25 ஆண்டுகளாக தொலைதூரம் தாண்டித் தொடரும் எம் பயணம்





தொடுவானம், இது ஒரு நம்பிக்கையின் தொடர். வானம் வசப்படும் என்பது போல, இன்னும் கொஞ்சம் நடந்தால், அதை அடைய முடியும் என்ற நம்பிக்கையின் தொடர். குறிக்கோள் இல்லாமல் வாழ்பவர்கள், அவ்விடத்திலேயே முடங்கி விடுகின்றனர். இயங்குதல் வாழ்தல், முடங்குதல் மரணம்.... எனவே, தொடுவானம் நோக்கி.. இலக்கு நோக்கி.. நடக்க வேண்டும். அதற்கு எல்லையே கிடையாது. நடவுங்கள்.... தொடர்ந்து நடவுங்கள்.... அடைய வேண்டிய இலக்குத் தொலைவில் உள்ளது. தொலைவானம் என்பது ஒரு தோற்றம் தான். அதன் எல்லையை வகுத்துக் கொண்டு செல்லும் போது, படிப்படியாக இலக்கை அடைகின்றோம். ஆனால், அதன் இலக்கு விரிந்து கொண்டு செல்கிறது. ஏன் என்றால், எம் வாழ்வுக் காலத்தின் பக்கங்கள் ஒரு நாளும் தீர்வதில்லை.

1994 ஆவணித் திங்கள் தொடங்கிய தொடுவானத்தின் இலக்கு நோக்கிய பயணம், பணியக ஊடகத்துறையின் முதல் பாகம் தான். இரண்டாம் பாகம், 2011ஆம் ஆண்டு, தமிழ் கத்தலிக் டெயிலி இணையத்தளம் அடுத்த பாகம். 2018ஆம் ஆண்டு, தமிழ் கத்தலிக் டெயிலி றேடியோ, இணைய வழி வானொலி. இவ்வாறு வானம் வசப்படும் வரை, ஒவ்வொரு இலக்காக எட்டும் போது அதன் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கின்றன.
காலத்தின் அறிகுறிகளை ஊடுருவிப் பார்த்து, மானிடர் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப வாழ்வை அமைத்து கொள்ள வேண்டும் என்பது இயேசுவின் விருப்பமாகும், என மத்தேயு 16:3 கூறுகிறது.

தொடுவானம் தொடக் காத்திருந்தோம்

அதி மேதகு. ப. தியோகுப்பிள்ளை ஆண்டகையின் பணிப்பில், அதிகாரபூர்வமாக அருட்பணி. அ.பி. யெயசேகரம் அடிகளாரை இயக்குனராகக் கொண்டு, 02.02.1987இல் யேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் இம்மண்ணில் குழந்தையாகப் பிறந்தது. புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களான எம்மவர்கள் பண்பாடு, மொழி, மதம், அறிவு, ஆன்மீகம் எனப் பன்முகத் தாக்கங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்கள் ஆனார்கள். எம்மவர்கள் மத்தியில் சிந்தனைக் குழப்பம், பண்பாட்டுச் சிக்கல், அறிவியல் அதிர்ச்சி, கிறிஸ்தவ விழுமிய விசுவாச வாழ்வின் வீழ்ச்சி ஆகியன உருவாகின. அவர்கள் பரந்த பார்வையும், தூர நோக்கும் உடையவர்களாக, உலகளாவிய சிந்தனையில் நெறிப்படுத்தவும், கலாச்சாரச் சமூக உணர்வுக் கண்ணோட்டத்தை உருவாக்கவும், எம் பணியகம், பத்திரிகையின் தேவையை உணர்ந்தது.

இம்முயற்சியின் முதல் கட்டமாக, ஹஇறைநாதம்´, ஹபுதிய பார்வை´, ஹதூயகம்´ என்பன பத்திரிகையின் பெயராக முன் மொழியப்பட்டன. அவ்வேளையில், யாழ். மறை மாவட்டத்தில் இருந்து மேல் படிப்புக்காக பெல்யியம் லூவேன் பல்கலைக் கழகத்துக்கு வருகை தந்திருந்த, காலம் சென்ற அருட்பணி. கிருபானந்தன் அடிகளார், ஹதொடுவானம்´ என்று பெயர் இடலாம் என்ற ஆலோசனையை முன் வைத்தார். இப்பெயரின் உட்பொருளை, தாயகத்திலும் புலத்திலும் உள்ள மக்களின் வாழ்வியல் தேடலாகத் தெரிவு செய்து, தொடுவானம் பத்திரிகை ஐரோப்பா வாழ் புலம் பெயர் தமிழர்களின் கத்தோலிக்க ஏடாக யெயசேகரம் அடிகளாரால், 1994 ஆம் ஆண்டு ஆவணி மாதம், மாதாந்த சஞ்சிகையாக அறிவிக்கப்பட்டது. இச் சஞ்சிகை ஐரோப்பா வாழ், புலம் பெயர் தமிழர்களின் உறவுப்பாலமாக அமைந்த தென்பது குறிப்பிடத்தக்கது.

தொடுவானம் நோக்கித் தொடரும் பயணம்

வானத்தைத் தொடலாம் என்ற தொடர் பயணத்தில், கிட்டச் சென்றாலும் எட்டச் செல்லும் தொடுவானம் போல, ஒவ்வொரு இலக்கு நிறைவேறும் போதும், இன்னொரு இலக்குக் காத்திருப்பது போல, புலப் பெயர் வாழ்வின் தேடலும் தேவையும் இலக்கும் பரந்து விரிந்து செல்கிறது. ஒரு காலத்தில் தன் வாழ்வு, தான் பிறந்த குடும்பத்தின் உறுப்பினர்களின் முன்னேற்றம் என்று இருந்த இலக்கு இன்று மாறி, தன் குடும்பம், தன் பிள்ளைகளின் எதிர் காலம், அவர்கள் பிள்ளைகளின் எதிர் காலம் என்று மாறுபட்டு நிற்கிறது. பல்லின, சமய, மொழி, பண்பாட்டு வேறுபாடுகள் மத்தியில், புலத்தில் தனித்துவத்தைத் தொலைத்து விடாது, உண்மையைத் தேட, இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க, தொடு வானம், பண்பாட்டின் காவலனாக, உறவு களின் இணைப்பாக, உரிமையின் குரலாக, சமய அமைதியின் நோக்காக, தன் பயணத்தைத் தொடர்கிறது.

பண்பாட்டு இதழ்

சமுதாய மாற்றத்துக்கு, பண் பாட்டு மாற்றம் அவசியம். ஓர் இனம் நிலைப்பதற்குப் பண்பாடு அவசியம். எனவே, பண்பாட்டு மாற்றம் என்பது, மனித இனத்தின் பல நூற்றாண்டுச் செயல். பொதுவாகவே பண்பட்ட ஓர் இனத்தின் உணர்வு, சிந்தனை, இலக்கு, நம்பிக்கை போன்றவற்றை மாற்றி அமைப்பது இலகுவானதல்ல. சொந்த வேர்களைத் தாயகத்தில் முற்று முழுதாக விட்டு விட்டு, புலம் பெயர்ந்தவர்களால் வாழ முடியாது. அது போலவே, பல பண்பாட்டுச் சூழலில், புலப்பெயர் வாழ்வில், பிற பண்பாடுகளில் உள்ள சிறப்பான பகுதிகளை உள் வாங்கி எம் பண்பாட்டினை மெருகூட்டுவோம். இது தொடுவானத்தின் முக்கிய நோக்கமாகும். பண்பாட்டின் இறுக்கத்தில் சிக்கித் தனிமைப் பட்டு, இது எம் பண்பாடு, அது அவர்களது என்று கூறிக் கொண்டு, எதை எடுப்பது, எதை விடுவது எனத் தத்தளிப்பவர்களுக்குப் பிற பண்பாட்டில் உள்ள சிறப்புப் பகுதிகளை உள் வாங்கி, எமது பண்பாட்டை வளர்க்கவும், மெருகு ஊட்டவும் தொடுவானம் உதவுகிறது. உள் வாங்குதல், படிப்படியாக வளர்ச்சி அடைய வேண்டிய ஒன்று. அதற்கு எம்மைத் தயார் படுத்த வேண்டிய பணியைத் தொடுவானம் செய்கிறது.

தனி மனித - சமூக இதழ்

தனி மனித, சமூக விடுதலை அடைவதற்கு, ஏற்ற பணிகள் செய்வது பணியகத்தின் கடமையாகும். தனி மனித விடுதலையால், சமூகம் தானாக விடுதலை அடையும் எனச் சமயவாதிகளும், சமூகம் விடுதலை அடைந்தால், தனி மனிதம் தானாக விடுதலை பெற்றிடும் எனச் சமூக ஆர்வலர்களும் குரல் எழுப்புகின்றனர். இவை இரண்டும் முக்கியமானவை. தனி மனிதன் தனக்குள் மறைந்திருக்கும் வாழ்வின் ஊற்றை இனம் கண்டு, தனக்குள் தனி மனித விடுதலைக்கான தேடலை ஆரம்பிக்க வேண்டும். மனிதர்களின் அன்பும், நீதியும், நேர்மையான வாழ்வும், ஒற்றுமைக்கான தேடலுக்காக அமைய வேண்டும். இறை தேடலில், தனி மனித, சமூக விடுதலைக்கான எதிர்நோக்கு உண்டு. அதைத் தேட, எமது முயற்சிகள் ஒன்றுபட எமது தொடுவானம் உதவுகிறது.

ஆன்மீக ஏடு

பணியக மக்களை இறை உணர்விலும், சமூக உறவிலும், ஆன்மீக வாழ்விலும் உருவாக்க வேண்டும். ஏனென்றால், தாயக விசுவாச வாழ்வைப் புலம் பெயர்ந்த வாழ்வில், பன்மொழி, கலாச் சார, பண்பாட்டுச் சுழலில் தொலைத்து விடாமல், பேணிப் பாதுகாக்கத் தொடுவானம் உறுதி அளிக்கிறது. கத்தோலிக்க விசுவாச விழுமிய வாழ்வைக் கொடுக்கிறது. அதே வேளை, மனித வர்க்கம் இன, மத, மொழி முரண்பாட்டால், தன்னைத் தானே அழித்து கொள்ளும் நிலையில் உள்ளது. எனவே, உலக மதங்கள், அமைதியை உருவாக்குகின்ற, நீதியை நிலை நாட்டுகிற கருவிகளாக, சாட்சிகளாக செயற்பட வேண்டும் : இதற்கு சமயங்களிடையே, சமயத் தலைவர்களிடையே உரையாடும் மனோநிலையும், சகிப்புத்தன்மையும் வளர வேண்டும். இப் பணியைச் செய்யும் நோக்கமும் தொடுவானத்துக்கு உண்டு.

உரிமைக்குரலின் இதழ்

எமது தாயக மக்களது, துயரங்களில் பங்கெடுத்து, எம்மவர்களின் நியாயப்பூர்வமான உரிமைகளுக்கு உறுதியுடன் குரல் கொடுத்து, நீதியோடு கூடிய சமாதான வாழ்வுக்கு உழைப்பது எமது கடப்பாடாகும். கத்தோலிக்கம் எந்நாட்டில் இருந்தாலும், அது அந்நாட்டு மக்களின் நம்பிக்கைகள், ஏக்கங்கள், கவலைகள் ஆகியவற்றைத் தனதாக்கி விடுதலைக் காகக் குரல் கொடுத்துள்ளது. இப்பணியும் எமது தொடுவானத்துக்கு உண்டு.
சுருங்கக் கூறின், ஒரு சமுதாயத்தில் எந்தெந்த உண்மை, நன்மை, அழகு உள்ளதோ, அவற்றை எல்லாம் பேணி வளர்த்து, மேன்மைப்படுத்துவது தான் தொடுவானத்தின் நோக்காகும். தொடுவானம் நமது எல்லையாகும். பயணத்தின் பொருள் அதன் முடிவல்ல. மாறாக, அது பயணத்திலேயே இருக்கிறது. வாழ்பவனுக்கு அர்த்தம் வாழ்க்கையிலேயே இருக்க வேண்டும். தொடர் போராட்டமே தொடர் பயணம். ஆனால், தொடுவானமோ நாம் தொடாத எல்லை.

தொடுவானம் பத்திரிகை, காலத்தின் தேவை கருதிப் பரந்த நோக்கோடு, விரிந்து தாவிக் கொண்டு முன்னே செல்லும் இலக்கை நோக்கி இற்றைவரை தன் பயணத்தைத் தொடர்கிறது. பல காலமாக ஐரோப்பிய எல்லைகளைக் கடந்து, உலகம் முழுவதும் தன் பணியைச் செவ்வனே தொடர்கிறது. புலம் பெயர் வாழ்வின் மூன்றாம் தலைமுறையினரின் இலக்கு இதற்காகக் காத்திருக்கிறது. அதாவது, தமிழ் மொழியோடு, யேர்மன் மொழியிலும் இப்பத்திரிகை வெளிவருவது சாலப் பொருத்தமானது. அந்த இலக்கைத் தொட்டு, இங்கு பிறந்த பிள்ளைகளின் உள்ளத்தைத் தொட, அவர்களுக்குப் பழக்கமான மொழியில், எமது இலக்கு மாறாமலே அவர்களையும் தொடக் காத்திருக்கின்றோம்.



நிழல்படங்கள்

[தரவேற்றம்: 2020-12-23 14:07:50]