இறைவார்த்தை

தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். (கலாத்தியர் 5:22-23)

இறைவார்த்தை

நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்
(மத்தேயு 16:18-19)

பரிசுத்த ஆவி

தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார்.
இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவுசெறிந்த சொல்வளத்தை அளிக்கிறார்.
அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார்.
அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார்.
தூயஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும் இன்னொருவருக்கு இறைவாக்குரைக்கும்
ஆற்றலையும் வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும் மற்றொருவருக்குப்
பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றலையும் பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார்
(கொரிந்தியர் I 12:8-10)

இறைவார்த்தை

உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.
(யோவான் 16:13)

இறைகட்டளை

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
(மாற்கு 16:15)

வாக்குத்தத்தம்

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்: உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக!
(திருப்பாடல்கள் 128)

இறைவார்த்தை

ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்: ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில், காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும். வைகறையில் விழித்தெழுந்து நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை மானிடர் தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே! உறங்கும்போதும் கடவுளின் அன்பர் தேவையானதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர். பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்: மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில். இளமையில் ஒருவருக்குப் பிறக்கும் மைந்தர் வீரரின் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர். அவற்றால் தம் அம்பறாத் தூணியை நிரப்பிய வீரர் நற்பேறு பெற்றோர்: நீதிமன்றத்தில் எதிரிகளோடு வழக்காடும்போது, அவர் இகழ்ச்சியடையமாட்டார்.
(திருப்பாடல்கள் 127)

காலை மன்றாட்டு

ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர்! 'கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்″ என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்: நீரே என் மாட்சி: என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே. நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்: அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்: ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு. என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன். ஆண்டவரே, எழுந்தருளும்: என் கடவுளே, என்னை மீட்டருளும்: என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறையும்! பொல்லாரின் பல்லை உடையும்! விடுதலை அளிப்பவர் ஆண்டவர்: அவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக!
(திருப்பாடல்கள் 3)

திருச்சபை ஏடுகள்

இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள்

மனித குலத்தின் மீட்பர் கிறிஸ்து இயேசு விண்ணகத்திற்கு எழுந்தருளுமுன் தாம் தேர்ந்தெடுத்த திருத்தூதர்கள் உலக நாடுகள் அனைத்திற்கும் நற்செய்தியின் ஒளியைக் கொண்டுவர வேண்டும் எனக்கட்டளையிட்டார். அஃதோடு, அவர்கள் அப்பணியை ஆற்றுவதற்காக அதிகாரமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் அவர்களுக்கு ஆறுதலாக ''இதோ! உலக முடிவுரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' (மத்.28.20) என்று வாக்களித்தார். தூய திருச்சபையில் உயிரோட்டத்தோடும் செயல் முறையிலும் தம்மையே கனிவுடன் வெளிப்படுத்த கிறிஸ்து ஒருபோதும் தவறியதில்லை. முக்கியமாக, மனித குலமும் சமுதாயமும் வாழ்க்கைப் புயலில் அதிகமாய்த் தொல்லைப்படும் காலங்களில் அவர் மிகத் தெளிவாய்த் தோன்றுகிறார். இக்காலங்களில்தான் கிறிஸ்துவின் மணமகளாகிய திருச்சபை உண்மையின் ஆசிரியையாகவும், நிறை வாழ்வு அளிப்பராகவும் தன்னையே மிகச் சிறந்த முறையில் காண்பிக்கிறது. அதே சமயத்தில் அன்பு, பக்தியான இறை வேண்டல்கள், கடவுளது அருளின் உதவியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட துன்ப துயரங்கள் ஆகியவற்றின் ஆற்றலையும் எல்லார்க்கும் முன்பாக எடுத்துக் காட்டுகிறது. இவை யாவும் திருச்சபை நிறுவியவரும் ''துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்'' (யோவா 16:33) என்று தம் வாழ்வின் முக்கியமானதொரு கட்டத்தில் கூறியவருமான கிறிஸ்துவே கையாண்ட உதவிகள்.

கவலைதரும் சூழ்நிலைகள்

இன்று திருச்சபை பெரும் மாற்றங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற, குழப்பநிலையிலுள்ள ஒரு சமுதாயத்தைக் காண்கிறது. சமுதாயம் ஒரு புதிய அமைப்புப் பெற விரைந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் திருச்சபை மிகப் பெரிய பொறுப்புகளைத் தன்மேல் சுமக்க நேரிட்டுள்ளது. பெருங்கவலைகளால் அலைக்கழிக்கப்பட்ட வரலாற்றுக் காலங்களிலெல்லாம் திருச்சபை இவ்வாறு கனமான பொறுப்புகளை ஏற்றுவந்துள்ளது என்பது நாமறிந்ததே. நற்செய்தியின் ஆற்றல் என்றும் நிலைத்திருப்பது, உயிருள்ளது, தெய்வீகமானது. இவ்வாற்றலை இன்றைய உலகுக்கு ஊட்டுவதுதான் திருச்சபையின் கடமையாகும். இன்றைய உலகம் அறிவியல் துறையிலும், தொழில் நுட்ப துறையிலும் தான் அடைந்துள்ள வெற்றிகளிலேயே பெருமைப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் சமூக வாழ்வைப் பாதிக்கும் பல தாக்கங்களுக்கும் ஆளாகியுள்ளது. சிலர் கடவுளுக்குப் புறம்பாக இச்சமூக வாழ்வை மாற்றியமைக்க வழி தேடுகிறார்கள். ஆக, இன்றைய மக்கள் இவ்வுலகப் பொருள்களைப் பொறுத்தமட்டில் முன்னேறியுள்ளதற்கேற்ப அருள்நெறி நலன்களைப் பொறுத்தமட்டில் முன்னேறவில்லை எனக் காண்கிறோம். இதிலிருந்து நாம் அறிவது: அழியாப் பொருள்களைத் தேடுவதில் மக்கள் அதிக ஆர்வமற்று இருக்கின்றனர். மாறாக தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக இன்று எளிதாகக் கிடைக்கின்ற வசதிகளை அனுபவிக்கவே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். மேலும், வன்மையாகக் கடவுளை மறுப்போரின் இயக்கம் உருவாகியுள்ளது. உலகமெங்கும் பரவி வருகிறது. இது முற்றிலும் புதிய, ஆனால் ஆபத்தான ஒன்று என்றே கருதப்பட வேண்டும்.

நம்பிக்கை ஒளி

இப்போது எடுத்துரைத்த துயரச் சூழ்நிலைகள், நாம் விழிப்பாய் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. பொறுப்புணர்வோடு செயல்பட நம்மைத் தூண்டுகின்றன. எதிர்காலத்தில் நம்பிக்கை இழந்துவிட்ட ஒருசிலர் இவ்வுலகம் முழுவதையுமே இருள் சூழ்ந்துவிட்டதாவே பார்க்கின்றனர். நானோ, மனித குலத்தின் இறை மீட்பர்மேல் உறுதியான நம்பிக்கையை அறிக்கையிட விரும்புகிறேன். இவர் தம்மால் மீட்கப்பட்ட உலகத்தை விட்டுவிட்டு மறைந்து போய்விடவில்லை. ''காலத்தின் அறிகுறிகளை'' (மத் 16:3) நாம் வேறுபடுத்தி அறிந்துகொள்ள வேண்டும் என அவர் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இவ்வறிவுரையை நாம் பின்பற்றுகிறோம். அப்போது இத்தகைய காரிருள் சூழ்ந்த நிலையிலும் திருச்சபைக்கும் மனித குலத்திற்கும் நற்காலம் தோன்றப் போகிறது எனக் காட்டி நிற்கும் அறிகுறிகளைக் காண்கிறோம். உண்மையிலேயே, இன்று அடுத்தடுத்து எழும் பயங்கரப் போர்களும், ஆங்காங்கே பற்பல கொள்கைகளால் விளையும் அருள்வாழ்வுக்கு எதிரான தீங்குகளும், நீண்ட காலமாக மக்கள் அனுபவித்துவரும் துன்ப துயரங்களும் நமக்குப் பல பாடங்களைக் கற்பிக்காமல் இல்லை. மேலும் தன்னையே அழிக்கவல்ல பயங்கரக் கருவிகளை உருவாக்கும் ஆற்றலை மனிதருக்கு அளித்துள்ள அறிவியல் முன்னேற்றம் பெருங்கவலை தரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. மக்களைச் சிந்திக்க வைத்துள்ளது. தங்கள் ஆற்றல்கள் வரம்புக்குட்பட்டவை என்பதை அவர்கள் அதிகத் தெளிவாக அறிந்துகொள்ளச் செய்கிறது. அமைதியை விரும்பி நாட அவர்களைத் தூண்டுகிறது. அருள்நெறி நலன்களின் முக்கியத்துவத்தை மதிக்கவைக்கிறது. மேலும், அறிவியல் முன்னேற்றமானது தனிமனிதர், இனங்கள், நாடுகள் ஆகியவற்றிற்கிடையே அதிக நெருக்கமான ஒத்துழைப்பையும் பிணைப்பையும் ஊக்குவித்துள்ளது. பற்பல இன்னல்களுக்கு நடுவிலேயும் மேற்கூறிய ஒத்துழைப்பையும் பிணைப்பையும் மனிதகுலம் முழுவதுமே நாடுகிறது எனலாம். திருச்சபை தன் திருத்தூதுப் பணியை அதிக எளிதாகவும், பயன்தருமுறையிலும் நிறைவேற்ற மேற்வுறியவை எல்லாம் துணை செய்கின்றன. ஏனெனில், திருச்சபையின் மேன்மையான இப்பணியை முன் அறியாதிருந்த பலரும், இன்று தங்களுடைய ஆழ்ந்த அனுபவத்தின் மூலம் திருச்சபையின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை கொண்டுள்ளனர்.

திருச்சபையின் இன்றைய உயிரோட்டம்

திருச்சபையை நோக்கினோம் என்றால், அது மேற்கூறிய காரியங்களில் பங்கேற்காமல் ஒதுங்கி நின்றுவிடவில்லை. மாறாக, அது மக்களின் வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், சமூகப் புரட்சிகள் ஆகியவற்றை வௌ;வேறு கட்டங்களில் கவனித்து வந்துள்ளது. பருப்பொருள் முதன்மைக் கொள்கை மற்றும் கத்தோலிக்க நம்பிக்கையை மறுக்கும் கொள்கை அமைப்புக்களை உறுதியாக எதிர்த்து வந்துள்ளது. கடைசியாக, திருத்தூதுப் பணிக்கும் இறைவேண்டலுக்கும் எல்லா மனித ஈடுபாடுகளுக்கும் ஊக்கமளிக்கும் மாபெரும் ஆற்றல் தன்னகத்திலிருந்தே வழிந்தோடச் செய்துள்ளது. தங்கள் பணியை இன்னும் தகுந்த முறையில் நிறைவேற்றத் தங்களையே அறிவாலும் நற்பண்புகளாலும் தயாரிக்கும் திருப்பணியாளர்களையும், திருச்சபை அமைப்புக்குள், குறிப்பாக திருச்சபை ஆட்சியாளரோடு சேர்ந்து தாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றி அதிகம் உணர்ந்துவரும் பொதுநிலையினரையும் இவன் கண்முன் கொண்டுள்ளோம். இன்று கிறிஸ்தவ சமூகங்கள் பலவற்றைப் பெருந்துன்பங்கள் மிகவும் வருத்துகின்றன. இச்சமூகங்கள் வியக்கப்பட வேண்டிய பற்பல ஆயர்கள், திருப்பணியாளர்கள், பொதுநிலையினர் ஆகியோரைத் தோற்றுவிக்கின்றன. நம்பிக்கையின்மேல் தாங்கள் கொண்ட உறுதிப்பாட்டின் காரணமாக இவர்கள் எல்லாவிதக் கொடுமைகளையும் ஏற்றுக்கொள்கின்றனர். திருச்சபையின் ஏட்டில் போன்ற எழுத்துக்களால் பொறிக்கப்பட்டவர்களோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு இவர்கள் கிறஸ்தவத் திட்டத்திற்குச் சான்று பகர்கிறார்கள். ஆகவே, உலகம் பெருமளவில் மாற்றமடைந்துள்ளது என்றால், கிறிஸ்தவ சமூகமும் பெருமளவில் மாற்றமடைந்து புத்துருப் பெற்றுள்ளது. அதாவது திருச்சபை தன் சமூக அமைப்பிலே அதிக ஒன்றிப்பைப் பெற்றுள்ளது. அறிவுப் பூர்வமாக ஊக்கம் பெற்றுள்ளது. உள்ளார்ந்த விதமாகத் தூய்மை அடைந்துள்ளது. இவ்வாறு எதையும் எதிர்த்து நிற்க வலிமை பெற்றுள்ளது.

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம்

ஒரு பக்கத்திலே அருள்நெறி நலன்களின் குறையால் வாடும் உலகத்தையும் மற்றொரு பக்கத்திலே உயிரோட்டம் நிரம்பிய கிறிஸ்துவின் திருச்சபையையும் நாம் பார்க்கின்றோம். தகுதியில்லாதவனாகிய நான் திருத்தந்தைப் பணியை ஏற்றுக்கொண்ட உடனேயே இறைப் பராமரிப்பின் தூண்டுதலால் உந்தப்பட்டேன். இப்படி ஒன்றுகூட்டி இன்றைய உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவவேண்டும் என்று கருதினேன். இக்காரணத்திற்காக இயல்புக்கு மேலானதும் மனத்தின் ஆழத்திலிருந்து எழுந்ததுமான ஒரு குரலுக்குக் கீழ்ப்படிந்து கத்தோலிக்கத் திருச்சபைக்கும் மனித சமுதாயம் அனைத்திற்குமே ஒரு புதிய பொதுச்சங்கத்தை அளிக்க ஏற்ற நேரம் வந்துவிட்டது என நினைத்தேன். இதற்கு முன் நடந்துள்ள இருபது பெரிய சங்கங்களைத் தொடர்ந்து இதுவும் நடைபெறும். மேற்கூறிய இருபது சங்கங்களும் பல்லாண்டுக் காலமாக அருள் பெருக்கத்திற்கும் கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் பேருதவியாக இருந்துவந்துள்ளன. சங்கம் கூடப்போகிறது எனும் இந்தச் செய்தி உலகம் அனைத்திலும் பரவியதும் திருச்சபை முழுவதுமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது. இதற்காகக் கடவுளிடம் இடைவிடாது ஆர்வத்துடன் வேண்டிக்கொண்டிருக்கிறது. சங்கத்திற்கான தயாரிப்பு வேலை ஊக்கமூட்டுவதாய் உள்ளது. பிற கிறிஸ்தவர்கள், ஏன் கிரிஸ்தவர் அல்லாதவர் கூட சங்கத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டுவதோடு ஆழ்ந்த கவனத்தோடு அதனை எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய ஒரு நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவராலும் உணரப்பட்டுள்ளது என்பதற்கு மேற்கூறியவை யாவும் தௌ;ளிய சான்றுகள். ஆகவே, திருச்சபை மிகுந்த ஆர்வத்தோடு தன் நம்பிக்கையைப் புது ஆற்றல்களால் உறுதிப்படுத்தவும், சிறப்பான முறையில் ஒற்றுமையுடன் ஒரே திருச்சபையாகக் காட்சியளிக்கவும் விரும்பும் இவ்வேளையில் இந்தப் பொதுச் சங்கம் கூட்டப்படுகிறது. அதே நேரத்தில், தன்னுடைய நலமான உயிர்த்துடிப்பை இன்னும் அதிகம் நடைமுறையில் கொணரவும் தன் உறுப்பினரில் தூய்மைநிலையை வளர்க்கவும் இறைவெளிப்பாட்டு உண்மையைப் பரப்பவும் தனி அமைப்புகளை உறுதிப்படுத்தவும் தனக்கிருக்கும் கனமான கடமையைத் திருச்சபை உணர்கிறது. எனவே இச்சங்கம் திருச்சபை என்றும் வாழ்வதாகவும் என்றுமே நிலையான இளமை பூண்டதாகவும் உள்ளது என்பதற்கு ஒரு வெளியடையாளமாய் அமையும். இன்றுவரை இத்திருச்சபை காலத்தின் போக்குகளை உணர்ந்து வந்துள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் புதிய உருப்பெற்றுத் திகழ்கிறது. புதிய ஒளி சிந்துகிறது. புதிய வெற்றிகளைப் பெற்றுவருகிறது. எனினும் அதே நேரத்தில் ஒரே திருச்சபையாக அது என்றும் நிலைத்திருக்கிறது. திருச்சபைக்கு அன்பு செய்து அதைக் காப்பாற்றி வரும் அதன் இறைமணமகன் கிறிஸ்து இயேசு, திருச்சபை பெற்றிருக்க வேண்டும் என விரும்பிய அந்த மிகவும் அழகிய உருவை நிலையாகக் காத்து வருகிறது.
காணக்கூடிய விதத்தில் கிறிஸ்தர் அனைவரிடையேயும் ஒன்றிப்பு உருவாகவேண்டுமென உலகின் பற்பல பகுதிகளிலும் பலர் அதிகமதிகம் தாராள உள்ளத்தோடு முயன்று வருவதை நாம் பார்க்கிறோம். இந்த ஒன்றிப்பே இறை மீட்பவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாய் அமையும். ஆகவே, பிற கிறிஸ்தவ சபைச் சகோதரர்கள் சகோதரிகள் ஒன்றிப்பை நாட ஆர்வம்காட்டவும் ஒருவகையில் அதனை நோக்கி அவர்கள் செல்லும் பாதையைத் தயாரிக்கவும் வழிவகுக்கக் கூடிய மறைக்கோட்பாட்டு விளக்கங்களையும் ஒருவர் மற்றவர்மீதான அன்பையும் பொதுச் சங்கம் அளிக்கும் என எதிர்பார்;ப்பது இயல்பே.
கடைசியாக உலகைக் கவனிக்கும்பொழுது அது பற்பல பயங்கரச் சண்டை சச்சரவுகளால் அச்சுறுத்தப்பட்டு, குழம்பி உறுதியற்று, கவலைகொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தப் பொதுச் சங்கம் நன்மனத்தோர் அனைவரும் அமைதியை நாடிச் செல்லவும், அதனை வளர்க்க சிந்தனையையும் செயலையும் நெறிப்படுத்தவும் வாய்ப்பாக இருக்கவேண்டும். மனித குலத்தைப் படைத்தவரும் மீட்டவருமான கடவுளால் ஒளி ஏற்றப்பட்டு, வழி நடத்தப்பெற்ற மனிதரின் அறிவு, மனச்சான்று மற்றும் இயல்புக்கு மேலான அருள்நெறி நலன்கள் ஆகியவையே இந்த அமைதியை உருவாக்க முடியும். உருவாக்கவும் வேண்டும்.

சங்கத்தின் விவாதப் பொருள்கள்

சங்கத்திலிருந்து நான் எதிர்பார்க்கின்ற மேற்கூறிய பலன்கள் பற்றி பல தடவைகளில் நான் பேசியுள்ளேன். இப்பலன்களை அடையவேண்டுமென்றால் சங்கத்திற்காகத் தயாரிப்பு வேலைகள் நிகழும் இந்நேரத்தில் தொடர்ந்த முயற்சிகளும் கடின உழைப்பும் தேவைப்படுகின்றன. நம்பிக்கைக் கோட்பாடுகளையும் நடைமுறை வாழ்வையும் பற்றிய பிரச்சினைகள் இவண் உள்ளடங்கும். கிறிஸ்துவின் மறையுடலுக்கும் அதன் இயல்பு கடந்த பணிக்கும் முழுமையாக ஒத்திருந்து உதவி செய்வதாக மேற்கூறிய நடைமுறை வாழ்வு அமையவேண்டும். ஆக இவண் உள்ளடங்கும் பிரச்சினைகள் கீழ்வருவன: விவிலியம், திருமரபு, அருளடையாளங்கள், இறைவேண்டல், திருச்சபை ஒழுங்குமுறைகள், அன்புச் செயல்கள் மற்றும் இரக்கப் பணிகள், பொது நிலையினரின் திருத்தூதுப் பணி, நற்செய்திப் பணிக் கண்ணோட்டம்.
மேற்கூறிய இயல்பு கடந்த ஒமைப்பு உலகியல் அமைப்பின்மேல் முழுமையாகத் தாக்கம் கொணரவேண்டும். ஆனால் அந்த உலகியல் அமைப்பைப் பற்றியே மனிதர் பலமுறையும் கவலைப்படுகின்றனர். உலகுசார்ந்த செயல்பாடுகளிலும் திருச்சபை ''அன்னையாகவும் ஆசிரியையாகவும்'' உள்ளது என்று நான்காவது இலாத்தரன் பொதுச் சங்கத்தில் திருத்தந்தை மூன்றாம் இன்னொசென்ட் கூறிய இதே வார்த்தைகளை நானும் இங்கே கூற முனைகிறேன். இவ்வுலகைச் சார்ந்த நலன்களைத் திருச்சபை தன் நேரடிக் குறிக்கோளாகக் கொண்டிராவிட்டாலும், தன்னுடைய பயணத்தின்போது உலகப்பிரச்சினைகளையும் சிக்கல்களையும் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. ஒவ்வொரு மனிதரும் நிறைவாழ்வு பெற்றிடவேண்டும். ஆயினும், மனிதருடைய வாழ்வு இன்னும் அதிக மனிதப் பண்புடையதாக மாறுவதற்கு உதவுகின்ற வழிவகைகள் அழியா ஆன்மாக்களுக்கு எத்துணைப் பயன் அளிக்கும் என்பதை உண்மையாகவே திருச்சபை அறிந்திருக்கிறது. மேலும், கிறிஸ்துவின் ஒளியால் உலகியல் ஒழுங்கமைப்பை உய்விக்கும் நேரத்தில், மனிதரை மனிதருக்கே தாம் வெளிப்படுத்துவதைத் திருச்சபை உணர்கிறது. அதாவது, தாங்கள் யார், தாங்கள் மாண்பு எத்தகையது, தாங்கள் எந்த ஒருகதியை நோக்கிச் செல்லவேண்டும் என்று மனிதர்கள் அறிந்திடத் திருச்சபை துணைசெய்கிறது. எனவேதான் திருச்சபை இன்று சட்டப்பூர்வமாகவோ நடைமுறையிலோ அனைத்து நாட்டு நிறுவனங்களில் உயிரோட்டத்தோடு பங்குகொள்கிறது. குடும்பம், பள்ளி, உழைப்பு, குடிமைச் சமூகம் மற்றும் இவற்றோடு இணைந்த சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிய சமூகப் படிப்பினையை அது உருவாக்கியுள்ளது. இப்படிப்பினை வழியாகத் திருச்சபை ஆசிரியம் தனிப்பெரும் மதிப்பைப் பெறுகிறது; அதிகாரப் பூர்வமானதாகவும், அறநெறியை விளக்கிக் காப்பதாகவும், அனைத்து மனிதருடையவும் அரசியல் சமூகங்களினுடையவும் உரிமை கடமைகளைக் காக்கும் ஒரு நிறுவனமாகவும் திருச்சபை மனிதரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
ஆகவே, பொதுச் சங்க விவாதங்களின் நலமான தாக்கம் மனித உள்ளங்களின் ஆழத்தை மட்டுமல்லாது மனித ஈடுபாடு முழுவதையுமே கிறிஸ்தவ ஒளியால் மிளிரச் செய்வதோடுகூட வலுவான அருள்நெறி சக்திகளாலும் ஊடுருவும் என நான் எதிர் பார்க்கிறேன்

சங்கம் கூட்டப் பெறுதல்

பொதுச் சங்கம் கூடுவதைப் பற்றிய செய்தியை முதன் முறையாக 1959 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25ஆம் நாள் நான் வெளியிட்டேன். அப்பொழுது சலனமுற்ற மனத்தோடும் நடுங்கிய கைகளோடும் சிறிய விதை ஒன்றை நடுவதுபோல் நான் காணப்பட்டேன். கடவுளின் உதவியைக்கொண்டு, சங்கத்தின் பல்வேறு வகைப்பட்ட, பெரும் தயாரிப்பு அலுவலில் ஈடுபட்டேன். இப்போது சரியாக மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. அச்சிறிய வித்து கடவுளின் அருள்துணையால் நாளாவட்டத்தில் பெருமரமாக வளர்ந்துள்ளதைக் காண்கிறேன். இத்தகைய நீண்ட கடினமான பயணத்தைப் பின்னோக்கிப் பார்க்கும்பொழுது கடவுளுக்கு ஒரு நன்றிக் கீதம் என் உள்ளத்தினின்று எழுகிறது. யாவும் ஏற்ற விதத்திலே, தகுந்த வகையிலே இசை வணக்கத்துடன் நடந்தேற நமக்குத் தாராளமாக உதவி புரிந்தவர் அந்தக் கடவுளே.
சங்கத்திலே விவாதிக்கப்பட வேண்டியவைகளைப் பற்றித் தீர்மானிக்குமுன் முதலில் கருதினால் குழுவினுடையவும் உலகம் அனைத்திலும் உள்ள கத்தோலிக்க ஆயர்களுடையவும் உரோமைச் செயலவையின் திருப்பேராயங்களுடையவும் துறவற நிறுவனங்கள் மற்றும் சபைகளில் தலைவர்களுடையவும் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களுடையவும் நலமான, ஞானமுள்ள ஆலோசனையைக் கேட்க விழைந்தேன். இந்த ஆலோசனைகளைப் பெறுவதில் ஓர் ஆண்டு மறைந்தது. இந்த ஆலோசனைகளிலிருந்து முக்கியமான எவைகளைப் பற்றி ஆழமான ஆய்வு செய்யவேண்டுமெனத் தெளிவாக அறிய முடிந்தது.
சங்கத்திற்கான தயாரிப்பு வேலைகளை நடத்தப் பல குழுக்களை அமைத்தேன். இவை நம்பிக்கையையும் ஒழுங்கு முறையையும் சார்ந்த விவாதத் தொகுப்புகளைத் தயாரிக்க வேண்டும் எனப் பணித்தேன். இத்தொகுப்புகளிலிருந்து சங்க அமர்வுகளில் ஆயர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வெண்டியவைகளை நான் தேர்ந்தெடுப்பேன்.
கர்தினால்கள், ஆயர்கள், உயர் அருள்பணி நிலையினர், இறையியலார், திருச்சபைச் சட்ட வல்லுநர் ஆகியோரின் அரிய உழைப்பால் மேற்கூறிய ஆய்வுப்பணி ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்பதைப் பெரு மகிழ்வோடு உங்களுக்கு அறிவிக்கிறேன்.
ஆகவே, எல்லாவற்றிற்கும் முதலும் முடிவுமான இறை மீட்பரின் உதவியில் நம்பிக்கை வைத்து அவருடைய தாய் மற்றும் முதலிலிருந்தே இத்தகைய பெரிய நிகழ்ச்சிக்குப் பாதுகாவலராக நான் தேர்ந்துகொண்ட தூய யோசேப்புடையவும் துணையை நம்பி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டவேண்டிய காலம் வந்துவிட்டதெனக் கருதுகிறேன்.
ஆகவே, தூய உரோமைத் திருச்சபையினுடைய கர்தினால்களுடன் கலந்து ஆலோசித்தபின், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடையவும், தூய திருத்தூதர் பேதுரு, பவுலினுடையவும் நம்முடையவும் அதிகாரத்தால் அனைத்துலக வத்திக்கான் பொதுச்சங்கம் வத்திக்கானிலுள்ள பேராலயத்தில், வருகின்ற ஆண்டு 1962-இல், இறைப்பராமரிப்பின் துணை கொண்டு நான் தீர்மானிக்கும் நாளில் முறையாகக் கூடும் என்று அறிவிக்கிறேன், தீர்மானிக்கிறேன், சங்கத்தையும் கூட்டுகிறேன்.
மேலும், உலகின் எல்லா பகுதியிலுமுள்ள நம் அன்புக்குரிய பிள்ளைகளான கர்தினால்கள், வணக்கத்துக்குரிய சகோதரர்களான மறைத்தந்தையர்கள், முதல்வர்கள், மறைமாவட்ட அல்லது படத்தில் பேராயர்கள், ஆயர்கள், முறையாக பொதுச் சங்கத்திலே கலந்து கொள்ளவேண்டிய பிறர் ஆகிய யாவரும் என்னால் தீர்மானிக்கப்பட்ட இப்பொதுச் சங்கத்தில் கூடவேண்டும் என்பது என் விருப்பமும் ஆணையுமாகும்.

கடவுளிடம் மன்றாட அழைப்பு

முடிவாக, நம்பிக்கை கொண்டோர் ஒவ்வொருவரும், கிறிஸ்தவ மக்கள் அனைவரும் சங்கத்தில் அக்கறை காட்டவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நெருங்கிவரும் இத்தகைய பெருநிகழ்ச்சிக்கான தயாரிப்பு முயற்சியில் உயிரோட்டமுள்ள இறைவேண்டல் தொடர்ந்து துணைநின்று உறுதிப்படுத்த வகைசெய்ய வேண்டும். வற்றாத ஊற்றிலிருந்து வருவதுபோல் நம்பிக்கையிலிருந்து இந்த இறைவேண்டல் தொடர்ந்து எழுவதாக இறைவேண்டலோடு அதனை இறைவனுக்கு அதிக உகந்ததாக மாற்றுகின்ற கிறிஸ்துவ நோன்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவனவாக, அத்தோடு, தாராள மனதோடு கிறிஸ்தவ வாழ்வு நடத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியும் அந்த இறை வேண்டலை செழுமைப்படுத்துவதாக் பிற்காலத்தில் சங்கம் அளிக்கக்கூடிய போதனைகளையும் நடைமுறை வழிகளையும் செயல்படுத்த அவர்கள் தயாராய் இருப்பார்கள் என்பதற்கு இது முன்னுறுதியாக அமையும்.
உலகமனைத்திலுமுள்ள மறைமாவட்ட, மற்றும் துறவறத் திருப்பணியாளர்கள் எந்நிலையிலுமிருக்கும் நம்பிக்கை கொண்டோர் ஆகிய நம் அன்புப் பிள்ளைகளுக்கு மேற்கூறிய என் கோரிக்கையை விடுக்கிறேன். சிறு பிள்ளைகளின் மாசற்ற கூக்குரல் கடவுளிடம் பெரும் மதிப்புள்ளது என்பது யாவரும் அறிந்த ஒன்று. எனவே, சங்கத்தின் வெற்றி இச்சிறுவர்களின் இறைவேண்டலாலேயே நிர்ணயிக்கப்படும் என நினைக்கிறேன். மேலும், நோயால் வருந்துவோருடையவும் துன்பப்படுவோருடையவும் துயரங்களும் பலிப்பொருளுக்கு ஒப்பான வாழ்வும் கிறிஸ்துவின் சிலுவையின் வல்லமையால் சிறந்த மன்றாட்டாகவும் மாறுவதால், இவர்களும் சங்கத்தின் வெற்றிக்கான இறைவேண்டல் செய்யவேண்டும் என்று கேட்கிறேன்.
கத்தோலிக்கத் திருச்சபையை விட்டுப் பிரிந்துள்ள கிறிஸ்தவர்களும் கடவுளை மன்றாடவேண்;டுமென்று உருக்கமாகக் கேட்டுக்கொள்கிறேன்; ஏனெனில், சங்கம் அவர்களுக்கும் நன்மை விளைவிப்பதாய் அமையும். இப்பிள்ளைகளில் பலர் கிறிஸ்துவின் படிப்பினைப் படியும், விண்ணகத் தந்தையை நோக்கி அவர் எழுப்பிய இறை வேண்டலின்படியும் ஒன்றிப்பையும் அமைதியையும் அடைய விரும்புகின்றனர் என்பதை நான் அறிவேன். மேலும், சங்கம் கூடுகிறது எனும் செய்தியை அவர்கள் பெருமகிழ்வோடு ஏற்றனர். அதுமட்டுமன்றி யாவும் மகிழ்ச்சிகரமாக நன்கு முடியக் கடவுளை வேண்டுவோம் எனவும் அவர்களுள் பலர் ஏற்கெனவே வாக்களித்துள்ளனர். சங்கத்தில் நடைபெறுவதை அருகிலிருந்து அறிந்துகொள்ளத் தங்கள் சமூகங்களின் பதிலாள்களை அனுப்ப எண்ணுகின்றனர் என்பதையும் நான் அறிவேன். இவையாவும் எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பும் ஆறுதலும் ஊட்டுகின்றன. இக்காரியங்கள் மிக எளிதாகவும், நல்ல முறையிலும நிறைவேற, இதற்காகச் 'செயலகம்' என அழைக்கப்பெறும் ஒரு தனிப்பட்ட அலுவலகத்தை ஏற்படுத்தியிருக்கிறேன்.
அன்று புதிதாகப் பிறந்த திருச்சபை முழுவதும் மிகவும் ஒன்றித்து, ஆடுகளுடையவும் ஆட்டுக்குட்டிகளுடையவும் மேய்ப்பரான தூய பேதுருவோடு இணைந்து, அவருடனும் அவரைச் சூழ்ந்து நின்றும் மன்றாடியது. கிறிஸ்து விண்ணகத்திற்கு எழுந்தருளியபின் எருசலேமில் திருத்தூதர் கூடியிருந்தபோது இவ்வாறு நிகழ்ந்தது. இன்றைய கிறிஸ்தவக் குடும்பத்திலும் இவ்வாறு நிகழ்வதாக் ஆராதனைக்குரிய இறை ஆவியார் உலகில் எல்லாப் பகுதிகளிலிருந்தும் நாளும் அவரை நோக்கி எழுப்பப்படும் கீழ்வரும் மன்றாட்டிற்கு மனமுவந்து செவிமடுப்பாராக: ''நாங்கள் வாழும் இக்காலத்தில் நிகழும் உம் வியத்தகு செயல்களை உமது புதிய 'பெந்தகோஸ்து' நிகழ்வால் புதுப்பித்தருளும். தூய திருச்சபை, இயேசுவின் தாயாகிய மரியாவோடு ஒருமனத்தோடு தொடர்ந்து மன்றாடி தூய பேதுருவால் வழிநடத்தப்பட்டு இறை மீட்பரின் ஆட்சியை உண்மையின் ஆட்சியை, நீதியின் ஆட்சியை, அன்பின் ஆட்சியை, அமைதியின் ஆட்சியைப் பரப்ப அருள் தந்தருளும்'' ஆமென்.
இக்கொள்கை விளக்கம் இன்றும் வருங்காலத்திலும் செயலாக வேண்டுமென்றும் நான் விரும்புகிறேன். இதிலே தீர்மானிக்கப்பட்டவைகள் யாருக்காகக் கூறப்பட்டிருக்கின்றனவோ அவர்கள் அவற்றைத் தூய்மையாகக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவைமுழுமையாக செயலாக்கப்பட வேண்டும், என்பதே எனது விருப்பம். இக்கொள்கை விளக்கம் செயலாக்கம் பெறுவதை இதற்கு மாறான எந்தச் சட்டமும் தடுக்க முடியாது. ஏனெனில் அத்தகைய நட்டங்கள் எல்லாவற்றையும் இந்த ஏட்டால் நீக்கிவிடுகிறோம். எனவே, யார் எந்த அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும் சரி அறிந்தோ அறியாமலோ நான் தீர்மானித்தவைகளுக்கு எதிராக ஏதேனும் செய்யின் அது செல்லாததாகவும் பயனற்றதாகவும் கருதப்படவேண்டுமென்று கட்டளையிடுகிறேன். மேலும், என் உள்ளத்தை எடுத்துக்காட்டும் இந்த ஏட்டை அல்லது கொள்கை விளக்கத்தை யாரும் மாற்றவோ அழித்துவிடவோ செய்யலாகாது. இதேபோல் திருச்சபை அதிகாரி ஒருவருடையவும் பொதுக்குறிப்பாளர் ஒருவருடையவும் கையெழுத்தைக் கொண்டுள்ள இதன் எந்த நகலுக்கும் அது அச்சடிக்கப்பட்டதாயினும்சரி அல்லது கையால் எழுதப்பட்டதாயினும் சரி இந்த நகலுக்கு உரித்தான அதே அதிகாரம் உண்டு. மேலும் நான் யாவருக்கும் தந்துள்ள இந்தத் தீர்மானங்களில் யாரும் எதையும் மதியாதிருப்பின் அல்லது எவ்வகையிலாவது நீக்கிவிடின், திருத்தந்தையரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவர்களுக்குச் சட்டம் தரும் தண்டனையை அவர்கள் பெறுவர் என்பதை அறிவார்களாக.
உரோமை, தூய பேதுரு பேராலயத்தில் 1961 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25 ஆம் நாள், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிறந்த திருவிழாவன்று, என் பணிப் பொறுப்பின் நான்காவது ஆண்டிலே கொடுக்கப்பட்டது.
யோவான் (Pope John xxiii)
கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்

மனித குலத்திற்குச் செய்தி

நிறைவாழ்வு, அன்பு, அமைதி பற்றி எல்லா மக்களுக்கும் நாடுகளுக்கும் தூது அனுப்புவதில் சங்கத் தந்தையராகிய நாங்கள் பேருவகை கொள்கிறோம்; இந்நலன்களை வாழும் கடவுளின் மகன் இயேசு கிறிஸ்து உலகுக்கு அளித்துள்ளார்; திருச்சபையிடம் அவற்றை அவர் ஒப்படைத்துள்ளார்.
எனவேதான் மாண்புமிகு திருத்தந்தை இருபத்து மூன்றாம் யோவானின் அழைப்பை ஏற்று, திருத்தூதர் வழிவந்துள்ள நாங்கள் பேதுருவின் வழித்தோன்றது தலைமையில் ஒரே திருத்தூதுக் குழுவாக, இயேசுவின் அன்னையான மரியாவோடு ஒருமனப்பட்ட இறை வேண்டலில் இங்கு ஒன்றுபட்டுள்ளோம்.

ஒளிரட்டும் கிறிஸ்துவின் திருமுகம்!

எம்மையே புதுப்பித்துக்கொள்வது எவ்வாறு என்று நாங்கள் இச்சங்கத்திலே தூய ஆவியின் துணையுடன் ஆராய விழைகிறோம். இவ்வாறு, கிறிஸ்துவின் நற்செய்திக்கு உண்மையான சாட்சிகளாக இருக்க விரும்புகின்றோம். இன்றைய மக்கள் இறை உண்மையை முழுமையாகவும் தூய்மையாகவும் அறியவேண்டும்; விருப்புடன் அதற்கு இசைந்து நடக்கவேண்டும்; இதற்கு அவ்வுண்மையைத் தகுந்த முறையில் அவர்களுக்கு அளிக்க வேண்டும்; இம்முயற்சியிலேதான் ஈடுபட்டுள்ளோம் நாங்கள்.
ஆயர்களுக்குரிய பொறுப்புணர்வால் உந்தப்பட்டு நாங்கள் கடவுளைத் தேடும் அனைவரின் ஏக்கங்களும் நிறைவு பெற எங்களையே அர்ப்பணிக்க விரும்புகிறோம். உண்மையிலே ''கடவுள் தம்மை அவர்கள் தேட வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார்'' (திப 17:27).
''அத்திருச்சபை கறைதிரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு'' (காண் எபே 5:27) தம்மைத்தாமே சாவிற்குக் கையளித்தார் கிறிஸ்து. அதே கிறிஸ்துவின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து, ஆயர்களாகிய நாங்களும் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களும் புதுப்பிக்கப் பெறும்படி எங்கள் முழு ஆற்றலையும் கருத்தையும் ஒருங்கே ஈடுபடுத்துகின்றோம். இவ்வாறு, கடவுளின் மாட்சியாகிய அறிவொளி மிளிரும்படி எங்கள் இதயங்களில் சுடரொளி வீசும் இயேசு கிறிஸ்துவின் எழில்மிகு திருமுகம் எல்லா இனத்தார் முன்னும் ஒளிர்வதாக (காண் 2 கொரி 4:6)

கடவுள் உலகை எவ்வளவு அன்பு செய்தாரென்றால்...

உலகை மீட்கத் தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்கு இறைத்தந்தை உலகின் மீது அன்பு கூர்ந்தார் என்று நம்புகின்றோம். உண்மையிலேயே தம் ஒரே மகன் வழியாக நம் பாவத்தளையறுத்தார்; அவர் வழியாகவே அனைத்தையும் தம்மோடு ஒப்புரவாக்க விரும்பினார்; கடவுளின் உண்மையான பிள்ளையாக நாம் இருக்கவும் இவ்வாறு அழைக்கப் பெறவும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தால்p அமைதியை நிலைநாட்டினார் (காண் கொலோ 1:20). நாம் இறைவாழ்வு வாழ்ந்து கடவுளுக்கும் கிறிஸ்துவில் நம்முடன் ஒன்றித்திருக்கும் நம் சகோதரர், சகோதரிகளை அன்பு செய்யுமாறு இறைத்தந்தை நமக்கு இறை ஆவியை அருளியுள்ளார்.
நாம் கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டிருப்பதால் உலகைச் சார்ந்த கடமைகளினின்றும் உழைப்புகளினின்றும் அந்நியமாகிவிட்டோம் என்று பொருளாகாது. மாறாக நம்பிக்கை, எதிர்நோக்கு, கிறிஸ்துவின் அன்பு ஆகியவை நம் சகோதரர், சகோதரிகளுக்குப் பணிசெய்ய நம்மைத் தூண்டுகின்றன. இவ்வாறு செய்தால் ''தொண்டு ஏற்பதற்கல்ல, தொண்டு ஆற்றுவதற்கு வந்த'' (மத் 20:28) இறை ஆசிரியரின் மாதிரிப்படி நம் வாழ்வு அமையும். திருச்சபையும் ஆதிக்கம் செலுத்தவன்று பணிபுரியவே தோன்றியுள்ளது. கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்; அதனால் நாமும் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். (1 யோவா 3:16)
ஆகவே, சங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் விளைவாக நம்பிக்கை ஒளி அதிகத் தெளிவாகவும் ஆற்றலோடும் ஒளிருமென நம்பிக்கை ஒளி அதிகத் தெளிவாகவும் ஆற்றலோடும் ஒளிருமென நம்புகிறோம்; அஃதோடு ஓர் அருள்வாழ்வு மறுமலர்ச்சியையும் எதிர்நோக்கியிருக்கிறோம். அம்மறுமலர்ச்சியிலிருந்து, அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பத்துறை மற்றும் கலை முன்னேற்றம், பண்பாட்டு வளர்ச்சி போன்ற மனித நலன்கள் மேம்பாடடைய ஓர் உந்துதல் பிறக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

எம்மைத் தூண்டும் கிறிஸ்துவின் அன்பு

பாருலகில் பரவியுள்ள எல்லா நாடுகளிலுமிருந்து ஒன்றுகூடியுள்ள நாங்கள் எம் பொறுப்பில் உள்ள எல்லா மக்களின் இன்னல்கள், உடல், உளத் துயர்கள், கவலைகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எங்களது இதயத்தில் தாங்கி நிற்கின்றோம். இன்றைய மக்களை வருத்தும் எல்லாக் கவலைகள் மீதும் இடையறாது எங்கள் கருத்தைத் செலுத்துகின்றோம். எனவே, மிகமிகத் தாழ்ந்தோர், வறியோர், வலுவற்றோர்மீது முதலில் அக்கறை காட்டுகிறோம். பசியிலும் கடுந்துயரிலும் அறியாமையிலும் உழலும் மக்கள் திரள்மீது கிறிஸ்துவைப் போல் நாங்களும் இரக்கம் காட்டுகிறோம். மனித நிலைக்கு ஏற்ற வாழ்வை அமைக்க வழிவகையின்றிக் தவிப்போரை எங்கள் எண்ணத்தில் என்றும் கொண்டுள்ளோம்.
எனவே, நாங்கள் மனிதரின் மாண்பைச் சார்;ந்தவற்றையும் மக்களிடையே உண்மையான சகோதரத்துவத்தை உருவாக்க உதவுகின்றவற்றையும் ஆழமாக உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு எங்கள் பணியில் ஈடுபடுவோம். ''கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது'' (2கொரி 5:14). ஏனெனில், ''உலகச் செல்வதைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லையென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?'' (1 யோவா 3:17)

இரு பெரும் பிரச்சினைகள்!

திருத்தந்தை 23 ஆம் யோவான் 1962 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 11 ஆம் நாளில் ஆற்றிய வானொலிப் பேருரையில் இருபெருங் காரியங்களைப் பற்றி அழுத்தமாகக் கூறினார்.
முதலாவது மக்களிடையே நிலவ வேண்டிய அமைதி பற்றிப் பேசினார். போரை வெறுக்காதவர் யாருமில்லை; அமைதியை விரும்பாதாரும் எவருமில்லை; அனைவருக்கும் அன்னையான திருச்சபை எல்லாரையும்விட அதிகமாக அதனை விரும்புகிறது; உரோமை ஆயர்களின் வாயிலாகத் திருச்சபை அமைதியின்மீது தான் கொண்டிருக்கும் அன்பையும் ஆவலையும் எப்பொபுதும் வெளிப்படையாக அறிக்கையிட்டுக் கொண்டேயிருக்கிறது; அமைதிக்காக எடுக்கும் எந்த முயற்சிக்கும் மனமுவந்து உதவி புரிய எப்போதும் அது முன்வருகின்றது; மக்களை ஒற்றுமைக்குக் கொணரவும், அவர்கள் ஒருவர் மற்றவருடைய உணர்வுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் தகுந்த மதிப்பளிக்கும் பண்பை வளர்க்கவும் தனது திறனையெல்லாம் கூட்டிச் செயல்படுகிறது. வேறுபட்ட இனத்தாரையும் நாட்டவரையும் பல்வேறு மொழி பேசுவோரையும் தன்னகத்தே கொண்டிருக்கும் வியத்தகு இச்சங்கப் பேரவை சகோதர தன்னகத்தே கொண்டிருக்கும் வியத்தகு இச்சங்கப் பேரவை சகோதர அன்பில் எழும் சமுதாயத்திற்குச் சான்றாக அமைகிறதன்றோ? அந்தச் சமூகத்தின் வெளி அடையாளமாகத் திகழ்கிறதன்றோ? எந்த இனத்தையும் நாட்டையும் சார்;ந்தவராயினும் மனிதர் எல்லாரும் சகோதரர், சகோதரிகள் என நாங்கள் குரலெழுப்பிக் கூறுகின்றோம்.
இரண்டாவதாக, சமூகநீதியை நிலைநாட்டுவதில் அனைவரும் ஈடுபட வேண்டுமெனத் திருத்தந்தை தூண்டுகிறார். அநீதிகளையும் சீர்கெட்ட ஏற்றத் தாழ்வுகளையும் கண்டித்திட வேண்டுமென்றால், நற்செய்தியின் படிப்பினைக்கு ஏற்ப மனித வாழ்க்கை அதிக மனிதப் பண்புடைத்ததாக மாறும் வண்ணம் பொருள் நலன்களையும் மதிப்பீடுகளையும் சீரமைத்திட வேண்டுமென்றால் இன்றைய உலகிற்குத் திருச்சபை மிக மிக இன்றியமையாதது. இதைத்தான் ''அன்னையும் ஆசிரியையும்'' என்ற சுற்றுமடலில் எடுத்துரைக்கப்பட்ட போதனை தெளிவாகக் காட்டுகின்றது.

தூய ஆவியின் ஆற்றல்

இவ்வுலகைச் சார்ந்த செல்வங்களும் வல்லமையும் எங்களிடம் இல்லை. ஆனால், ஆண்டவர் இயேசு கிறிஸ்து திருச்சபைக்குத் தருவதாக வாக்களித்த இறை ஆவியின் ஆற்றலில் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம். எனவே, அதிக அளவு நீதியும் சகோதரத்துவமும் நிறைந்த ஓர் உலகைக் கட்டி எழுப்புவதிலே எம்மோடு ஒன்றித்துப் பணிபுரிய மக்களனைவரையும் பணிவோடும் ஆவலோடும் அழைக்கிறோம். எங்களை ஆயர்களாகக் கொண்டுள்ள எங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டுமன்றிக் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டுள்ள எல்லாச் சகோதரர் சகோதரிகளுக்கும் ஏனைய நல்மனத்தோர் அனைவருக்குமே வேண்டுகோள் விடுக்கிறோம். இத்தகைய ''எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்'' (காண் 1 திமோ 2:4) ஏனெனில் அன்பின்வழி கடவுளுடைய முடிவில்லா ஆட்சியின் முற்காட்சியாக இறையாட்சி இம்மண்ணிலே ஒருவிதத்தில் மிளிரவேண்டும் என்பதே இறைத்திட்டம்.
நாம் விரும்பி எதிர்பார்க்கும் அமைதி இவ்வுலகிலிருந்து இன்னும் வெகு தூரத்திலே உள்ளது. ஏனெனில், அறிவியலின் முன்னேற்றம் வியக்கத்தக்கதாயிருப்பினும், அது அறநெறியின் சீரிய நெறிமுறைகளுக்கு எப்பொழுதும் இசைந்ததாக இருப்பதில்லை. ஆதலால் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் அச்சுறுத்தல்கள் அறிவியல் முன்னேற்றத்தினால் விளைகின்றன. இவற்றிற்கிடையில் நம் ஒரே மீட்பரான இயேசு கிறிஸ்துவில் நாம் கொண்டிருக்கும் உயர்ந்த எதிர்நோக்கு எனும் ஒளி இவ்வுலகில் ஒளிரவேண்டும் என்பதே எமது மன்றாட்டு.