின் வல்லமை போற்றப்படுவதாக.
பரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்...
நித்திய பிதாவே! உத்தரிப்பு ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருமகன் இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் பெயராலும் அவரது திருஇருதயத்தில் நிறைந்த துயரத்தின் பெயராலும் உம்மை மன்றாடுகிறோம். உமது நீதியின் தீர்ப்பினால் வேதனைப்படும் இவ்வான்மாக்களுக்காக உமது இரக்கத்தை காட்டியருளும். உமது திருமகன் இயேசுவின் இரக்கம், அவரது நீதியைவிட மேலோங்கி நிற்பதால் அவரது திருக்காயங்களின் வழியாக இவர்களை நோக்கியருளுமாறு உம்மை வேண்டுகிறோம். -ஆமென்

ஒன்பதாம் நாள்

"இன்று வெதுவெதுப்பான ஆன்மாக்களை என்னிடம் அழைத்துவந்து எனது இரக்கத்தில் மூழ்கவிடு. இவ்வான்மாக்கள் என் உள்ளத்தை மிகவும் நோகச் செய்கிறார்கள். இந்த ஆன்மாக்களாலேயே நான் ஜெத்சமனிப் பூங்காவில் பங்கர வேதனைகள் அனுபவித்தேன். பிதாவே உமக்குச் சித்தமானால் இக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும் என்று நான் கூறியதற்குக் காரணம் இவர்கள்தாம். என் இரக்கத்தை நோக்கி ஓடி வருவதுதான் இவர்களது மீட்பின் கடைசி நம்பிக்கை."
ஒலிவத் தோப்பில் கிறிஸ்து நாதருக்குப் பயங்கர வேதனை ஏற்படக் காரணமாக இருந்த வெதுவெதுப்பான ஆன்மாக்களுக்காக செபிப்போமாக.
இரக்கம் மிகுந்த இயேசுவே! நீர் நன்மையே உருவானவர். ஒலிவத் தோப்பில் உமக்கு மிகுந்த வேதனையும் அருவருப்பும் உண்டாக்கிய நடைப்பிணங்களைப் போன்ற வெதுவெதுப்பான இந்த ஆன்மாக்களை உமது இரக்கம் நிறைந்த இதயத்தினுள் ஏற்றருளும். உமது தூய அன்பின் அக்கினிச்சுவாலையில் இவர்களை மூழ்கச் செய்யும். இதனால் இவர்கள் உமது எல்லையற்ற கருணையை என்றென்றும் புகழ்வார்களாக.
பரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்...
நித்திய பிதாவே! வெதுவெதுப்புள்ள இந்த ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருமகனும் எமதாண்டவருமான இயேசு கிறிஸ்துவின் கசப்பான பாடுகளின் பெயராலும் சிலுவையில் மூன்று மணிநேரமாக அவர் அனுபவித்த வேதனைகளின் பெயராலும் இந்த ஆன்மாக்களுக்கு, உமது மகிமையின் மீது ஒரு புதிய ஆசையை ஊட்டுமாறு உம்மை இரந்து மன்றாடுகிறோம். அவர்கள் உள்ளத்தில் அன்பு பெருகச் செய்தருளும். இதனால் உயிருட்டப் பெற்ற இவர்கள், உலகில் இரக்கச் செயல்களைப் புரிந்து, என்றென்றும் உமது இரக்கத்தைப் போற்றி புகழ்வார்களாக. -ஆமென்.

இறை இரக்கத்தின் மன்றாட்டு மாலை

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அதி பரிசுத்த திரித்துவமாயிரக்கிற ஏக சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

சகலமும் படைக்கப்பட காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
பரலோக ஆரூயஅp;பிகளைப் படைக்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
ஒன்றுமில்லாமையிலிருந்து எங்களை உருவாக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
கடவுளின் சர்வ வல்லமையை மானிடருக்கு வெளிப்படுத்த காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உலகம் முழுவதையும் பரிபாலிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
மகா பரிசுத்த திரித்துவத்தின் பரம இரகதியத்தை எங்களுக்கு வெளிப்படுத்த காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உலகத்தை மீட்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
எங்களை தினமும் அர்ச்சிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
எங்களுக்கு நித்திய வாழ்வை அருளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
நாங்கள் அடையவிருக்கும் தண்டணைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றி வரக் காரணமாயிருக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
பாவச் சேற்றிலிருந்து எங்களை மீட்டுக் கைதூக்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
மனித அவதாரத்தையும், பாடுகளையும் மரணத்தையும் ஏற்றுக்கொள்ள காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
சகலருக்கும் எப்பொழுதும் எல்லாவிடங்களிலும் உதவியளிக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உமது அருட்கொடைகளை முன்னதாகவே எங்களுக்கு அருளக்காரணமான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
தெய்வீகப் பரம இரகசியங்களை எங்களுக்கு வெளிப்படுத்தித் துலங்சச் செய்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
சத்திய திருச்சபையை ஸ்தாபித்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
அருட்சாதனங்களை எற்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
ஞானல்நானத்திலும் பச்சாத்தாபத்திலும் இரக்கத்தை அருளும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
திவ்விய நற்கருணையிலும் குருத்துவத்திலும் இறை இரக்கத்தை தந்தருளிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
பாவிகளை மனம் திருப்புவதில் இறைஇரக்கத்தை காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
அவிசுவாசிகள் ஒளிபெறுவதில் இறை இரக்கத்தைக் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
நீதிமான்களின் அர்ச்சிப்பில் இறை இரக்கத்தை வெளிப்படுத்தும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உமது திருக்காயங்களிலிருந்து சுரந்தோடிய இரத்தத்தின் வழியாக இறை இரக்கத்தை வெளிப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உமது மகா பரிசுத்த திரு இருதயத்திலிருந்து சுரக்கும் இரத்தத்தினால் எங்களை புனிதப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
இரக்கத்தின் தாயாகிய புனித மரியாளை எங்களுக்குத் தாயாக தரக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
நோயாளிகளுக்கும் துன்பப்படுவோர்களுக்கும் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
நொறுங்கிய இதயங்களுக்கு ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
கதிகலங்கித் தவிக்கும் ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
மரிப்போரின் அடையாளமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
சகல புனிதர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
மீட்கப்பட்டவர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
அற்புதங்களின் வற்றாத துணையாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரிப்புருவையாகிய இயேசுவே,
எங்கள் பேரில் தயவாயிரும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரிப்புருவையாகிய இயேசுவே,
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரிப்புருவையாகிய இயேசுவே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

முதல்வர்: ஆண்டவருடைய இரக்கங்கள் அவருடைய சகல படைப்புகள் பேரிலும் உள்ளன.
துணை: ஆதலார் ஆண்டவருடைய இரக்கத்தை என்றென்றைக்கும் பாடுவேன்.
செபிப்போமாக: மகா தயை நிறைந்த இறைவா! இரக்கத்தின் தந்தையே! ஆறுதலின் தேவனே! உம்மில் விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே! உமது அளவற்ற இரக்கத்தை குறித்து எங்கள் பேரின் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத்துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் சோதனைகளிலும் உமக்கு பிரமாணிக்கமாய் இருக் உமது இரக்கத்தின் அருட்கொடைகளை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும், எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்