இன்றைய புனிதர் பகுதியை தொகுத்து வழங்குபவர்
அருள்திரு. மை. அடைக்கலம் டொனால்டு
கும்பகோணம் மறைமாவட்டம்
தமிழகம், இந்தியா

என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.
(லூக்கா 22:30)


இன்றைய புனிதர்

2019-06-19

புனித ரோமுவால்ட் (St.Romuald )

ஆதீனத் தலைவர்


பிறப்பு
: 10 நூற்றாண்டு இறுதி
ராவென்னா(Ravena), இத்தாலி

இறப்பு
19 ஜூன் 1027


இவர் ஓர் அரச குலத்தில் தோன்றியவர். இவர் தம் 20 ஆம் வயது வரை மனம் போன போக்கில் வாழ்ந்தார். ஒருமுறை இவரது தந்தை தம் உறவினர் ஒருவரை சொத்து தகராறு காரணமாக, இவரின் கண்ணெதிரில் கொன்று போட்டார். இதற்கு பரிகாரமாக புனித ஆசீர்வாதப்பர் சபை ஒன்றில் சேர்ந்து, கடும் தவம் புரிந்தார். அங்கு துறவிகள் எவ்வித கட்டுப்பாடுமின்றி வாழ்ந்தது. இவருக்கு எரிச்சலை மூட்டியது. எனவே அந்த மடத்தை விட்டு வெளியேறி , முதலில் வெனிஸ் நகருக்கு அருகிலும், பின்னர் பிரன்னீஸ்(Franis) மலைப்பகுதியிலும் ஜெப, தவ வாழ்க்கையை மேற்கொண்டார். ஏறக்குறைய 30 ஆண்டுகள் வட இத்தாலி, தென் பிரான்சு, தென் ஸ்பெயின் பகுதிகளிலும் துறவு மடங்களில் ஒழுங்குமுறைகளை பற்றுறுதியுடன் கடைபிடிக்க வழிகாட்டியாக திகழ்ந்தார்.

தனிமையில் இறைவனுடன் நெருங்கிய தோழமை கொள்ள விரும்பியவர்களுக்கு, மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் குடிசைகள் அமைத்துகொடுத்தார். அவற்றில் ஒரு மடம் மட்டுமே கமல்டொலி(Kamaldoli) என்ற இடத்தில், அப்பினைன்(Apinain) என்ற மலையுச்சியில் 1012 ஆம் ஆண்டு 5 குடிசைகள் கொண்டதாக அமைந்தது. புனிதர் தனிப்பட்ட ஒரு துறவு சபையை தோற்றுவிக்க திட்டமிடவில்லை. இருப்பினும் கமல்டொலில் நிறுவப்பட்ட மடம்தான், கடுமையான ஒழுங்குகள் கொண்ட பெனடிக்டின் துறவற சபையாக பெயர் பெற்று காட்சியளிக்கிறது. இதுவே மேலை திருச்சபையில் தவ முனிவர்களுக்கான சபையாக மீண்டும் தோன்றியது. இது சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட ஒரு சிற்றூர். இங்கே வாழும் ஒவ்வொரு துறவியும் ஒரு அறை, ஒரு பணித்தளம், ஒரு தோட்டம் இவற்றை பெற்றுக்கொண்டு அங்கே மௌனம் , தனிமை, இவற்றுக்கிடையே இறை பணிபுரிந்தார். வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழ்ந்தார். இவர் உலகம் முழுவதையும் ஒரு துறவற மடமாகவும், ஒவ்வொருவரையும் ஒரு துறவியாகவும் மாற்றும் திட்டம் வைத்திருந்தார். அமைதியும், கடுந்தவ முயற்சியும்தான் இச்சபையின் சிறப்புக் கூற்றுகளாக அமைந்திருந்தது. 1086 ஆம் ஆண்டிலிருந்து, பெண்களுக்கும் அவரவர்களின் நிலைக்கேற்ப "கமல்டொலிஸ்" மடங்கள் தொடங்கப்பட்டது. இவர் இறந்தபிறகு, இவரின் கல்லறையில் பல புதுமைகள் நடந்தவண்ணமாய் இருந்தது. இதனால் இவர் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு, இவர் கல்லறையின்மேல் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது.


செபம்:

வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! புனித ரோமுவால்ட் அரசர் குலத்தில் பிறந்தபோதும், ஆடம்பர வாழ்வில், தன் வாழ்வை வாழாமல், கடுமையான செப, தவ வாழ்வை வாழ்ந்து உமக்குரிய நல்ல சீடனாக திகழ்ந்தார். நாங்களும் எங்களின் அன்றாட வாழ்வில் ஏழையாக வாழ்ந்து உம்மை மட்டுமே பற்றிக்கொள்ள உம் வரம் தாரும்.இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்


ஆயர் ஹில்டேகிரிம் HIldegrim

பிறப்பு: 750, ஃபிரீஸ்லாந்து Friesland
இறப்பு: 19 ஜூன் 827, சாக்சன் Sachsen


தலைவி ஃபால்கோனீரி நகர் ஜூலியானா Juliana von Falconieri OSM

பிறப்பு: 1270, புளோரன்ஸ், இத்தாலி
இறப்பு: 19 ஜூன் 1341, இத்தாலி
புனிதர்பட்டம்: 1737
பாதுகாவல்: சர்வைட் துறவற சபை


திருக்காட்சியாளர் மிசேலீனா மெட்டேல் Michelina Metelli OFM

பிறப்பு: 1310, பேசாரோ Pesaro, இத்தாலி
இறப்பு: 19 ஜூன் 1356, இத்தாலி