ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

விடை தேடுவோம்……
இயேசுவின் பெயர்கள்……திருவருகைக்காலத்து ஆசீரும் அருளும் உங்கள் குடும்பங்களில் சமூகங்களில் தங்கட்டும் புதுமகிழ்ச்சியை தரட்டும். நம் மனதில் நம் மத்தியில் இக்காலத்தில் எழும் கேள்விகளை வெளிப்படுத்தி விடைதேடுதேடுவோம்……

பெயரிடுவது ஒருவருக்குரிய அங்கீகாரம் மற்றும் அடையாளத்துக்குரிய உறுதிப்பாடு ஆகும். எந்த ஒரு நிறுவனத்தையோ கல்வநிலையங்களையோ அலுவலகத்தையோ மேலும் எந்த நரட்டு குடியுரிமைச் சார்ந்து தாங்கியிருக்கிறோம் என்பதற்கு நம்பெயரோடு புகைப்படத்தோடு அடையாள அட்டை நகல் தரப்படுகின்றது. மற்றும் ஒருவரை பெயரிட்டு அழைப்பது அவருக்குரிய தனிப்பட்ட அணுகுமுறை நெருக்கத்தையும் அவருக்கும் குடும்பம் பின்னணி வரலாறு மற்றும் தொடர்பு உண்டு என்பதையும் வெளிப்படுத்கிறது.

இயேசு என்பது அவரது பெயர். உங்ககளுக்காக மீட்பர் பிறந்துள்ளார் இவரே ஆண்டவராகிய மெசியா. இவைகளில் இயேசு - மீட்பர் - மெசியா அனைத்தும் இயேசுவையே குறிக்கிறது. பழைய ஏற்பாட்டில் அவர் பல பெயரில் முன் அறிவிக்கப்படுகிறார். நூற்றுக்கணக்கில் இயேசுவுக்கு பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இறைவாக்கினர்கள் முன் அறிவித்துக் சொல்லியிருக்கின்ற பெயர்களை இங்குப்பார்ப்போம்.

ஏசாயா 9:6 “ஏனெனில் குழந்தை நமக்குப் பிறந்துள்ளார் ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார். ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும் அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர் - வலிமைமிகு இறைவன் - என்றுமுள்ள தந்தை - அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்.”

ஏசாயாவின் முன்குறிப்பை ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் மத்தேயு - மாற்கு – யோவான் மூவரும் குறிப்பிடுகிறார்கள். ஏசாயா இயேசுவின் பிறப்புக்கு 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். எருசNலைமை தலைநகராக கொண்ட யூதேயா அரசின் ஆகாசு அரசனும் யூதேயாவும் இஸ்ரயேலால் சிரியாவினால் எபிராயிமினால் தாக்கப்பட்டு பயமுறுத்தப்பட தான் தனிமையில் எதிர்த்துநிற்க இயலாது என்றுநம்பி அசீரியர்களை அழைத்து அவர்களோடு இணைந்து போரிட விரும்பியபொழுது ஏசாயா இறைவாக்கினர். வேண்டாம் தனித்து நில் ஆண்டவனை நம்பி நிமிர்ந்துநில். மற்ற அரசுகளின் அதிகார ஆட்சியில் அதிகாரத்தை நீங்கள் ஒருபெரிய சுமையாக அனுபவிக்கின்றீர்கள்;. அமைதி மகிழ்ச்சி மறைந்துபோயின அரசர்கள் கடமைகளை மறந்தார்கள். இத்தருணத்தில் குழந்தையாக உங்கள் மத்தியில் மனிதமாக முறையான முழுமையான அரசராக திகழ்வார் என்பதே அவருடைய முன்அறிவிப்பு ஆகும்.

வியத்தகு ஆலோசகர்: அரசனுடைய ஆலோசனை உயரியதாக அத்தியாவசமானது.
வலிமைமிகு இறைவன் : அவரது வலிமை எந்த அரசனுக்கும் இணையிடமுடியாதது.
என்றுமுள்ள தந்தை : நிரந்தர துணையை உடன் இருப்பை அளிக்கும் தந்தை
அமைதியின் அரசர் : எதிர்ப்பு – போர்களை கடந்த மகிழ்ச்சியான அமைதி

7:14 “ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவைப்பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்”.

ஆகாசு அரசன் சிரியா மற்றும் எபிராயம் எதிர்ப்படைகளாக இஸ்ராயேலுக்கு ஆதரவாக யூதேயாவை எதிர்த்துநிற்க ஆகாசு அரசனோ யூதேயா மற்றும் எருசலேமை பாதுகாத்து காப்பாற்ற விரும்பி எதிர்ப்படைகளை எதிர்க்க அசீரியர்களின் உதவியை நாடி ஒன்றிணைய விரும்பியபொழுது எசாயா இறைவாக்கினர் வழியாக எடுத்துரைக்கப்படும் வார்த்தைகளே இம்மானுவேலைப்பற்றியது ஆகும்.

யாரையும் நீ நாடவேண்டாம். உன்னை உருவாக்கி அனைத்து அருளை தந்ந இறைவன் எங்கோயிருப்பவர் அல்ல மாறாக உங்கள் மத்தியில் அருகாமையில் கடவுள் நம்மோடு ஆக தோன்றுபவரே இம்மானுவேல் என்கிறார்.

எரேமியா23:5 “ஆண்டவர் கூறுசது இதுவே இதோ நாள்கள் வருகின்றன அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள தளிர் தோன்றச்செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலை நாட்டுவார்”.

ஏசாயா11:1 “ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும் அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும்”

தளிர் துளிர்விடுவது…..வேர்களிலிருந்து கிளை வளர்ந்து கனிதருவது அனைத்தும் இயேசுவின் பிறப்பை உதயத்தையே எடுத்துரைக்கின்றன. ஏன் ஈசாய் என்னும் அடிமரம்? ஈசாய் தாவீதின் தந்தை ஆவார். பிரபலமான பரிச்சயமான தாவீதின் இனத்தில் என்று குறிப்பிடாமல் அமைதியான சாந்தமான பரிச்சயமில்லா ஈசாயை குறிப்பிட்டு அவர்வழியில் என்பது மெசியா இயேசுவின் தாழ்ச்சியை எளிமையை எதார்த்தமான தோன்றலை முன்வைக்கிறது.

அடுத்து தாவீதின் ஆட்சிகாலம் ஒன்றிணைந்த இஸ்ராயேலைக்கொண்டிருந்தது. பல்வேறு எதிரிகள் பிலிஸ்தியர்கள் அசீரியர்கள் அமெலெக்கியர்கள் என பல்வேறு எதிரிபடைகளை எதிர்த்து வென்று இறைவனின் மக்களை பாதுகாத்து வழிநடத்தினார் ஆனால் தாவீதிற்குபிறகு இவர்கள் இஸ்ராயேல் மற்றும் யூதேயா என இரண்டாக பிரிந்தது. இஸ்ராயேல் சமாரியாவை தலைநகராக கொண்டும் யூதேயா எருசலேமை தலைநகராககொண்டும் ஆட்சிசெலுத்தி நிரூபிக்கமுயன்றன. இத்தருணத்தில் பல்வேறு எதிரிகளால் தாக்குதலுக்குள்ளாயினர். தாவீதோடு ஈசாயை மையமாகக் கொண்ட குடும்ப மற்றும் இனத்தின் மரம் செத்து கிடந்தது வாழ்வுரிமையின்றி செயலிழந்து கிடந்தது. இந்த உலகின் பார்வையில் செத்த இறந்துபோன வாழ்வில்லா இந்த மரத்தினின்று இனத்திலிருந்து வாழ்வு உயிர் விடுதலை புத்துயிர் தோன்றும் அவரே மெசியா இம்மானுவேல் இயேசு ஆவார் என்பதே விளக்கமாகும்.

இயேசுவை அர்ச்சிக்கப்பட்டவர்….புதிய ஆதாம் - புதிய மோசே என அழைத்தாலும் எங்கோ வார்த்தையில் நெருப்பில் காற்றில் மேகத்தில் பேசிய இறைவன் உடன் இருக்கின்றார் நம்மோடு வாழ்கின்றார் என்பதே மெசியா இயேவின் பிறப்பு ஆகும். மீட்பு நம்மோடு இருக்கிறது நம்மத்தியில் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொண்டாடுவோம்.
[2014-12-11 02:43:30]


எழுத்துருவாக்கம்:

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US