அதிவண. பேரருட் கலாநிதி விக்ரர் ஆண்டகைக்கு ஆன்மீக பணியகம் அஞ்சலிக்கின்றது.





அதிவண. பேரருட் கலாநிதி விக்ரர் ஞானப்பிரகாசம் அமதி ஆண்டகை. * இலங்கையின் பாஷையூர் கத்தோலிக்க திரு அவையின் மைந்தனும், அமலமரி தியாகிகள் சபையைச் சார்ந்தவரும், பாகிஸ்தான் குவேற்றா மறைமாவட்டத்தின் ஆயராகவும் பணியாற்றிய பேரருட் கலாநிதி விக்ரர் ஞானப்பிரகாசம் அமதி ஆண்டகை அவர்கள் இன்று 12/12/2020 பாகிஸ்தானில் காலமாகிவிட்டார். * ஆண்டகை அவர்கள் 1940/11/21ல் யாழ்ப்பாணம் பாஷையூரில் பிறந்தார். * தனது பாடசாலைக் கல்வியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நிறைவு செய்தார். * இறை அழைத்தலுக்குப் பணிந்து குருமடம் நுழைந்து களுத்துறையில் 1959ல் தனது முதலாவது நித்திய வாக்குறுதியை அளித்தார். * கண்டி இலங்கை அன்னை தேசிய குருத்துவக் கல்லூரியில் தனது மெய்யியல், இறையியல் கல்வியை நிறைவுசெய்து 1966ல் அமலமரி தியாகிகள் சபையின் குருவாக திருப்பொழிவு செய்யப்பட்டார். * இலங்கையில் பல இடங்களில் பணியாற்றி பின் 1973ல் பாகிஸ்தான் சென்றார். * பல அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் துன்புற்ற மக்களுக்கும், இளையோருக்கும் இறைபணியாற்றினார். * 1979-1985 வரை பாகிஸ்தானில் அமலமரி தியாகிகள் சபையின் மேலாளராகப் பணியாற்றினார். * 2001ல் முன்னாள் திருத்தந்தை புனித 2ம் அருளப்பர் சின்னப்பரால் பாகிஸ்தான் குவேற்றா பிரதேச அப்போஸ்தலிக்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். * 2010 ஏப்ரலில் புதிதாக உருவாக்கப்பட்ட குவேற்றா மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராக முன்னாள் திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பரினால் நியமிக்கப்பட்டார். * 2010 யூலை 16ல் கராச்சி புனித பற்றிக் பேராலயத்தில் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். * ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பாலைவனங்களையும், மலைகளையும் கொண்டமைந்த தனது மறைமாவட்டத்தின் மக்களின் ஆன்மீக, கல்வி, பொருளாதார தேவைகளைப் பூர்த்திசெய்வதில் அதிகூடிய அக்கறை செலுத்தினார். * தனது மறைமாவட்டதில் மதவாதிகளாலும், தீவிரவாதிகளாலும், அடிப்படை வாதிகளாலும் ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும், பிரச்சினைகளையும் பொருட்படுத்தாது இன, மத, மொழி வேறுபாடுகளின்றி அனைத்து மக்களுக்கும் பணியாற்றினார். * 2013ல் ஓர் இஸ்லாமிய ஆயுதக் குழுவின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் உயிர் தப்பினார். * "நண்பனுக்காக உயிரைக்கொடுப்பதை விட மேலான அன்பு எதுவுமில்லை" எனும் கிறிஸ்துவின் வாக்கிற்கேற்ப மேய்ப்புப்பணி ஆற்றினார். * ஓர் தமிழ் மகனாய் அன்னிய மண்ணில் இறைபணியாற்ற ஆண்டகைக்கு இறைவன் அளித்த வாய்ப்பிற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். * ஆண்டகையின் இழப்பினால் வருந்தும் பாகிஸ்தான் குவேற்றா மறைமாவட்ட திரு அவைக்கும், அமலமரி தியாகிகள் சபையினருக்கும், யாழ். பாஷையூர் பங்குத் திரு அவைக்கும், ஆண்டகையின் குடும்பத்தினருக்கும் எமது யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் ஆழ்ந்த அனுதாபங்கள். * ஆண்டகையின் ஆன்மா ஆண்டவன் திருவடிகளில் இளைப்பாற இறைவனை மன்றாடுகின்றோம்.



நிழல்படங்கள்

[தரவேற்றம்: 2020-12-13 02:01:42]